Tuesday, March 15, 2011

அத்தியாயம் ஆறு. ஊழ்

சீராளன் குணாவின் யோசனையை மறுத்தான். தன் தனிப்பட்ட விவகாரத்தைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். நான் சீராளனை அமைதிப்படுத்தினேன். இந்த விஷயத்தில் வேறு முடிவுகள் எடுக்க எந்த வாய்ப்புமே இல்லாமல் இருந்தது. லோகுவைத் தீர்த்துக் கட்டினால்தான் மறுபடியும் மதுரைக்குப் போய், விட்ட இடத்திலிருந்து தொடர முடியும். அவனுக்குப் பயந்து வேறெங்காவது தப்பித்துப் போய் மீண்டும் துவக்கத்திலிருந்து ஆரம்பிப்பதெல்லாம் இயலாத காரியமாய் பட்டது. லோகுவைத் தீர்த்துக் கட்டுவது சீராளனின் பழிக்காக மட்டுமின்றி நம் நால்வரின் தேவையாகவும் மாறிப்போனதை அவனுக்கு விளக்கினேன்.

விரைவாய் வீட்டைக் காலி செய்தோம். வாசலில் பெரிய பூட்டு இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். வண்டியை ராஜமுந்திரி சாலையில் விரட்டினோம். ஜெயாவின் இருப்பிடம் எங்கிருக்கிறது? எனத் தெரியவில்லை. அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை. மேலதிகமாய் லோகு எத்தனை பேருடன் வந்திருக்கிறான் என்றோ, என்ன விதமான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றோ ஒன்றுமே தெரியாமல் இருந்தது. எப்படித் தாக்குதலை நிகழ்த்துவது என்பதும் புரியவில்லை. வேறு யாரையாவது வைத்து லோகுவைத் தீர்த்துக் கட்டினால் என்ன? என தாமஸ் கேட்டான். அதற்காக செலவழிக்கும் தொகை ஒருபுறம் இருந்தாலும், லோகு நம்மை நெருங்கிக் கொண்டே இருக்கிறான். இன்னொரு குழுவை எதிர்பார்க்காமல் நாமே நேரடியாய் இறங்குவதுதான் சரியான வழி என்பதுதான் குணாவின் எண்ணமாக இருந்தது.

எனக்கு குழப்பமாய் இருந்தது. சீராளனின் உறவினரை வரவழைத்து அவரிடம் வீட்டின் அமைப்பு, கங்காவரத்தில் வீடு இருக்கும் பகுதி, தோராயமாக எத்தனைப் பேர் இருப்பார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டால் அடுத்த கட்ட நகர்விற்கு உதவலாம் என்றேன். சீராளன் உறவினருக்குத் தொலைபேசி வரவழைத்தான். அவர் லேசான பதட்டத்தோடுதான் வந்தார். எதற்கு இந்தப் பிரச்சினையெல்லாம்? என்றும் சீராளனை எங்காவது போய்விடும்படியும் வற்புறுத்தினார். அவருக்கு வயது சுமார் நாற்பதிற்கு மேலிருக்கலாம். தமிழ் புரியவில்லை. தெலுங்கில்தான் பேசினார். அவரின் தெலுங்கிலிருந்து புரிந்து கொண்டது.

ஜெயாவின் வீடு குடியிருப்புப் பகுதியைத் தாண்டிய ஒதுக்குப் புறமான வீடு. பிரதான சாலையிலிருக்கும் ரைஸ் மில்லிற்கு வலது புறமாய் திரும்பினால் ஒற்றைப் பாதை, அதில் முதலில் குறுக்கிடும் செம்மண் சாலையில் கடைசி வீடு. அந்தத் தெரு இரவு ஏழு மணிக்கே இருட்டிவிடும். தெருவில் மின் விளக்குகள் கிடையாது. இரண்டு மாடி கொண்ட வீடு. கீழ்தளம் சமையல் கட்டும், டைனிங்கும், இரண்டு படுக்கையறைகளையும் கொண்டது. அங்குதான் லோகுவின் ஆட்கள் தங்கி இருக்கிறார்கள். முதல் தளம் நான்கு அறைகளும் ஒரு ஹாலும் கொண்டது. வாடிக்கையாளர்கள் புழங்கும் பிரதான இடம் அதுதான். ஒவ்வொரு அறையிலும் மூன்று தடுப்புகள். ஒரே நேரத்தில் பனிரெண்டு பேர் புழங்கமுடியும். இரண்டாவது தளத்தில்தான் லோகு இருக்கிறான். உடன் எத்தனை பேர் இருப்பார்கள் எனத் தெரியாது. ஜெயாவின் படுக்கையறையும் அங்குதான். அவள் புருஷனும் உடன் இருப்பான்.

