Wednesday, September 5, 2007

இதும் அதும் எதும் எப்படியுமில்லா



இந்த விருட்சத்தைப் போலில்லை நான்
வேரூன்றி உயர்ந்து கிளைத்து
வெயில் வாங்கி நிழல் தந்து
எதுவுமில்லை

இந்த புல்லினைப் போலவுமில்லை
பசிய தளிராய் பனித்துளியின் இருப்பிடமாய்
பூனைகளின் தண்ணீரை சேகரித்தபடியுமாய்
இதுவுமில்லை

மழைக்காலங்களில் காட்டு மர இடைவெளிகளில்
வழிந்தோடும்
சிற்றோடை போலவுமில்லை
பெருகி படர்ந்து வழிந்து சுழித்து குறுகி நெளிந்து
சருகு முதல் சாக்கடை வரையாய் ஒன்று சேர்த்து வழிந்தபடி
இப்படியுமில்லை

பிறகெப்படி?

இதுவும் அதுவும் எதுவும்
இப்படியும் எப்படியுமில்லா
ஒரு மனிதனைப் போலிருக்கிறேன்

Sunday, September 2, 2007

மனம் பிறழ்ந்த வழிப்போக்கனின் தொடர்புகளற்ற குறிப்புகள்


0 ------- 1-------------0
உன்னிடம் பேச வேண்டுமென்பது என் நெடுநாளைய விருப்பம்.இத்தனை நாட்களாக பேசிக்கொண்டிருப்பதுதான் என்ன? பேச்சுதானே?விடாத பேச்சு..எழுத்தும் குரலுமாய் எத்தனை பேச்சுக்கள்!..இரவு, பகல், மதியம், விடியல், பின்னிரவு என எந்த பொழுதில்தாம் நாம் பேசிக்கொள்ளவில்லை?இதை தவிர்த்து எப்போதும் உரையாடல்கள் ஓடிய படியே இருக்கும் தறிகெட்ட நினைவு.செவிகளில் இடைவிடாது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சொலிகள்.சதா உன்னை தொடர்ந்தபடி இருக்கும் மனதின் நினைவு,நினைவின் அலைவு, அலைவின் பிறழ்வு, பிறழ்வின் மய்யம் நீ! நீ மட்டும்தானென்பதை நான் சொல்லித்தான் அறிந்துகொள்ள வேண்டுமா?

ரத்த வாடைகளுடன் உயிரொன்றை சிதைக்கும் சொற்கள் இவையாய் இருக்ககூடும் என்பதைப் பற்றிய அக்கறையோ தயாரித்தல்களோ என்னிடம் எப்போதும் இருப்பதில்லை.மேலும் அந்த சூழலில் தோன்றும் உணர்வுகளை அந்தந்த சூழலில் தோன்றும் வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்துதல்தானே நேர்மையானதாய் இருக்கமுடியும்.உன்னிடம் பேசும்போது நான் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்னை அப்படியே விட்டுவிடுகிறேன். சொற்கள் தாமாகவே தன்னை வெளிப்படுத்துகின்றன.நீ தந்த இந்த சுதந்திரம் உன் மீதான என் நம்பிக்கைகளை மிகவும் வலுப்படுத்துவதாயிருக்கிறது.

சந்தேகித்தல்களை வெறுத்தவன் நான்.என் சகோதரனைப்போல் எதிர்ப்படும் எல்லா முகங்களிலேயும், பேசப்படும் எல்லா சொற்களிலேயும் புத்தரின் தரிசனங்களைத்தான் கண்டுகொண்டிருந்தேன். இந்த பேய் எப்போது பிடித்தது என தெரியவில்லை.மனிதர்களை மனிதர்களாக மட்டும்தான் இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.இந்த சொல் வெளிப்படும் உள்மனம் எத்தனை அழகானது/அபத்தமானது என்பது குறித்த பின் விவரணைகளை யோசிக்கத் தொடங்குகிறேன்.இந்த பின் விவரணை குறித்து என் அருகாமைத் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் மிகவும் பயந்துபோனாள்.இப்படி யோசித்தால் மகிழ்ச்சியின் ஊற்றுக் கண் மொத்தமாய் மூடிக்கொள்ளும் என்றும் எப்போதும் சந்தேகத்துடன் நீ வாழ்வது உனக்கும் மற்றவர்களும் எத்தனை ஆபத்தானதென்பது என்றும் உனக்கு புரியவில்லையா என்றாள்.சொல்லப்போனாள் ஒரு உண்மையான உள்மனத்தை மிகச் சரியாய் புரிந்துகொள்வது எத்தனை அற்புதமானதென்பது அவளுக்குப் புரியவில்லை.நடிப்பதோ பாசாங்கு செய்வதோ மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.எத்தனை மனிதர்கள்? எவ்வளவு நம்பிக்கைகள்? ஒவ்வொருத்தனாய்/ஒவ்வொன்றாய் தன் பாதுகாப்புணர்வை,தன் சார்ந்த உலகங்களை மிக குரூரமாய் நிரூபிக்க நேரிடும் கணங்களை,நேரடியாக சந்திப்பது எவ்வளவு வலி நிறைந்தது என்பது உனக்கு தெரியுமா?

