Thursday, March 24, 2011

அத்தியாயம்.பதினொன்று. விளி

இங்கு வந்த மூன்று மாதத்தில் பகலில் குடித்ததில்லை. குணாவிடமும் சீராளனிடமும் பேசிவிட்டு வெளியில் வந்தவுடனேயே மண்டையில் நமைச்சல் எடுக்க ஆரம்பித்திருந்தது. வாங்கி வந்திருந்த பையை அப்படியே எடுத்துக் கொண்டு தோப்பின் நடுவிற்குப் போய் மறைவாய் அமர்ந்து கொண்டேன். குடிக்க குடிக்க நினைவில் சப்தங்கள் கேட்க ஆரம்பித்தன. விஜியும் தாமசுமாய் மாறி மாறி நினைவை மோதிக் கொண்டிருந்தனர். நான் தலையை உலுக்கிக் கொண்டே குடித்தேன். முக்கால் புட்டி முடிந்திருந்தது. சுத்தமாய் போதை இல்லை. திடீரென அழுகை வந்தது. சப்தமாய் அழுதேன். என் மீது கசப்புகளும் கோபங்களும் பெருகின. மீண்டும் குடித்தேன். எத்தனை பேரின் வாழ்வை இல்லாமல் ஆக்கி இருக்கிறேன். எத்தனை பேரை நம்பவைத்து துரோகித்திருக்கிறேன். அய்யோ! எனக் கத்தினேன். நான் கொன்ற அத்தனை முகங்களும் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் என் நினைவு முற்றிலுமாய் பிறழ்ந்து போய் எல்லா உருவங்களும் நிஜத்தில் தோன்ற ஆரம்பித்தன.

விஜி என் எதிரில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமஸ் எனக்குச் சமீபமாய் அமர்ந்து கொண்டு டம்ளரில் மதுவை மிக நிதானமாய் ஊற்றினான். இரண்டு பேரையும் பார்த்து நான் சப்தமாய் அழுதேன். திடீரென உதயமான நாகராஜ், அரிவாளை விஜியின் தலையைக் குறி பார்த்து வீசினான். நான் எதிரிலிருந்தவளைக் காப்பாற்ற அவள் மீது பாய்ந்தேன். குணா எங்கிருந்தோ வந்து என் வயிறில் எட்டி உதைத்தான். சீராளன் கையில் ஒரு கத்தியோடு என் மீது பாய்ந்தான். நான் எழுந்து ஓடினேன். தொலைவில் இரஷ்யப் பெண் ஆடைகளற்று கால் விரித்து நின்று கொண்டு ஒரு விரலால் என்னை அருகில் அழைத்தாள். நான் நின்றேன். திடீரென மரத்தின் மீதிருந்து ஓனரம்மா குதித்தாள். அவளும் ஆடைகளைத் துறந்திருந்தாள். ஓனரம்மா அகலமாய் சிரித்தபடி என்னை நெருங்கினாள். நான் பின்னால் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்தேன். ஓனரம்மா, மீனாட்சி! எனக் கத்தினாள். இரண்டு கரங்கள் பின் புறமாய் என்னை அணைத்தன. உடல் மெத்தென எதன் மீதோ படர்வது போலிருந்தது. கழுத்து வலிக்க திரும்பிப் பார்த்தால் ஆடைகளில்லா மீனாட்சி என்னை இறுக்கி அணைத்திருந்தாள். அவளை விலக்கி விட்டு ஓடினேன். எனக்கெதிரில் பூமி பிளந்து ஜிகினாஸ்ரீ மெதுவாய் மேலெழுந்தாள். குட்டிப் பையா! என சிரித்தாள். அவளின் ஒரு முலை பாதி பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. யோனியின் நடுவில் ஒரு கத்தி சொருகியிருந்தது. வா குட்டிப்பையா! எனக் கைகளை விரித்தாள். கண்களை இறுக்க மூடிக் கொண்டு கத்தியபடியே ஓடினேன். ஒரு தடித்த மாமரத்தின் மீது மோதித் தெறித்துக் கீழே விழுந்து மூர்ச்சையானேன்.
