Monday, April 16, 2012

புத்துணர்வு

பிறந்தநாளுக்கு தொலைபேசி,மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. ஃபேஸ் புக் மூலம் வந்து குவிந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் சற்றுத் திகைப்பூட்டுவதாய் இருந்தன. பொதுவாகவே நான் பரவலான மனிதர்களின் கவனத்தையும் நட்புகளையும் பெற்றிராதவன் என்கிற நம்பிக்கைகள் உள்ளூர உண்டு, அவை பொய்க்கும் தருணங்கள் மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தருகின்றன. நானும் என்னைச் சுற்றியுள்ள சமூகமும் சேர்ந்தேதான் பயணிக்கிறோம், யாரும் என்னை விலக்கிவைத்துவிட வில்லை என்பது நிம்மதியையும் ஆசுவாசத்தையும் தருகிறது. இந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் கடமைப்பட்ட வனாகிறேன்.

வியாழன் மாலை கராமா வில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் வெகுநாட்களாக சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் நாஞ்சில் நாடனையும் சந்தித்து விட முடிந்தது. கூடுதல் மகிழ்ச்சியாக எழுத்தாளர் ஆபிதீனும் நிகழ்விற்கு வந்திருந்தார். மூவரையும் சந்தித்து உரையாடியது என்னுடைய ஒரே மாதிரியான இந்நாட்களின் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களை சற்று மாற்றியமைப்பதாய் அமைந்தது. ஜெவை முதன்முதலாக சந்திப்பது போன்ற எண்ணமே வரவில்லை. ஒரே பார்வையில் ஒரே புன்னகையில் பனிரெண்டு வருடங்களுக்கு மேலாய் தொடரும் வாசக- எழுத்தாள உறவு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது. நான் அதிகம் மறுத்த ,முரண்பட்ட, எழுத்தின் பிரம்மாண்டம் கண்டு திகைத்த, அவரைப் பற்றியே தொடர்ந்து பேசவைத்த ஆளுமை ஜெயமோகன். அவருடனான சந்திப்பை துபாயில் எதிர்பார்த்திருக்கவில்லையெனினும் சந்திக்க நேர்ந்ததை மிக முக்கியமான தருணமாகவே நினைக்கிறேன். 

நாஞ்சில் நாடனின் பேச்சு கச்சிதமாக இருந்தது. சொற்களை நான் எந்த அளவு பயன்படுத்துகிறேன், எழுதுபவனுக்கு சொற்களோடு இருக்க வேண்டிய உறவின் அவசியம் குறித்தெல்லாம் சுய பரிசோதனை செய்து கொண்டேன். சில காலம் ஆங்கில வாசிப்பை தள்ளி வைத்துவிட்டு சிலப்பதிகாரத்தை வாசித்துப் பார்க்க வேண்டும். கம்பனையும் வார்த்தைகளாக சொற்களாக படித்துப் பார்க்க வேண்டும். ஜெயமோகனின் மைய உரையை அவரது தளத்தில் முழுமையாக வாசித்துவிடலாம். உரைக்கு முன்பு திருவண்ணாமலை குறித்தும் பவா.செல்லதுரை குறித்தும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். எண்பதுகளில் பவாவின் வீடு எத்தகைய முக்கியமான இடமாக இருந்தது என அவர் சொன்னதையெல்லாம் விலாவரியாக பவா என்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறார். ஜெயமோகன் உரையில் நண்பர்களோடு பேசிய அந்தப் பொழுதுகள் தன்னுடைய வாழ்வின் மிக முக்கியமான இடம் வகிப்பதாக சொன்னார்.

ஆபிதீன் அவரது எழுத்தைப் போலவே நேர் பேச்சிலும் அசரடித்தார். இன்னொரு முறை அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து நிறையப் பேச வேண்டும். என்னை தொடர்ந்து வாசிப்பதாக சொன்னார். சற்று நெகிழ்ச்சியாக இருந்தது. எழுதுபவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

