Tuesday, October 11, 2011
சந்திரா அத்தை
நானும் கண்ணனும் உளுத்துப் போயிருந்த பின்வாசல் மரக்கதவை சப்தமெழத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தோம். சந்திராஅத்தை தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து எங்களைப் பார்த்தவள் வாயெல்லாம் பல்லாகி
” இப்பதான் வர வழி தெரிஞ்சிச்சா?”
என சப்தமாய் கேட்டுக் கொண்டே கையை அருகிலிருந்த தண்ணீர் பாத்திரத்தில் விட்டு அலம்பிக்கொண்டு எழுந்துவந்தாள். என்னை லேசாக அணைத்து தன் காய்த்துப்போன விரல்களால் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள்.
”அப்படியே அவர உரிச்சி வச்சிருக்கான் பாரு” எனச் சொல்லிக்கொண்டே
“ராணீ” என சப்தமாய் கூப்பிட்டாள். உள்ளே இருந்து நீளப்பாவாடையையும் ஆண்சட்டையையும் அணிந்த ஒரு பெண் வந்தாள். என்னைப் பார்த்து
”ஐ! சிவாவுமா வந்திருக்கான்?”
என்றபடி நெருங்கி வந்து கையைப் பிடித்துக்கொண்டாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. இருவரையுமே முதல்முறையாய் பார்க்கிறேன். ஆனால் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சந்திரா அத்தை அப்பாவிற்கு சுற்றிவளைத்து தங்கை முறைவேண்டும். என்ன காரணமென்றே தெரியாமல் பல வருடங்களாய் தொடர்பில்லாமல் போய்விட்டது. கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலையிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரம்தான் ஆனாலும் இப்படி ஒரு சொந்தம் இருப்பதே எனக்குத் தெரியாது. மூன்று மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் பதினாலாம் நாள் காரியத்திற்கு இங்கு வந்த அப்பா திரும்பி வரும்போது கண்ணனைக் கூட்டிவந்தார். ப்ளஸ்டூவில் தவறவிட்ட இரண்டுபாடங்களை மூன்று வருடங்களாய் எழுதிக்கொண்டு ஊரைத் தேய்த்துக் கொண்டிருந்தவனை தொழில் ஏதாவது கற்றுக்கொள்ளட்டும் என அழைத்து வந்ததாய்ச் சொன்னார். அப்பாவின் கடையிலும் ஆள் கிடையாது. வீட்டிலும் கூடமாட ஒத்தாசைக்கு ஆளில்லாமல் இருந்தது. கண்ணன் வந்தது எல்லாருக்கும் உதவியாய் இருந்தது.
அப்பா என்னுடைய சைக்கிளை கண்ணனுக்குக் கொடுத்து விடச் சொன்னார். அவர் பேச்சிற்கு மறு பேச்சு கிடையாது. அடுத்தநாளே என் சைக்கிள் பறிபோயிற்று. ஏழாம் வகுப்பிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை சின்னப்பையன் சின்னப்பையன் என இழுத்தடித்து ஒன்பது வந்தபிறகுதான் வாங்கித்தந்தார். ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் வில்லன் வந்துவிட்டான். இனி கேர்ல்ஸ் ஸ்கூலை சுற்றிக்கொண்டு போக முடியாததையும் ஷீலாவைத் தொடர்ந்து போய் பெல் அடிக்க முடியாததையும் நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.
