வியட்நாமின் நிலப்பகுதி எனக்குப் பிடித்தமானது. திரைப்படங்களில் ஆவணப்படங்களில் பார்த்ததுதான். நேரில் சென்றதில்லை. ஆனால் வியட்நாமின் மீதான உள்ளார்ந்த விருப்பம் என்னை விரைவில் அங்கு கொண்டு செல்லுமென்றே நம்புகிறேன். சேற்றுப் புதைவுகளில் ஆசுவாசமாக அசைபோடும் எருமைகளை காணும்போதெல்லாம் ஒரு சிறு புன்னகை தொற்றிக் கொள்கிறது. வருகிறேன் செல்லங்களே என அவைகளிடம் மிக ரகசியமாய் சொல்லிக் கொள்கிறேன். தலைக்கு சிறு குடையை கட்டிக் கொண்டு விடாத மழையைப் பொருட்படுத்தாது வயல்களில் வேலை பார்க்கும் மினுங்கும் கண்களைக் கொண்ட மனிதர்களை நேரில் பார்க்க வேண்டும்.
THE SCENT OF GREEN PAPAYA என்கிற இந்தப் படம் வியட்நாமின் நிலக்காட்சிகளைப் பதிவு செய்யவில்லை. மாறாய் எளிய மனிதர்களின் வாழ்வை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.
வீட்டு வேலைக்குப் போகும் சிறுமியின் பதினைந்து வருட வாழ்வுதான் இந்தப்படம். அவளின் சின்னஞ்சிறு உலகம் அவள் கண்களின் வழியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. கவித்துவம் என்கிற சொல்லிற்கு இந்தப் படம் நியாயம் செய்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம், அவ்வளவு நுணுக்கம், அவ்வளவு நெகிழ்வு. மைய சரடாக அன்பு இருக்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பாராத, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆழமான அன்புமிக்க மனிதர்களை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடும் வாழ்க்கை முறையும் மனிதர்களும் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்கள்தாம். தைவானிய இயக்குனரான HSIAO-HSIEN HOU வின் படங்களில் நான் விழுந்து கிடந்த காலத்தை இந்தப் படம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்தது. தைவான் படங்களில் வரும் வீடும் மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட ஹோ வின் அதே திரைப்பட மொழியை Anh Hung Tran ம் கையாண்டிருக்கிறார்.
ட்ரான் இயக்கத்தில் வெளிவந்த நார்வேஜியன் வுட் திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தேன். முரகாமியின் அதே புகழ்பெற்ற நாவல்தான். நாவல் தந்த உணர்வை திரைப்படத்தில் பெற முடியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன. குறிப்பாக காற்று படத்தில் இன்னொரு கதாபாத்திரமாக மாறியிருக்கும். முழுமையானப் படமாக இல்லாததால் இயக்குனர் யார் என்பதைக் கூடப் பார்க்கவில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு தேடிப்பார்த்ததில்தான் நார்வேஜியன் வுட் இயக்குனர் என்பது தெரியவந்தது. இவரின் மற்ற படங்களை தேடிப்பார்த்தேன். Cyclo வும் THE VERTICAL RAY OF THE SUN திரைப்படமும் கிடைத்தது. மூன்றிலும் ட்ரான் மனைவியே பிரதான கதாபாத்திரம். க்ரீன் பப்பாயா படத்தைத் தொடர்ந்து சைக்லோவைப் பார்த்தேன். வியட்நாம் விளிம்பு நிலை மனிதர்களை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். கீரீன் பப்பாயா தந்த உணர்வை நீட்டிக்கச் செய்ய மனம் விரும்பியதால் பாதியில் நிறுத்திவிட்டேன்.
என் திருவண்ணாமலை வீட்டில் நிறைய பப்பாளி மரங்கள் இருந்தன. இம்மரமும் அதன் அகல இலைகளும் பால்சொட்டும் பப்பாளிக் காயும் என் பால்யத்தோடு தொடர்புடையதால் திரைப்படத்தோடு ஒன்றிப் போக முடிந்தது. கிட்டத்தட்ட அந்தப் பச்சை வாசனையை திரையின் வழியாகவே முகர்ந்து விட முடிந்தது.
No comments:
Post a Comment