நிகழ்ந்தவையணைத்தும்
ஒரு கனவின் நீட்சியாகத்தான் இருந்தது
ஆனால் அது கனவைப் போன்றும் இல்லை
ஒரு புத்தம் புதிய நிஜக் கனவைப் போலிருந்தது
நள்ளிரவில் விழித்துக் கொண்டேன். விடுமுறை நாட்களில் இந்த சிக்கலைத் தவிர்க்க முடிவதில்லை. மதியம் தூங்கி விடுவதால் வரும் பிரச்சினைதான் இது. பால்கனியில் போய் நின்று புகைத்தேன். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தொடர் மழை விட்டிருந்தது. மேகங்களோ நட்சத்திரங்களோ எதுவும் இல்லாமல் வானம் துடைத்து வைத்ததுபோல இருந்தது. நிலவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் வெளிச்சமிருந்தது. தொலைவில் இடைவெளிவிட்டு வாகன சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் திடீரென எல்லாருக்கும் எப்படி என்னைப் பிடித்துப் போனது எனத் தெரியவில்லை. குறிப்பாய் பெண்களுக்கு நான் காதலிப்பது பிடித்திருக்கிறது. ஒருவேளை இவனால் நமக்குப் பிரச்சினை இல்லை என்கிற பாதுகாப்பு நிமித்தமான காரணங்களும் அவர்களை என்னிடம் நெருங்கச் செய்திருக்கலாம். தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு பிடித்திருக்கிறது. உலகம் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்விது. ஒரு பெண்ணைக் காதலிப்பது ஒரு விதத் தனித்தன்மையைக் கொடுக்கும் விஷயம் போல. நண்பர்களிடம் நான் கொஞ்சம் அவசப்பட்டு உளறியிருக்கக் கூடாதுதான் ஆனாலும் இந்த உற்சாகம் புதிதாக இருக்கிறது. கிண்டலையும் கேலியையும் மீறி ஒவ்வொருத்தரிடமும் அன்பை உணரமுடிகிறது. கிட்டத்தட்ட எல்லோருமே காதலிக்க விரும்புகிறவர்கள்தாம் ஆனால் யாருக்கும் சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை அப்படியே அமைந்தாலும் அதைப் பொதுவில் வைக்க விரும்புதில்லை. நண்பர்களின் அதிக உற்சாகத்தாலோ என்னவோ நித்யாவின் மீது காதலும் அன்பும் கூடியது. எப்பாடுபட்டாவது அவளைக் காதலிக்க வைத்துவிடவேண்டும்.
கனவு, கனவு ,கனவு,சதா கனவு எப்போதும் கனவு. வேலைக்கு போவது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாமும் கனவிற்கு இடையில்தான் நடக்கிறது. எல்லாக் கனவும் நித்யாவை சுற்றியே நிகழ்கிறது. நேரு வீதி நெரிசலில் அவள் வருகிறாள். யாரோ ஒருவன் வேண்டுமென்றே அவளை இடிக்கிறான். நான் திடீரெனத் தோன்றி அவனை நையப் புடைக்கிறேன். நித்யா காதல் வழிய என்னைப் பார்க்கிறாள். ச்சீ வேண்டாம் என்னவளை இன்னொருவன் தொடுவதா? ரோமண்ட் ரோலண்டில் பாலகுமாரன் புத்தகம் தேடுகிறேன். புத்தக ரேக்கின் இந்தப்பக்கம் நான். அந்தப்பக்கம் அவள். ஒரே புத்தகத்தை இருவரும் ஒரே சமயத்தில் எடுக்கிறோம். அட எனப் புன்னகைக்கிறோம். நீங்களும் பாலகுமாரன் படிப்பீங்களா ?என்கிறாள் அவள். நான் நீளமாய் பேசுகிறேன். கடற்கரை, மழை, இரயில், புல்லாங்குழல், நிலவு, நட்சத்திர இரவு, மழைக்கு முந்தின மண்வாசம், பாலகுமாரன் புக் எல்லாமும் பிடிக்கும் என்கிறேன். அவள் அய்யோ! எனக்கும் எனக்கும் என்கிறாள். அப்படியே பேசிக்கொண்டே கடற்கரைக்குப் போகிறோம். பேசுகிறோம் பேசுகிறோம் அப்படிப் பேசுகிறோம். நான் பேசப்பேச அவள் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது என்கிறாள். கடற்கரை சாலை முடிவில் இருள் துணையுடன் என்னால் இதற்கு மேல் முடியாது, நான் உன்னைக் காதலிக்கிறேன், தயவு செய்து என்னை ஏற்றுக் கொள் எனக் கதறுகிறேன். என்னாலும் முடியாது என்றபடியே என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்.
