Sunday, July 29, 2007

சந்தர்ப்பங்களைத் துய்த்தல்



செய்து முடிக்கப்பட வேண்டியதின் தரம் குறித்தான நிலைப்பாடுகளின் தீவிரத்தன்மை காரணமாக பொறுப்புகளை எப்போதும் தட்டிக் கழிக்கவே விரும்புவேன்.எதிர்பார்த்தலும்,நம்பிக்கை வைத்தலும்,காத்திருத்தலும் என்னை என் நிலையில் இயங்கவிடாதவை.தீவிரமான அன்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.எல்லா அன்பின் பின்னாலும் குளமெனத் தேங்கி நிற்கிறது தேவைகளின் எதிர்பார்ப்புகள்.

எதன் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பலரின் கேள்விகளாக இருக்கிறது.எந்த அடிப்படையில் இவனைத் தேர்வு செய்தார்கள் என்பதும் சிலரின் கேள்விகளாய் இருக்ககூடும்.அடிப்படைகளை நிரூபிக்கும் விதமாகவோ கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகவோ செயல்பட்டிருந்தால் அமைப்பியல் ரீதியாக கட்டமைவுகளின் ஒழுங்குகளை காப்பாற்றிய நிம்மதி என்னை வந்து சேரலாம்.

ஆசுவாசமான இந்த எழுத்தை எப்படி எழுதினால்தான் என்ன?ஏதோ ஒரு வடிவம்.அவரவர் அவரவருக்குப் பிடித்தமான பெயர்களை வைத்துக் கொள்ளட்டும்.குப்பை என்றோ கவிதை என்றோ ஆபாசம் என்றோ அசிங்கம் என்றோ வலியத் திணித்தல் என்றோ அவரவர் உள்ளங்கைக்கு ஏத்தாற்போல் அள்ளிக்கொள்ளட்டும் இல்லை முற்றிலுமாய் புறக்கணிக்கட்டும்.

ஒரு வாரத்தில் சில விதயங்களை பரிசோதித்துக்கொள்ள முடிந்தது(எழுதும் மொத்தமே பரிசோதனைதான்..சிலருக்கு சோதனையாகவும் இருக்ககூடும்).எழுத்து எல்லாரையும் சென்றடையும் வடிவம் எனக்கு சலிப்பைத் தந்தாலும் அசைக்கப் பட்ட சுயங்களின் கைத் தட்டல்களில் சற்றுக் குழம்பித்தான் போனேன்.வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்திலிருத்தலுக்கான விழைவுகள்தானோ?

நட்சத்திர வாரத்திற்க்கு தெரிவு செய்த தமிழ்மணத்திற்க்கும்,பின்னூட்டத்தைப் புறக்கணித்த நண்பர்களுக்கும் நெருங்கிய நண்பர்களின் பாசக்கார பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.
இதெல்லாம் ஒரு எழுத்தா?நீயெல்லாம் ஒரு ஆளா?என எவரும் இந்த வாரத்தில் திட்டவில்லை.வலையில் புதிதான நண்பர்களின் அறிமுகமும் இந்த வாரத்தில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மேலதிகமாய் நம்பகத்தன்மைக்கு வெகு அருகில் வாசகர்களை சில இடுகைகளின் மூலம் கொண்டு சென்றது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

ஒரு வாரத்தில் வாசிக்காமல் விட்ட இடுகைகள் குவிந்திருக்கிறது.பல மடல்களுக்கு இன்னும் பதில் போடவில்லை.எல்லாம் முடிந்து கிளம்புகையில் நீ ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதி என சமீபத்தில் விழித்த சிவப்புக் குரல்காரன் பின் முதுகைத் தட்டுகிறான்.

ஏன் இவ்வளவு நாட்களாய் வெறும் புரியாத கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருந்தாய்?வேறு வடிவங்களை முயற்சித்திருக்கலாமே என எல்லாத் தரப்பிலிருந்தும் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு…

பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன?

26 comments:

முபாரக் said...

//பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன? //

அதானே! முதல்நாள் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதற்காக நட்சத்திர வாரத்தில்கூட வந்து ஒரு எட்டுப் பாக்கலியே என்றாகிவிடுமா என்ன?

கொலைவெறியோடு (வலைப்பதிவுகளை) வாசிப்பவர்களுக்கு, வாசிப்பதற்காகவே வலைப்பதிவுலகிற்கு வருபவர்களுக்கு, மூக்குமுட்ட உண்ட திருப்தி.

அப்பாடா... இந்த ஏப்பம் முடியவே ரெண்டு நாள் ஆகும்.

