
குவாண்டின் டராண்டினோ எனக்குப் பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். மிகக் குரூரமான வன்முறையை வார்த்தையாகவும் காட்சியாகவும் மிக நேர்த்தியான விளையாட்டாய் நிகழ்த்திக் காட்டுவதில் தேர்ந்தவர். வெகுசனம், கலை என்கிற இருவேறு எதிரெதிர் துருவங்களை தங்களது திரைப்படங்களின் மூலம் ஒரே புள்ளியில் குவிக்கச் செய்த இயக்குனர்களாக அகிரா குரசோவா வையும் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கையும் சொல்லலாம். நான் டராண்டினை ஹிட்ச்காக்கின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். கொல்வது கலை என்கிற அணுகுமுறைதான் ஹிட்ச்காக்கினுடையது இவருக்கு கொலை அல்லது வன்முறை என்பது வசீகரமானதொரு விளையாட்டாய் இருக்கிறது.சன்னாசி சொல்வது போல “நான் சொல்லநினைப்பது இப்படி” என்கிற கோணம்தான் டராண்டினோ.
இவரின் சமீபத்திய திரைப்படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் இன்னும் இங்கு வரவில்லை. தலைப்பின் வில்லங்கத்தை நினைவில் கொண்டு இந்நாட்டில் வெளிவராதென நானாகவே நினைத்துக் கொண்டே தரவிரக்கம் செய்தேன். சென்ற வாரத்தில் கமினே திரைப்படம் பார்க்கச் சென்றபோது இன்குளோரியஸ் விரைவில் வருகிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. திரையில் இரத்தத் தெறிப்புகளை காண்பது அலாதி உற்சாகமாக இருக்குமென்பதால் திரையில் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தரவிறக்கம் செய்ததைக் கிடப்பில் போட்டாயிற்று.
டராண்டின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக Pulp Fiction (1994)பல்ப் பிக்சனையும் ரிசர்வாயர் டாக்ஸையும் சொல்லலாம். சில வலைப்பதிவுகளில் பல்ப் பிக்சனைப் புரிவிக்க நண்பர்கள் கட்டம் கட்டி விளக்கியிருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டேன். ஒரு திரைப்படத்தை பகிரவே இவ்வளவு மெனக்கெடல்கள் தேவைப்படும்போது அதை இயக்கியவன் எந்த அளவு மெனக்கெட்டிருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் பல்ப் பிக்சன் எனக்கு சிரமமான படமாகத் தோன்றவில்லை. அமரோஸ் பெர்ரோஸ், ரன் லோலா ரன், ப்ளைண்ட் சான்ஸ், இர்ரிவர்சிபிள், சங்கிங் எக்ஸ்பிரஸ் போன்ற வித்தியாசமான கதை சொல்லலைக் களமாகக் கொண்ட படங்களை ஒப்பிடும்போது பல்ப் பிக்சன் யுக்தி எளிமையானதே.

நான் லீனியர் கதை சொல்லல் என்பது திரையை விட புத்தகத்தில் எளிதாக இருக்கலாம். பல்ப் பிக்சன் திரைக்கதையை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஒரு புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் பல்ப் பிக்சன் படம். இதில் கவனிக்க வேண்டிய ஒரே விதயம் என்னவெனில் இந்த புத்தகத்தை எங்கிருந்து படித்தாலும் அது வாசிப்பின்பத்தை தர வேண்டும் மற்றபடி ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொரு அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையில்லை. முதல்,இரண்டு,மூன்று,கடைசி அத்தியாயங்கள் எனச் சொல்வது கூட ஒரு புரிதலுக்காகத்தானே தவிர முதல் கடைசி என்கிற அடிப்படைகள் எதுவும் இல்லா வடிவமாகத்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(க்ளைமாக்சில் உயிரோடு இருக்கும் ஜான் ட்ரவோல்டாவை ப்ரூஸ் வில்லிஸ் இரண்டாவது அத்தியாயத்திலேயே கொன்று விடுவார்) இந்த நான் லீனியர் வடிவம் பின் நவீனக் கூறுகளில் ஒன்றாக அணுகப்படுகிறது. பன்முகத் தன்மை, வாசிப்பின்பம் போன்றவைகளையும் இத் திரைப்படம் உள்ளடக்கியிருப்பதால் பல்ப் பிக்சனை சிறந்த பின்நவீனத்துவ படங்களில் ஒன்றாக தைரியமாய் சேர்த்துவிடலாம்.

