Monday, October 25, 2010

அத்தியாயம் 1. பழி

அந்த நேரத்தில் கைக்கு எதுவும் தட்டுப்படவில்லை. ஏதேனும் ஒரு கூரிய கல், இரும்புத் துண்டு, வேலி பெயர்ந்த இரும்பு முடிச்சு, இப்படி ஏதாவது ஒன்று கிடைத்தால் கூட போதும். தரையில் ஆங்கில ’சி’ வடிவில் வளைந்தபடி முனகிக் கிடப்பவனின் ஆசன வாயில் சொருகி விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். அவன் விழுந்து கிடக்கும் இடத்திலிருந்து அரை வட்டமாய் பத்தடி தூரம் வரை அலசினேன். கவிழ்ந்திருந்த இருளில் கைக்கு எதுவும் தட்டுப்படவில்லை. இளைத்துப் போயிருந்த நிலவின் ஒளி மிகச் சன்னமாய் இருந்தது. நெடுந்தொலைவினுக்கு வயலாக இருக்கக் கூடும். சமீபத்தில்தான் நெற்கதிர்கள் அறுக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்கையில் நெற்கதிர் வேர்கள் பூட்ஸ் காலில் நசுங்கி சப்தம் எழுப்பின. பச்சை நெல்லின் வாடையும் கோடை இரவின் வெக்கையும் மூச்சு முட்ட வைத்தன. எண்பது கிலோவிற்குச் சமீபமான உடலை இழுத்துக் கொண்டு வந்ததில் வியர்வையில் தெப்பலாய் நனைந்து போயிருந்தேன். இடையில் அங்கங்கே நின்று அவன் கால்களை மாற்றி மாற்றிப் பிடித்து இழுத்து வந்தேன். இரயில் தண்டவாளத்திலிருந்து இவ்விடம் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். இழுத்து வரும்போது சப்தம் போடாதிருக்க அவன் வாயைப் பிளந்து பெரிய ஜல்லிக் கல் ஒன்றினை பற் தாடைகளுக்கு நடுவில் முட்டுக் கொடுத்திருந்தேன். அவன் அணிந்திருந்த பெல்ட்டை உருவி இரண்டு கைகளையும் முறுக்கி வளைத்துப் பின் புறமாய் கட்டியிருந்தேன். அப்படியும் ஓரிரு முறை தலையைத் தூக்கி,கால்களை உதறித் திமறி எழ முயற்சி செய்தான். பூட்ஸ் காலினால் வாயிலும் மூக்கிலும் உதைத்து இழுத்து வரவேண்டியதாய் போயிற்று. வயல் பூச்சிகளின் சப்தமும்,மின்மினிப் பூச்சிகளின் பறத்தலும் அந்த இரவினை முழுமையாய் நிறைத்துக் கொண்டிருந்தன. காற்றின் அசைவற்ற இருள்வெளி மிக வன்மமாய் தகித்துக் கொண்டிருந்தது.




மூச்சிரைக்கவே சற்று நேரம் அமர்ந்தேன். தாகமாயிருந்தது. இங்கு நிச்சயம் ஏதாவது கிணறு இருக்க வேண்டும். உத்தேசமாய் இருளில் சிறிது தூரம் நடந்தேன். நீர்கால்வாய் காலைத் தட்டியது. கால்வாயினுள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எதிர்திசையாய் இல்லாமல் இறைக்கும் தொட்டியிலேயே கால்வாய் முடிந்தது. மென் ஒளியில் கருமை நீர் அசைவற்று இருந்தது. உள்ளங்கைகளைக் குவித்து அள்ளிக் குடித்தேன். நேரம் பின்னிரவை நெருங்கி விட்டிருக்கலாம். பரபரப்பாய் உணர்ந்தேன். ”தாயோலி செத்து தொலைய மாட்டேங்கிறானே!” சப்தமாய் முனகியபடி காறித் துப்பினேன். ஏதாவது ஒரு நடுத்தரக் கருங்கல் கிடைத்தால் கூட போதும் இரண்டு அல்லது மூன்று முறை அக்கல்லினைப் பயன்படுத்தியாவது முனகிக் கிடப்பவனின் தலையைச் சிதைத்து விடலாம். நீர்கால்வாயினுக்குச் சமீபமாய் துணிதுவைக்க அல்லது சோப்பு போட பயன்படுத்தும் கல் ஏதாவது கிடக்கிறதா எனத் துழாவிப் பார்த்தேன். இல்லை. நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. பின்னிரவு இரண்டு மணியைக் கடந்திருக்கலாம். லேசாய் பதட்டமானது.

