Tuesday, December 13, 2011

குறுநாவல் 4. அத்தியாயம்1



ஒரு மட்டமான பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். மட்டம் என்பது நாகரீக உச்சரிப்பு. படு கேவலமான பார் என்பது சரியாக இருக்கலாம். பார் என இதைச் சொல்லலாமா? என்று கூடத் தெரியவில்லை. தகரக் கூரை வேய்ந்த குட்டிச் சுவர் என்பது சரியாக இருக்கலாம். ஒரு மூலையிலிருந்து மூத்திர நாற்றம் கசிந்து வந்து கொண்டிருந்தது. கூட்டமாய் கூரைக்குள் குடித்து விட்டு கூரைக்கு வெளியே போய் அந்த மூலைக்குப் பின்னால்தான் ஒன்றுக்கடிப்பார்கள். இன்னொரு மூலையில் மஞ்சளாய் வாந்தி ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. நின்றபடியே சரக்கை வாயில் ஊத்திக் கொள்ள ஏதுவாய் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சுவரில் எப்படியோ அரையடிப் பலகையை நீளத்திற்கும் அடித்து வைத்திருந்தார்கள். அறை நடுவில் கால் உடைந்த மேசை ஒன்றும், எதிரெதிராய் இரண்டு பிளாஸ்டிக் ஸ்டூல்களும் போடப்பட்டிருந்தன.

மூலைகளுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருக்கிறேன். அரைப் புட்டி கருப்பு ரம் பாதி தீர்ந்திருந்தது. மேசை மீது சின்னதாய் பல்லால் கடித்து துளையிட்ட ஒரு வாட்டர் பாக்கெட். உள்ளங்கை அகல எவர்சில்வர்வர் தட்டில் சுண்டல். அடுத்த பாதி புட்டி வயிற்றுக்குள் போவதற்கு முன்பு ஒரு சிகரெட் வேண்டும். கையில் சிகரெட் இல்லை. வாங்க காசும் இல்லை. வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாராவது வருவார்கள். வரவேண்டும்.

நண்பகல் பதினோரு மணி இருக்கலாம். வெயில் மெதுவாய் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. யாரும் வரக்காணோம். கடைப் பையனிடம் கேட்கலாம். சிகரெட்தானே. நாளைக்கு காசு தருவதாய் சொல்லலாம் என்றபடியே தம்பீ எனக் குரல் கொடுத்தேன். சற்று நேரம் கழித்து காக்கி டவுசர் அணிந்த ஒரு சிறுவன் உள்ளே வந்தான். இந்தக் கடைக்கு பல முறை வந்திருக்கிறேன். ஒரு முறை கூட இந்த சிறுவனை சரியாய் பார்த்ததில்லை. பிஞ்சு முகம். பனிரெண்டு வயதிற்கும் குறைவாய்தான் இருக்க வேண்டும்.

“இன்னா வோணும்னா?” மூக்கை உறிஞ்சிக் கொண்டான். அவனிடம் கடன் கேட்க கூசியது.

“ஒண்ணுமில்லபா அப்றமா கூப்டுறென்” என்றேன்.

அவன் திரும்பிய நொடியில் ஒரு காவிச் சட்டை உள்ளே நுழைந்தது. பாரை ஒரு முறை நோட்டம் விட்டு முகத்தை லேசாய் சுளித்தது. எனக்கு எதிரிலிருந்த ஸ்டூலை எடுத்து மேசைக்கு பக்கவாட்டில் போட்டு அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தது.

“சாமிங்க கூட குடிக்க ஆரம்பிச்சிருச்சா?” என சிரித்தேன்.
சாமி எதுவும் சொல்லாமல் மெதுவாய் புன்னகைத்தார். கடைப் பையனிடம் பணத்தைக் கொடுத்தார். நான் குடிக்கும் அதே கருப்பு ரம்மைக் கேட்டார். ஜோபியில் கைவிட்டு ஒரு சாதா சிகரெட்டை வெளியில் எடுத்து மேசையில் லேசாய் தட்டி வாயில் வைத்தார்.

“எனக்கொண்ணு கிடைக்குமா?” என்றேன்
“இத உன்னால அடிக்க முடியாதே”
“ஏன்?”
“இது கஞ்சா”
“அதனால என்ன கொடுங்க ஒரு இழுப்பு இழுக்கிறேன்”
“பழக்கம் இருக்கா?”
“இல்ல”
“அப்ப வேணாம் ஏற்கனவே குடிச்சிருக்க. சுத்தி கடாசிரும்”
“அட கொடு சாமி. கஞ்சாவா நானான்னு பாத்துடலாம்”

சாமி இன்னொரு சிகரெட்டை ஜோபிக்குள் கைவிட்டுத் துழாவி வெளியில் எடுத்தார். எனக்காய் நீட்டினார்.
வேகமாய் வாங்கிப் பற்ற வைத்து இழுத்தேன்.