ஆனால் கண்ணன் வீட்டிற்கு வந்த நாலாம் நாளிலேயே
“இரண்டாவது ஷோ சினிமாவிற்குப் போலாம் வா”
என இரகசியமாய் கூப்பிட்டபோது உடனே ஒட்டிக் கொண்டேன். வீட்டிற்குச் சமீபமாக இருக்கும் எம்கேஎஸ் டாக்கீஸில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறும் எல்லாப் படங்களையும் வீட்டிற்குத் தெரியாமல் போய்ப் பார்த்தோம். மாடியில் படுத்துக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டு எவருக்கும் தெரியாமல் கம்பிநீட்டிவிடுவோம். கண்ணன் சிகரெட் பிடிப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் யாரிடமும் சொன்னதில்லை. காலாண்டுத் தேர்வு விடுமுறையில் கண்ணனோடு நானும் பெண்ணாத்தூர் போகப் போவதாய் அம்மாவிடம் சொல்லிவைத்திருந்தேன்.
“எதுக்குடா அங்கலாம்?” என இழுத்த அம்மாவை நச்சரித்து அப்பாவிடம் சொல்ல வைத்து இதோ கிளம்பி வந்துவிட்டேன்.
0
கண்ணனின் அப்பா அவன் சிறுவனாய் இருக்கும் போதே இறந்து விட்டார். சந்திரா அத்தை சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலைக்குப் போய் கொண்டிருந்தாள். ராணி ப்ளஸ்டூ படிக்கிறாள். ராணிதான் லொடலொட வெனப் பேசிக்கொண்டே இருந்தாள். அத்தையும் அவளும் அடிக்கடி எங்களைப் பற்றிப் பேசிக் கொள்வார்களாம்.
”உங்க யாரையுமே எனக்குத் தெரியாது” எனப் பேச்சு வாக்கில் பட்டெனச் சொல்லிவிட்டேன். சமைத்துக் கொண்டே இதைக் கேட்ட சந்திரா அத்தையின் முகம் சுருங்கிப் போனது.
”உங்க அம்மாக்காரிதான் எங்க ஒறவே வேணாம்னு இருந்துட்டாளே பின்ன எப்டி சொல்வா? ” என்றபடியே சமையலைத் தொடர்ந்தார். நான் ராணியுடன் வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். யாரோ ஒரு செட்டியாரின் பழைய வீடு. நாட்டு ஓடு போட்ட மூன்று கட்டு வீடு. ஒருவீதியில் முன்வாசலும் இன்னொரு வீதியில் பின்வாசலும் இருந்தன. இப்படியொரு நீளமான வீட்டை நான் பார்த்ததே கிடையாது. வீட்டிற்கு நடுவில் ஒரு திறப்பு இருந்தது. துளசிச் செடிமாடம் ஒன்று சதுரமான சிமெண்ட் தரையில் புதைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி அகலமான மரஊஞ்சல் ஒன்று போடப்பட்டிருந்தது. ஏதோ ஒரு சினிமா படத்தில் இப்படியொரு வீட்டைப் பார்த்திருந்ததை நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கார பாட்டி முன் கட்டில் இருந்தாள். அத்தையும் ராணியும் பின்கட்டில் இருந்தார்கள். பாட்டியைத் தவிர அந்தப் பெரிய முன் கட்டில் யாருமே இல்லை.
“ஏன் பாட்டிக்கு யாருமே இல்லையா” என ராணியிடம் கேட்டேன். பாட்டியோடு எல்லாருக்கும் ஏதோ சண்டையாம். அதற்கு மேல் ராணிக்கும் ஒன்றும் தெரியவில்லை. வாடகை என்று எதுவும் தருவதில்லை. மாறாய் பாட்டிக்குச் சமைப்பது, அவரின் துணிகளைத் துவைப்பது என எல்லா வேலையையும் சந்திரா அத்தையே பார்த்துக்கொண்டாள்.
