Monday, July 23, 2007
சொல் என்றொரு சொல் ரமேஷ்-ப்ரேம் -1
இன்றைய பின்நவீனத்துவ பிரதிகளில் ஒன்றாக ரமேஷ்-ப்ரேமின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்.நாவல் என்கிற வடிவத்தை சிதைக்கும் முயற்சி அல்லது ஒரு வடிவத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் எனவும் சொல்லலாம்.தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது இந்நாவல்.
இந்த நாவலை வெகு கவனமாக அணுக வேண்டியுள்ளது.வார்த்தையாடல்களில் கவர்ச்சியும் வசீகரமும் சொற்களில் ஒரு மயக்கத் தன்மையும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது.போதை தரும் எழுத்து அல்லது கிறங்க வைக்கும் சொல்லாடல்கள் படிப்பவரை குழம்ப வைத்து திகைப்பும் வெறுப்பும் ஒரே சமயத்தில் ஏற்படச் செய்கிறது.இந்நாவலை படித்து முடிக்க 30 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதிற்க்கு காரணம் இந்த உணர்வை மயக்கத் தன்மையை இழக்க விரும்பாததே.
சில பின்நவீன கூறுகளுடன் இந்நாவலை தொடர்பு படுத்திப் பார்க்கலாம்
வாசிப்பின்பம்
பின்நவீன கூறுகளில் ஒன்றான வாசிப்பின்பம் இந்த நாவலில் அதிகமாகவே விரவி இருக்கிறது.எந்த அத்தியாயத்தைப் புரட்டினாலும் அதில் பரவி இருக்கும் சொற்கள் மயக்கத்தைத் தருகிறது.காமமும்,உடலும்,புணர்வும் விலங்குகளின் நடமாடுதல்களும் மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்த புத்தகம் படித்த நாட்களில் நான் எழுதிய கவிதைகள் அனைத்திலும் எப்படியோ புலி வந்து ஒட்டிக் கொண்டது.கனவு நிலைக்கும் பித்த நிலைக்கும் கொண்டு செல்லும் சொற்களை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார்கள்.
விளிம்பு மய்ய சல்லிகள்
மய்யமில்லாத படைப்பு எழுதப்படுவதற்க்கு சாத்தியமா எனத் தெரியவில்லை.சொல் என்றொரு சொல் அதற்க்கான ஒரு முயற்சி என்று கொண்டாலும் பழமைகளை அடியொற்றி வந்த பழக்கப்பட்ட மூளை இந்த நாவலின் மய்யம் என்ன என்று தேடுவதிலேயே முனைப்பாக இருந்தது.ஒருவேளை படைப்பாளியின் பார்வையில் மய்யமில்லாத படைப்பொன்று எழுதப்பட்டாலும் பழகிய வாசகன் மூளை எப்போதும் மய்யம் ஒன்றை உருவாக்கி கொண்டு திருப்தி அடையும் என்பதில் சந்தேகமில்லை.அதீதன் அதிகமாக பேசப்படுவதால் அவனை மய்யமென்று கொள்ளலாம்.அதீதன் என்ற சொல்லே அல்லது பாத்திரமே ஒரு குறீடெனத்தான் சொல்லப்படுகிறது.புரட்சிகளின் வடிவமாக அடக்குமுறைகளின் மீறலாக புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான்.காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகிறது தொடர்பில்லாத கதையாடல்கள் படிப்பதற்க்கு சலிப்பைத் தந்தாலும் வசீகர அணுகுமுறை புத்தகத்துடன் ஒன்றிப்போகச் செய்கிறது.
பன்முகத் தன்மை
இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.முதல் பக்கத்தில் இருக்கும் இந்த கவிதை நாவலை அதன் உள்ளடக்கத்தை மிகச் சரியாய் சொல்கிறது.
