Tuesday, March 13, 2007

கலையின் பன்முக தரிசனம் – மூன்று திரைப்படங்கள்

கவிதை,இசை,ஓவியம் என கலையின் முப்பரிமாண தரிசனம் ஒரு தூய சினிமாவின் மூலம் சாத்தியம்.உருகி,கதறி,வியந்து,பதறியுமாய் ஒரு உடம்பிலிருந்து எத்தனை உணர்ச்சிகளை வெளிக்கொணர முடியுமோ அத்தனையும் சாத்தியம் ஒரு நல்ல சினிமாவினூடாய்.சீனத் திரைப்படங்கள் உலக சினிமாவின் வேர்கள் எனலாம்.

1.The King Of Masks (1996)


நகரீயமாக்களின் தொடர்ச்சியாய் மெல்ல அழிந்துபோன சீனாவின் பழமையான கலைகளில் ஒன்று இந்த முகமூடி வித்தை. Bian lian என சொல்லப்படும் 300 வருட பாரம்பரியம் மிக்க இந்த முகமூடி வித்தை அறிந்தவர்கள் வெகு சிலரே. Wang who என்ற மிகத்திறமையான வித்தைக்காரர் தனது மனைவியையும் 10 வயது மகனையும் இழந்து
ஒரு படகு வீடு மற்றும் ஒரு குரங்குடன் வீதிகளில் வித்தை காட்டி மக்களை மகிழ்வித்தும்,கலையை உயிர்பித்துமாய் வாழ்ந்து வருகிறார். தனக்குப்பின் இந்த கலைக்கான ஒரு ஆண் வாரிசை தேடி அலைந்து அடிமை குழ்ந்தைகளை விற்கும் சந்தையில் ஒரு குழந்தையை வாங்குகிறார்.இவரது நம்பிக்கைகள் எவ்வாறு பொய்க்கின்றன?அரசியலும் பொறாமையும் ஒரு உன்னத கலஞன் வாழ்வில் ஏற்படுத்தும் வலிகளோடும் ஒரு குழந்தையின் எல்லைகளற்ற அன்பை சுமந்தபடியுமாய் இப்படம் பயணிக்கிறது.
பல் வேறு திரைப்பட விழாக்களில் 14 விருதுகளை பெற்றிருக்கிறது இப்படம்.

2.The Road Home ( 1999)



புகழ் பெற்ற இயக்குனர் zhank yimou இயக்கத்தில் வெளிவந்து பரவலாய் எல்லோரின் கவனத்தையும் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த திரைப்படம்.

Zhang ziyi என்ற இந்த பெண்ணின் முகம் வெகுநாட்களுக்கு மனதை விட்டு அகலவே இல்லை.ஒரு திரைப்படத்தை இவ்வளவு அழகாய் எடுக்கமுடியுமாஎன்ன?
ஒரு சின்னஞ்சிறு கிராமத்து
பெண்ணின்காதலை,அன்பை,பதட்டங்களை,இளமயின் அத்தனை உணர்வுகளையும் துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம்.

ஒவ்வொரு காட்சியும் ஒரு கைதேர்ந்த சிற்பியின் லாவகத்தோடு செதுக்கியிருக்கிறார்கள். அழகியல்
ரீதியான மிக முக்கியமான படைப்பு என சொல்லலாம்.


பின்னனி இசை படத்தை இன்னமும் அழகான இசை ஒவியம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. பார்வைகளின் முலமாய் மட்டுமே அன்பு பகிரப்படுகிறது.அவன் வருகைக்காக காத்திருந்த ஓடியே பழகின அப்புற்கள் நிறைந்த நீளச்சாலையில் அவனின் இறுதி ஊர்வலமும் நடக்கவேண்டுமென்ற அவளின் ஆசை நிறைவேறுவதோடு நமது இதயத்தின் எடையும் இருமடங்காகிறது.

ஒரு படம் முழுக்க ஒரு ஆசிரியனை பற்றி பேசுகிறர்கள்.அவனின் எளிமை,அன்பு,உரிமைக்காக போராடும் குணம் என மிகச்சிறந்த மனிதன் ஒருவனின் தன்னலம் கருதா தொண்டை பாராட்டுகிறார்கள்.இதை எல்லாவற்றையும் விட இந்த பெண்ணின் கண்மூடித்தனமான காதல் அம்மனிதனை கண்முன் நிறுத்துகிறது.