சந்திரா அத்தைக்கு நான்கு கைகள் இருக்கிறதா என்றும் கூட சில நேரங்களில் தோன்றும். நடப்பதே கூட விறுவிறு நடைதான். அவளோடு நடந்து போகும் சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட ஓடவேண்டிய நிர்பந்தம்வரும். நொடியில் சமைக்கும் வித்தையைக் கற்று வைத்திருந்தாள். தூங்கி எழுந்து கண்ணனும் நானும் ஏரிக்கரைக்குப் போய் திரும்புவதற்குள் காலை டிபனோடு மதியத்திற்கும் சேர்த்து சாப்பாடு தயாராகி இருக்கும். நல்ல காரமாகத்தான் சமைத்தாள். அம்மாவின் சமையலில் காரமே இருக்காது. போலவே எங்கள் நால்வருக்கு சமைக்க அம்மா சமையல்கட்டே கதியாய்க் கிடப்பாள். இங்கு அது தலைகீழாய் இருந்தது. தினம் நூறு குழந்தைகளைக்குச் சமைத்துப்போட்டு சந்திரா அத்தைக்கு இந்த வேகம் பழகிவிட்டதாய் ராணி சொன்னாள். இடையில் முன்கட்டிற்குப் போய் பாட்டிக்கான சமையலையும் செய்துவிட்டிருப்பாள்.
அத்தை போனதும் கண்ணனும் எங்காவது கிளம்பிப் போய்விடுவான். நானும் ராணியும் அந்தப் பெரிய வீட்டில் விளையாடிக் கொண்டிருப்போம். பல்லாங்குழி, ரம்மி, கேரம்போர்ட் என விளையாட்டு மாறிமாறி தொடர்ந்து கொண்டிருக்கும். மதியம் பாட்டி தூங்கியதும் ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டு தேவி, ராணி, வாரமலர் புத்தகங்களைப் படித்துக்கொண்டு சினிமாக்கதை பேசிக்கொண்டிருப்போம். முன்னிரவுகளில் சந்திராஅத்தையையும் சேர்த்துக்கொண்டு பின்வாசலில் பாய்விரித்து அமர்ந்து திருடன் போலிஸ் விளையாட்டு விளையாடுவோம். சந்திரா அத்தைக்கு போலிஸ் சீட்டு வந்தால் எப்போதும் திருடன் கண்ணன்தான். திருடன் சீட்டு எனக்கோ ராணிக்கு வந்திருப்பதை பூடகமாகச் சொன்னாலும் அத்தை சிரித்துக் கொண்டே “கண்ணந்தான் திருட்டுப் பையன்” என்பாள்.
எல்லா விளையாட்டிலும் நான்தான் ஜெயித்தேன். ராணி வேண்டுமென்றே தோற்கிறாளா என்றும் கூடத் தோன்றும். அத்தை பின் கட்டிலிருந்த சிறிய தோட்டத்தில் பூத்துக் காய்த்திருந்த மருதாணியை பறித்து அரைத்து என் உள்ளங்கையில் பூசினாள். அடுத்த நாள் விரல்கள் சிவந்திருந்ததைப் பார்த்ததும் “உனக்கு ஆச அதிகந்தான்” எனச் சிரித்தபடியே கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள். ராணிதான் எப்போதும் சிவா.. சிவா.. சிவா.. என மூச்சுக்கு முன்னூறு சிவா போட்டுப் பேசிக்கொண்டிருப்பாள். வாசன் தியேட்டரில் இரண்டு படங்கள் பார்த்தோம். கோவிலுக்குப்போனோம். ராணி தன் தோழிகள் வீட்டிற்கெல்லாம் ஒரு ரவுண்ட் கூட்டிப் போனாள். இரண்டு மூன்று சொந்தக்கார வீடுகள், ராணி படிக்கும் பள்ளி, என எதையும் விடவில்லை. தினம் எங்காவது சுற்றிக் கொண்டிருந்தோம். எல்லா விஷயத்திற்கும் அப்பாவிடம் அனுமதி கேட்கும் தொல்லையில் இருந்து விடுபட்டு மிகச்சுதந்திரமாய் இருப்பது சந்தோஷமாய் இருந்தது.