பிரதோஷத்திற்கு ஈஸ்வரன் கோவில் வரும் நித்யாவை ஒரு கார் மோதிவிடுகிறது. இரத்தவெள்ளம். பாய்ந்துபோய் அவளைத் தூக்குகிறேன். அங்கிருந்து ஜிஎச்சிற்கு தூக்கிக்கொண்டே ஓடுகிறேன். இரத்தம் கொடுத்து காப்பாற்றுகிறேன். சே! வேண்டாம் இதென்ன அபத்தமாய். நல்ல மழை. பொட்டானிகல் கார்டன் சாலையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருக்கிறேன். மழை கொட்டோ கொட்டெனக் கொட்டுகிறது. தூரத்தில் ஒரு பெண் தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு, வண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறாள். நெருங்க நெருங்க அது நித்யா! இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. வெளிர் பச்சை நிற சுடிதார் முழுக்க நனைந்து உடலை இறுக்கியிருக்கிறது. கூச்சத்தோடும், இயலாமையோடும் தலையைக் குனிந்தபடி வண்டியைத் தள்ளிக்கொண்டு வருகிறாள். என்னைக் கடந்து போனவளைப் பெயர் சொல்லி அழைக்கிறேன். நிமிர்ந்து பார்க்கிறாள். அருகில் போய் அணிந்திருந்த ஜெர்கினை கழற்றி அவளிடம் கொடுக்கிறேன். அவசரமாய் வாங்கி அணிந்து கொள்கிறாள். கறுப்பு நிற ப்ராவினுள் வெளிச்ச மின்னல் ஒரு கணம் வெட்டிப்போனதை பார்க்காமல் பார்க்கிறேன். மரத்தடிக்கு வண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறோம். ஸ்பார்க் பிளக்கைப் பிடுங்கி மீண்டும் சொருகிப் பார்த்தேன். கிளம்பவில்லை. பெட்ரோல் இல்லை என்கிறாள் மெதுவாக. வண்டியை கீழே படுக்க போட்டு இந்த சாலை முனை வரை போனால் போதும் என்றபடியே கிக்கரை உதைத்துக் கிளப்புகிறேன். உர்ரென வண்டி உதறிக் கிளம்புகிறது. சீக்கிரம்! சீக்கிரம்! என்றபடியே வண்டியில் ஏறி எனக்குப் பின்னால் அமர்ந்து கொள்கிறாள். ஒரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியபோது அப்படியே முதுகில் அட்டையாக ஒட் பிறகு சாரி என்கிறாள். என் பாக்கியம் என்றதற்கு வெட்கமாய் ஒரு சிரிப்பை உதிக்கிறாள். பெட்ரோல் போட்டுவிட்டு வண்டியை மீண்டும் அதே சாலைக்குத் திருப்புகிறேன். அய்யோ! நான் வீட்டுக்கு போகனும் என்றவளிடம் ஒரு பத்து நிமிசம் பேசனும் என்றபடியே பொட்டானிகல் கார்டனுக்குள் வண்டியை விடுகிறேன். நூறு வருடப் பழமையான ஒரு மரத்தடியின் கீழ் நின்றபடி என் காதலைச் சொல்கிறேன். யமுனா அக்கா இந்த விஷயத்த ஏற்கனவே சொல்லிட்டாங்க என்கிறாள். அப்ப ஓகேவா என்கிறேன். தலைக்குனிந்தபடியே புன்னகைக்கிறாள் நான் சுற்றம் மறந்து அவளைக் கட்டிக் கொள்கிறேன். கனவு.. கனவு..