நேற்று இரவு அரக்கோணம் இரயில் நிலையத்தில் இவனைப் பார்த்தேன். லேசான போதையில் தள்ளாடியபடி என்னைக் கடந்து பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தான். சட் டென இவன் பிம்பம் எல்லா நினைவுக் குப்பைகளையும் கிளறிப் போட்டது. எப்படியோ இவன் தப்பிப் போய்விட்டான். ஏன் இவனை இத்தனை நாள் மறந்திருந்தேன் எனத் தெரியவில்லை. எந்த ஒரு கணத்தில் இவன் மீதான இரக்கம் சுரந்தது என்றும் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை நிகழ்ந்தவைகளின் அதீதமான அழுத்தங்கள் இவனை மறந்து போக செய்து விட்டிருக்க வேண்டும். இவன் இந்த ஊரில் என்ன செய்கிறான்? எனவும் யோசனையாய் இருந்தது. ஆள் முன்பை விட சற்றுப் பூசியிருந்தான். தாயோலி உல்லாசமாக இருக்கிறான் போலும். பார்த்த மறு நிமிடமே அவனைக் கொல்லும் உந்துதல் ஏற்பட்டது. துப்பாக்கி, கத்தி என எந்த வஸ்துக்களையும் உபயோகிக்காது வெறும் கைகளினால் இவனைக் கொல்லும் ஆசை மெல்ல மேலெழுந்தது. அவனின் தள்ளாட்டமும் இதற்கு உறுதுணையாய் இருக்கும். நல்லவேளையாய் நான் குடிக்கவில்லை. பின் தொடர்ந்தேன்.

செண்ட்ரல் செல்லும் இரவு பதினோரு மணி பாஸெஞ்சர் ரயிலில் ஏறினான். இருக்கைகள் காலியாக இருந்தும் கதவுக்குச் சமீபமாய் நின்றபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். நான் உள்ளே போய் அவன் கண்ணில் படாதவாறு அமர்ந்து கொண்டேன். சொற்பமான ஆட்களுடன் இரயில் பெட்டி தூங்கிக் கொண்டிருந்தது. திருவள்ளூர் ரயில் நிலையம் தாண்டியதும் எழுந்து கொண்டேன். புட்லூர் தாண்டக் காத்திருந்தேன். புட்லூர் தாண்டியதும் இவன் வாகாய் கதவுப் பக்கத்தில் நின்றபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். மெல்ல அருகில் போய் லேசாய் தள்ளி விட்டேன். சாய்ந்த மரம் போல விழுந்தான். நான் சற்றுத் தள்ளி எகிறி குதித்தேன். சற்றும் எதிர்பார்த்திராததால் இவன் தலை தரையில் மோதியிருக்க வேண்டும். இரத்தம் முகத்தில் கோடுகளாய் வழியத் துவங்கியிருந்தது. சிதறியிருந்த ஜல்லிக் கற்கள் முகத்தைக் கிழித்திருந்தன. அதிர்ச்சியில் துடித்தபடி குழறலாய் முனகியவனை இழுத்துக் கொண்டு வந்து இந்த வயலில் கிடத்தினேன்.