திடீரென்று கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது. பத்துநாட்களும் சடுதியில் மறைந்து போனதை நினைக்க நினைக்கபெரும் துக்கமாக இருந்தது. பிரியும்போது அத்தைக்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ராணி அழுதே விட்டாள். “போன உடனே லட்டர் போடு” என அத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். பதினாறு கிலோமீட்டர் தூரம் பெரும் தூரமாய் தெரிந்தது. பொங்கி வந்த விசும்பலை மறைத்துக் கொண்டே ஊர் வந்து சேர்ந்தேன்.
0
தபால் அட்டையில்தான் எழுதிக் கொண்டோம். வாரத்திற்கு ஒரு லட்டர் ராணியிடமிருந்து வந்துவிடும். தீபாவளிவாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்தென ரஜினி,கமல் படம் போட்ட அட்டைகளை அனுப்பிக் கொண்டோம். எங்கள் வீட்டிலிருக்கும் மருதாணிச் செடியைக் கடக்கும்போதெல்லாம் அத்தையும் அந்த வீடும் நினைவில் வந்து கொண்டிருந்தது. அரையாண்டுத் தேர்வு லீவிற்கும் கார்த்திகை தீபத்திற்குமாய் சேர்த்து அத்தையையும் ராணியையும் திருவண்ணாமலை வரச் சொன்னேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை சந்திராஅத்தையும் ராணியும் வந்தார்கள். அம்மா பெயருக்கு சிரித்துப் பேசினாலும் அவளுக்கு உள்ளூர இருவரையும் பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அப்பா வழக்கம்போல கொஞ்சமாய் பேசினார். நான்தான் சரியாக கவனிக்கவேண்டுமே என்கிற முனைப்பில் சதா பேசிக்கொண்டே இருந்தேன். அண்ணன் வெளியூரில் படித்துக் கொண்டிருந்ததால் அவனும் வீட்டில் இல்லை. தீபம் பார்த்துவிட்டு மறுநாளே சந்திரா அத்தையும் ராணியும் கிளம்பிப் போய்விட்டார்கள். என்னை அவர்களுடன் அழைத்துப்போக எவ்வளவு கேட்டும் அம்மா சாக்கு போக்குச் சொல்லி மறுத்துவிட்டாள். அடுத்த வாரம் கண்ணனோடு அனுப்புவதாகச் சொல்லிவிட்டாள். ராணியை இருக்கச் சொல்லிக்கூட அம்மா கேட்கவில்லை. அவர்கள் போனதும் எனக்கு ஆத்திரமாய் வந்தது.
சமையற் கட்டிற்குப் போனேன் அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். “அப்பனதான் மயக்குனாளுங்கன்னு பாத்தா மைக்கண்ணிங்க இவனையுமில்ல மயக்கிகிறாளுங்க”
நான் வருவதைப் பார்க்காது தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். அருகில் போய் “ஏம்மாஇப்படிபன்ற?”
எனக் கோபமாய் கேட்டேன்.
“உனக்கு என்னடா தெரியும் போ போய் படி” என விரட்டினாள்.
சற்று அழுத்தி ஏன் அவர்களை வெறுக்கிறாய்? என்றபோதுதான் அம்மா அந்தத் தகவலைச் சொன்னாள். அப்பா சந்திராஅத்தையைத்தான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தாராம். பாட்டிதான் முறை வராது எனப் பிடிவாதம் பிடித்து அம்மாவைக் கட்டிவைத்தாளாம். சற்று திகைப்பாக இருந்தாலும் மறைத்துக் கொண்டு “இதுல என்ன பிரச்சினை மொற தெரியாம இருந்திருக்கும்” என்றேன்.
“நீ போ இங்க இருந்து” என அம்மா விரட்டினாள்.
“நீ ரொம்ப பன்றம்மா” என்றதும்
“உங்க அப்பா இன்னும் அங்க போய்ட்டு வந்துட்டுதான் இருக்காரு தெரியுமா?” என வெடித்தாள்.