கனவு ஆனால் இந்த கனவுகள் யாவும் சலிக்கவே சலிக்காத அற்புதங்கள். காதலிப்பதை விட காதல் உணர்வோடு திரிவதுதான் அதிக போதையாக இருக்கிறது. வெகுநேரம் பால்கனியில் நின்று கொண்டிருந்தேன். பின்பு வந்து படுத்துக் கொண்டேன். அறை சில்லென இருந்தது. காமம் பொங்கியது. போர்வையினுள் சுருண்டு கொண்டேன். நித்யாவை சென்ற வாரம் கோவிலில் வைத்துப் பார்த்திருநததோடு சரி அதற்குப் பிறகு ஒரு நகர்வும் இல்லை. ஒரே ஒரு நாள் நாலுமணிக்கு என் அலுவலகத்தைக் கடந்து போனாள். இரண்டாம் ஷிப்ட் என்னை சோம்பேறியாக்கிவிட்டது. நாளைக் காலை எழுந்தவுடன் கிளம்பி முதலியார்பேட்டை போகவேண்டும். அடிக்கடி அவள் கண்ணிலாவது படவேண்டும் என நினைத்தபடியே தூங்கிப் போனேன். வழக்கம்போல் அடுத்த நாள் விழித்து அவசரமாய் வாட்ச் பார்த்ததும் என்மீது ஆத்திரமாய் வந்தது. மணி வழக்கம்போல் பதினொன்று. மயிரப் புடுங்க கூட லாயக்கில்ல நீ என சத்தமாய் திட்டிக் கொண்டேன். எரிச்சலோடே ஒரு மணிக்கு வீட்டிலிருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடக்க ஆரம்பித்தேன்.
முகுந்தன் இன்று வரமாட்டேன் என சொல்லி விட்டான். வண்டி ரிப்பேர். ஒரு வாரமாய் அவன் வண்டியில் போய் கொண்டிருந்தேன். நடக்க ஒன்றும் சுணக்கமாக இல்லை. வெயிலும் இல்லை என்பதால் நடக்க நன்றாகத்தான் இருந்தது. இந்திராகாந்தி சிலை தாண்டி, நெல்லித்தோப்பு மார்க்கெட்டை கடக்கும்போது பின்னாலிருந்து வண்டி ஹார்ன் தொடர்ச்சியாக அதிர்ந்தது. எரிச்சலாய் திரும்பி பார்த்தேன். நித்யா! நம்பாமல் நன்றாய் பார்த்தேன். நித்யாதான். வண்டியிலிருந்து இறங்காமல் ஒரு காலைத் தரையில் ஊன்றி “ஹலோ எந்த உலகத்துல இருக்கீங்க?” என்றாள். சிரித்துக்கொண்டே “ஏன்?” என்றேன். “ஹார்ன எவ்ளோ நேரம் அடிக்கிறது. சரிசரி வந்து உட்காருங்க நான் காலேஜ்தான் போறேன். உங்கள ஆபிசுல விட்டுற்றேன்” என்றாள். எனக்கு இந்த மாதிரி கனவு காண கூட துப்பில்லை என நினைத்துக் கொண்டே நித்யாவின் பின்னால் போய் அமர்ந்தேன். நித்யாவின் வாசனையை முதலில் அறியும் நிமிடம் அது. கிட்டத்தட்ட எனக்கு மயக்கமே வந்தது. மனதிற்குப் பிடித்த மயக்குகிற வாசம். இதைத்தான் பெண் வாசம் என்கிறார்களோ? நித்யா சகஜமாய் பேசிக் கொண்டு வந்தாள். “சாப்பாடு ஆச்சா? எங்க சாப்பிடுறீங்க? என்ன ஊர் ?கூடப் பொறந்தவங்க எத்தன பேர்?” என தொடர்ந்து கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருந்தாள். நானும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நினைவு முழுக்க அவளின் வாசனையில் சிக்கிப் போயிருந்தது. அலுவலகம் வந்தது. வாசலில்தான் இறக்கி விட்டாள். முதல் ஷிப்ட் முடிந்து போகிற, இரண்டாம் ஷிப்டிற்கு வருகிற மொத்த மக்களும் எங்களைப் பார்த்தது போன்ற உணர்வு. மிதப்பதைப் போலிருந்தது. பை சொல்லி விட்டுப் போனது கூட கனவு மாதிரிதான் இருந்தது. ராமு கடையில் மொத்த நண்பர்களும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கடைக்குப் போகாமால் நேராய் அலுவலக