Monday, December 19, 2011

அஞ்சலி - சிகெரெட்


பதினேழு வயது. டிப்ளமா இரண்டாவது வருடம். ஒரு மீறலுக்கு, எதிர்ப்பை ஆர்ப்பாட்டமாய் தெரிவிப்பதற்கு ஆரம்பித்ததுதான். முதல் வருட எச்.ஓ.டி யே தன்னுடைய வீட்டை ஹாஸ்டல் மாதிரி நடத்திக் கொண்டிருந்தார். இருபத்தைந்து மாணவர்களும் இரண்டு தடித்த நாய்களும் அவர் வீட்டில் தங்கியிருந்தோம். கடுமையான சட்டங்கள்.இருபத்தைந்து பேரும் உள்ளே குமுறிக் கொண்டிருந்தாலும் எச்.ஓ.டி என்பதால் வெளியே காண்பித்துக் கொள்ள முடியவில்லை. மேற்படி நாளில் குடும்பத்தோடு அவர் வெளியூர் போயிருந்த சமயம். இருபத்தைந்து பேருக்கும் உற்சாகம் கரை புரண்டது. என்னசெய்வதென்றே தெரியாமல் போனது. கோல்ட் பிளேக் பில்டர் சிகரெட்டை வாங்கி வந்து பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லா அறைக்குள்ளும் போய் புகையை ஊதித் தள்ளி தத்தமது கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டனர். அந்த உற்சாக புகை எதிர்ப்பில் நானும் கலந்து கொள்ளும் பொருட்டு வாழ்நாளின் முதல் சிகரெட்டை உள்ளே இழுக்கத் தெரியாது புகைத்து முடித்தேன். விரைவில் சிகரெட் புகைப்பது என்பது பதின்மத்தின் மாபெரும் லும்ப அடையாளம் என்பதும் தெரிய வந்தது. இரண்டு மாதத்தில் புகையை மூக்கு மற்றும் காது வழியே வெளியேற்றுவது, புகையை உள்ளிழுத்து விட்டு டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு இழுத்ததை வெளியே விடுவது, வளையங்களை காற்று வெளியில் உருவாக்குவது மாதிரியான கலைகளில் தேர்ச்சி பெற்றேன்.

ஒரு கட்டத்தில் எச்.ஓ.டி எங்களை மேய்க்க முடியாது அறையிலிருந்து வெளியேற்றினார். சந்தோஷமாய் அருகிலிருந்த கிராமத்தில் தனி வீடு எடுத்து தங்கிக் கொண்டோம். புகை, மகிழ்ச்சி எல்லாமே இரட்டிப்பானது. கல்லூரி பஸ் ஸ்டாண்டில் நின்று புகைபிடித்தால் தாம் பெரிய ஆள் என்றொரு மிதப்பு வந்து போகும். பெரிய ஸெட் ஆட்கள் தவ்ளோண்டு பையன் என்பதைக் கூட பொருட்படுத்தாது ஆட்டையில் சேர்த்துக் கொள்வார்கள். மூன்றாம் வருட பையனையும் மச்சி என தாராளமாகக் கூப்பிடலாம். பீடியின் உபயத்தால்தான் நிறைய மார்க் வாங்கினோம். நாளை தேர்வு என்றால் இன்றிரவு முழுக்க கண் விழித்துப் படிப்போம். தூக்கத்தை விரட்ட பீடிக்கட்டு. எல்லோருமே நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றோம். கடைசி வருடத்தில் தேர்வுகள் முடிந்து கல்லூரி அடைக்கப்பட்டு ஈ காக்கை உட்பட எல்லாமும் பறந்து போயிருந்தும் நாங்கள் மட்டும் தங்கியிருந்து கொட்டமடித்தோம். ஸரக்கடிக்க வழியில்லாது போன ஒரு பிற்பகலில் எங்கிருந்தோ கஞ்சாத் துகள் பொட்டலங்களை அறைத் தோழன் வாங்கி வந்திருந்தான். தலைகீழான உலகத்தை, மரண போதையை அன்று புகை வழியே தரிசிக்க முடிந்தது. பாண்டிப் பயலுக்கு சற்று அதிகமாகி பிதற்ற ஆரம்பித்துவிட்டான். ஒரு கட்டத்தில் அவனுக்கு செத்துப் போய்விடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. டைரியை துழாவி எடுத்து தன்னுடைய கடைசி கடிதத்தை கைநடுங்க வீட்டாருக்கு எழுத ஆரம்பித்ததுதான் அந்நிகழ்வின் உச்சம். நள்ளிரவு வாக்கில் அனைவரும் சமநிலைக்குத் திரும்பி, பேயாய் பசித்த வயிற்றை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாமல் அங்கிருந்த ஒரே ஓட்டல் கடைக்காரரையும் எழுப்பி அடுத்த நாள் காலை மாடு உண்பதற்காய் மீதமிருந்த பண்டங்களை தின்று விட்டு வந்தோம்.

