
உள்ளிருக்கும் புத்தர்
உன்னில் மட்டுமே உள்ளது நிறைவு
மகிழ்ச்சியைத் தேடவேண்டியதில்லை
இன்னபிற நீண்ட வாசகங்கள்
மேலும் சலிப்படையச் செய்கிறது
நிகழை..
எனது விடுபடல்கள்
தனியிருப்பு
விட்டு விடுதலையாதல்
சிறகுகள் முளைத்தல்
என்பன போன்ற
மிகையாக்கல் சித்திரங்களின் மீது
எச்சமிட்டு
திடுமென மரங்கள் அதிர
வெளியைக் கிழித்தபடி
பறக்கத் துவங்குகிறது
ஒரு பறவை
9 comments:
உங்கள் கவிதைகளை எப்போதும் ஒரு வித சோகம், ஏமாற்றம், தவிப்பு தென்படுகிறது எனக்கு. நான் சரியா தவறா என்று தெரியவில்லை.
//மிகையாக்கல் சித்திரங்களின் மீது
எச்சமிட்டு
திடுமென மரங்கள் அதிர
வெளியைக் கிழித்தபடி
பறக்கத் துவங்குகிறது
ஒரு பறவை// பிடித்த வரிகள். அந்த ஒரு பறவை - அய்யனார் பறவையா ;-))
"முழுமையான நிகழ்காலம் என்று எதுவுமே இல்லை; உங்கள் இறந்தகாலத்தின் அடுக்குகளால் உருவானது தான் நிகழ்காலம்" என்று எப்போதோ வாசித்தது ஞாபகம் வருகிறது. இறந்தகாலத்தின் aftermath, எதிர்காலத்தின் anxiety என்று நிகழ்காலத்தின் மேல் இருக்கும் சுமைகள் சுமப்பதற்கு எப்போதும் இலகுவானதாக இருப்பதில்லை.
அப்படிப்பட்ட நிகழ்காலத்தை அணுகுவதற்கு ஏதேனும் ஒரு மாயை தேவைப்படுகிறது. எல்லாமே இப்போது சரியாகத் தான் இருக்கிறது என்ற மாயையோ அல்லது எல்லாத் தளைகளையும் அறுத்தெறிந்து நாளை "விட்டு விடுதலையாகிவிடும்" மாயையோ தேவைப்படுகிறது.
உங்கள் நிகழ்பறவை இந்த மாயைகளையும் மறுதலித்துப் பறக்கிறது. அதீதமான மனச்சலிப்போ அல்லது அதீதமான மனத்தெளிவோ உங்கள் நிகழ்பறவைக்கு நேர்ந்திருக்கிறது :)
எனக்கு சுத்தமா புரியலைங்க.ஆனா மத்த ரெண்டுபேர் சொல்ற மாதிரி ஏதாச்சும் சோகமிருந்தா மாத்திக்கங்க.மாறிடுங்க.வாழ்க்கை வாழவும் மகிழவும்தான் தம்பி.
/அய்யனார் பறவையா ;-)) /
ஜெஸிலா
நானொரு பறவை என்கிற மிகையாக்கலை அழித்தது நிஜப் பறவை
கணேஷ் விரிவான பின்னூட்டத்திற்க்கு நன்றி.மாயைகளிடமிருந்து விடுபடல் அல்லது நிகழிலிருந்து தப்பித்தல் இரண்டுமே வலி நிறைந்தது. இருத்தலியம் எப்போதும் வசீகரமுடையது அதன் பிரம்மாண்டம் ஒரு யக்ஷி யைப்போல மிகுந்த ஆகிருதியை கொண்டிருக்கிறது அதனை நெருங்கி செல்ல முனைகையில் ஒரு மின்னலெனத் தோன்றி மறைகிறது.கைவசப்படுத்த முடியாத நிகழ்வின் தோல்விகளே என்னை நிறைக்கிறது.நிரம்பியதின் பகிர்தல்களே இவை..:)
கண்மணி
உங்கள் அன்புக்கு நன்றியை தவிர வேறென்ன சொல்லிவிட முடியும் என்னால் :)
இக்கவிதையின் பின்புலத்திற்க்கு காரணம் முன் பின்னூட்டத்தில் இருக்கிறது
வெங்காயம். உரிக்க உரிக்க வலி. உரித்ததும் பறக்கும் பறவை. பறவையை முடமாக்கும் மறு தேடல். மீண்டும் உரிப்பு.
நன்று.
//மாயைகளிடமிருந்து விடுபடல் அல்லது நிகழிலிருந்து தப்பித்தல் இரண்டுமே வலி நிறைந்தது. //
யப்பா! எப்பிடிங்க இப்படியெல்லாம்?
Post a Comment