மாடி ஏறி இருக்கையில் போய்அமர்ந்து கொண்டேன். பின்னால் வந்த அனு “ஒரே வாரத்தில ட்ராப் பன்ற அளவுக்கு போய்டுச்சா.. கலக்கு” என்றபடியே இருக்கைக்குப் போனாள். அனு அலுவலகத்தின் கண். அவள் ஒருத்திக்கு தெரிந்தால் போதும் ஆனால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஐந்து நிமிடத்திற்கு பின்பு ஒவ்வொருத்தராய் உள்ளே வந்தனர். வழக்கமான கிண்டல்கள் கேலிகள். எப்படிடா ஒரே வாரத்துல இப்படி? என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தனர். சும்மா புன்னகைத்து வைத்தேன். இந்த உணர்வு நன்றாக இருந்தது. என்னை வியப்பாக பொறாமையாக மற்றவர் பார்ப்பது அளவற்ற மகிழ்வைத் தந்தது. இந்த பெருமையை நீட்டிக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன். நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிறைய அடித்து விட்டேன். மீதியை அவர்களாகவே மிகைப்படுத்திக் கொண்டார்கள். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது நான் இப்படியெல்லாம் அளந்து விடுபவன் அல்ல. நித்யா ஒரு நாள் நாலு மணிக்கு அலுவலகத்தைக் கடந்துபோனது நினைவிற்கு வந்தது. எதற்கும் வெளியில் போய் நிற்கலாம் என அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.
சரியாய் நான்கு ஐந்திற்கு நித்யா கண்ணில் பட்டாள். என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ஆனால் வண்டியை நிறுத்தவில்லை. அலுவலகத்தை வண்டி கடந்த நொடியில் நித்யா ஒரு நிமிசம் என சப்தமாய் கூப்பிட்டேன். வண்டி சற்று தூரம் முன்னால் போய் வளைந்து திரும்பி வந்தது.நான் சாலையில் நின்று கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். என்ன என புருவங்களை உயர்த்தினாள். ஒண்ணும் இல்ல சும்மா என்றேன். அப்புறம் எதுக்கு கூப்டீங்க? என முகம் சுருக்கினாள். இல்ல ட்ராப் பண்ணதுக்கு தேங்க்ஸே சொல்லல, சொல்லத்தான் கூப்டேன் என உளறினேன். ரொம்ப முக்கியம் பாருங்க ஹலோ இதுலாம் உங்களுக்கே ஓவரா இல்லையா? என சிரித்தபடியே மீண்டும் வண்டியை நகர்த்தினாள். நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டே உங்களுக்கு நேரம் இருந்தா ஒரு காபி சாப்டலாமா? என்றேன். என் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். பின்பு மெதுவாய் உங்களுக்கு ஆபிசுல வேல வெட்டி எதுவும் இல்லையா என்றாள். அத விடுங்க. இப்ப போலாமா என்றேன். நான் வீட்டுக்கு போகனுமே என்றாள். பத்து நிமிஷம்தானே காபி குடிச்சிட்டு போங்க. எங்க அம்மா தேடுவாங்களே என சிரித்தாள். சரி ரைட் நீங்க வீட்டுக்கு போலாம் என கடுப்பாய் திரும்பினேன். ஹலோ வந்து உட்காருங்க என சிரித்தாள்.