“போனா என்னமா?” என்றேன்.
“நீ சின்னபையன் உனக்கு ஏன் இந்தப் பேச்சுலாம்? போ இங்க இருந்து” என விரட்டினாள். வந்துவிட்டேன்.
0
அப்பாவும் காதலித்திருப்பார் என்பதை நினைக்க சற்று ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே இப்போதெல்லாம் பூரிப்பாக இருக்கிறது. முழுப்பரிட்சை லீவிற்காக காத்துக்கொண்டிருந்தேன். லீவு விட்ட அடுத்தநாளே அம்மாவிடம் அடுத்த வருஷம் பத்தாவது எங்கியுமே போவமுடியாது இப்ப மட்டும் போயிட்டு வந்துர்றேன் என்றெல்லாம் சொல்லியும் அவள் கேட்கவில்லை. முடியவே முடியாது என மறுத்தாள்.
திடீரென அப்பாவிடம் கேட்டால் சம்மதம் கிடைத்து விடும் எனத் தோன்றியது. இரவு அப்பாவும் கண்ணனும் கடையிலிருந்து வந்ததும் அப்பாவிடம் கேட்டே விட்டேன். லீவுதான் விட்டாச்சே போய்ட்டுதான் வா என சொல்லிவிட்டு நகர்ந்ததும் எனக்கு உற்சாகம் பீறிட்டது. அம்மாவைப் பார்த்து வெவ்வெவ்வே காட்டி விட்டு தூங்க ஓடிப் போனேன். அடுத்த நாள் அம்மாவின் முணுமுணுப்புகளோடு நான் தனியாய்க் கிளம்பிப் போனேன். போன நேரத்திற்கு ராணி மட்டும்தான் வீட்டிலிருந்தாள்.
“ஐயோ திடீர்னு வந்து நிக்கிற” என ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.
அதுவரை காணாமல் போயிருந்த ரெக்கைகள் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டதைப் போலிருந்தது. இந்தப் பழைய வீட்டிற்கு இயல்பாகவே ஒரு சோம்பல் இருந்தது. பின் வாசல்தான் வழி என்பதால் சின்னச் சின்ன செடிகளையும் வாழை மரங்களையும் கடந்துதான் வீட்டிற்குள் நுழைய வேண்டியிருக்கும். தோட்டம் தந்த நிழலால் குளுமை பின்கட்டு முழுக்க இருந்தது. மேலதிகமாய் நிரம்பி வழியும் அமைதியும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. ராணி என் மீது அன்பைப் பொழிந்தாள். அவளுடன் இருப்பது என்னவெனச் சொல்லிவிட முடியாத உணர்வுகளை உள்ளுக்குள் எழுப்பிக் கொண்டிருந்தது. திருவண்ணாமலை வீடு, அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நண்பர்கள் என எல்லாமும் சுத்தமாய் நினைவிலிருந்து போய் முழுக்க ராணியோடும் அந்த வீட்டோடும் ஒட்டிக் கொண்டேன். அத்தைக்கும் என் மீது நிறையப் ப்ரியம் இருந்தது. விதம்விதமாக சமைத்துப் போட்டாள். காரசாரமான அவளின் சமையலும் எனக்குப் பிடித்துப் போனது. ராணியின் தோழிகளுக்கும் என்னைப் பிடித்துப் போனது. அவர்கள் செட்டில் இருந்த ஒரு பெண்ணை என்னோடு இணைத்துப் பேசி கிண்டலடித்துக் கொண்டார்கள். முழுக்க பெண்களோடே சுற்றிக் கொண்டிருப்பது மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது.