0
விழிப்பு வந்தபோது இருள் முழுவதுமாய் எல்லாவற்றையும் மூடியிருந்தது. எங்கு கிடக்கிறோம் என்பது நினைவில்லை. இங்கு எப்படி வந்தோம்? என யோசிக்க யோசிக்க தலை வலித்தது. எழுந்து கொண்டேன். சுத்தமாய் திசை தெரியவில்லை. இருளென்றால் அப்படி ஒரு இருள். எனக்குள் பயம் துளிர்த்தது. நினைவைத் துழாவியதில் மதியம் குடித்தது நினைவிற்கு வந்தது. இங்கு எப்படி வந்து விழுந்தேன் என நினைவில்லை. தட்டுத் தடுமாறி பாதையைக் கண்டுபிடித்து நடக்க ஆரம்பித்தேன். தோப்பு முடிந்து வயல் வந்தது. கண்கள் இருளுக்கு பழகியதும் வீடு இருக்கும் திசை துலங்கியது. மீண்டும் தோப்பிற்குள் நடந்து வீட்டுக்கு வந்தேன். சுவிட்சை போட்டதும் கண் கூசியது. நெற்றி புடைப்பாகி இருந்தது. எதன் மீது மோதிக் கொண்டேன் எனத் தெரியவில்லை. இரவு சாப்பாடு வந்துவிட்டிருக்கிறது. சாப்பிடும் உணர்வு இல்லை. தண்ணீர் மட்டும் குடித்தேன். கட்டிலில் அமர்ந்து யோசித்தேன். மெதுவாய் மதியம் நிகழ்ந்தவைகள் யாவும் நினைவிற்கு வந்தன. எப்படி இத்தனை கொலைகளையும் துரோகங்களையும் நிகழ்த்திவிட்டு இந்த அமைதியான வாழ்க்கைக்குள் என்னால் இலகுவாய் பொருந்திப் போக முடிந்தது. யோசிக்க யோசிக்க குற்ற உணர்வு பெருகியது.

தலைவலி பொறுக்க முடியவில்லை. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. மீண்டும் தோப்பிற்குள் நடந்து மரத்தடியின் கீழ் கிடந்த பையைப் பார்த்தேன். இரண்டு புட்டிகள் இருந்தன. எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கொஞ்சம் போல டம்ளரில் ஊற்றி தண்ணீர் விட்டுக் குடித்தேன். பரபரப்பு ஒரு நிதானத்திற்கு வந்தாற் போலிருந்தது. சாப்பாடு ஆறிப் போய் இருந்தது . எடுத்துப் போட்டு சாப்பிட்டேன். என்னவென்று சரியாய் சொல்லிவிட முடியாத துக்கம் பெருகி வழிந்தது.

மதியம் எப்படி எல்லா உருவங்களும் துல்லியமாய் என் முன் வந்தன? என்பதை நினைக்க நினைக்க உடல் அதிர்ந்தது. மனதின் கற்பனைகள் இத்தனை நிஜமாய், பயங்கரமாய் எதிரிலேயே தோன்றும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. மனச் சிதைவு அடைந்திருக்கிறேனோ? எனச் சந்தேகமாய் இருந்தது. திடீரென இந்தத் தோப்பும், தன்னந்தனி வீடும் அந்நியமாகிப் போனது. பயம் ஒரு அலையைப் போல பொங்கியும் தாழ்ந்துமாய் மனம் முழுக்கப் பரவியபடி இருந்தது. பயத்தைப் போக்க மீண்டும் குடித்தேன். இன்னும் அதிக பயம் வந்தது. இனிமேல் இங்கிருக்க முடியாது எனத் தோன்றியது. இனி எங்கு போவது? என்பதும் புலப்படவில்லை. இந்த உணர்விலிருந்து முழுமையாய் வெளியில் வர என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை. தொடர்ந்து எங்காவது பயணித்தால் என்ன? எனத் தோன்றியது. எங்கு போக வேண்டுமென்பதைப் போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இங்கிருந்து போய்விட வேண்டும் என முடிவு செய்ததும் எழுந்து கொண்டேன். குடித்துக் கொண்டிருந்த புட்டியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். தோப்பின் முகப்பிற்கு வந்து, ஓடையைத் தாண்டி வயலைத் தாண்டி சாலைக்கு வந்தேன். நேரம் என்ன ஆகி இருக்கும் என தெரியவில்லை. மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தைத் தவிர்த்து, நட்சத்திரங்களோ நிலவோ இல்லாத கரும் இரவு. பூச்சிகளின் சப்தங்கள் இரவை முழுமையாய் நிறைத்துக் கொண்டிருந்தன. தார்சாலை காலுக்குத் தட்டுப் பட்டதும் நடு சாலையில் நடக்க ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் ஏதாவது வாகனங்கள் வருமா எனத் தெரியவில்லை. அப்படியே வராவிட்டாலும் பரவாயில்லை போகிற வரை போவோம் என நடந்து கொண்டிருந்தேன். இருள் கண்களுக்குப் பழகிவிட்ட பின்பு இரவுக்கு மட்டுமேயான தனித்த வெளிச்சத்தை உணர முடிந்தது சற்று பயம் விலகியது போலிருந்தது. இப்படிக் கால்நடையாகவே இந்தியா முழுக்க சுற்றும் யோசனை உதித்தது. வெகுநேரத்திற்குப் பின்பு அந்த இருளமைதியைக் கிழித்தபடி தொலைவில் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் வெள்ளமென இருளில் பாய்ந்தது. கண்களை மூடிக் கொண்டேன். தார்சாலையை விட்டு நகரவில்லை. ஒரு அபாயச் சங்கு போல ஹார்ன் ஒலித்தது. காதுகளைப் பொத்திக் கொண்டேன். ஒரு சரக்கு லாரி எனக்கு எதிரில் வெகு அருகாமையில் நின்று சப்தமாய் உதறிக் கொண்டிருந்தது. அதன் பக்க வாட்டிற்காய் போனேன். ஓட்டுனர் தெலுங்கில் சப்தமாய் இரைந்து கொண்டிருந்தார். நான் லாரியின் கதவைத் திறந்து கையில் வைத்திருந்த மதுபுட்டியை நீட்டினேன். வாங்கிக் கொண்டார். வண்டியில் ஏறினேன். முன் சீட்டில் யாருமில்லை. அமர்ந்தேன். எங்க போகனும் என்றார். வண்டி எங்கபோவுது? எனக் கேட்டேன். ”தமிழா? இங்க என்ன பன்ற?” என்றார். ”வழி தவறிட்டேன்” என்றேன். வண்டி திருப்பதி போவுது என்றதற்கு ”எங்க வேணா போங்க” எனச் சொல்லியபடியே அந்த அகலமான சீட்டில் படுத்துக் கொண்டேன்.
0
என்னை யாரோ உலுக்கினார்கள். பதட்டமாய் எழுந்தேன். ட்ரைவர்தான் எழுப்பினார். ”எறங்கி வந்து டீ குடி, வா” என்றார். சூரியன் மேலெழுந்து விட்டிருக்கிறது. படுத்திருந்த பஞ்சில்லாத சீட் சுட்டது. தலையில் அடையாய் அழுக்கு மண்டியிருந்தது. அணிந்திருந்த சட்டையும் பேண்ட்டும் புழுதியின் நிறத்திற்கு மாறியிருந்தன. கீழே இறங்கி ”எங்க இருக்கோம்?” என்றேன் ”திருப்பதி கிட்ட” என்றார். ஒரு சாலையோர டீ கடை. ட்ரைவர் ஏற்கனவே டீயை ஊதிக் குடித்துக் கொண்டிருந்தார். சூடாய் டீ வந்தது. மூன்றே மிடறில் குடித்து விட்டு ”இன்னொரு டீ சொல்ணா” என்றேன். அவர் மேலும் கீழுமாய் பார்த்துக்கொண்டே இன்னொரு டீ சொன்னார். அதையும் குடித்தபின்பு சற்று நிதானமானாற் போலிருந்தது. மீண்டும் ஏறிக் கொண்டோம். வண்டியை விரட்டிக் கொண்டே ”எந்த ஊர்பா நீ?” என்றார். ”மெட்ராஸ்ணே” என்றேன். அந்தப் பெயர்தான் உடனே வந்தது. ”குண்டூருக்கு எதுக்கு வந்த? நீ இருந்த எடம் ரொம்ப டேஞ்சருபா பக்கத்துல காடு இருக்குது. பூச்சி பொட்டு எதாவது போட்டிருந்தா என்ன பண்ணுவ?” ”போய்சேர வேண்டியதுதான்” என சிரித்தேன் ”அதுசரி” என அமைதியானார். ஒரு மணிநேரத்திற்கு பின்பு வண்டியை எங்கோ நிறுத்தினார். டிபன் சாப்டலாம் என்றார். ”அதுக்கு முன்ன குளிக்கனும்னே” என்றேன். ”அப்ப இங்க முடியாது அடுத்து ஒரு குளம் வரும் அங்க குளிச்சிடு அப்றமா சாப்டுக்கலாம்” என்றபடியே மீண்டும் வண்டியைக் கிளப்பினார். ஐந்து கி.மீ தாண்டியதும் வலது பக்கம் ஒரு குளம் இருந்தது. உயரமான அரச மரம் பெரிதாய் கிளைகள் விரித்திருந்தது. இறங்கிக் கொண்டேன்.