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சொல்லொன்று பொத்துவிட்டால்
மதிலின் பக்க வாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்
அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமார்ந்து போவீர்கள்
இப்படித்தான் பிம்பங்களை புனைந்து கொண்ட மனம் பெரிதும் ஏமாற்றமடைகிறது.அறிவுஜீவிகளின் மூலத்திலிருந்து வந்ததாக சொல்லப்படும் அதீதனின் உடலில் வலியும் உணர்வில் இசையும் உள்ளிட்ட அவனது தடை செய்யப்பட்ட அத்தனை புத்தகங்களையும் ஆய்வு செய்யும் அரூபதர்ஷினி ஆத்மார்த்திக்கு எழுதும் கடிதங்கள், அவனோடு சில இரவுகள் தங்கிய அவன் தோழி பற்றிய குறிப்புகள், பிரபஞ்சனா மற்றும் விமோசனாவின் அதீதனைப் பற்றிய குறிப்புகள், இருள் நகரத்து கதைகள், நானும் எனது பிணமும்,அதீதன் பிறப்பின் பின்புலம் போன்ற அத்தியாயங்கள் மட்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது.பத்திரிக்கையாளனின் சிறுகுறிப்பு எனும் அத்தியாயத்தில் அதீதனின் பேட்டியும் அவனது 18 நூல்களில் 3 படைப்புகளின் விமர்சனங்கள் தரப்பட்டிருக்கிறது.திடீரென புராண காலத்திற்க்கு தாவும் சொற்கள் சிவனுக்கும் தேவிக்கும் நடந்த ஊடல்களை கலவிகளைப் பற்றி பேசுகிறது தேவியின் தொலைந்த முக்குத்தியை கண்டெடுக்கும் காளியன் எனும் சாமான்யனின் காதல் அவனுக்கும் தேவிக்கும் இடையே நிகழும் கதையாடல்களை பற்றி பேசத் தொடங்கி விடுகிறது.பின்பு அதிலிருந்தும் தாவி புத்தருக்கும் ஆனந்தருக்கும் நடந்த உரையாடல்கள் மற்றும் புத்தரின் இறுதி நாட்களுக்கு சொற்கள் தாவி விடுகிறது.குருவைத் தேடி செல்லும் சீடனொருவனின் அடக்க முடியாத காமம் மற்றும் குருவின் காமம் மரவட்டகைகள் சாலையை கடப்பதை வேடிக்கைப் பார்க்கும் சிறுவனின் மரணம் என சொற்கள் வெவ்வேறு வடிவம் கொள்கிறது.வார்த்தைகளிலிருந்து வந்தவர்கள் என்ற அத்தியாயத்தில் ஒன்பது கவிதைகள் தரப்பட்டிருக்கின்றன படிக்கும் வாசகனை கலைத்துப்போடும் எழுத்து தொடர்ச்சியாய் யாராலும் ஒரு மணி நேரம் இந்த புத்தகத்தை படிக்க முடியுமா என்பது சந்தேகந்தான்.
மாந்திரீக யதார்த்தவியங்கள்
மொத்த அத்தியாயங்களும் இயங்கும் தளம் புதிரான ஒன்றாகத்தானிருக்கிருது தீவுகளிலிருந்து தோழியுடன் வரும் பேராசிரியரின் மகள் தான்யா நாடக ஒத்திகைக்காக பிரிந்து சென்ற தன் தந்தையின் வீட்டுக்கு மீண்டும் வருகிறாள்.அரசாங்கத்திற்க்கு எதிரான இவரது தொடர் பேச்சுகளும் புரட்சிகர நடவடிக்கைகளும் அந்த சம்யத்தில் வெடிகுண்டு வைத்து கொல்லப்படும் அரசியல் தலைவரின் கொலைக்கு காரணமாயிருக்கலாம் என சந்தேகிக்கிற காவல் துறை அவரை கைது செய்கிறது.அத்தோடு அந்த அத்தியாயம் முடிந்துவிடுகிறது.தனித்தனியே படித்தால் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்க்கான கட்டமைவுகள் உள்ளடங்கி இருக்கிறது.ஆய்வு நூலா,கட்டுரை தொகுப்பா என குழம்பச் செய்யுமளவிற்க்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லா அத்தியாயங்களின் கோர்வையாகவுமிருக்கிறது.
இருள் நகரத்து மனிதர்கள்,புராதன நூலகம் சிதைவை ஏற்படுத்தும் புத்தகங்கள் என இப்புத்தகம் உருவாக்கும் காட்சிகள் the name of the rose படத்தின் சில காட்சிகளை மனக்கண் முன்னிருத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
12 comments:
அய்யனார்,
நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.
உங்கள் நட்சத்திர வாரத்தின் மூன்று பதிவுகளையும் படித்து விட்டேன். உங்கள் புரிதல்கள் பிரமிக்க வைக்கின்றன.
உங்களுடைய பகிர்தலுக்கு மிக்க நன்றிகள். வாழ்த்துக்கள்!