வந்த மூன்றாம் நாள் இரவு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். தாகமாய் இருந்தது. சற்றுத் தள்ளி ராணியும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் குண்டு பல்பு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. யாரையும் தொந்தரவு படுத்த விரும்பாமல் நானே சமையல் கட்டிற்கு போய் தண்ணீர் குடிக்க நினைத்து எழுந்தேன். தோட்டத்தை ஒட்டி சமையல் கட்டு தனியாக இருக்கும். இருட்டில் எதன் மீதும் மோதிவிடாமல் இருக்க வேண்டி கவனத்தோடு நடந்து சமையல் கட்டிற்கு வந்தேன். சந்திரா அத்தை சமையலறை நடுவில் எனக்காய் முதுகு காட்டி உட்கார்ந்திருந்தாள். லேசான மது வாடை அடித்தது. அத்தை என்றதும் திடுக்கிட்டு திரும்பியவளின் கையில் ஒரு பிராந்தி பாட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். அவள் அதைப் புடவைத் தலைப்பில் மறைத்தபடியே என்னய்யா தூக்கம் வரல என சாதாரணமாய் கேட்பது போல் கேட்டாள். தண்ணி குடிக்க வந்தேன் என்றதும் ஹால்ல பெஞ்சு மேல சொம்புல தண்ணீ கீதுய்யா எனக் குழறலாய் சொன்னாள். நிறைந்த தூக்கத்தில் இருப்பது போலவும் எதையுமே பார்க்காதது போலவும் பாவனை செய்து கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.
படுத்த அரை மணி நேரம் தூக்கமே வரவில்லை. அத்தை குடிப்பாளா குடிப்பாளா என மனம் அரற்றியபடியே கிடந்தது. அதே நேரத்தில் பாவமாகவும் இருந்தது. நாள் முழுக்க வேலை செய்து கொண்டே இருப்பதால் உடம்பு வலிக்கு குடிப்பாள் போல என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு தூங்கிப் போனேன். அடுத்த நாள் காலை அத்தையின் முகமும் ராணியின் முகமும் ஒரு மாதிரியாய் இருந்தது. ஒரு சின்ன பதட்டத்தை ராணியின் முகத்தில் பார்க்க முடிந்தது. அத்தையிடம் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். நான் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அத்தை வேலைக்குப் போனதும் காரம் போர்டு விளையாட்டில் மூழ்கினோம். சற்று நேரத்தில் ராணியும் சரியானது போல் இருந்தது.
மாலை கண்ணன் வந்துவிட்டான். அம்மாவிற்கு என் நினைப்பாகவே இருப்பதாகவும் என்னை உடனே அழைத்து வரும்படியும் சொன்னதாகச் சொன்னான். வந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஓடியிருந்தது. அடுத்த நாள் காலை கிளம்பும்போது எனக்குப் பெரிதாய் வருத்தம் எதுவும் இல்லாதது போல் இருந்தது. அத்தையும் ராணியும் கூட அழவில்லை. ரிசல்ட் வந்ததும் வீட்டுக்கு வா என ராணியிடம் சொல்லிவிட்டு நானும் கண்ணனும் கிளம்பி விட்டோம்.
0
ராணி ப்ளஸ்டூவில் பாஸான தகவலை அப்பா கடைக்கு போன் போட்டுச் சொல்லி இருக்கிறாள். பெண்ணாத்தூரிலிருந்து வந்ததும் நானும் லட்டர் போடவில்லை. அங்கிருந்தும் லட்டர் எதுவும் வரவில்லை. விடுமுறை முடிந்து பத்தாவது துவங்கியது. அதுவரைக்கும் ஏனோதானோவெனப் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் எல்லோருமே நெருக்கமாக மாறிக் கொண்டிருந்தோம். எப்போதும் எங்காவது கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தோம். பேச்சு முழுக்க பெண்களைச் சுற்றியேதான் இருந்தது. அப்படியே ஒரு கிரிக்கெட் டீமையும் ஆரம்பித்தோம். சனி ஞாயிறுகளில் ஸ்பெசல் க்ளாஸ்,டியூசன் என ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு காலேஜ் கிரவுண்டில் மொத்த வெயிலையும் தலையில் வாங்கிக் கொண்டு நாள் முழுக்க சலிக்காமல் விளையாடினோம். ஜூலை மாதம் ராணிக்கு திருமணம். தூரத்து சொந்தத்தில் மாப்பிள்ளை கிடைத்திருந்தார். நான், அப்பா, அம்மா, அண்ணன் எல்லோருமே போயிருந்தோம். ராணி கல்யாணப் பெண் ஒப்பனையில் வேறு யாரோ போல் இருந்தாள். என்னைப் பார்த்து ஒப்புக்கு சிரித்தது போலிருந்தது. அவள் என் மீது காட்டிய அன்பெல்லாம் எங்கே போனது எனக் குமைந்து கொண்டேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் சிரித்து சிரித்துப் பேசியவள் என்னைப் பெரிதாய் கண்டுகொள்ளவே இல்லை. ஏமாற்றமும் ஆத்திரமும் பெருக ஊர் வந்து சேர்ந்தேன்.