உடல் முழுக்க ஏதோ ஒன்று பரவியது. பரவசமா தெரியவில்லை. அவசரமாய் போய் அமர்ந்து கொண்டேன். எங்க போலாம்? என்றாள். உங்களுக்கு தெரிஞ்ச ஒரு நல்ல கடை என்றேன். பீச்க்கே போய்டுவமா அங்க ஒரு கஃபே இருக்கு என்றாள். காந்தி சிலை அடுத்து கடற்கரையை ஒட்டிய கஃபே அது.ஈஸ்வரன் கோவில் தெருவும் கடற்கரையில்தான் முடியும் இடைஇடையே ஏராளமான சாலைகள் குறுக்கிடும். ஒவ்வொரு பிரேக்கிற்கும் அவள் தோளை உரிமையாய் தொட்டேன். கடற்கரையை வண்டி தொட்டதும் கையை தோளின் மேலேயே வைத்துக் கொண்டேன். நித்யா லேசாய் தொண்டையைக் கனைத்து சார் கொஞ்சம் கைய எடுக்கிறது என்றாள். அப்போதுதான் நினைவு வந்தவனாய் ஓ சாரி சாரி என்றேன். கஃபேவிற்கு எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். கடலைப் பார்த்தபடி போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். எங்களுக்குள் ஒரு மெளனமான ஒரு உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவள் என் கண்களை அடிக்கடிப் பார்க்கிறாள். நான் அதைத் தவிர்க்கிறேன். பார்ப்பதும் தவிர்ப்பதும், தவிர்ப்பதும் பார்ப்பதுமாய் மிகப் பிரமாதமான உரையாடல் எங்களின் முதல் சந்திப்பிலேயே வசப்பட்டது. நித்யா இயல்பாக இருந்தாள். என் உடல்மொழிதான் கேவலமாக இருந்தது.
நித்யா கேட்டாள் “நீங்க பாண்டிக்கு புதுசா?”
“ஆமா வந்து மூணு மாசமாச்சி. உங்க சொந்த ஊர் இதானா?”
“ம்ம் பொறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கதான்”
“உங்கள பத்தி யமுனாகிட்ட ஒரு நாள் பேசிட்டிருந்தோம்”
“ந்தோமா? யார்யாரெல்லாம் ?”
“சும்மா நான் என் ப்ரண்ட்ஸ் எல்லாம் பேசிட்டிருந்தோம் ஃபங்சன்ல உங்கள பாத்தோம் இல்ல அதபத்தி”
“அதபத்தி பேச என்ன இருக்கு? அங்க நிறைய பொண்ணுங்க இருந்தாங்க அதுல என்ன பத்தி பேச என்ன இருக்கு?”
“ஒருவேள நீங்க எல்லாரையும் அட்ராக்ட் பண்ணி இருக்கலாம்”
“எல்லாரையுமா உங்களையா?”
நான் சற்றுத் தடுமாறி “என்னைன்னே வச்சிக்கோங்களேன்”
“அன்னிக்கு உங்க மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருந்தது” என சிரித்தாள்
“என்ன எழுதி இருந்தது?”