ஓரு மிகச்சிறந்த மரணம் இப்படித்தான் இருக்கமுடியும்.

3.The Way Home (2002)


சமீப காலமாய் கொரிய மொழியில் மிகச்சிறந்தப் படங்கள் வெளிவரதுவங்கியுள்ளன. இப்படத்தின் கதைக்களமும் ஒரு மலை சார்ந்த கிராமம்தான்.

நகரத்தில் வளர்ந்த அக்கறை சார்ந்த உலகத்திற்க்கு அப்பாற்பட்ட பிடிவாதமும் வால்தனமும் நிரம்பிய 7 வயது சிறுவன் வலுக்கட்டாயமாய் தன் பாட்டி வீட்டிற்க்கு விடுமுறைக்காக அவனது அம்மாவினால் கொண்டு வந்து விடப்படுகிறான்.

கூன் விழுந்த,வாய் பேச முடியாத அந்த பாட்டி தனது பேரனுடன் கழிக்கும் நாட்களை கவிதையாய் பதிவித்திருக்கின்றனர். நகரம் நமக்கே தெரியாமல் ஏற்படுத்தும் ஒரு சுயநல திரையை இச்சிறுவன் மூலமாய் அடையாளம் காண முடிகிறது.பாட்டியின் அன்பை மெதுவாக புரிந்து கொள்ள துவங்கும் சிறுவனின் அறிதல்கள் மிக மெல்லிய துக்க உணர்வோடு வெளிப்படும் இறுதி காட்சியின் கவித்துவம் அற்புதம்.

தன் வாழ்வின் கடைசி காலத்தை தனிமையோடும் மலைசூழ்ந்த இயற்கையோடும் கழிக்கும் பாட்டி தன் பேரனுக்காக எடுக்கும் சிரமங்கள் மிக கவனத்தோடு அவன் உலகை அனுகும் பாங்கு என பாட்டியின் ஒவ்வொரு அசைவும் மிக அழகான பதிவு.

அத்தனை பாட்டிகளுக்கும் இப்படத்தை சமர்ப்பித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் lee jeong-hyang

8 comments:

மஞ்சூர் ராசா said...

மூன்று படங்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

சித்தார்த் மனசுவைப்பாராக.

MyFriend said...

சீன, கொரியா என்று கிழக்கு பக்கம் உங்கள் காற்று வீசுதே?

மோன்றில் மூன்றாவவது படம் மட்டும் நான் பார்த்தது போல் இருக்கு.. ;-)

Ayyanar Viswanath said...

நன்றி மஞ்சூர்
/சித்தார்த் மனசுவைப்பாராக./

கண்டிப்பா சித்தார்த் கிட்ட சொல்றேன்
:)

/கிழக்கு பக்கம் உங்கள் காற்று வீசுதே?/

ஆமாம் அனு கொஞ்சம் கிழக்கு மேல் பாசம் அதிகம்

காட்டாறு said...

2, 3-ம் நான் பார்த்தேன். 2வது ஒரு ஆங்கில திரைப்படத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

3-வது என்னை மிகவும் பாதித்த படம். நம் அடுத்த ஜெனரேஷன் இது போல் தான் சுயநலமாய் வருமோ என்ற திகில் மனதில் எப்போதும் உண்டு.

தென்றல் said...

அய்யனார், நன்றாக எழுதியுள்ளீர்கள்!
(உங்க பேரே அய்யனார் தானுங்களா... இல்ல மத்தவங்களை மிரட்டுவதற்காக வைச்சீருக்கீங்களா?)

காட்டாறு.. (பேர்சொல்லி..கேள்வி கேட்கவே பயமாதான் இருக்கு..) எங்கங்க கிடைக்கும் இந்தப்படத்தின் DVD (netflix?)

Jazeela said...

'தி வே ஹோம்'ஐ தவிர மற்ற இரண்டு படங்களை இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். Subtitle-லோடு இருந்தால்தான் இது போன்ற படம் விளங்குகிறது.

காயத்ரி சித்தார்த் said...

படங்களை பார்த்த அனுபவமே கிடைத்தது. :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

the way home திரைப்படத்தை இங்கு பெறலாம்.

Featured Post

test

 test