ஓரிரு வாரங்களிலேயே கண்ணனும் மெட்ராசில் வேலை கிடைத்துப் போய்விட்டான். ராணியின் கணவர்தான் அந்த வேலையை ஏற்பாடு செய்திருந்தார். மெல்ல கீழ் பெண்ணாத்தூரும் சந்திரா அத்தையும் நினைவிற்கே வராமல் போனார்கள்.
0
படிப்போடு விளையாட்டும் மும்முரமாகச் சென்று கொண்டிருந்தது. ஓரளவிற்கு குறிப்பிடும்படி நாங்கள் விளையாட்டில் வளர்ந்திருந்தோம். சச்சின் கிரிக்கெட் டீம் என்ற எங்களின் டீம் பெயர் மற்ற கிரிக்கெட் டீம்களுக்கு தெரிந்திருந்தது. காலாண்டுத் தேர்வு விடுமுறையில் டோரனமெண்டுகளில் கலந்து கொள்ளும் ஆசை எழுந்தது. சோமாசிபாடியில் இருந்து வரும் ப்ளஸ்டூ மாணவர்கள் சோமாசிபாடியில் விடுமுறையில் நடக்கும் டோரனமெண்டில் கலந்து கொள்ளக் கூப்பிட்டிருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஸ்பெசல் க்ளாஸ் எனச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனோம். சோமாசிபாடி திருவண்ணாமலைக்கும் கீழ்பெண்ணாத்தூருக்கும் நடுவில் இருக்கிறது. முதல் மேட்சிலேயே தோற்றுப் போனோம். தோல்விக்கு முழு காரணமும் நான் தான் என ஆளாளுக்கு குற்றம் சொன்னார்கள். யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பஸ் ஸ்டாப்பிற்கு வந்து எல்லோரும் திருவண்ணாமலை பஸ் ஏறும்போது நான் மட்டும் வீம்பிற்காய் எதிர் ஸ்டாப்பிற்குச் சென்று திண்டிவனம் போகும் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். நண்பர்களை லேசாக மிரட்டும் செயல் மாதிரிதான் செய்தேன். ஆனால் பஸ் போக ஆரம்பித்ததும் லேசாக பயம் வந்தது. கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும் சட்டென சந்திரா அத்தை நினைவு வரவே “பெண்ணாத்தூர் ஒண்ணு” எனக் கேட்டு வாங்கிக் கொண்டேன். சரி சந்திரா அத்தையை பார்த்து விட்டு சாயந்திரம் கிளம்பிப் போய்விடலாம் என சமாதானமாய் நினைத்துக் கொண்டேன்.
