எனக்கான எதுவொன்றின் ஆசுவாசக் கரங்கள் எப்போதும் அணைத்துக் கொள்ளும் தவிப்புகளோடு விரிந்திருக்கின்றனவோ அவற்றின் தாள் பணியும் அல்லது அவற்றைக் கண்டுணர்ந்து முழுமையாய் அடைக்கலமாகும் பெருமுயற்சிகளே இந்தச் சிறு(மை) வாழ்வுப் பிரயத்தனங்களின் பின்புலமாகவிருக்கிறது என்பதுதான் என் இத்தனை தலை கீழ் பாடுகளின் ஒற்றை வரி விளக்கமாகவிருக்கிறது.
என் ப்ரியத்திற்குரிய ப்ரியமே உன் வடிவம் யாது? உன் பருண்மை என்ன? உன்னொளி என் இருண்மைகளை விரட்டுமா? நீ இப்பிரபஞ்சத்தில்தான் உலவுகிறாயா? உடல் முழுக்க காயங்களைக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே எதைக் கொண்டும் நிரப்பிடாத இடைவெளியை நானாகவே தருவித்துக் கொண்டிருக்கிறேன். நீ என் மீட்பராய் இருப்பாய். என்னை இரட்சிப்பாய். திசையறியா ஆட்டுக் குட்டிகளின் தாய்மை நீயாமே? என்னைக் காத்தருள். என்னை மீட்டெடு. என் பாவங்களை நீக்கு. தூய வெண்ணிறப் போர்வை கொண்டு என்னை மூடு. உன் சுகந்தத்தில் கண் மூடி நெடு நாள் உறங்க வேண்டும். என்னருகே உறங்கும் என் மகனின் பாதுகாப்புணர்வு எனக்கும் கிட்டட்டும். என் அறிவுக் குப்பைகளென்று நானாய் நம்பிக் கொண்டிருப்பவற்றை நீக்கு. என் போலித்தன்ங்களை களை. என்னை நிர்மூலமாக்கு. என்னை அழி. என்னை ஒரு பள்ளத்தாக்கிலிருந்து தலைக் குப்புறத் தள்ளிவிடு. என்னை இல்லாமலாக்கு என் இறையே. என் காதலே. என் மதுவே.
தூயச் செந்நிற மது நானாவேன். தூய வெண்ணிற மதுவும் நானாவேன். அதிதூய போதையாய் இரு. இருள் கிழிக்கும் ஒளி நானாவேன். ஒளி மூடும் இருள் போர்வையும் நானாவேன். நீ என் ஆதவனாய் சந்திர பிம்பமாய் எப்போதுமிரு. விருட்சம் நான். கிளை நான். இலை நான். சருகு நான். நீ என் வேராய் இரு. நீ என் நீராய் இரு. நீ என் விழுதாய் இரு. என் இறையே, என் காதலே, என் மதுவே, எனக்கான எல்லாமாய் நீ இரு.
இந்தப் பாலையில் அலைகழிகிறேன். தங்க மணல் வசீகரிக்கிறது. ஒளியில் ஜ்வலிக்கும் மணலில் நடக்க நடக்க கால்கள் புதைகின்றன. மூச்சு முட்டுகின்றது. மீள நீண்ட கைப் பிடிகள் யாவும் வழுக்கல்கள். யோசனைகளோடு நீண்ட விரல்கள் யாவிலும் விந்தின் கொடு நாற்றம். இல்லை இல்லை இல்லை என்னை மீட்கும் கரங்கள் இவைகளில்லை. என்னை வெளியேற்றும் விரல்களும் இவைகள் இல்லை. அஃதொரு தூய்மையின் முடிவிலா தாய்மைக் கரங்கள். விரிந்த இரு கரங்கள். நீண்ட விரல்களில்லை. ஒருபோதுமில்லை.
அஃதொரு நதியின் கரங்களை ஒத்திருக்கும். எல்லையிலா விரிவைக் கொண்ட நதியின் கரங்களவை. என் கனவில் வந்ததே. பதறி விழித்தும் விழாமலும் அழுதேனே. அக்கரங்களை நானறிந்தில்லையெனினும் கண்டு கொள்வேன். முன்பொரு பொழுதில் அக்கரங்களின் விரிவு தொடைகளின் மடியாய் விரிந்திருந்தது. என்னை முழுவதுமாய் பொதிந்து கொண்டது. அப்போதுதான் நானழுதேன். முதன்முறையாய். கடைசி முறையாயும். அத்தொடை மடிகளின் கதகதப்பை நானறிவேன். அதன் சாயல்களை நீ கொண்டிருந்தால் கூட போதும். என் இறையே என் மதுவே. நீ இப்பூமியிலா உலவுகிறாய்?
மேகக் கூட்டங்களின் பொதி நீயாமே. வானின் நீலமும் நீயாகவே இருக்க முடியும். கடலும் வானும் சங்கமிக்கும் நீலப் பின் புற ஒளியும் நீதானே? இந்தப் பனிக்கட்டி கரையும் செந்நிறத் திரவம் தரும் கரைசலும், வான் கடல் நீலமும் ஒன்றா? அப்படியெனில் நான் வானைக் குடிக்கிறேன். அப்படி அப்படியெனில் நான் கடலைக் குடிக்கிறேன். நீரில் ஒளிரும் கத்தி மீனாய் பாய்கிறேன். ஆழம் பயம் தருகின்றது. நீல ஆழம் போகப்போக இருளின் ஆழம். நீ ஆழமாய் இரு. ஆனால் நீலமாய் இரு. கருப்பு இருளின் ஆழம் அச்சமூட்டுகின்றது. ஆழம் இருள்தான் எனினும் நீ நீலமாயிரு. எனக்கே எனக்காய் நீல ஆழ இருளாயிரு. என் ப்ரிய ப்ரிய ஆழமே, இருளே, நீலமே.