இந்த புத்தகத்தை வாசிக்கும் ஆசையை கிளப்பிவிட்டதற்கு தண்டனையாக இந்த புத்தகம் வேண்டும் - படிச்சிட்டு தந்திடுவேன் ஆனா எப்போன்னு கேட்காதீங்க.
நன்றி வெங்கட்
ஜெஸிலா
வலைப்பதிவர் சந்திப்பில தரேன் நீங்கள் வாசித்துவிட்டு மெல்ல தாங்க..
ஜெஸீலா! நீங்க படிச்சுட்டு எனக்கு தாங்க, ஆனா 20 வருஷம் பொருமையா படிச்சுட்டு தாங்க!
உங்களுக்கு இருக்கும் கவிதை, புனைவிலக்கியம் குறித்தான புரிதல்கள் அனைவருக்கும் சாத்தியமானதல்ல.
நுட்பமான வாசிப்பிற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே ரமேஷ் ப்ரேம், தேவதச்சன் போன்றவர்களின் கவிதைகளை ரசிக்க முடியும்.
பதினைந்து வரி உள்ள கவிதையை மூன்று நிமிடத்தில் படித்துவிடவே இதுநாள் வரை பழகியிருக்கிறோம். ஆனந்தம் தருமா, கிளர்ச்சி வருமா என்று யோசித்து கவிதை படிப்பவர்கள் சொற்ப அளவே.
முதல் முறையாக பின்நவீனத்துவ கவிதைகளை வாசிக்கும்போது வாழ்நாளில் தொடவே கூடாது என்ற சபதத்தை எடுக்க தூண்டியது. அது குறித்த புரிதல் சற்று விரிவடைந்து அதே கவிதைகளை மீள் வாசிப்பு செய்யும்போது வேறு விதமான அனுபவத்தை தருகிறது. வாசிப்பவனி மனோநிலையை பொறுத்தே இக்கவிதைகளின் தன்மை புரிந்துகொள்ளப்படும்.
பெரும்பாலான பொதுப்பார்வைகள் படிமக்கவிதைகளை அலட்சியப்படுத்தினாலோ, குறிப்பிட்ட சில சொற்களுக்குள் அடைபட்ட உருவமாக வெளிப்படுத்த முயன்றாலோ அதை எழுதிய கவிஞர்கள் புரிவிக்க முயல்வதில்லை. ஆனால் முனைப்புடன் புரிவிக்க முயலும் உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது.
இது மாதிரி கவிதை புத்தகங்களைப் பார்த்தால் நான் காத தூரம் ஓடி விடுவேன்.
அவர்கள் தலைக்கும் மேல் காற்று வெளியில் நடப்பவர்களாக என் கற்பனைக்குப் தோன்றும்.
உங்கள் புரிதல்களும் தேடுதல்களும்.......வாழ்க!
நமக்கு எப்போதும் போல் காத தூரம்தான்.
மிகவும் அருமை அய்யனார். இது வரையில் ரமேஷ் பிரேம் வாசித்ததில்லை. உங்களின் பதிவுகள் ஆவலை பெருக்கியிருக்கிறது.
நன்றி.
சிவா.
sivaramang.wordpress.com
அபிஅப்பா :)
தம்பி புரிதலுக்கு நன்றி
நன்றி சுல்தான்
பின் நவீனத்துவத்தை எல்லாரிடமும் கொண்டு போய் சேர்க்க அல்லது புரிய வைக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற வாழ்துகள்.
சிவா நன்றி
சரவணா டேங்க்ஸ் பா
அய்ஸ்....புத்தகத்தின் உங்கள் பார்வையை எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி அனைவருக்கும் புரியும் படி செய்திருக்கிறிர்கள்.
அடுத்த பகுதியை படிக்க தூண்டுகிறது.
//படிக்கும் வாசகனை கலைத்துப்போடும் எழுத்து தொடர்ச்சியாய் யாராலும் ஒரு மணி நேரம் இந்த புத்தகத்தை படிக்க முடியுமா என்பது சந்தேகந்தான்.//
உண்மைதான் அய்யானார்!
இரண்டாவது பக்கத்திலேயே வாசிப்பின் வேகத்தை குறைத்துக்கொள்ள வேண்டிய அதிர்ச்சி..அரைமணி நேர வாசிப்பிலே அது இட்டுச்சென்ற தீவிரமான மனோநிலை...
இப்போதிருக்கிற வேலைப்பளுவுக்கு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பொன்னியின் செல்வனை எடுத்துக்கொண்டுவிட்டேன்.. :)
Post a Comment