நாங்கள் கீழே குதித்ததை எவரேனும் பார்த்திருந்தால் ரயிலை இந்நேரம் நிறுத்தி போலிசுக்குத் தகவல் கொடுத்திருக்கலாம். மீதமிருக்கும் சொற்பமான நேரத்தில் இவனைக் கொன்றேயாக வேண்டும். பதட்டத்தை உணரத் துவங்கினேன். எப்படி அடித்தாலும் இந்தச் சனியன் செத்துத் தொலையவில்லை. களைத்துப் போய்தான் ஆயுதத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். இனி ஆயுதத்தைத் தேடிப் பயனில்லை. விரைந்து திரும்பி வந்தேன். கால்களைக் குறுக்கிக் கொண்டு மிகக் கோணலாய் அவனின் உடல் கிடந்தது. உயிர் இருந்து கொண்டிருப்பதை மிகச் சன்னமான முனகல் தெரிவித்தது. இப்படியே கிடந்தால் நான்கு அல்லது ஐந்து மணிநேரத்தில் அவன் இறந்துவிடலாம். இடையில் யாராவது பார்த்து விட்டார்களெனில் பிரச்சினைதாம். இல்லை இவன் பிழைத்து விடக் கூடாது. தலையயை உலுக்கிக் கொண்டேன். பின் பூட்ஸ் அணிந்திருந்த என் இடது காலினால் குறுகி மடிந்திருந்த அவன் கால்களை விரித்தேன். தடிமனான பூட்ஸினை விரைப்பாக்கியபடி வலக்காலை பின்னிக்கிழுத்து பலத்தைத் திரட்டி மிகச் சரியாய் அவனின் விரிந்த இரண்டு கால்களுக்கு மத்தியில் உதைத்தேன். ’ஹக்’ என்றொரு கேவல் வந்தடங்கியது. மீண்டும், மீண்டும், மீண்டும், உதைத்ததில் அவன் உடல் சற்றுத் தூக்கிப் போட்டு பின் அடங்கியது. பிறகும் அவன் ஆணுறுப்பின் மீது ஒரே காலில் ஏறி நின்றேன். சிகரெட்டை அழுத்தி நசுக்குவது போல அவன் ஆண்குறியை நசுக்கினேன். பின் வலது கால் பூட்டினைக் கழற்றிவிட்டு பெரு விரலை அவன் மூக்கருகில் வைத்தேன் சுவாசத்தினை உணர முடியவில்லை. அடி வயிற்றியிலிருந்து காறித் துப்பினேன். பேண்ட் ஜிப்பினை அவிழ்த்து சரியாய் அவன் வாய்க்குள் போகும்படி ஒன்றுக்கிருந்தேன். மீண்டும் ஒரு முறைக் காறித் துப்பிவிட்டு. வந்த வழியை உத்தேசமாய் கணக்கிட்டு நடக்கத் துவங்கினேன்.

இவன் உடலை மறைக்கவெல்லாம் விரும்பவில்லை. இதுவரை செய்த எந்த ஒன்றையும் நான் மறைக்க விரும்பியதில்லை. சூழல்களுக்கு தேவையான கவனம் மட்டும்தான் எனக்கு அவசியமே தவிர, வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்புகள் அல்ல. பாதுகாப்பின்மைகளின் அலாதியான இன்பத்தைத் துய்த்தவர்களுக்கு நாளை என்றொரு நாள் எப்போதுமிருப்பதில்லை. பாதுகாப்பற்ற ஒவ்வொரு நொடியும் பரவசமானது. பயத்தைப் போல, விபத்தைப் போல, கலவியின் உச்ச நொடியினைப் போல மனதை முழுக்க விழிப்பு நிலைக்குக் கடத்துவது. நான் விழிப்பின் முதல் படியில் வாழ்பவன். பரவசங்கள் மட்டுமே உண்மையான வாழ்வாய் இருக்க முடியும் என நம்புபவன். வியர்வையில் உடல் நனைந்திருந்தது. நிலவின் வெளிச்சம் சற்றுப் பிரகாசமானது. நான் மிகுந்த விடுதலையை வெகு நாட்கள் கழித்து உணர்ந்தேன். கொல்வதைப் போல பரவசத்தை தரும் இன்னொன்று கலவியாகத்தான் இருக்க முடியும். முதன்முறையாய் என் சொந்தக் கைகளினால் ஒரு மனிதனைக் கொன்றதும் முதற்கலவி கொண்ட பெண்ணின் உடல் நினைவில் வந்து போனது. கலவியும் கொலையும் ஒன்றுதான் எனத் தோன்றியது.

ஓவியம் : வான்கோ

-மேலும்

11 comments:

Mohan said...

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது அய்யனார்!

anujanya said...

அதி வன்முறை என்றாலும், மன ஆழத்தில் இருக்கும் ஏதோ ஒன்று, 'ம்' என்கிறது. அட்டகாசமான துவக்கம். பிடித்த வரிகள் நிறைய இருந்தாலும்...