மதியம் மூன்று மணி இருக்கும். பின் வாசல் கதவு லேசாய் திறந்தே இருந்தது. அத்தை தூங்கிக் கொண்டிருப்பாள் என நினைத்துக் கொண்டே கூப்பிடாமல் உள்ளே போனேன். வீட்டிற்குள் லேசான மது வாடை வீசியது. சமையல் அறையின் கதவு முழுவதுமாய் மூடாமல் லேசாய் திறந்திருந்தது. ஹாலைத் தாண்டிப் போனதும் குளியலறையில் யாரோ குளிக்கும் சப்தம் கேட்டது. அத்தை குளிக்கிறாள் போல என நினைத்துக் கொண்டு தண்ணீர் குடிக்க மீண்டும் சமையலறைக்காய் திரும்பி வந்து கதவைத் திறந்து, அதிர்ந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. நல்ல வெயிலில் இருந்து வந்ததால், கண்ணை மீண்டும் ஒரு முறை கசக்கிக் கொண்டு பார்த்தேன். அப்பாவேதான். தரையில் ஒரு பாய் விரிக்கப்பட்டிருந்தது. மல்லிகைப் பூ விசிறலாய் தரையில் சிதறிக் கிடந்தது. அப்பா அரை நிக்கர் மட்டும் அணிந்து கொண்டு லேசான குறட்டை ஒலியோடு தூங்கிக் கொண்டிருந்தார்.
சப்தமெழுப்பாமல் கதவை இருந்தபடியே சாத்தி வைத்து விட்டு வேகமாய் வெளியேறினேன். பின் வாசல் உளுத்த கதவு எழுப்பிய சப்தம் பல் கூச்சமாய் இறங்கி நெஞ்சைக் கீறியது.
Painting : Ravi varma
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
6 comments:
a master piece.congrats ayyanar.
சித்தானங்கூர் – மடப்பட்டு பக்கத்திலிருக்கும் குக்கிராமத்தில் பதினைந்து-இருபது வருடங்களுக்கு முன்னர் கழித்த அழகான விடுமுறை நாட்கள் அப்படியே கண் முன் விரிய செய்து விட்டீர்கள். கடலூர்-திருவண்ணாமலை பஸ் மடப்பட்டு வழிதான் செல்லும். அவ்வாவுடன் ரைஸ்மில்லுக்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன்.
எல்லா வீட்டிலும், கொல்லியில் தனியாகத்தான் காரை சுவற்றில் ஓலை வேயப்பட்ட சமையலறை இருக்கும். அத்தை மகள்களிடம் அந்த வயதுக்கே உரிய குறும்புகளை அரங்கேற்றியது அங்கேதான். கொல்லையில் சமையலறை தாண்டி, மாட்டு கொட்டாய். அதை தாண்டி, வைக்கோல் களம். அதையும் தாண்டினால், நெல் வயல்கள். ராத்திரி அந்த வயல் வரப்புகளில் ஒதுங்கி உட்கார்ந்து இருக்கும் போது, எங்கோ தூரத்தில் சென்னை பைபாஸ் சாலையில் செல்லும் வாகனங்களின் டயர் ரீங்காரங்கள். வேறெங்கும் இது வரை கேட்டதுமில்லை கேட்க போவதுமில்லை.
அமர்க்களமான படைப்பு!
fucking great.
கண்ணனுக்கு இப்போது அவன் தாயின் வலியும், இராணியின் புறக்கணிப்புக்குமான காரணமும் புரிந்திருக்கும். அற்புதமான கதை. நன்றி.
ஒரு இயல்பான வாழ்க்கையையும் எழுத்தின் வசீகரத்தையுமிணைத்திருக்கிறீர்கள் அய்யணார். எங்காவது மிகையும் பொய்யும் ஒளிந்திருக்கிறதா என்று தேடினால் தோல்வியே மிஞ்சும். அழகு அழகிய சிறுகதை மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் அய்யணார்.
கதை பேசும் நினைவுகளிலிருந்து மீள முடியவில்லை. நல்ல கதை. புக்மார்க் சேவ் செய்து விட்டேன் . மறுபடியும் படிப்பேன்.
Post a Comment