இந்த விவரங்கள் எனக்குப் போதுமானதாக இருந்தது. அவர் விடைபெற்றுப் போன பிறகு திட்டத்தை விவரித்தேன். இரவு எட்டு மணிக்கு நான், குணா மற்றும் தாமஸ் மூவரும் அங்கிருக்க வேண்டும். ஆளுக்கொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அறைக்குப் போய்விடவேண்டும். சரியாக ஒரு மணிக்கு உடனிருக்கும் பெண் தூங்கிவிட்டாள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மெல்ல இரண்டாவது தளத்திற்கு வந்துவிட வேண்டும். குணா ஒரு அறைக்கும், நான் ஒரு அறைக்குமாய் ஒரே நேரத்தில் நுழைய வேண்டும். வெளியில் தாமஸ் நின்று கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக சுடமுடியுமோ அவ்வளவு விரைவாக சுட்டுவிட்டு மொட்டை மாடிக்கு விரைந்து, அங்கிருந்து குதித்து விட வேண்டும். சீராளன் வீட்டிற்கு சமீபமாய் காரை நிறுத்தி வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான் திட்டம். கச்சிதமாக இருப்பது போலத்தான் தோன்றியது.

சீராளன் மட்டும் முரண்டு பிடித்தான். தானும் உடன் வந்தால் விரைவாய் செயல்படலாம் என்றான். ஆனால் சீராளனை அங்கிருப்பவர்கள் யாராவது அடையாளம் கண்டுகொண்டால் பிரச்சினைதான். மதுரையில் சீராளனை வெட்டியவர்கள் யாரேனும் உடன் வந்திருக்கலாம். அவர்கள் பார்த்துவிட்டால் திட்டம் சொதப்பலாகிவிடும் என்றேன். வேறு வழியில்லாமல் சீராளன் அமைதியானான்.

இரவு வரை காத்திருந்தோம்.
0

இரவு ஏழு முப்பது. கங்காவரம் வந்து விட்டோம். அரிசி மில்லை ஒட்டிய ஒற்றைத் தடத்தில் ஐந்து நிமிடப் பயணம். சுற்றிலும் இருள் முழுமையாய் மூடியிருந்தது. வானத்தில் பொட்டு நட்சத்திரமில்லை. தூரத்து வெளிச்சப் புள்ளிகளாய் சில வீடுகள் மினுங்கின. ஒரு பரந்த மைதானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பதினைந்து வீடுகள் சிதறிக் கிடந்தன. வண்டியின் முகப்பு விளக்கை சீராளன் அணைத்துவிட்டான். ரியல் எஸ்டேட் காரர்களால் போடப்பட்ட ஒரு செம்மண் சாலை குறுக்காய் பிரிந்தது. அந்த சாலையின் கடைசி வீடுதான் ஜெயா வீடு. முனையிலேயே இறங்கிக் கொண்டோம். சீராளனை பனிரெண்டு மணிக்கு மேல் இந்தப் பகுதிக்கு வரச் சொன்னேன். எப்படியும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். தனியாய் ஒரு கார் நின்று கொண்டிருந்தால் சந்தேகம் வரலாம். நீ கிளம்பு என்றபடியே மூவரும் இறங்கி இருளில் நடக்கத் துவங்கினோம். துப்பாக்கிகளைத் தடவி உறுதிபடுத்திக் கொண்டோம். மேலதிகமாய் இரண்டு ரவுண்டு சுடவும் புல்லட் இருந்தது. வீட்டை நெருங்கினோம். கேட்டில் ஒரு குண்டு பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. கீழ் தளக் கதவு சாத்தப்பட்டிருந்தது. யாருமில்லை. முகப்பு கேட் லேசாகத் திறந்திருந்தது. நாய் இருக்குமென எதிர்பார்த்திருந்தேன். இல்லை. வலது பக்கம் படிக்கட்டுகள் இருந்தன. அதிக சப்தமெழுப்பாமல் மேலேறினோம். மாடிக் கதவும் திறந்தே கிடந்தது. ஹாலில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ தெலுங்கு சானல் சப்தமில்லாமல் பாடிக் கொண்டிருந்தது. நான்கு அறைகளும் சாத்தப்பட்டிருந்தன. இரண்டு நீள சோபாக்கள் போடப்பட்டிருந்தன. பேசாமல் போய் அமர்ந்து கொண்டோம். தாமஸ் தொண்டையை சப்தமாய் கனைத்தான். ஒரு அறைக்கதவு லேசாய் திறந்தது. ஒரு பெண் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள். எங்களைப் பார்த்த அவள் கண்கள் உடனே கூரையைப் பார்த்தது. அக்கா என சப்தமெழுப்பிவிட்டு மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். இழுக்கப்பட்டும் இருக்கலாம். சற்று நேரத்தில் மாடியிலிருந்து கொலுசு ஒன்று இறங்கி வரும் சப்தம் கேட்டது.


