Friday, April 23, 2010

லீனா

..............
தொடர்ந்து புலியின் வாயை
மிக அகலமாகவும் பற்களை மிக நேர்த்தியாகவும்
வரையத்தொடங்கும் அச்சிறுமி என் கடவுள்
என் மகள் என் உயிர்
என் நேற்றைய பிம்பம்
- சன்னாசி


படைப்புகளைக் காட்டிலும் பிரச்சினைகளை படிப்பதில் திருப்தியடையும் கிசுகிசு மனம் கிடைக்கும் சொற்ப நேர இணைய வாசிப்பில் கூட கடந்த இரண்டு மாதங்களாக லீனா விவகாரத்தையே தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறது. இது இன்னொரு வகையில் மிகுந்த மன உளைச்சலையும் உண்டாக்குகிறது. இம்மனநிலை குறித்து நான் வெட்குகிறேன். இதை எழுதுவதற்கான காரணம் இம்மனநிலையில் இருந்து முற்றிலும் வெளிவருவதற்கான சுயநலம்தான். நடுநிலைமை என்கிற நிலைப்பாட்டின் மீதெல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. சார்புத் தன்மை அற்ற, சார்ந்த என்கிற இரண்டு புள்ளிகளையும் விலக்க முற்படுவதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கீழ்கண்ட என் பகிர்வுகள் முழுக்க முழுக்க இணையத்தில் படித்த, சம்பந்தப்பட்ட நபர்களால் எழுதப்பட்ட தரவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு / நம்பி எழுதப்பட்டது. எழுதப்படாதவைகள் எழுதப்பட்டவைகளை நிராகரித்தால் இக் கட்டுரையும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்.

1. செங்கடல் படப் பிடிப்பில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பணம் கொடுக்காமல் லீனா தகராறு செய்ததாக வெளிவந்த தினத் தந்தி செய்தியை முன் வைத்து வினவில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரையை வளர்மதி முகப்பு பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கட்டுரையின் தலைப்பை பார்த்தவுடன் இதே போன்றதொரு சம்பவம் வளர்மதிக்கும் லீனாவிற்கும் இடையே நிகழ்ந்தது நினைவிற்கு வந்தது. எனவே பின்னூட்டமாக ஒரு சிரிப்பானைப் போட்டுவிட்டு ஒரு சிறிய பணியை முடித்து விட்டு வந்து வினவுப் பக்கத்தில் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த கட்டுரை முழுக்க முழுக்க கிசுகிசு பாணியில் எழுதப் பட்டிருந்தது. மேலும் லீனாவின் தனிப்பட்ட வாழ்வையும் மிகக் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்தது. இவ்விரண்டும் எனக்கு ஒவ்வாத உணர்வைத் தரவே பின்னூட்டத்தில் என் வருத்தத்தைப் பதிவு செய்தேன். சற்று நேரத்தில் ரோசாவசந்தின் கண்டனப் பதிவும் என் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகவே அங்கேயும் என் கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டு நகர்ந்தேன். லீனாவின் இரண்டு கவிதைகளுக்கும் எதிரான விமர்சன அர்ச்சனைகளும் வினவின் அதே பதிவில் எழுதப்பட்டிருந்தது. அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை. மேலும் கவிதையை வைத்தே பெண்ணை அலைபவளாக நிறுவ முயல்வது வன்முறையாகத்தான் தோன்றியது. இடையே பின்னூட்டத்தில் வளர்மதி சுட்டியிருந்த unlimited semiosis கருத்தாக்கத்தின் அபத்தம் குறித்தும் யோசிக்க வேண்டியிருந்தது. கவிதையில் துருத்திக் கொண்டிருந்த 'நானும்' 'புரச்சிப் பாலியல் பெண் கவிதைகள்’ முன்னிறுத்தலும் அக் கவிதைகள் குறித்து தொடர்ந்து யோசிக்க இடையூறாக இருக்கவே தொடர்ந்து பேச முடியாது விலகிவிட்டேன்.


