இந்த வலைப்பூவை இணையதளமாக மாற்றிக் கொண்டு தினசரி எழுத வேண்டும் என்கிற எண்ணம் சென்ற வருடத்திலிருந்தே இருந்து கொண்டிருந்தது. நாள் முழுக்க வெட்டியாக ஆனால் பிஸி யாக இருக்கும் ஒரு விநோத தினசரிதான் ஆலா வுக்குப் பிறகு வாய்த்திருக்கிறது. அவ்வப்போது இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எழும். பிறகு அந்த எண்ணம் தரும் அலுப்பையும் சகிக்க இயலாது எண்ணுவதையும் நிறுத்திவிடுவேன்.
இன்று ஆகாஷின் பிறந்த தினம் என்பதால் இன்றிலிருந்து துவங்குவோம் என நேற்றிரவே வெற்றிகரமாக வலைப்பூவை இணையதளமாக மாற்றிவிட்டேன். கூகுல் டொமைனில் இந்தத் தளத்தை வாங்கியிருக்கிறேன். இனி மெதுவாகத்தான் இதை வடிவமைக்க வேண்டும். இப்போதைக்கு எழுதுவோம். வலைத்தளத்தை வடிவமைப்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆரம்பித்திருக்கிறேன்.
இணையம் முழுக்க சிதறிக் கிடக்கும் நான் எழுதிய மற்றும் என் தொடர்பான குறிப்புகள், வீடீயோக்களை முதலில் இங்கு சேகரிக்க வேண்டும். ஃபேஸ்புக் தரும் கும்பல் மனப்பான்மையிலிருந்தும் எதிர் மன நிலையிலிருந்தும் தப்பிக்க மீண்டும் வலைத்தளத்தை தூசு தட்டுவதுதான் ஒரே வழி என்பதை அறிந்தே இருந்தேன். ஆனால் என்னவோ ஒன்று தடுத்து நிறுத்திக் கொண்டே இருந்தது. எப்போதும் உடன் வரும் சோம்பலாக இருக்கலாம். அதை இன்று தூக்கிக் கடாசி இருக்கிறேன். இந்தத் தளத்தில் எழுதுபவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துவிடுவதோடு அதன் தொடர்புகளை சில காலத்திற்கு நிறுத்தி வைக்கிறேன்.
மூன்று நாவல்களை அங்கும் இங்குமாக எழுதி வைத்திருக்கிறேன். அவற்றையெல்லாம் வகைப்படுத்தி அத்தியாயங்களாகப் பிரித்து இங்கு வெளியிட வேண்டும். செயலின்மையிலிருந்து செயலுக்கு நகர ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. சில நேரங்களில் அது தன் முனைப்பாகவும், அகங்காரமாகவும் இன்னொரு பொழுதில் அன்பாகவும் கருணையாகவும் ஏன் வெறுப்பாகவும் வெறுமையாகவும் கூட இருந்திருக்கிறது. எனக்கு இது எல்லாமும் கலந்த ஓர் உணர்வாகத் தோன்றும் என்றாலும் எப்போதும் முன் நோக்கி உந்தித் தள்ள ஒரு கேள்வி உறுதுணையாக இருக்கிறது அது
“இந்த நமுத்த தினசரியை நீ எங்கனம் வாழ்வு என்கிறாய்?” என்பதுதான்.
இதைச் சுவாரசியமாக்கிக் கொள்ள என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன். நிறைவளிப்பதைப் போலத் தோன்றினாலும், அவை யாவும் மேலோட்டமானவை. மேலும் பல விஷயங்கள் என்னை நானே ஏமாற்றிக் கொள்பவையாகவும் இருக்கின்றன. எழுதுவதுதான் என்னை முழுமையாக மலர வைக்கிறது. திளைக்க வைக்கிறது. இருப்பை அர்த்த பூர்வமாக்குகிறது. சோர்வுறும்போதெல்லாம் மீண்டெழச் செய்கிறது. அதன் தாழ் பணிகிறேன்.
No comments:
Post a Comment