வேலைக்குப் போக ஆரம்பித்த வாழ்க்கை வேரொரு விதம். பயம் குறிக்கோள் எதுவுமே இல்லாத பதின் பருவத்தைப் போலில்லை அது. புகை மட்டும் தொடர்ந்து வந்தது. நிறைய நண்பர்களையும் கொண்டு வந்தது. மிகவும் நல்ல மாதிரியான பொது அடையாளங்களில் மாட்டிக் கொண்டுவிடாமலிருக்கவும் புகை உதவியது. புதுச்சேரி நகரமும் வாழ்வும் பதின் பருவத்தை மீண்டும் கொண்டு வந்தது. நிறைய நண்பர்கள், நிறைய கொண்டாட்டம். வாழ்வு அப்படியே வழுக்கிக் கொண்டு போனது. புகை புகை புகைதான். என் வாழ்வில் அதிகபட்ச சிகரெட்டுகளை ஊதித் தள்ளியது புதுச்சேரி வாழ்வில்தான். நாளொன்றுக்கு பதினைந்து சிகரெட்டுகள் குறையாமல் புகைத்தேன். இரவுப் பணியென்றால் கணக்கு வழக்கே கிடையாது. கிடைத்த நண்பர்களும் அப்படியே. ஒரு சிகரெட்டிற்கும் அடுத்த சிகரெட்டிற்கும் அரை மணி நேர இடைவெளி போன்ற ரூல்ஸ்களை நாங்களே உருவாக்கி அதைத் தினம் நாங்களே மீறினோம். நான்கு சிகரெட்டுகளும் இரண்டு டீயும்தான் இரண்டு வருடக் காலை உணவாக இருந்தது.

வாழ்வு விசிறிக் கடாசியதில் ஒசூர், சென்னை, மதுரை நகரங்களை சுற்றிமுடித்து நானும் புகையும் ஷார்ஜா வந்தோம். ஷார்ஜா அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டே புகைக்கலாம். கணினியோடு ஆஸ்ட்ரேவும் டேபிளில் இருக்கும். விதம் விதமான சிகரெட்டுகளும் கிடைத்தன. எல்லாமிருந்தும் புகைக்க உடன் நண்பர்கள் இல்லாமல் போனது சிகரெட்டின் எண்ணிக்கையை கணிசமாய் குறைத்தது. அடுத்தடுத்த பணி மாற்றங்கள். கடைசி இரண்டு அலுவலகங்களிலும் புகைக்க தடை. வெளியில் போய் புகைக்கலாம் என்றாலும் உடன் பணிபுரியும் ஒருவருக்கும் புகைப்பழக்கம் கிடையாது. அத்தோடு சோம்பலும் சேர்ந்து கொள்ளவே கடந்த மூன்று வருடங்களாய் அலுவலகத்தில் புகைப்பது நின்று போனது. திருமணம் குழந்தைகள் என்றானபிறகு மிடில் க்ளாஸ் உடல் நலன் விழிப்படைந்து நாளொன்றுக்கு இரண்டு சிகரெட்டுகள் என்ற கணக்கை வகுத்துக் கொண்டது. அவ்வப்போது மீறல்கள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு பாக்கெட் சிகரெட் என்றொரு கணக்கில்தான் ஒரு வருடம் ஓடியது. இனி ..