எனக்கு பின்நவீனம் பிடித்துப்போனது இந்த சந்தேகித்தல் கூற்றினால் மட்டும்தான் என்றால் அதில் பொய்யில்லை.வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட என் பாடப்புத்தகங்களின் அறிவையும் நம்பிக்கைகளையும் சில/பல பிரதிகள் உடைத்துப்போனது.பாரதியின் பிம்பத்தை சிதைத்த ஒரு பிரதியை படிக்க நேர்ந்தபோது கதறிஅழத் தோன்றியது.இது ஏன் பொய்யாய் இருக்க கூடாது என வேண்டிக்கொண்டேன்.இறந்த ஒரு கலைஞனை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்து வந்தது.ஆனால் உனக்கொன்று தெரியுமா இப்போதெல்லாம் புதைக்கப்பட்ட குழிகளை தோண்டுவதில் ஏனோ எனக்கு குரூரமாய் ஒரு திருப்தி வந்து நேர்கிறது.இதை குரூரம் என சொல்வதில் கூட உடன்பாடில்லை கடன் என்றோ அத்தியாவசியமென்றோ தவிர்க்கமுடியாதது என்றோதான் சொல்லத் தோன்றுகிறது.பெருங்கதையாடல்களால் மூடப்பட்டிருக்கும் இந்த தமிழ்பரப்பை ஏன் ஒட்டு மொத்தமாய் தீக்கிரையாக்க கூடாது?வெறும் சிறுகதையாடல்களை கொண்டு மட்டும் இந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய சரித்திரப் பொய்களை கட்டவிழ்த்துவிட முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

தமிழொரு நீச மொழி என்ற பெரியாரின் புத்தகங்களையும் தமிழ் பேச முடியாத அளவிற்கு மிக கடுமையான மொழி என்ற ஓசோவின் பிரசங்கங்களையும் நாம் ஏன் பாடப்புத்தகங்களாகவோ அரசியலின்/சமூகவியலின் அடிப்படை சித்தாந்தங்களாகவோ மாற்றிவிடக்கூடாது?

0 ------- 2-------------0

என் தந்தையின் கடையில் சிங்கத்தின் படம்போட்ட சுவர் படமொன்று நினைவுக்கு வருகிறது அதன் அடியில் 'நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்' என எழுதப்பட்ட வாசகங்களை என் சிறுவயதில் அடிக்கடி படித்துக்கொள்வேன்.நானே என் கைப்பட 'அரசியல் பேசாதீர்' என எழுதியும் வைத்ததாய் நினைவு.அரசியல் ஒரு சாக்கடை கல்லெறிந்தால் மேலே தெறிக்கும் என எவனோ ஒரு புனிதன் சொன்னதுதான் என் சிறு பிராயங்களில் வேத வாக்காய் இருந்து வந்தது.அந்தப்புனிதன் யாரென்று தெரியவில்லை இப்போது மட்டும் அவனை அடையாளம் கண்டு கொண்டால் எத்தனை வயதாகியிருப்பினும் அவனை செருப்பாலடிப்பேன்.இந்த புனிதர்கள் நமக்கே தெரியாமல நம் சன்னல்களை மூடிவிடுவது எத்தனை அபத்தம்?போகிற போக்கில் சொல்லப்படும் வார்த்தைகள் வழிவழியாய் மரபின் தடம்பிடித்து வரும் ஒரு சாமான்யனை எவ்வித நிலைக்கு தள்ளிவிடுகிறது என்பது என் அரசியலறிவினை நோக்கினாலே உனக்கு புரிந்துவிடும்.