பர்ஸை மட்டும் எடுத்துக் கரையில் வைத்து விட்டு அப்படியே தண்ணீரில் விழுந்தேன். சட்டையை, பேண்டை, உள்ளாடைகளை, தண்ணீரிலேயே கழற்றி வீசினேன். பத்து நிமிடத்தில் ஹார்ன் தொடர்ந்து அடிக்கும் சப்தம் கேட்டது. அப்படியே எழுந்து கரைக்கு வந்தேன். தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு முதியவர்கள் அதிர்ச்சியாய் பார்த்தார்கள். ஒரு மஞ்சள் வேட்டி தரையில் காய்ந்து கொண்டிருந்தது. அதை எடுத்துக் கட்டிக் கொண்டேன். பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர் கத்திக் கொண்டே வேகமாய் வந்தார் எதுவும் பேசாமல் பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அமைதியாய் வாங்கிக் கொண்டார். ட்ரைவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வண்டியிலேயே அமர்ந்து கொண்டிருந்தார். போய் ஏறிக் கொண்டேன். “கிழிஞ்ச வேட்டிக்கு ஐநூறு ரூபா கொடுக்கிற யார் பா நீ?” என்றார். நான் “ஓட்டலுக்கா நிறுத்துனே பசிக்குது” என்றேன். முறைத்துக் கொண்டே “மொதல்ல துணி வாங்குவோம் எங்கிட்டயும் பழைய சட்ட எதுவும் இல்ல” என வண்டியை நகர்த்தினார். பிரதான சாலையிலிருந்து ஊருக்குப் போகும் சாலையில் வண்டியை ஒடித்தார். எந்த ஊர் எனத் தெரியவில்லை. எல்லா கடை எழுத்துக்களும் தெலுங்கில் இருந்தன. ஒரு சின்ன பஜார் குறுக்கிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு “பணங்கொடு நீ இப்படியே இறங்கி வந்துராதே” என்றார். “அட நீ வேரண்ணே” என்றபடியே இறங்கினேன். மேல் சட்டை இல்லாதது ஒரு பெரிய உறுத்தலாகவே இல்லை. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டே கடைக்குள் நுழைந்தேன். ட்ரைவர் தலையில் அடித்துக் கொண்டே மீண்டும் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கடைக்குள் நுழைந்தவுடன் பணியாளர்கள் விநோதமாய் முறைத்தனர். “ரெடிமேட் எங்க:” என்றேன். விரலைக் காட்டினார்கள். ஒரு பேண்ட் எடுத்து அப்படியே போட்டுக் கொண்டேன். தொங்கிக் கிடந்த டீசர்டில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன் எவ்ளோ எனக் கேட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் பிரதான சாலைக்கு வண்டியைத் திருப்பினார் ஒரு கிமீ தாண்டி இன்னொரு சாலையோரக் கடையில் நிறுத்தினார். இறங்கிப் போய் சாப்பிட்டோம். மோசமான உணவு. சகித்துக் கொண்டு சாப்பிட்டேன். இன்னொரு டீ குடித்தோம். சிகரெட் பிடித்தோம். மீண்டும் வண்டியைக் கிளப்பினார். பத்து மணி வாக்கில் திருப்பதி வந்தோம்.
“எறங்கிப்பா அவ்ளோதான் வண்டிய ஷெட்ல விடனும்” என்றார். “சரக்கடிக்கலாமான்னே” என்றேன். சற்று யோசித்தார். “ஒரு நிமிசம் இரு” என யாருக்கோ தொலைபேசினார். “ஒண்ணு பண்ணலாம் வண்டிய கொண்டுபோய் ஷெட்ல போட்ருவோம். நம்ம பையன் ஒருத்தன் அரக்கோணம் போறான். எனக்கு சொந்த ஊர் அரக்கோணம்தான். நாம மூணு பேரும் ஒண்ணா போய்டலாம். நீ அரக்கோணத்துல இருந்து ட்ரெயின் பிடிச்சிடு” என்றார். “சரிண்ணே” எனத் தலையாட்டினேன்.