ஆம் நான் புகையை நிறுத்திவிட்டேன். கடைசியாய் ஒரு ரெட் மார்ல்ப்ரோ சிகரெட்டை பத்து நாட்களுக்கு முன்பு ஒரு அதிகாலையில் குளிரில் நடுங்க நடுங்க புகைத்தோடு சரி. இந்த முடிவு புது வருடத்திற்கான வழக்கமான இனிமேல் வகையறா முடிவு அல்ல. உண்மையில் எனக்கு சிகரெட் பிடிக்க bore அடிக்கிறது. கடுமையான bore. சிகரெட் பிடிப்பது உற்சாகத்திற்காக என்கிற நிலையிலிருந்து நகர்ந்து சிகரெட் பிடிப்பது என்பது ஒரு கடமையாய் வேலையாய் மாறிப்போனது. ஏற்கனவே கடமை, கண்ணியம், கட்டுப்பாடாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, எதற்கு இன்னொரு சுமை எனத் தோன்றவேதான் நிறுத்தி விட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமா? இந்தக் கருமத்தை எல்லாம் எழுதி எங்களை ஏன் கடுப்பேற்றுகிறாய் என்கிற உங்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால் எங்களின் பதினான்கு வருட பந்தத்திற்கு ஒரு அஞ்சலிக் கட்டுரை கூட எழுதவில்லையென்றால் அப்புறம் நானென்ன வளரும் எழுத்தாளன்?

என் ப்ரிய புகையே- சிகரெட்டே போய் வா. என் பழைய காதலிகளைப் போல நீயும் நானும் ஒரு போதும் சந்தித்து விடாதிருப்போம்.

புகை கட்டுரைக்கு எதற்கு அஞ்சலி போட்டோ என்கிற கேள்வி உங்களுக்கு எழாதுதானே?

9 comments:

ராம்ஜி_யாஹூ said...

அய்யனார்

உண்மையில் சிகரெட்/பீடி அந்த இரண்டு /மூன்று நிமிடங்களுக்கு சிந்தனை ஓட்டத்தை மாற்றும் சக்தி உடையதா. அது குறித்த உங்கள் அனுபவம் என்ன.

ஒருவர் சோக/வருத்த நிலையில்/சிந்தனைகளில் இருக்கையில் புகை அந்த சிந்தனையை மாற்றும்/தள்ளிப் போட உதவும் என்கிறார்களே, அது உண்மையா

உயிரோடை said...

//இந்தக் கருமத்தை எல்லாம் எழுதி எங்களை ஏன் கடுப்பேற்றுகிறாய் என்கிற உங்கள் கேள்வி நியாயமானதுதான்.//

நீங்க ரொம்ப நல்லவரு... அய்யனார் அளவில்லையா?

shanmugam said...

Anjali Photo Superb

shanmugam said...

Anjali Superb

shanmugam said...

Anjali (photo)superb

ஆடுமாடு said...

அய்யனார் நலம்தானே.

நானும் இந்த நண்பனை(சிகரெட்தான்) பல வருடமாய் விட நினைத்து,
முட்டி மோதி நிறுத்தி சரியாக ஒருவருடம் ஆகிவிட்டது.

எழுதாததால், 'அஞ்சலி' கோபப்படுமோ?

சித்திரவீதிக்காரன் said...

நான் சிகரெட் புகைப்பதில்லை. நானும் தங்களைப் போல டிப்ளமோ மாணவன்தான். டிப்ளமோ படிப்பு இறுதிநாளன்று உடன் படித்த நண்பன் தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டைக் கொடுத்து அவனுக்காக புகைக்க சொன்னான். அன்று மட்டும் அதை இழுத்தது. பின் அந்தப்பழக்கம் தொடரவில்லை. சிகரெட்டிற்கு தாங்கள் முழுக்கு போட்டது ரொம்ப நல்லது. வாழ்த்துகள்.

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

முருகேசன் பொன்னுச்சாமி said...

கட்டுரை அருமை அய்யனார் . இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Featured Post

test

 test