//பாதுகாப்பின்மைகளின் அலாதியான இன்பத்தைத் துய்த்தவர்களுக்கு நாளை என்றொரு நாள் எப்போதுமிருப்பதில்லை. பாதுகாப்பற்ற ஒவ்வொரு நொடியும் பரவசமானது. பயத்தைப் போல, விபத்தைப் போல, கலவியின் உச்ச நொடியினைப் போல மனதை முழுக்க விழிப்பு நிலைக்குக் கடத்துவது.//

கதைசொல்லியும் ஆசிரியனும் இணையும் புள்ளியாக இருக்குமோ என்று மனம் அற்பமாக நினைக்கத் துவங்குகிறது இங்கே :)

அனுஜன்யா

நிகழ்காலத்தில்... said...

கதையின் ஓட்டம் அப்படியே உண்மையில் நடப்பதுபோல் கட்டிப்போடுகிறது..

ராம்ஜி_யாஹூ said...

கதை, எழுத்துநடை என்ற நோக்கில் பார்த்தால் மிக அற்புதம் அய்யனார்.

ஆனால் நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி. இன்று நகுலன் , தி ஜா படைப்புக்களை போற்றுவது போல சில வருடங்களுக்கு பின்னால் உங்கள் படைப்புக்கள் பல வயதினரால், மாணவர்களால் வாசிக்கப் படும்.

அவ்வாறு இருக்க நீங்கள் இவ்வளவு விவரிப்பாக வன்முறை குறித்து எழுத வேண்டுமா.

கவிதா | Kavitha said...

அய்ஸ் - இதை நீங்க 1. ஒரு கதையாக கற்பனை செய்து எழுதறீங்களா.. இல்லை 2. அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கி நீங்களாகவே மாறி உணர்ந்து எழுதறீங்களா..

எனக்கு நிறைய கேள்விக்கள். இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்றாலும், சில கதாப்பாத்திரங்களின் வடிவங்களில் நாமாகவே நம் ஆழ்மனத்தில் உள்ள ஆசைகளை கொண்டுவர வரமுடியும்.. இது இரண்டாவது.

இரண்டாவதாக இருக்கும்பட்சத்தில் என் கேள்விகளை கேட்க நினைக்கிறேன்.. உங்களின் பதிலுக்கு பிறகு..

படம் அருமை..

"தாயோலி" போன்ற வார்த்தையை வலியாக உணர்கிறேன்.. மற்றபடி.. நல்லா இருக்கு.. :)

MSK / Saravana said...

class..

Ayyanar Viswanath said...

நண்பர்களுக்கு,

அதிக வன்முறை என ஒருசில நண்பர்கள் (நேசன்,கவிதா மற்றும் ராம்ஜி) குறிப்பிட்டிருந்தனர். ஒருவகையில் இந்த அத்தியாயத்தில் பகிரப்பட்டிருக்கும் வன்மம் எனக்கு போதாமல்தான் இருக்கிறது. நெடு நாட்கள் என்னை அலைக்கழித்தது இந்த அத்தியாயம்தான். எப்படி எழுதியும் குரூரமும் வன்முமான ஒரு கொலையை கண்முன்னால் கொண்டுவர முடியாமல் போனது. ஒரு சில விஷயங்களை இந்நாவலில் நிகழ்த்திக் காட்ட முடியாமையின் போதாமையே இதை பாதியில் கைவிடத் தோன்றியது. இந்த அத்தியாயம் ஓரளவிற்கு வன்முறையை உங்கள் கண்முன்னால் கொண்டுவந்தால் அதற்காக மகிழ்கிறேன்.

கவிதா, சில நேரம் பார்வையாளனாகவும் சிலநேரம் பங்குபெறுபவனாகவும்தான் இருக்கிறேன். ஆனால் எவரையும் கொல்ல வேண்டுமென்பது என் ஆழ்மனது ஆசை இல்லை :)

லதாமகன் said...

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது

உயிரோடை said...

வாழ்த்துகள் அய்யனார். ஆரம்பிச்சிட்டிங்க... எத்தனை அத்தியாயம்

தமிழன்-கறுப்பி... said...

நான் நாவலாகத்தான் வாசிப்பேன் என்று காத்திருந்தேன், பதிவா போட ஆரம்பிச்சிட்டிங்க. எனக்கு a short film abput killing நினைவுக்கு வந்து போச்சு அய்யனார். பொறுமையா முழுசா வாசிக்கணும் எல்லா அத்தியாயமும் போட்டதுக்கப்புறம். :)

KARTHIK said...

// புட்லூர் தாண்டக் காத்திருந்தேன். புட்லூர் தாண்டியதும் இவன் //

அட நம்மூர் :-))

Featured Post

test

 test