நம்மால் முடிந்த வரை இந்த புனிதர்கள் மீதும் நல்லவை என சொல்லப்படுபவைகள் மீதும் சேறுவாறி அடிப்போம் மிக மிக ஒழுங்கான புனிதன் என்றால் அவன் மீது உன் உதிரப்பெருக்கு காலத்தில் பயன்படுத்திய நாப்கின்களை கொண்டு அவன் முகத்தில் உதிர ஓவியம் ஒன்றினை வரைவதற்கான சாத்தியக்கூறுகளையும் முயன்று பார்ப்போம்.

அன்பு செலுத்துதல் என்பது என்னைப்பொருத்தவரை நாமாக புனைந்து கொள்ளும் ஒரு அசட்டு பிம்பம்.அன்பையெல்லாம் யார்மீதும் செலுத்த முடியாது.அன்பென்பது அவரவரிடத்தில் இருப்பது என்பதையே நான் மிகுந்த தயக்கங்களோடுதான் ஒத்துக்கொள்கிறேன்.நாம் அனைவரும் இரை தேடி அலைந்த ஆதி மிருகங்களின் வழித்தோன்றல்கள் மட்டும்தான் நாகரீகத்தின் சிதைவுகளில் குடும்பம்,அமைப்பியல்,விஞ்ஞானம் என பல்வேறு கூறுகளாய் சிதைந்த மனித மனம் கடைசியில் இறுகி இயந்திர மிருகங்களாகிவிட்ட இச்சூழலில் நீ சொல்லிக்கொள்ளும் அன்பென்பதின் சரியான பெயர் சுயநலமாய் மட்டும்தான் இருக்கமுடியும்.உன்னுடைய சுயநலத்தின் விழைவுகள்தான் உன்னுடைய பாரம்பரியமும், வழித்தோன்றல்களும், விதிமுறைகளும், கட்டமைவுகளும்.மற்றபடி தன்னலமில்லா தொண்டு என்பதோ தியாகம் என்பதோ பொதுநலம் என்பதோ தமிழகராதியிலிருந்து நீக்கப்படவேண்டிய வார்த்தைகள்.

எனக்கொரு அறிவு சீவி தோழியிருந்தாள் என் பழைய காதலியை தவிர்த்து என் நிர்வாணத்தை யாரும் அறிந்ததில்லை ஆனால் பேசிய இரண்டாம் மணி நேரத்திற்குள் இருவரும் தத்தம் ஆடைகளை களைந்தெறிந்து விட்டோம்.எவ்வித பாசாங்குகளும் இல்லாமல் பழகினோம்.கண்ணாடியில் தத்தமது பிம்பம் பார்த்து பேசுவது போலத்தான் உணர்ந்தோம்.அவளோடு பழகிய தொன்னூற்றெட்டு நாட்களும் நான் எவ்வித ஆடைகளும் அணிந்து கொள்ளவில்லை அவளும் அப்படியே ஆனால் ஒரு நாள் எல்லாம் சலித்துபோனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவள் எங்கேயோ போய்விட்டாள்.உண்மை உவப்பைத் தரும் அதே வேளையில் மிகுந்த சலிப்பையும் தந்துவிடும்.உண்மை சீக்கிரம் அலுத்துப்போவது அதன் இயல்பாயிருக்க முடியாது ஆனால் புனைவிலும்,அழகியலிலும்,பொய்யிலும், பாசாங்கிலும் ஊறித் திளைத்த நம் தமிழ்மனம் உண்மைத் தன்மையில் வெளிறிப்போகிறது.நிர்வாணத்தில், கனவின் கைப்பிடியை நெகிழ விட்ட வெட்டவெளியில், தனக்கான பயங்களின் பிறழ்வில் உண்மை மிகுந்த வெறுமைகளோடு சலிப்புகளை பதிவிக்கிறது. இருப்பினும் உண்மையை நேசிக்க ஆரம்பி.உண்மை மட்டுமே உண்மையானது.

