
குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின்மீது
படிந்திருக்கும் புனிதங்களை
எதைக் கொண்டழிப்பதெனத் தெரியவில்லை
உன் உபயோகித்த நாப்கின்கள்
இடைவிடாது பேசியபடியிருக்கும்
இப்புனிதர்களின் துவாரங்களை
அடைக்க ஏதுவாய் இருக்கலாம்
எப்படி வெளித்துப்பினாலும்
சளியின் வெண்மை திரண்டு
உள்ளேயே தங்கிவிடுகிறது வன்மத்தின் கசடுகள்
மேலும் அது
யாரும் எதிர்பாராதொரு தருணத்தில்
எதிராளியின் முகத்தில் தெறித்து
தன் இயல்பின் முகம் காட்டி
கூரிய பற்களில் சிரிக்கிறது
புனிதமும் வன்மமும் அழிந்த வெளியில்
நரம்பு துடிக்க வெளிப்படும்
ஸ்கலிதம்
பெருங்கொண்ட சிரிப்பின் மூலமாய் மீட்டெடுக்கிறது
ஆதியின் மூல வடிவங்களை
17 comments:
Post a Comment