“ம்ம்ம் பயங்கர ஜொள்ளுன்னு”
“ஏய் அப்படிலாம் கிடையாது. எங்க ஆபிசுல இல்லாத பொண்ணுங்களா? ஏனோ உன்ன பாத்ததும் பிடிச்சிருந்தது அவ்ளோதான். மத்தபடி ஜொள்ளெல்லாம் கிடையாது”
“காபி சாப்ட போலாமானு கேக்கும்போது மட்டும் ங்க போட்டு பேசுறது, வந்ததும் ஏய் யா நல்லாருக்கு சார்”
“அய்யோ சாரிங்க ஒரு ஃப்ளோவுல வந்திருச்சி”
நித்யா டக் கென சிரித்துவிட்டாள். “சும்மா சொன்னேன் நீங்க ஒருமைலயே கூப்டலாம்”
லேசாய் ஆசுவாசமானது. “இல்ல நெஜமாவே உங்கள பாத்த முதல் முறையே ஏதோ ரொம்ப வருஷம் பழகின மாதிரி ஒரு உணர்வு வந்தது”
“உண்மைய சொல்லனும்னா எனக்கும் அப்படித்தான் தோணிச்சி. உங்கள பாத்து பயம் வரல அதான் நானே வண்டிய நிறுத்தி லிப்ட் கொடுத்தேன். அதே மாதிரி நீங்க காபி குடிக்க கூப்டதும் வரமுடிஞ்சது. சம்திங்க் ஸ்ட்ரேஞ்ச்தான்” என்றாள்
உணர்வுகள் பொய்ப்பதில்லை என ட்ராமாட்டிக் முத்தாய்ப்பு வைத்தேன். அவள் அதை ரசிக்கவில்லை.
நித்யாவைப் போன்ற படு இயல்பான பெண்ணை நான் சந்தித்ததே கிடையாது. எனக்கிருக்கும் மனத்தடைகள், கூச்சம், பயம், போலி மரியாதை, பவ்யம் என எந்த விஷயங்களுமே அவளிடம் இல்லை. அவளுடன் பழகும் எந்த ஆணும் வீணான கற்பனைகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ள மாட்டான். மிக மிக நேரடியான பெண்ணவள். அவளுக்குத் தெரிந்த இரண்டே புத்தகங்கள் குங்குமமும் குமுதமும்தான் அதையும்கூட தொடர்ச்சியாகப் படிக்கிறவள் அல்ல. அவளிற்கு பிடித்த நடிகர் சூர்யா. பிடித்த நடிகை ஜோதிகா. பிடித்த நிறங்கள் இளம் பச்சை மற்றும் மெரூன். லேசான பக்தி, நிறைய பேய் பயம். தனியாய் இருக்க பிடிக்காது. நிறைய நண்பர்கள். ஊர் சுற்றுவது பிடிக்கும். யாருடனாவது பேசாமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். சினிமா பார்க்க பிடிக்கும். காதலிக்க விருப்பம் இருந்தாலும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. காதலைச் சொன்ன ஓரிரண்டு பேரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. நித்யாவிற்கு வேலைக்கு போவதுதான் லட்சியம் ஆனால் அவள் அம்மா படிப்பு முடிந்தவுடன் திருமணம்தான் என உறுதியாக இருக்கிறார். நித்யாவிற்கு உடைகள் மேல் அப்படி ஒரு பைத்தியம். விதம் விதமாக தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம். எப்போதுமே பார்க்க ஃப்ரஷ்ஷாக இருக்க வேண்டும் என்பது அவளுடைய கொள்கை. நான்வெஜ் சாப்பிடப் பிடிக்கும். பாண்டியில் அவளுக்குப் பிடித்த இடம் கடற்கரையும் பொட்டானிகல் கார்டனும்.
மேற்சொன்ன விவரங்களை நான்கைந்து சந்திப்பிற்குள் தெரிந்து கொண்டேன். நான்கைந்து சந்திப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் தினம் மாலை நான்கு மணிக்கு சந்தித்துக் கொண்டோம். பெரும்பாலும் எங்கும் போவதில்லை. அலுவலக வாசலிலேயே நின்று பேசிக்கொண்டிருப்போம். என்றாவது ஒரு நாள்தான் கடற்கரைக்கோ காபி ஷாப்பிற்கோ சென்றோம். நான் நித்தி என்றும் அவள் விச்சு என்றும் ஆறாவது சந்திப்பில் அழைக்கத் தொடங்கினோம். இதுவரைக்கும் நானோ அவளோ எல்லை மீறாதுதான் பேசிக் கொண்டோம். அவளென்னைத் தொடுவதும் நான் அவளைத் தொடுவதும் மிக இயல்பாக நிகழ்ந்தது. நாட்கள் மிக வேகமாக ஓடுவது போலிருந்தது.