”யாரு?” என்றபடியே வந்து நின்ற உருவம் பார்த்து எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது

விஜயலட்சுமி!

விஜியின் கண்களில் சற்றுத் தாமதமாய் அதிர்ச்சி தெரிந்தது. தழையத் தழைய நீலப் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். மல்லிகைப்பூவை பந்தாய் சுருட்டித் தலையில் வைத்திருந்தாள். உடல் மட்டும் சற்றுத் தளர்ந்தார் போலிருந்தது. மற்றபடி அதே கிறக்கமான கண்கள். துளியும் கூடாத, குறையாத உடல். அழுத்தமான சிவப்பு உதட்டுச் சாயம். கண்களுக்கு அடர்வாய் மையிட்டிருந்தாள். நான் அதற்கு மேல் அவளைப் பார்க்க முடியாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன்.

தாமஸ் பேச ஆரம்பித்தான். ”பிசினெஸ் விசயமா வந்தோம். உங்க இடம் பத்தி கேள்விப் பட்டோம். தங்கிட்டுப் போலாம்னு ஹிஹி!” என இளித்தான்
விஜி கஷ்டப்பட்டு புன்னகைத்தாள்
திடீரென முகத்தை வாசல் பக்கமாய் திருப்பி
”எங்கடி போய் ஒழிஞ்சீங்க” எனக் கத்தினாள்.
ஹாலில் அவளது குரல், சுவர்களில் மோதி ஆங்காரமாய் எதிரொலித்தது.
இரண்டு பெண்கள் கீழிருந்தும் இரண்டு பெண்கள் அறைகளுக்குள்ளிருந்தும் பரபரப்பாய் ஓடி வந்தனர்.
”ஹால்ல ஆளு உட்கார்ந்திருக்கு என்ன மசிர் புடுங்கிட்டிருந்தீங்களா?” என இறைந்தாள்.
நான் தலையை குனிந்தபடியே அமர்ந்திருந்தேன். விஜி தாமஸ் பக்கமாய் பார்த்து சொன்னாள்.
“இப்ப நாலுதான் இருக்கு. யாரை புடிச்சிருக்குன்னு பாருங்க” என்றாள்.

தாமசும் குணாவும் ஆளுக்கொரு பெண்ணுடன் அறையை நோக்கிப் போனார்கள். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். விஜி மற்ற இரண்டு பெண்களுக்காய் திரும்பி உள்ளே போகுமாறு ஜாடை காண்பித்தாள். அவர்கள் உள்ளே போனதும் எழுந்து எனக்காய் வந்தாள். நான் நிமிர்ந்து பார்த்தேன். “வாங்க” எனச் சொல்லிவிட்டு படிக்கட்டுப் பக்கமாய் நடந்தாள். எழுந்து பின்னால் சென்றேன். படிக்கட்டுக்கு அடியில் ஒரு அறை இருந்தது. அதில் நுழைந்தோம். விஜி உடனே கதவடைத்தாள்.