2. இந்து மக்கள் கட்சியின் புகாருக்கு எதிரான கண்டன ஒன்று கூடல் அறிவிப்பைப் பார்த்ததும் அதில் இடம்பெற்றிருந்த ஏராளமான படைப்பாளர்களின் சிந்தனையாளர்களின் பெயர்களைப் பார்த்ததும் சற்றுத் திகைப்பாக கூட இருந்தது. லீனாவின் கவிதைக் குறி சுட்டும் சம்பந்தப் பட்ட நபர்கள் இதை வேறெப்படி எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்? இணையத்தில் தோழர்கள் அவர்களுக்கு உரித்த தடாலடி மொழியில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்து மக்கள் கட்சியினருக்கு கவிதையோ கட்டுரையோ எழுத தெரியாமல் போலிஸில் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த அணுகுமுறைக்கு பரிதாபப் பட வேண்டுமே ஒழிய கண்டனக் கூட்டம் நடத்துவது இரு தரப்பு விளம்பர நோக்கங்களையும் நிறைவேற்றி வைப்பது போலாகும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. சற்றுத் திருப்பங்களுடன் இந்த கண்டனக் கூட்டம் இ.ம.க மற்றும் ம.க.இ.க தீவிர தொண்டர்களால் நிஜமான அச்சுறுத்தலானது என்பதை உண்மைத் தமிழன் பதிவில் படித்தபோது வருத்தமாக இருந்தது. லீனாவின் கவிதைக்கு இவ்வளவு பெரிய சர்ச்சையோ விமர்சனமோ தேவையில்லாத ஒன்றாகத்தான் படுகிறது. லீனா போன்ற செவி வழியாய் அரசியல் ஞானமடைந்த புரட்சிக் கவிஞர்களின் படைப்புகளை?! கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்த வழி. ஆனால் இலக்கிய கூட்டங்களை எதிர்த்து புரச்சி செய்வதின் வாயிலாக தங்களை, தங்களின் சித்தாந்தங்களை காப்பாற்றி விட்டதாய் எண்ணி புளகாங்கிதம் அடையவும் இன்னொரு கூட்டம் நம் சூழலில் இருப்பதும் தமிழ் சூழலின் சாபக் கேடாய்த்தான் இருக்க முடியும்.


3. லீனாவின் இரு கவிதைகளை ஜமாலனும் பெருந்தேவியும் மிகுந்த சிரத்தையுடன் விமர்சனப் பூர்வமாக அணுகியிருந்தனர். கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” இரண்டும் ஒருமித்து ஒற்றைத் தன்மையாகிவிடும் சிக்கலையும், பொதுப் புத்தியிலிருந்து விலகாத, உடல் பற்றிய பிரக்ஞையில்லாத, அரசியல் புரிந்துணர்வில்லாத கவிதைகளின் சாராம்சத்தையும் கிளிப் பிள்ளைக்கு விளக்குவது போல் போதுமான விளக்கங்களை அவர்கள் அளித்திருந்தும் லீனா மிக எளிதாக இவ் விமர்சனத்தைக் கடந்து போகிறார். அந்தக் கவிதைகள் கச்சா மொழியிலிருப்பதால் இத்தனை எதிர்ப்பு வருகிறது என பலமாக நம்புகிறார். அதையே ரோசா வசந்தின் விமர்சனத்திற்கும் பதிலாய் வைக்கிறார். மொழி பற்றிய பிரம்மைகளிலிருந்து, வார்த்தைகளில் நல்லது கெட்டது என்பதிலிருந்தெல்லாம் நம் சூழல் வெகு தொலைவு பயணித்து வந்து விட்டது என்பதை லீனாவிற்கு எப்படிப் புரியவைப்பது என்பதுதான் அறிவு தளத்தில் இயங்குபவர்களின் சவாலாக இருக்கிறது. அத்தோடு நில்லாமல் சோவியத் யூனியன், பிரஸ்திரோய்கா கிளாஸ்நாஸ்ட்,பெர்லின் தோழி, குழந்தை கம்யூனிஸ்ட் என்றெல்லாம் வார்த்தைகளைத் தூவுகிறார். விமர்சனத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வார்த்தை தூவல்களைப் படிக்கும்போது ’சப்பான்ல சாக்கிசான் கூப்டாக’ என கோவை சரளா உச்சக் குரலில் கத்தும் பிம்பம் தான் நினைவில் இடறுகிறது. அ.மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றோரின் நட்பே போதுமான அறிவை கொடுத்துவிடும் என்பதை நம்புகிறார்போலும். மேலும் நட்பு வட்டாரங்கள் அவ்வப்போது உதிர்க்கும் அரசியல் கருத்துக்களை கேட்டே ஞானமடைபவர்களால் மட்டுமே தன் குறித்தான பிம்பங்களை மிகையாக கட்டமைத்துக் கொள்ள முடியும். தீவிர வாசிப்பும், கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறையும், தன்னையே பிரதானப்படுத்திக் கொள்ளாது ’பிற’ பற்றிய புரிந்துணர்வும் கொண்டவர்களால் லீனாவின் ஸ்டண்டுகளை சகித்துக் கொள்ள இயலாது. ஓரிரண்டு வருடங்களுக்கு முன் தமிழச்சி லீனாவை விட மிகப் பிரமாதமாக கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார். சாம்பிளுக்கு ஒன்று.

யோனிகள் இங்கே வாடகைக்கு கிடைக்கும்!
வந்தவன் விலை கேட்டான்
சிறிதும், பெரிதுமாக
சுருங்கி விரிந்த
யோனிகளுக்கு
ஓவ்வொரு ரேட்டாம்.

