Sunday, July 8, 2007

நாள் தோறும் நிறம் மாறும் தேவி



தூங்கும் என் உடலை அசையாது பார்த்தபடி அமர்ந்திருக்கிறது
நாம் பேசி சலித்த சொற்களின் வடிவம்
தாகத்திற்க்காய் விழித்தெழும் பின்னிரவில்
அது கொஞ்சம் அசைந்து மென் புன்னகையொன்றை உதிர்க்கும்
அபத்தங்களின் நீட்டிப்பென தவிர்த்துப்போய
உறங்க யத்தனிக்கையில்
பின் மதிய சொற்புணர்வுகள்
வெற்று உடல்களாய் நினைவை மோதும்

சொற்கள்..

எனக்கு மழையைப் பிடிக்கும்
சில நேரங்களில் எனக்கு ஏன் மழையெனப் பெயர்வைக்கவில்லை என கவலைப்படுவேன் பூனைகளென்றால் கொள்ளைப் பிரியம்
இந்த கடலும் மணற்பரப்பும் மெல்லிதாய் கவிழும் இருளும் எத்தனை சுகந்தம்
தி ஜானகிராமனைப் பிடிக்குமா உனக்கு எனக்கும்
காமம் கலக்காது உன்னுடலில் புதைந்து கொள்ளவா?
உன் மென் விரல்களைப் பிடித்தபடி மலை சூழ்ந்த சமவெளியொன்றில்
வெகுதூரம் நடக்க வேண்டும்
இந்த நள்ளிரவில் நட்சத்திரங்களினூடே கண்துழாவி
உன்தோள் சாய்ந்து தூங்கிப் போக வேண்டும்
நேற்று ஏன் நீ வரவில்லை?
இன்று பின்னிரவில் உன்னை உன் அணைப்பை
உன் முகம் எப்படியிருக்குமென்ற கனவை வளர்த்துக் கொண்டேன்
என் எல்லா கவிதைகளும் உனக்காகவே எழுதப்படுகிறது

நேற்று மாலை இலக்கிய கூட்டத்திற்க்கு சென்றேன்
அந்த பெருங்கொண்ட கவிஞனுக்கு என் இதழ்கள் பிடித்திருக்கிறாதாம் சிரிப்பாயில்லை
நான் வெளியில் போகிறேன்
முன்று தினங்கள் உன்னுடன் பேச முடியாதென நினைக்கிறேன்
நேற்று நினைத்துக் கொண்டாயா
செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் பூதத்தை போல் முன் நிற்கிறது
அப்புறம் பேசுவோமா அவசரமாய் வெளியில போகனும்

வெற்றுச் சொற்கள்...

குருட்டு வவ்வால்கள் சுவற்றில் வெறி கொண்டு மோதுகின்ற சப்தம்
கட்டவிழ்க்கப்பட்ட தொலைதூர தனிமையொன்றில்
சேமித்து வைக்கப்பட்ட சொற்களின் மிகுதி
பொழுதிற்க்கொன்றாய் வடிவம் கொள்கிறது
புனைவுகளில் திளைக்கும் பாசாங்குகளற்ற சுயம்
சொற்களின் வசீகரிப்பில் அடையாளமிழந்து
நிரப்பப்பட்ட மதுக்கோப்பைகளை
ஒரே மூச்சில் காலி செய்கிறது

11 comments:

குட்டிபிசாசு said...

அய்யனாரே,

//நேற்று ஏன் நீ வரவில்லை?//
நான் நேத்து ஆன்லைன்ல தான் இருந்தேன். பார்க்கலயா?
//வெற்றுச் சொற்கள்...//
எங்க பாசக்கார அய்யனார் சிங்கத்தை யாரோ சாய்ச்சீபுட்டாங்கப்பா!!

Anonymous said...

ஒன்னுமே புரியல உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

அபி அப்பா said...

அருமையான பதிவு அய்யனார்! நல்லா இரு!

ALIF AHAMED said...

நல்லா இருக்கு
கொஞ்சம் புரியிறமாதிரியும்.....


(வேற வழியில்லை புரிஞ்ச்சுக்க முயற்சி பண்ணுகிறேன்)

லொடுக்கு said...

//அபி அப்பா said...
அருமையான பதிவு அய்யனார்! நல்லா இரு!
//
அபிஅப்பா எந்த மனதோடு வாழ்த்தினாரோ அதே மனதோடு நானும்...

குசும்பன் said...

"மின்னுது மின்னல் said...
நல்லா இருக்கு
கொஞ்சம் புரியிறமாதிரியும்.....

(வேற வழியில்லை புரிஞ்ச்சுக்க முயற்சி பண்ணுகிறேன்)"

இது கண்டிப்பாக நம்ம மின்னல் இல்லை இது போலி மின்னல், நம்ம மின்னல் இது போல விபரீத முடிவு எல்லாம் எடுக்க மாட்டார்...

Jazeela said...

நல்லா இருக்கு அய்யனார். //நிரப்பப்பட்ட மதுக்கோப்பைகளை
ஒரே மூச்சில் காலி செய்கிறது// இதுக்கு சாக்கு போக்கு தேவையா என்ன?

கோபிநாத் said...

தல
நல்லா இருக்கு ;))

(எப்படியே எங்க வழிக்கு வந்தால் சரி தான்)

Ayyanar Viswanath said...

ஏ குடும்ப மக்கா!! என்ன அதிசயம் எல்லாம் பாராட்டிங்க அபிஅப்பா லொடுக்கு பின்னூட்டத்தில உள்குத்து இருக்கில்ல நல்லா இருங்க

ஜெஸிலா
அத ஏன் நீங்க சாக்கு ன்னு எடுத்துக்கிறீங்க ஒரு விடுபடலா கூட இருக்கலாமில்ல :)

Jazeela said...

//அத ஏன் நீங்க சாக்கு ன்னு எடுத்துக்கிறீங்க ஒரு விடுபடலா கூட இருக்கலாமில்ல :)// இப்படி ஆளாளுக்கு விடுபடலென்று தொடங்கிட்டா அப்புறம் எல்லோரும் 'குடி'யும் 'குடி'த்தனமுமாக இருக்கலாம். அறிவை மழுங்கடிக்கிற, உடலை உருக்குலைக்கிற இது தேவையான்னு யோசிங்க. பின்நவீனத்துவம் இந்த இசம் அந்த இசம் எல்லாம் படிக்கிறீங்க, உங்களை நீங்களே கட்டுபடுத்துவது எப்படி? எதற்கும் அடிமையாகி போகாமலிருப்பது எப்படின்னு முதல்ல படிங்க.

காயத்ரி சித்தார்த் said...

//குருட்டு வவ்வால்கள் சுவற்றில் வெறி கொண்டு மோதுகின்ற சப்தம்
கட்டவிழ்க்கப்பட்ட தொலைதூர தனிமையொன்றில்
சேமித்து வைக்கப்பட்ட சொற்களின் மிகுதி
பொழுதிற்க்கொன்றாய் வடிவம் கொள்கிறது //

இன்னிக்குதாங்க அர்த்தம் புரியுது இதுக்கு..

'வெற்றுச்சொற்கள்'

ரொம்ப நல்லா எழுதறீங்க அய்யனார். வாழ்த்துக்கள்.

Featured Post

test

 test