“நான் உங்கள எதிர்பாக்கல” என்றாள் மென்மையாக. நான் கிட்டத்தட்ட உடைந்து போயிருந்தேன். பேச்சே வரவில்லை.

சற்றுப் பெரிய அறைதான் அது. அகலமான கட்டில் ஒன்று அறையின் நடுவில் போடப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி ஒரு சிறிய சோபா இருந்தது. உட்காரச் சொன்னாள். அமர்ந்தேன். எதிரில் கைகட்டி நின்று கொண்டாள்.
“இப்ப என்ன பன்றீங்க?”
அமைதியாய் இருந்தேன்
“எந்த ஊர்ல இருக்கீங்க? கல்யாணம் பண்ணிகிட்டீங்களா?”
என்னால் எதுவும் பேசமுடியவில்லை. தலையை குனிந்தபடியேதான் அமர்ந்திருந்தேன். விஜி நெருங்கி வந்தாள். குனிந்து விரல்களால் என் தாடையை உயர்த்தினாள்.
“ஏன் எதுவும் பேசமாட்டேங்கிறீங்க ரொம்ப அதிர்ச்சியா இருக்கா?” என்றாள்
“இல்ல விஜி” என்றேன்
இதைக்கேட்டதும் சிரிக்க ஆரம்பித்தாள். சிரிப்பை நிறுத்தியதும் அவள் குரல் இதுவரை நான் கேட்டிராத கடுமைக்குத் தாவியது. சற்று சப்தமாய் பேச ஆரம்பித்தாள்.
“விஜிலாம் செத்துப் போய் ரொம்பநாளாச்சி. இதுக்குத்தானே மயங்கினேன். பற்களைக் கடித்துக் கொண்டாள். விஜியாம் விஜி. நான் இப்ப இந்த நிலைமைல நிக்கிறதுக்கு நீங்கதான் காரணம். எப்பவாச்சிம் இதுக்காக வருத்தபட்டிருக்கிங்களா?” என்றாள்
அதுவரைக்கும் அவள் மேல் இருந்த இரக்கம் திடீரென துண்டுபட்டது. “நானா என்ன சொல்ர?” என்றேன்
“பாண்டில நான் உண்டு என் குடும்பம் உண்டுன்னு நிம்மதியாதானே இருந்தேன். என் புருஷன் நல்லவனா இல்லன்னாலும் கூட, என் மேல கண்மூடித்தனமான அன்பத்தான் வச்சிருந்தான். அவன் பொண்டாட்டிங்கிறதால அந்த ஏரியால, ஊர்ல எல்லாருமே என்கிட்ட கொஞ்சம் பயத்தோடதான் பழகினாங்க. நீதான் எல்லாத்தையும் காணாமப் பண்ண. என்ன உன் வலைல விழவச்ச”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னப் பேசுகிறாள் இவள்?

“நடந்ததுக்கு நான் மட்டுமே எப்படி விஜி காரணமா இருக்க முடியும்? நீயும்தான என்ன விரும்பின? நான் கடைசி வர உன் கூட வாழனும்னுதானே ஆசைப்பட்டேன். நினைவிருக்கா நாம ஃப்ரான்ஸ் போக எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருந்தேன். உன்ன மகாராணி மாதிரிதானே வச்சிருந்தேன்”

“ஆமா அம்மணக்கட்ட மகாராணியா வச்சிருந்த. நீ எனக்கு தாலியே கட்டல தெரியுமா? உனக்கு என் உடம்பு மேலதான் மோகம். என் ஒடம்புல ஒரு இணுக்கு கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் அனுபவிச்ச. என்ன கழட்டி விட எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்திட்டிருந்த. கிடைச்சதும் ஓடிப்போய்ட்ட. ச்சீ” என்றாள்

யாரோ பலங்கொண்ட மட்டும் என் தலையில் சம்மட்டியால் ஒங்கி அடித்தார் போலிருந்தது.

ஓவியம் : rembrandt

மேலும்

Featured Post

test

 test