Monday, June 18, 2007

வலைப்பதிவர் சந்திப்பிற்க்கு கொண்டு போக மறந்த கால யந்திரம்

இவ்விழாவின் மொத்த பார்வையும் இங்கே

துபாய் வந்து ஒரு வருடமாகியிருந்தும் நண்பர்களைத் தவிர்த்து எவ்வித விழாக்களிலும் கலந்துகொண்டதில்லை.வார இறுதியை ஆரவாரமாய் கிடேசன் பார்க்கில் வலை நண்பர்களுடன் கொண்டாடிவிடுவதால் பதிவர் சந்திப்பின் மீதான இழப்புகள் ஏதுமில்லை.எனினும் நம் நக்கல் நாயகர்,ஜெஸிலா,பெனாத்தலார்,லொடுக்கு,மகேந்திரன்
இவர்களையெல்லாம் இன்னும் சந்தித்திராததால் ஆர்வமுடன் வெள்ளிமாலை இந்திய கவுன்சிலேட்டிற்க்கு தம்பியுடனும் வரவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்த அனானி நண்பருடனும் (ஏற்கனவே தம்பி இவரை ஒரு பட்டிமன்றத்திற்க்கு கூட்டி சென்று தமிழ் விழாக்கள் என்றாலே தலை தெறிக்க ஓடுமளவு செய்துவிட்டிருந்தார்)குறிப்பிட்ட நேரத்திற்க்கு முன்னதாகவே சென்றுவிட்டிருந்தோம்.

அரங்கில் தமிழ் பட்டாசாய் வெடித்துகொண்டிருக்க முதுகு காட்டி உட்கார்ந்தபடி அண்ணாச்சி கவிதையின் அடுத்தகட்ட நகர்வைப்பற்றி எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பார்ப்பவர்கள் எல்லாரிடத்தும் கவிஞ்ர் தம்பி,கவிஞர் அய்யனார் என அறிமுகம் செய்து வைத்தார் பின்புதான் தெரிந்தது கவியரங்கத்திற்க்கு வருபவர்கள் எல்லாரையும் அவர் அப்படித்தான் அழைப்பாராம்

கிலியோடு வந்திருந்த தியாகு ஜெஸிலா வின் உரைநடை கவிதையில் உருகிப்போனார்

அரங்கம் அதிர பேச சென்ற அண்ணாச்சி தமக்கே உரித்தான பாணியில் வெளுத்து கட்டினார் அவரின் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்

* மு மேத்தா விற்க்கு சாகித்ய அகாதமி விருது மிக தாமதமாய் வழங்கப்பட்டிருக்கிறது அவரின் கண்ணீர் பூக்கள் வெளிவந்தபோதே இவ்விருது தரப்பட்டிருக்க வேண்டும்

* மேத்தாவிற்க்கு இவ்விருதை வழங்கியதின் மூலம் சாகித்ய அகாதமி விருது பெருமை அடைந்தது

* கால்நடைகளுக்கு தெரியுமா/கவிதைநடை-இது அவர் விருதுபெற்ற புத்தகத்தின் ஒரு சிறந்த கவிதை

* கவிதை மக்களுக்காக மட்டுமே எழுதப்பட வேண்டும்

* யதார்த்தம் மாந்திரீக யதார்த்தம் என்ற பெயர்களில் கவிதை எழுதுவது
யாருக்கு புரிகிறது?புரியாமல் கவிதை எழுதுவதால் யாருக்கென்ன பயன்?

இப்படி அண்ணாச்சி நிறைய உள்குத்துக்களோடு பேசி முடித்தார்.

தம்பி சிவாஜி படத்திற்க்கான டிக்கெட்டை ஒரு வாரமாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டு திரிந்ததின் பலனை அனுபவிக்க சிறிது நேரமே இருந்ததாலும்.எனக்கான ப்ரத்யேகப் புன்னகைகளை சுமந்திருக்கும் மது விடுதிப் பெண் நினைவில் வந்துபோனதாலும் உடனடியாக இடத்தை காலி செய்தோம்

பதிவர் ஜெஸிலா தற்செயலாய் போன் செய்ய வெளியில் வந்தபோது மூன்று நிமிடம் எங்களுக்காய் ஒதுக்கினார்.

அடுத்த முறையாவது தமிழ் விழாக்களுக்குச் செல்லும்போது பின்னோக்கி நகரும் என் காலயந்திரத்தை உடன் எடுத்துக் கொண்டு போவது என்கிற தீர்மாணத்துடன் காரிலமர்ந்தேன்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...