அற்புதமான பதிவுகள் அய்யனார். இப்படியே கலந்து கட்டி எழுதவும்.

வாழ்த்துக்கள்

சினேகபூர்வம்
முபாரக்

லொடுக்கு said...

விடை பெறுதலா? நல்ல படியா போயிட்டு வாங்க. இந்த ஒரு அவ்வளவா தாவு தீரல. அதுக்கு ஒரு பெரிய நன்றி அறிவிப்பு கூட்டம் கூட்டனும். :)

Jazeela said...

நாடகம் முடிந்து வேஷம் கலைத்தலும், எழுதி எழுதியே களைத்து போதலும் ஒருமித்து வந்திருக்கிறது.

//எல்லா அன்பின் பின்னாலும் குளமெனத் தேங்கி நிற்கிறது தேவைகளின் எதிர்பார்ப்புகள்.// இன்னும் சரியான அன்பை பெறவில்லை என்பது இதற்கான பொருள்.

உங்கள் இந்த இறுதி பதிவில் ஒருவகையான சோக இழை தெரிகிறது. காரணம் இன்னும் பல நாட்கள் கழித்துதான் எழுத போவதாலா அல்லது வாசகர்களை விட்டு தூரம் செல்வதாக நினைத்துக் கொள்ளும் அலுப்பா? எது எப்படியோ, நிறைவான பதிவுகள் இந்த நட்சத்திர வாரத்தில். வாழ்த்துகள்.

Unknown said...

//வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்திலிருத்தலுக்கான விழைவுகள்தானோ\\
வாழ்க்கையில் எப்போதும் இல்லாவிட்டாலும்,அவ்வப்போது கைதட்டல் வேண்டித்தான் இருக்கிறது.
நீங்கள் ஒரு நட்சத்திரம்தான் என்பதை,
உணர வைத்து விட்டீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லதொருவாரத்துக்கு நன்றி. அய்யனார். தொடர்ந்து நல்ல எழுத்துக்களை தாருங்கள்.

ஜீவி said...

நண்பரே, நல்லதொரு சுயதேடல்.
வாழ்த்துக்கள்.
ஜீவி

பினாத்தல் சுரேஷ் said...

பிரதிகள் எழுப்பிய தாக்கங்களில் எழும்பிடும் எண்ண அலைகளின் விஸ்தீரணம் புதுத்தேடல்களை எழுப்பும்! ஊரோரக்குளத்தின் கல்வெடித்துச் செல்லும் அலைகள் பரவுதலாய் அக்கணமே வெடித்து வெளியேறத் துடிக்கும்!

நகரும் இயக்கியின் நிறங்களும் மாறி வேறிடம் கூட்டிச் செல்ல முனையும்.

செல்லா இடம் சென்று நேரம் செலவழித்தல் ஜீவனோபாயத்துக்கே அபாயம் தரும் என்றே கட்டமைத்து வாழும் அறிவிலிகளின் கூட்டத்தின் உடன்வாழும் ஜந்துவாய் இருத்தலின் முழுப்பரிணாமம் அப்போதுதான் வெளிப்படும்.. கட்டப்பட்ட கைகளின் வலியுணரும் தருணங்களில் ஞாபகத்தின் நீண்ட நிழல்களில் அக்கருத்துக்கள் ஒதுங்கும்.

நேரம் கிடைக்கையிலும் கருத்து கண்ணாமூச்சி ஆடும்..

இதுதான் அய்யனார் நான் பின்னூட்டம் போடாததுக்குக் காரணம்..

மத்தவங்களுக்கு -- ஆபீஸ்லே ப்ளாக்கர் ப்ளாக், வீடு வந்தா மறந்துருதுன்றதைத்தான் அப்படி அய்யனார் ஸ்டைல்ல எழுதி முயற்சி பண்ணியிருக்கேன் :-)

காயத்ரி சித்தார்த் said...

//பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன? //

உண்மை!

//அதானே! முதல்நாள் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதற்காக நட்சத்திர வாரத்தில்கூட வந்து ஒரு எட்டுப் பாக்கலியே என்றாகிவிடுமா என்ன?//

இதுவும் அப்பட்டமான உண்மை!

Unknown said...

என்ன கொலை வெறி இது? போகும் போதுமுன்னோக்கி அல்லவா போகவேண்டும் இதிலும் 'பின் நவீனமா? '

"சூப்பரா இருந்துச்சி உங்க போஸ்ட் எல்லாமே"

காயத்ரி சித்தார்த் said...