தமிழ்சினிமாக்களில் தொப்புள்களாய்,பாதிபிதுங்கிய முலைகளாய் ஒதுங்கிய மாராப்புகளாய் பார்த்துப் பழகிய பெண்ணுடல் திடீரென எல்லாவற்றையும் அவிழ்த்தெறியும்போது ஒரு முகச்சுளிப்பு வந்து படர்வதை என்னால் மறுக்கமுடியவில்லை. மறைமுகமாய் நிர்வாணத்தின் மீது வெறுப்பை அல்லது ஈடுபாடின்மையை புனைந்து கொள்ள உள்மனதிற்கு ஊக்கிகளாக இருந்தது தமிழ்சினிமாவும் புனிதர்களும் மட்டும்தான்.இப்போது பார் உச்ச கட்டம் என்பது அவள் தன் பிராவின் ஊக்குகளை கழட்டும்போதே எனக்கு நேர்ந்துவிடுகிறது. இதே போன்ற அணுகுமுறைதான் அரசியலிலும் கலையிலும் வாழ்வியலிலும் பொதுவாய் தமிழ் பேசப்படும் இடங்களிலெங்கும் நிகழ்கிறதென்பதை நான் சொன்னாள் நீ என்னை மனம் பிறழ்ந்தவன் எனத் தூற்றுவாயா? …..

Saturday, September 1, 2007

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-5



நேற்றைய பிற்பகலில் பச்சை விளக்குகள் மினுங்க
ஆங்கிலத்தில் என் திரையில் தோன்றிய
தமிழெழுத்துக்கள்
என் இடுகைகளை தவறாது படித்துவிடுவதாகவும்
பின்னூட்டமிட்டால் எங்கே இந்தப் புனிதர்கள்
தன்னைத் தவறாய் புரிந்துகொண்டுவிடுவார்களோ
என பயந்து
பின்னூட்டத்தை தவிர்ப்பதாகவும் சொல்லிற்று

சாயந்திரத்தில் தமிழில் வந்த தமிழெழுத்துக்கள்
மார்பும் தொடையும் தரையில் அழுந்த
படுத்திருந்த பகற்பொழுது விழித்தெழுந்து
ஈரமான கழிவறையின் சன்னல்களைத் திறந்து
வெளியிலலைந்து
பின் சோர்ந்து
திரும்பி வந்து சமைத்ததாய் சொல்லிற்று

பிற்பகலில் சொல்லிவைத்தாற் போன்ற புன்னகையை
எவ்வித தயக்கங்களுமில்லாமல்
தந்துவிட முடிந்தது

சாயந்திரத்தில் சொற்கள் புறப்பட்டு வந்த திசையினை
மட்டுமல்லாது
சொற்கள் உருவான உருவத்தையும்
அணைத்துக் கொள்ளத் தோன்றிற்று

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-4



அதிரும் இசைத் துணையுடன்
போதையில் உலவும் இந்த/எந்த கண்களும்
என் முலைத் தீண்டாமல் போவதில்லை

ஆறு வயது வரை என் அம்மாவின் முலைகளில்
பாலருந்திக்கொண்டிருந்தேன் எனும் சொற்றொடர்களை
என் மேல் குற்றங்களைத் தெளிக்க
எத்தனிக்கும் தருணங்களில்
அம்மா பயன்படுத்துவாள்.

இப்போதும் என் முலைகளின்
துணையோடுதான் உணவருந்துகிறேன்
இந்த மார்பு கச்சை
உள்ளாடைகள்
அறை வாடகை
நாப்கின்கள்
பவுடர்
லிப்ஸ்டிக்
அத்தோடு காண்டம்களையும்
வாங்க முடிவது
பெருத்து விம்மிய
என் முலைகளைக் கொண்டுதான்

போதையிலோ/போதையில்லாமலோ
உலவும் எந்தக் கண்களும்
என் முலைத் தீண்டாமல் போவதில்லை

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-3



காதல் கவிதை எழுதுபவர்களை தூக்கிடலாம்
என்கிற என் கோரிக்கையை
நீ மிகுந்த சினங்களோடு மறுத்தாய்
கவிதையின் புனித தன்மைகள் குறித்த
உனது சிந்தனைகளின் மீது
நான் மூத்திரம் பெய்ய விரும்புகிறேன் கதிர்

எல்லா காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப் பார்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன

ஆண்/பெண் களின் ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல எதுவுமில்லை