திருப்பதி கசாமுசாவென இருந்தது காலைப் பதினோரு மணிக்கே வெயில் மண்டையைப் பிளந்தது. சந்து சந்தாய் திரும்பி லாரி ஒரு நெரிசலான இடத்தில் நின்றது. “இங்கயே நில்லு வரேன்” எனப் போனார். அந்த வீதி குப்பையாலும் நெரிசலாலும் பிதுங்கி வழிந்தது. அதிகமாய் ஒப்பணை செய்துகொண்டு, வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி இதற்கும் அதற்குமாய் பெண்கள் நடந்து கொண்டிருந்தனர். பத்து நிமிடத்தில் ஐந்திற்கும் மேற்பட்டப் பெண்களைப் பார்க்க முடிந்தது. புண்ணிய ஸ்தலங்களில் வேசிகள் பிதுங்கி வழிய காரணம் என்னவாய் இருக்கும் என யோசித்தேன். ஒரு வேளை இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் கூடுதலாய் வருகிறதோ? என்னவோ என நினைத்துச் சிரித்துக் கொண்டேன். ட்ரைவர் வந்து “வா போலாம்” என்றார். அந்த குறுகல் வீதி ஒரு பிரதான சாலையில் முடிந்தது. ஓரமாய் நின்று கொண்டிருந்த இன்னொரு சரக்கு லாரியில் ஏறினார். பின்னாலேயே நானும் ஏறிக் கொண்டேன் இருவர் உட்காரும் அளவிற்கு இடமிருந்தது. ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தவனுக்கு நடுத்தர வயதிருக்கும். ஸ்நேகமாய் புன்னகைத்தான். நம்ம பிரண்டுபா என்றார் ட்வைர். வண்டியை நகர்த்தினான். திருப்பதி தாண்டியதும் ஒரு தாபா குறுக்கிட்டது. “இங்க சாப்பாடு நல்லாருக்கும்னே” என்றான் ட்ரைவர். இறங்கிக் கொண்டோம். சின்னதாய் ஒயின்ஸ் கடையும் கண்ணில் பட்டது. “வாங்கிக்கலாமா?” என்றேன். “உள்ள பசங்க இருப்பாங்க வா” என்றபடியே முன்னால் நடந்தார். வரிசையாய் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. எல்லாக் கட்டிலிலும் ஒரு மரப்பலகை போடப்பட்டிருந்தது. ஒன்றில் போய் அமர்ந்து கொண்டோம். வந்த சிறுவனிடம் எனக்கு பீர் என்றேன். இருவரும் ரம் சொன்னார்கள். உணவு சொன்னோம். பேச்சு எங்கெங்கோ சென்றது. என்னைப் பற்றிக் கேட்டதற்கு வாயில் வந்ததைச் சொன்னேன். சொந்தமாய் பிசினெஸ் வைத்திருப்பதாகவும் வியாபர நிமித்தமாய் குண்டூர் வந்ததாகவும் கடைசி பஸ்ஸை விட்ட பிறகு ஒரு காரில் லிப்ட் கேட்டு, வரும் வழியில் ட்வைரோடு தகராறு ஆகி இறக்கிவிடப்பட்டதாக சொன்னேன். இரண்டு ட்ரைவர்களும் அவர்களின் தொழிலைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். சாலைகள் நிலவரம், சுங்கவரி, சாலையோரப் பெண்கள், சமீபத்திய அனுபங்கள், அழகான/ நோய் பிடித்த பெண்கள் உலவும் நிறுத்தங்கள் எனப் பேச்சு எங்கெங்கோ சுழன்றபடி இருந்தது.

மூவருமே நிறைய குடித்தோம். சாப்பாடும் நன்றாக இருந்தது. சாப்பிட்ட பின்பு கிளம்பினோம். “ஓட்டமுடியுமா?” எனக் கேட்டேன் ட்ரைவர் ஞானியைப் போல சிரித்தான். “இதுலாம் ஒண்ணுமே கெடயாது, எறும்பு கடிக்கிறா மாதிரி. எப்படி ஓட்டுரேன்னு மட்டும் பாரு” என ஏறி அமர்ந்தான். ஒரு கிலோ மீட்டர் தாண்டியதும் வண்டியை ஓரம் கட்டினான். வரிசையாய் புளிய மரங்களும் காட்டுச் செடிகளும் சாலைக்கு வெகு அருகாமையில் மண்டியிருந்தன. என்ன? வெனக் கேட்டேன். “லேசா கண்ணசருது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாம்” என்றான். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் ஏற்கனவே மட்டையாகி இருந்தார். வேகமாய் இறங்கியவன் கையில் வைத்திருந்த துண்டை கீழே போட்டுக் கொண்டு மரத்தடியில் படுத்துவிட்டான். சூரியன் மேற்கில் இறங்கத் துவங்கி இருந்தது. நான் சற்று உள்ளுக்குள் நடந்தேன். ஒரு வேப்ப மரத்தின் கீழ் போய் படுத்துக் கொண்டேன். உடனே தூங்கிப் போனேன்.