இன்று டிசம்பர் மூன்றாம் தேதி. போன மாதம் மூன்றாம் தேதி புதன் கிழமைதான் நித்யாவைப் பார்த்தது. சரியாக ஒரு மாதம் முடிந்திருந்தது. இன்று அவசியம் சந்திக்க வேண்டுமென நேற்றே சொல்லி இருந்தேன். வழக்கம்போல் நாலு மணிக்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்து நின்றேன். நாலு பத்து நித்யா வரவில்லை. நாலரை நித்யாவைக் காணோம். அவள் வரும் வழி தெரியும். எதிரில் நடந்து போய் பார்க்கலாமா? என நினைத்தேன். ஒரு வேளை வேறு பக்கமிருந்து வந்தால் என்ன செய்வது என யோசித்து வாசலிலேயே நின்று கொண்டேன். நாலே முக்கால் வரவில்லை. காலேஜில் ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸோ? ராமு கடைக்கு நடந்து போய் ஒரு சிகரெட் வாங்கினேன். அவளுக்கு சிகரெட் வாசனை பிடிக்காது. தம்மடித்துவிட்டு அருகில் போய் பேசவும் முடியாது. எப்படியும் ஐந்து மணிக்கு வந்துவிடுவாள். பேசிவிட்டு திரும்ப அலுவலகம் போகும்போது பிடித்துக் கொள்ளலாம். மணி ஐந்து பத்து. வீட்டிற்கு போய்விட்டாளோ? அல்லது வரும் வழியில் வண்டியில் ஏதாவது பிரச்சினையா? ஐந்து இருபது சிகரெட் பற்ற வைத்தேன். லேசான பதட்டத்தோடு புகைத்தேன். ஐந்து நாற்பது எனக்கு பயம் போய் வெறுப்பு வந்தது. என்ன மாதிரிப் பெண் இவள். இவளுக்குப் போய் இரண்டு மணி நேரமாக ரோடில் நின்று கொண்டிருக்கிறேன். ஆத்திரமாய் வந்தது. இன்னொரு சிகரெட் வாங்கி பற்ற வைத்து புகைத்தேன். ஆறு மணி . வெறுப்பாய் மீண்டும் அலுவலக வாசலுக்குப் போனேன். மாடியிலிருந்து நித்யா இறங்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏய் என்ன இங்கிருந்து வர்ர?
ரெண்டாவது மாடில நின்னுட்டு இருந்தேன்
என்னது? ஏன்?
சும்மாதான் நீ எவ்ளோ நேரம் வெயிட் பன்றேன்னு பாக்கலாம்னுதான்
எனக்கு ஆத்திரமாக வந்தது எதுவும் பேசாமல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அவளை விலக்கி விட்டு மேலே ஏறினேன்.
நித்யா என் கையைப் பிடித்தாள். ஏய் விச்சு கோவமா?
நான் எதுவும் பேசவில்லை
திடீர்னு இப்படிப் பண்ணா என்னன்னு தோணுச்சி. அதான். இனிமே பண்ணல ஓகேவா என்றாள்
நான் கையை உதறிவிட்டு திரும்ப படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தான்
நித்யா பின்னாலே வந்து என் தோளைத் தொட்டு நிறுத்தினாள். என் கண்களை ஆழமாய் பார்த்து வா போலாம் என்றாள்
அவள் கண்களில் அப்படி ஒரு கிறக்கம். என் கோபம் ஆத்திரம் காத்திருப்பு எல்லாமே சடுதியில் காணாமல் போனது.