இதயத்திற்கு மேலே சுரக்கும்
முலைக் கண்களின் வெளிப்பாடன்றி
காதல் கவிதைகளென்பது
வேறெதுவுமில்லை நண்பா

ஒரு பெண்ணைக் கிளர்த்த
கவிதை எழுதுவதைக் காட்டிலும்
அவளை வன்புணர்வது
பின் நவீன கடவுளர்களின் யுகத்தில்
புனிதமென்று கொண்டாடப்படும்

இந்த பழைய
கசங்கிய
வெளிறிய
நமுத்த
நாற்றமெடுத்த
ஆடைகளைக் காட்டிலும்
நிர்வாணமென்பது
எத்தனை சுதந்திரம்..!!

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-2



என்னுடலில் உன் இதழ் தீண்டா இடங்கள்
ஏதேனும் மிச்சமுள்ளாதா?
என்ற என் கேள்விக்கு மிகுந்த வெட்கங்களோடு
இல்லையெனும் விதமாய்
நீ தலைகவிழ்ந்து தலையசைத்தாய்
உன்னுடலில் என் இதழ் தீண்டா இடங்கள் பற்றி கேட்டபோது
ச்சீய் என வெட்கி மறுத்தாய்

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா
அப்படியே போயிருப்பினும்
இத்தனை சீக்கிரம் வேறொருவனை
திருமணம் செய்துகொண்டிருக்க வேண்டாம்
அப்படியே செய்துகொண்டிருப்பினும்
இத்தனை சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டாம்
அப்படியே பெற்றுக்கொண்டிருப்பினும்
அவளுக்கு அபர்ணா எனப் பெயர் வைத்திருக்க வேண்டாம்

இப்போது பார்
அ வில் தொடங்கும் பெயர் வைத்திருக்கிறாயே
என மகிழ்ந்து
வழக்கத்திற்கதிகமாய்
இந்தப் பின்னிரவிலும்
என் கண்ணாடி குவளையில்
இன்னும் மதுவை நிரப்புகிறேன்.

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-1




சிவனுக்கு அந்தி அலங்காரங்கள் ஓய்ந்து
நடையை சாத்தியபின்
பின்னிருந்த நந்தவன பூச்செடி மறைவின்
இடுக்குகளில் அமர்ந்தபடி
நீ வேறொருவனுடன் போவது குறித்தான
துயரங்களை சொல்லிக்கொண்டிருந்தாய்..
போவதென முடிவாகிவிட்டபின்
அப்படியே போயிருக்கலாம் ஸரயூ..
என் கன்னத்தில் முத்தமிட்டிருக்க வேண்டாம்

என் பாடலை கடைசியாய் கேட்க முளைத்த
உன் ஆசைகளை நிறைவேற்றும் விதமாய்
கண்கள் மூடி
பைரவி துணையோடு பாடிக்கொண்டிருந்தேன்
ஒரு வெளியில் உன் முகம் தேடி அலைந்த என் பாடல்
தன் துயரங்களை முடித்துக்கொண்டு
உன்னைத் தேடியபோது
நீ அருகிலில்லை
எப்போதோ சென்றுவிட்டிருந்தாய்..

உன் தகப்பனுக்காக என்னை துறந்தாய்
உன் கணவனுக்காக உன்னுடலை விற்றாய்
உனக்கென நீ என்ன செய்தாய் ஸரயூ?

என் நேற்றைய தோழி சொன்னாள்
எந்த ஒரு அன்பையும் நிராகரிக்க முடிவதில்லையென்று
அதில் நிரம்பி வழியும் அபத்தங்கள் உனக்குப் புரிகிறதா ஸரயூ?
எது அன்பென்பதே புரியாத வெளியில்
எங்கிருந்து வந்தன நிராகரிப்பும் ஏற்றுக்கொள்ளலும்?..

அன்பைப் பற்றிய வியாக்கியானங்கள்
எதுவும் சொல்லும் மனோநிலையில் நான் இப்போதில்லை ஸரயூ
ஒருவேளை புகாரியையும் சேதுக்கரசியையும்
நேசிக்கமுடியுமென்கிற என் நெகிழ்தலின் கணத்தில்
உன்னிடம் சொல்லவருவேன்
அன்பிற்கான வரையறைகளை

Featured Post

test

 test