நாசியில் விநோத மணம். துவரஞ்செடி பற்றி எறிவதுபோல ஒரு வாசம். இழுத்து வெளியே விட்டால் ஊதுபத்தி புகைபோல மெல்லிசாய் வெளியேறியது.

“இன்னா சாமி கிக்கே இல்ல. சாதா சிகெரெட்ட விட மட்டமா கீது” என சிரித்தேன்

சாமி புன்னகைத்தார்.

அடுத்தடுத்த நான்கைந்து இழுப்புகள். விர்ரென தலை சுற்ற ஆரம்பித்தது. புது விதமான போதை. எல்லாமே நழுவி நழுவிப் போவது போல இருந்தது. நொடிகள் கரையக் கரைய சாமியும் நானும் செங்குத்தாய் தரையில் விழுவது போல இருந்தது. போதையை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க பயங்கரமாய் மெனக்கெட்டேன். ஸ்டூலில் அமர்ந்திருந்த உடல் வளைந்தது. சாமி என்னைக் கவனிக்காதவராய் பையன் கொண்டுவந்த கால்புட்டி ரம்மை நிதானமாய் குடித்து முடித்தார். மேசை மீது குடிக்காமல் இருந்த என்னுடையதைப் பார்த்தார். என்னால் உடலை அசைக்க முடியவில்லை. ஏதோ சொல்ல வாயெடுத்தேன் நாக்கு வளைந்து குழறியது. என்னைச் சுற்றி நடப்பதை மங்கலாய் பார்க்க முடிந்தது ஆனால் என்னால் பார்க்க மட்டும்தான் முடிந்தது.

சாமி எழுந்து நின்றார் என்னுடைய மீதி ரம்மை மூடி திருகி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியேறினார். உடல் ஸ்டூலில் உட்கார முடியாமல் தொம்மென கீழே விழுந்தது. யாரோ இழுத்துக் கொண்டுபோய் மூத்திர மூலையில் கிடத்தினார்கள்.

கண் விழித்தபோது சாலையோரத்தில் கிடந்தேன். சுற்றிலும் இருள் அடர்த்தியாய் சூழ்ந்திருந்தது. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் இருந்தது. எழுந்து நிற்க முயன்று விழுந்தேன். உடல் கிடுகிடுவென ஆடியது. மெதுவாய் மதிய வாக்கில் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவில் வந்தன. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரம் சுயநினைவில்லாது கிடந்திருக்கிறேன். பயங்கரமாய் பசித்தது. தாகம் நாக்கை வறட்டியது. எழுந்து நிற்க முடியவில்லை. தலை தூக்க முடியாமல் கீழே கிடந்தது.

சற்று நேரத்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. கால் செருப்பு சப்தம் அந்த நள்ளிரவில் சீரான லயத்துடன் காதில் விழுந்தது. யாரோ என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். தண்ணீரை முகத்தில் அடித்தார்கள். கண் திறந்தால் மதியம் கஞ்சா கொடுத்த சாமி. கையில் வாட்டர் பாட்டிலோடு நின்றுகொண்டிருந்தார்.

அவரிடமிருந்து பாட்டிலை கிட்டத்தட்ட பிடுங்கி தொண்டையில் சரித்துக் கொண்டேன். பாட்டிலின் கடைசித் துளி நீரையும் குடித்த பின்னர் சற்று தெம்பு வந்தார் போலிருந்தது.
சாமி பாட்டிலை என் கையிலிருந்து வாங்கியபடி
“வீட்டுக்கு போ” என்றார்
அவரை சோர்வாய் பார்த்தேன்
“வீடு இருக்கில்ல”
“இருக்கு. ஆனா போனாலும் ஒண்ணுதான் போவலனாலும் ஒண்ணுதான்”
வார்த்தைகள் சன்னமாய் வந்து விழுந்தன

சாமி என்ன ஒரு நொடி ஆழமாய் பார்த்தார். "சரி வா என்னோட" என்றபடி முன்னால் நடந்தார்.



ஓவியம் எம்.எப். ஹூசைன்
- மேலும்

No comments:

Featured Post

test

 test