வந்தவன் சொன்னான்.
"மலஜலக்கழிப்பிடங்களை விட
காமக்கழிவுகளை கொட்டும்
இந்த யோனிகளுக்கு
கிராக்கி அதிகம் தான்."4. மேலும் லீனாவின் கவிதைகளை எப்படி அணுகுவதென்றும் அவரே சொல்லித் தருகிறார் /ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும்/ இதைப் படித்தவுடன் புல்லரித்தது. சென்ற வருடம் ஊருக்குப் போயிருந்த போது லீனாவின் கவிதைப் படம் ஒன்றைக் காண நேரிட்டது. அதாவது அவரின் கவிதை பின்னால் ஒலிக்க படம் ஓடும். படத்திலும் அவரே நடித்திருந்தார். ’தீர்ந்து போயிருந்த காதல்’ என்பது கவிதைப்படத்தின் தலைப்பு. வாரமலர், குடும்பமலர் போன்ற இலவச இணைப்புகளில் வெளிவரும் பின்னுள்ளட்டைக் கவிதைத் தேர்வாளர்கள் கூட பிரசுரிக்கத் தயங்கும் கவிதை அது. ஒரு பெண் (லீனா) வேலையிலிருந்து திரும்புகிறார். சமைக்கிறார். கணவருக்காக காத்திருக்கிறார். லேட் ஆகிறது. அப்படியே கை நீட்டி மேசையில் கவித்துவமாக கவிழ்கிறார். கணவர் தாமதமாக வருகிறார். அப்போது காத்திருந்த பெண்ணுக்கு அவர் மீதிருந்த காதல் தீர்ந்து போய் இருக்கிறது. வராமலே இருந்திருக்கலாம் என நினைத்துக் கொள்கிறார். நான் அவ்வ்வ் என அழாத குறையாக அதைக் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்க ஓடினேன். அதை அவர் அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளச் சொல்லி வெகு நேரம் சிரித்தார். ஒரு மோசமான கவிதை எழுதுவது, அதை படமாக்குவது, அப்படத்தில் தானே நடிப்பது இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விசயங்கள். ஆனால் அதை குறுந்தகடாக வெளியிட்டு விற்பதுதான் எனக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. அதைக் காசு கொடுத்து வாங்குபவனை கேணயனாக்கும் முயற்சிதானே இது. இம் மாதிரியான பின்புலமும் லீனாவினுடையதுதான். அவரை விமர்சிக்கும்போது இந்த அபத்தங்களையும் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதையும் அவரே சொல்லட்டும்.

5. கீற்றில் வெளிவந்த மினர்வா கட்டுரையில் பின்னூட்டமாக சங்கரராம சுப்பிரமணியன் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார். சங்கர், விக்ரமாதித்யன், லக்ஷ்மி மணிவண்ணன் மூவரும் எழுதிய கவிதைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்கள் சங்கரின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். கட்சி அலுவலகத்தில் வைத்து மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியிருக்கின்றனர். நம்முடைய தமிழ் சூழல் ஒன்றும் அறிவு முதிர்ந்த சூழலல்ல. மிகவும் எளிமையான நம்பிக்கைகளையும், குடும்பம் என்கிற பலகீனமான அமைப்பை ஆதாரமாகவும் கொண்டுள்ள வாழ்வு முறை. இதில்தான் ஒட்டு மொத்த மனிதர்களும் இயங்கியாக வேண்டியிருக்கிறது. இங்கு ஒவ்வொரு கலைஞனுமே இயல்பிற்கும் கற்பனைக்கும் இடையே மிகப் பெரும் ஊசலாட்டமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இம்மாதிரியான சூழலில் ஒரு கவிஞனின் வீடு புகுந்து அவனிடம் யோனி என்பதற்கு அர்த்தம் சொல் என்பதும், அவனின் சுற்றத்தினருக்கு பிரதியைப் படிக்கத் தந்து திடீர் அதிர்ச்சி தருவதும், கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்குவதும் தோழர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் செயல்களாய் தெரியவில்லை. தன்னுடைய மதம், தான் நம்பும் கடவுள் இவ்விரண்டிற்கும் எதிராக ஒரு சிறு அசைவைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத வெறியாளர்களைப் போலத்தான் இச் சித்தாந்த வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நாம் எம்மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்கான அடிப்படை உரிமைகளை எவ்வளவு சுலபமாக இந்த வலியவர்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை யோசிக்க யோசிக்க அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ஏன் இந் நிகழ்விற்கு எதிராக கருத்தளவில் கூட எவரும் எதையும் பதியவில்லை என்பதை நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...