எங்களின் குறும்படமான Road Song அதன் செய்நேர்த்திக்காக பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. பினு மிகுந்த உற்சாகத்தில் திளைக்கிறான். தயாரிப்பாளரான சஜித்திற்கும் படத்தின் நேர்த்தி மிகவும் பிடித்திருக்கிறது. பினு சென்ற மாதம் இங்கு வந்திருந்தபோது தன்னுடைய அடுத்த முழுநீள திரைப்படத்திற்கான ஆயத்தங்களில் சில கதைக் கருக்களை யோசித்து வைத்திருந்தான். நான் எல்லாக் கருவையும் கேட்டுவிட்டு எதற்கும் இருக்கட்டுமே என இருபது வெள்ளைக்காரர்கள் கதையை விலாவரியாக சொன்னேன். கதையை முழுமையாய் கேட்டவன் தரையிலிருந்து ஒரு அடி எம்பிக்குதித்துவிட்டு என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான். நம்முடைய அடுத்த படம் இதுதான் என்றான். உடனடியாய் சஜித்திற்கும் கதையை சொல்லிவிட்டேன். இந்த வருடக் கடைசியில் திருவண்ணாமலையில் வைத்தே படப்பிடிப்பை துவங்கி விடுவதாய் திட்டமிட்டிருக்கிறான். ஆனால் இருபது வெள்ளைக்காரர்களை படமாக்குவது எளிதான விஷயமாகத் தோன்றவில்லை. பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

இருபது வெள்ளைக்காரர்களை இன்னும் துல்லியமாய் விரிவான ஸ்கிரிப்டாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதல் காபியை பினு கையிலேயே கொடுத்துவிட்டேன்தான் என்றாலும் எனக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். புதிர்தன்மை, காமம், வன்மம், அழகியல், கொண்டாட்டம் என எல்லாம் இருந்தாலும் அரசியலையும் பதிவாக்க வேண்டும் என்பது சஜித்தின் விருப்பம். இந்தக் கதையில் இயங்கும் அரசியலின் நாடியை சில படிமங்களாக எழுதி சேர்க்க வேண்டிய வேலையும் இருக்கிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் இரண்டு குறுநாவல்களுக்கான முடிச்சு மனதில் விழுந்தது. முதல் குறுநாவலுக்கு ஓரிதழ்பூ என்ற பெயரையும் தேர்வு செய்துவிட்டேன். சாக்தம் குறித்து இந்நாவலில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்திருக்கிறது ஆனால் அதற்கான வாசிப்பும் அனுபவமும் என்னிடம் கிடையாது. அனுபவங்கள் இப்போது சாத்தியமில்லை என்றாலும் குறைந்த பட்சம் சாக்தம் குறித்து இன்னும் விரிவாகப் படித்த பின்புதான் நாவலைத் தொடர வேண்டும். இன்னொரு குறுநாவலை சுவாரசியத்தை மட்டும் பிரதானமாக வைத்து எழுதிப் பார்க்க நினைத்திருக்கிறேன். க்ரைம் கதை - இலக்கியப் பிரதி இவ்விரண்டிற்கு இடையிலேயும் நிகழும் விளையாட்டை லேசான கிண்டல் தொணியில் எழுதும் எண்ணம். ஏராளமான க்ரைம் கதைகளும் ஒரு முழு நீள இலக்கிய நாவலும் இந்தக் குறுநாவலில் வரும். இந்தக் குறுநாவலுக்கான வடிவத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். இரு வேறு மொழிநடையை, எழுத்து நடையை கொண்டு வர வேண்டிய சவாலும் கண் முன் நிற்கிறது. இரண்டு குறுநாவல்களிலும் சில அத்தியாயங்களை எழுதிப் பார்த்தேன். அவற்றை இவ்வருட இறுதிக்குள்ளாவது முடித்துவிட வேண்டும். இதற்கு நடுவில் மனைவியின் தொடர் நிர்பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிடப்பில் கிடக்கும் எம்பிஏ வை முடிக்க வேண்டும்.

எழுத விரும்புபவன் ஏன் எழுத மட்டுமே செய்யக் கூடாது? என்ற பதில் வேண்டாத தொடர் கேள்வியை ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு கிளம்பி காரின் எஞ்ஜினை உயிர்ப்பிக்கும் போது கேட்டுக்கொள்கிறேன். கூடவே இன்று காலை, இலக்கிய சந்திப்பிற்குப் பிறகு, நள்ளிரவிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, ஜெயமோகனிடம் விடைபெறும் போது அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தன. ஒன்று, எழுத்தாளன் வசிக்க கூடாத இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் எழுதுபவனுக்கு எழுதும் மொழி எப்போதும் காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். இரண்டாவதை விரைவில் நீங்களே அனுபவிக்க நேரிடலாம் அது “இப்போதைக்கு நிறைய எழுதுங்கள் நாற்பது வயதிற்கு மேல் வேண்டுமானால் குவாண்டிட்டியை குறைத்துக் கொள்ளலாம்”

Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...