ஏதோ ஊறும் உணர்வு வந்து விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு என் தொடை மீதேறி அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தது. சற்றுத் துணுக்குற்று எழுந்து சாலைக்காய் வந்தேன். நல்ல இருள். இரண்டு ஓட்டுனர்களுமே எழுந்திரிக்க வில்லை. மரத்தடியில் படுத்துக் கிடந்தவனைப் போய் உலுக்கி எழுப்பினேன். கொட்டாவி விட்டபடியே எழுந்தான். உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர் இவனை எழுப்பிய சப்தத்தில் எழுந்துவிட்டு லாரியின் லைட்டைப் போட்டார். மணி எட்டரை. “டேய் நேரமாச்சி” என்றார். இருவரும் வண்டியில் ஏறினோம். “நல்லா தூங்கிட்டோம்” எனச் சொன்னான். பத்து மணி வாக்கில் அரக்கோணம் வந்தோம். வண்டியை மீண்டும் பாருக்காய் விட சொன்னான். நான் வேண்டாமென்றேன் இரண்டு ட்ரைவர்களும் கோபித்துக் கொண்டனர். “மதியம் உன் செலவு இப்ப எங்க செலவு” என்றனர் “வேணாம்னே வீட்டுக்குப் போகனும் ஸ்டேசனுக்கா விட்ருங்க “என்றேன். பத்தரை மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். எந்த இரயிலுக்கு டிக்கெட் எடுப்பது என குழப்பமாய் இருந்தது. சரி உள்ளே போவோம் எது முதலில் கிளம்புகிறதோ அதில் ஏறிக் கொள்வோம் என நினைத்துக் கொண்டு டிக்கெட் வாங்காமல் உள்ளே போனேன். எனக்கு முன்னால் போனவன் எதிரில் வந்த ஒரு தடிமனான ஆளை இடித்துவிட்டு நிலை தடுமாறி விழுந்தான். அவனைக் கடக்கையில் எனக்குள் சரேலென தீப்பற்றியது, அது நாகராஜ்! உடனே நின்றேன் பக்க வாட்டில் ஒதுங்கி நின்று அவனைப் பார்த்தேன் ஆம்! நாகராஜ்தான் நல்ல போதையில் இருந்தான் தடுமாறி எழுந்து மீண்டும் நடந்தான். மூன்றே மாதத்தில் தாயோலி நன்கு பெருத்திருந்தான். லோகுவின் இடத்தை இவன் கைப்பற்றி இருக்க வேண்டும். என் மூளை பரபரவென விழித்துக் கொண்டது. இவனைக் கொல்லத்தான் என்னை எதுவோ நேற்று மதியம் விரட்டியிருக்கிறது என நினைத்தேன். இதுதான் ஊழின் விளியா? என்னக் கருமமோ, ஆனால் என்னை விரட்டிய, என்னை விளித்த சாத்தானே / கடவுளே உனக்கு நன்றி. என் வாழ்வில் நான் செய்யப்போகும் ஒரே பிரதிபலன் இதுதான். என் ப்ரிய விஜி, என் ப்ரிய தாமஸ் இதோ! இதோ!! நான் உங்களுக்கு செலுத்தப் போகும் அஞ்சலி . ஆம் பழியாஞ்சலி. நினைவு பயங்கரமாய் சப்தம் போட்டது. சிரமப் பட்டு எண்ணங்களை நாகராஜின் மீது குவித்தேன். கையில் எந்த ஆயுதமும் இல்லை. பரவாயில்லை அவனைக் கைகளால் அடித்துக் கொள்வோம். என் வாழ்நாளில் விருப்பத்தோடு செய்யப்போகும் முதல் கொலை. சந்தோஷமாய் உணர்ந்தேன். உற்சாகமானேன். நாகராஜைப் பின் தொடர்ந்தேன்.

(முற்றும்)
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...