அறியாதவனாய் கேட்கிறேன் எங்கிருக்கிறாய் நீ? சாவின் வடிவத்திலா இயங்குகிறாய்? மரணம்தான் எப்போதைக்குமான ஆசுவாசமா? எல்லாவற்றையும் குடித்துத் தின்றுச் செரித்துக் கொண்டாடும் வாழ்வல்லவா உனது! உன்னிடம் வந்தவர்களை என்ன செய்வாய்? எப்போதைக்குமான அன்பை அறியத் தருவாயா? ஏய் சாவே, நீ என்னை என்ன செய்வாய்? ஒருவேளை நீ தான் என் இறையா? என் மதுவா? என் காதலா? நீதான் சகலமுமா? என்னை அணைத்துக் கொள்ளேன். உன்னில் பொதிந்து கொள்ளேன். என்னை மூழ்கடியேன், என்னில் திளையேன் அல்லது உன்னில் திளைக்கவிடேன். என் இறையே மதுவே காதலே சாவே.
14 comments:
அருமை அய்யனார்.,
உணர்வுகளை, காதலை, சோகத்தை, சந்தோசத்தை, காமத்தை எழுத்தில் கொண்டு வர முடியாது. வார்த்தைகளில் அவற்றை விளக்க முடியாது, உணர முடியாது என்று சொல்லுவோர் எல்லாம் இந்தப் பதிவை படித்தால் தங்கள் கூற்றை மாற்றி கொள்வர்.
நீங்கள் வாழும்/எழுதும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற ஒற்றை பெருமை/ கர்வம் எனக்கு போதும் நண்பரே.
அண்ணாவின் பிறந்த நாள் அன்று வெளி வந்து இருக்கும் இந்த அற்புதமான பதிவு, அமுதம் போல வந்து என் கண்களை, மனதை மகிழ்விக்கிறது. நன்றிகள் பல .
எல்லாம் சரி ஆனா காதிலிக்கு புரியுமான்னு தான் தெரியல!
ராம்ஜிக்கு புரிஞ்சிருக்கு அதுவரைக்கும் சந்தோசம்!
அஃதொரு நதியின் கரங்களை ஒத்திருக்கும். எல்லையிலா விரிவைக் கொண்ட நதியின் கரங்களவை. என் கனவில் வந்ததே. பதறி விழித்தும் விழாமலும் அழுதேனே. அக்கரங்களை நானறிந்தில்லையெனினும் கண்டு கொள்வேன். முன்பொரு பொழுதில் அக்கரங்களின் விரிவு தொடைகளின் மடியாய் விரிந்திருந்தது. என்னை முழுவதுமாய் பொதிந்து கொண்டது. அப்போதுதான் நானழுதேன். முதன்முறையாய். கடைசி முறையாயும். அத்தொடை மடிகளின் கதகதப்பை நானறிவேன். அதன் சாயல்களை நீ கொண்டிருந்தால் கூட போதும். என் இறையே என் மதுவே. நீ இப்பூமியிலா உலவுகிறாய்?
ம்ம் என் இறையே என் மதுவே :)
படிக்கப் படிக்க என்னவோ செய்கிறது. சொல்லத் தெரியவில்லை.
பொக்கிஷப்படுத்த வேண்டிய எழுத்து.
எங்கிருக்கிறாய் என் பிரியமே.. :)
pattaasu
அப்பா!!!..
கொல்றீங்க, அய்யனார்.
அபாரம் அய்ஸ் கொன்னுட்டீங்க!!!
\\என்னில் திளையேன் அல்லது உன்னில் திளைக்கவிடேன். என் இறையே மதுவே காதலே சாவே//
எல்லோரின் குழப்பமும் இதுதானே?
குடும்பமோ, உறவுகளோ இல்லாத நண்பர்களும் தொடர்பில்லாத, மொழி தெரியா ஊரில் வாழ சபிக்கப்பட்டவனின் தனிமையும் கழிவிரக்கமும், தினம் கொல்லும் எதிர்கால பயமும் கடவுளின் கொடை.
மது இறைவனின் தனிப்பட்ட கண்டுபிடிப்போ?
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
(your default sharing button is not good. so read content in above link. and place the button mentioned in the link for ur every posts)
//என்னருகே உறங்கும் என் மகனின் பாதுகாப்புணர்வு எனக்கும் கிட்டட்டும். // இந்த வரிகளில் தொனிக்கும் ஏக்கம்....
நம்மை அதீதமாய் நேசிக்கிற கரங்களில் (அது என்னவாகவேனும் இருக்கட்டும்) முழுவதுமாய் தன்னை ஒப்புகொடுத்து, மடியில் தலை சாய்த்து சலனமற்றுத் துயில வேண்டுகிற ஒரு அருமையான மன்றாடல்.
நான் இந்த உணர்வுகளை மிக நெருக்கமாய் உணர்ந்தேன்...
அருமைங்க அய்யனார்... இதை படிக்கும் போது நீங்கள் எனக்குள் ஊற்றிய உணர்வு அற்புதம்....
ப்பா, மூர்ச்சையாக்குகிறது இந்த பதிவு.
ஆழம், ஆழம்......
எப்போதும் உங்கள் பதிவுகளை அமைதிச்சூழலில் படிக்க விரும்புவதற்கான காரணத்திற்கு ஒரே ஒர் உதாரணமாய் இப்பதிவை கொள்ளலாம்.
நன்றி அய்யனார்.
Post a Comment