இருவரும் எதுவும் பேசாமல் கீழே இறங்கி வந்தோம். நித்யா வண்டியை அடுத்த தெருவில் நிறுத்தி விட்டு வந்திருக்கிறாள். மூணே முக்காலுக்கு இரண்டாம் மாடியில் போய் நின்று கொண்டிருக்கிறாள். நடந்து போய் வண்டியை ஸ்டார்ட் செய்தோம். பின்னால் அமர்ந்தேன் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. வண்டியை ரோமன் ரோலண்ட் நூலகம் முன்பு நிறுத்தினாள். எதிரிலிருக்கும் பூங்காவில் ஆட்கள் அதிகம் வராத இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.
நித்யா பேச ஆரம்பித்தாள்.
ரெண்டு மணி நேரம் நீ தவிச்சத பாக்க நல்லாருந்தது விச்சு என சொல்லி லேசாக சிரித்தாள்
பாவி
நீ ஒரு பத்து நிமிசம் பாத்துட்டு மறுபடி ஆபிஸ் உள்ள போய்டுவேன்னு நினைச்சேம்பா
ஏன் அப்படி நினைச்ச
தெர்ல ஆனா அட்லீஸ்ட் இன்னிக்காவது உன்ன தெரிஞ்சிக்க முடிஞ்சதே அதுவரைக்கும் சந்தோஷம்
இன்னிக்கு நான் ஏன் உன்ன அவசியம் பாக்கனும்னு வர சொன்னேன் தெரியுமா நித்தி
ம்ம் தெரியுமே
என்னது
நாம சந்திச்சி இன்னியோட ஒரு மாசம் ஆச்சு
அடிப்பாவி
ம்ம்ம்ம் என வெட்கமாய் சிரித்தாள்
அநியாயத்துக்கு நமக்குள்ள எல்லாமே ஒத்துப்போவுது இல்ல
எனக்கும் அதாம்பா ஒரே ஆச்சரியம்
இருள் எங்களைப் போர்த்த ஆரம்பித்தது. ஏதோதோ பேசினோம். நித்யாவின் உள்ளங்கை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் என் தோள்களை அழுத்தி மிக நெருக்கமாய் உட்கார்ந்திருந்தாள். மின் விளக்குகள் எரிய ஆரம்பித்து விட்டன. திடீரென சமநிலைக்குத் திரும்பினோம். அய்யோ லேட்டாகிடுச்சி அம்மா தேடுவாங்க போகனும் என்றாள் மனசே இல்லாது. எனக்கும் அவளைப் பிரிய என்னவோ போலிருந்தது. எதையோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டது போலிருந்தது. மிகவும் கரைந்து நெகிழ்ந்து போயிருந்தேன். திடீரென மின்சாரம் போனது. மொத்த பூங்காவும் இருளில் மூழ்கியது. நான் சடாரென நித்யாவின் கன்னங்களை இரு கைகளால் பற்றி அவள் உதடுகளில் அழுத்தமாய் முத்தமிட்டேன். ஒரு நொடியில் நிகழ்ந்தது இது. முத்தம் முடிந்த பின்புதான் அவளை முத்தமிட்டது உறைத்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு இருளில் நித்யா விசும்பும் சப்தம் கேட்டது. நான் பயந்து போனேன். சாரி நித்யா டக்னு உணர்ச்சி வசப்பட்டுட்டேன். என்னால என்ன கண்ட்ரோல் பண்ணவே முடியல. சாரி சாரி சாரி
நித்யா மெதுவாய் மிக மெதுவாய் மிகமிக மெதுவாய் சொன்னாள்
விச்சு ஐ லவ் யூ!
மேலும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
5 comments:
Very nice. It z mind blowing description and details of love movements. I just went back to my old days of love, keep going..Pls carry on this story bit long, don't stop immediately. I am checking almost all the days for the next episode. Thanks for such a wonderful writing.
அய்ஸ், good. go ahead..
அபாரமான ஃப்ளோ. தினமும் ஒரு அத்தியாயம் படிக்கவேண்டும் போல் உள்ளது.
-ஜெகன்
Thanks அய்ஸ்!!!!!!
Thanks அய்ஸ்!!!!!!!!!1
Post a Comment