'சென்று தேய்ந்து இறுதலாய்' இல்லாமல் ஆரம்பித்த போதிருந்த எழுத்தின் கம்பீரத்தை முடிக்கும் வரையிலும் தக்க வைத்திருத்திருக்கிறீர்கள் அய்யனார். இயல்பாகவே உங்கள் எழுத்தில், கவிதைகளில், கதைகளில், விமர்சனங்களில் தனித்தன்மை மிளிரும் என்றாலும் இந்த ஒரு வார இடுகைகள் எதையோ நிரூபித்தலுக்கான ஆவேசத்துடன் அடர்வும் ஆழமும் கொண்டிருக்கின்றன. எங்கு சென்றாலும் உங்கள் எழுத்துக்கள் பின்தொடர்வதை தவிர்க்க முடியவில்லை.

உங்களை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு தான் நன்றி சொல்லவேண்டும்!

ஆரம்பிக்கும் போது சொல்ல முடியவில்லை.. வாழ்த்தை எப்போது சொன்னால் என்ன? வாழ்த்துக்கள் அய்யனார்!! :)

Unknown said...

தங்களின் சொல் ஆளுமைவியக்கவைக்கிறது...தங்கள் பதிவுகள் மூலம் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்...நன்றி!
அன்புடன்
சண் சிவா
www.aaraamthinai.blogspot.com

Anonymous said...

அய்யானார் போறப்போ ரொம்ப ஃபீல் பண்ண வெக்காதீங்க.

ஒரு வாரம் உள்ள பூந்து விளையாடிட்டீங்க. தொடர்ந்து கலக்குங்க.

ILA (a) இளா said...

புதிய பரிமாணங்கள் நிறைய முயற்சி செஞ்சு இருக்கீங்களே, அதுவே போதும் உங்க வெற்றிக்கு :)

Ayyanar Viswanath said...

முபாரக் ...என்மீதான உங்களின் நேசப்பறவைகள் எங்கிருந்தாலும் பறந்து கொண்டிருக்கும் என்பது எனக்கு தெரியும்தானே ..அன்பிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

ரொம்ப டேங்க்ஸ் லொடுக்கு..கடேசி வர பாஸ்ட் பெளலர் இந்த பக்கம் வரவே இல்ல :)

Ayyanar Viswanath said...

ஜெஸிலா

தொடர்ச்சியான உங்களின் வாசிப்பிற்க்கும் கருத்துப் பறிமாற்றத்திற்க்கும் விட்டுக்கொடுக்காத அன்பிற்க்கும் நன்றி என்பதைத்தவிர என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.

Ayyanar Viswanath said...

உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தாமோதர்..

முத்துலட்சுமி

மிக்க நன்றி!..கண்டிப்பாய் நல்ல எழுத்துக்களைத் தரமுயற்சிக்கிறேன்

Ayyanar Viswanath said...

ஜீவி !!

தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி

Sridhar V said...

மிகவும் சிறப்பான வாரமாக இருந்தது. இதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

பயனம் சென்று விட்டதால் உடனுக்குடன் பதிலிட முடியவில்லை.

தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் பல!

Ayyanar Viswanath said...

/கட்டப்பட்ட கைகளின் வலியுணரும் தருணங்களில் ஞாபகத்தின் நீண்ட நிழல்களில் அக்கருத்துக்கள் ஒதுங்கும்./

சுரேஷ் அட்டகாசம்!!
ஏதேது நீங்கள் கவிதைப் பக்கம் ஒதுங்கினால நான் இடத்தை காலி செய்யனும் போலிருக்கே :)

வாழ்த்துக்களுக்கும் புரிதல்களுக்கும் மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

காயத்ரி!!

தமிழ்ப் பேராசிரியரே பாரட்டும் போது மகிழ்வாகத்தானிருக்கிறது.என் எழுத்து உங்களுக்குப் பிடித்திருப்பது சந்தோஷம்.
அன்பிற்க்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

மகி ரொம்ப டேங்க்ஸ் :)

சன்ஷிவா

மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

நந்தா

உங்களுக்கு விரிவாய் மடலிடுகிறேன் தாமதத்திற்க்கு மாப்பு !!

சரியான புரிதல்களுக்கும் ஒத்த சிந்தனைகளுக்கும் தொடர்ந்த வாசிப்பிற்க்கும் நன்றி என்ற சொல் போதாதில்ல :)

Ayyanar Viswanath said...

இளா

மிக்க நன்றி

வெங்கட்
தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி

துளசி கோபால் said...

அட! 'மூட்டை கட்டிட்டேன்'றதை இப்படிக்கூடச் சொல்லலாமா? :-)

படம் பொருத்தமா இருக்கு.

நல்ல வாரம். நன்றி

Ayyanar Viswanath said...

துளசி டீச்சர்
:)

மிக்க நன்றி

Featured Post

test

 test