கசாமுசா திரைக்கதையை மெருகூட்ட ப்ரூஸ் வில்லிஸ்,சாமுவேல் ஜாக்சன், ஜான் ட்ரவால்டோ போன்ற தேர்ந்த நடிகர்கள், பாலியல் வார்த்தைகளை மட்டுமே கொண்டு நிரப்பிய சுவாரஸ்ய உரையாடல்கள், அவ்வப்போது வெடிக்கும் திடீர் துப்பாக்கிகள் , உடலிலிருந்து பீறிட்டடிக்கும் குருதித் தெறிப்புகளென காட்சியின்பத்தின் உச்சமாக ஒவ்வொரு காட்சியுமிருக்கும். இந்தப் படத்தினை உரையாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சில உரையாடல் தொகுப்புகள் கீழே..
Jules: What does Marcellus Wallace look like?
Brett: What?
Jules: What country you from?
Brett: What?
Jules: What ain't no country I ever heard of! They speak English in What?
Brett: What?
Jules: ENGLISH, MOTHERFUCKER! DO-YOU-SPEAK-IT?
Brett: Yes!
Jules: Then you know what I'm saying!
Brett: Yes!
Jules: Describe what Marcellus Wallace looks like!
Brett: What, I-?
Jules: [pointing his gun] Say what again. SAY WHAT AGAIN. I dare you, I double dare you, motherfucker. Say what one more goddamn time.
Brett: He's b-b-black...
Jules: Go on.
Brett: He's bald...
Jules: Does he look like a bitch?
Brett: What?
[Jules shoots Brett in shoulder]
Jules: DOES HE LOOK LIKE A BITCH?
Brett: No!
Jules: Then why you try to fuck him like a bitch, Brett?
Brett: I didn't.
Jules: Yes you did. Yes you did, Brett. You tried to fuck him. And Marcellus Wallace don't like to be fucked by anybody, except Mrs. Wallace.
இன்னொரு அட்டகாசமான காட்சி
Fabienne: Whose motorcycle is this?
Butch: It's a chopper, baby.
Fabienne: Whose chopper is this?
Butch: It's Zed's.
Fabienne: Who's Zed?
Butch: Zed's dead, baby. Zed's dead.
மொத்த உரையாடல்களையும் படிக்க இங்கே
போதை மருந்து கடத்தல், ஆட்களைக் கடத்துதல், கொலை, கொள்ளை, கொண்டாட்டம் , பழிவாங்கல் போன்றவைகள்தாம் டராண்டினோ இயங்கும் தளமாக இருக்கிறது. நல்ல/ஹீரோயிச மாதிரிகளை எல்லாம் இவர் திரையில் கொண்டுவர மெனக்கெடுவதில்லை. கெடுதலை கெடுதலாகவே நம் முன் கொண்டுவருவதுதான் இவரது தனிச்சிறப்பாக இருக்கிறது.

ரிசர்வாயர் டாக்ஸ் Reservoir Dogs (1992)சாதாரண கதையொன்றை மிகப் புத்திசாலித்தனமான திரைக்கதையாக எப்படி மாற்றுவது என்பதற்கான சரியான உதாரணம். வழமையான ஒரு கொள்ளைக் கூட்ட பாஸ், கை தேர்ந்த ஆறு திருடர்கள், ஒரு கொள்ளைத் திட்டம், பின்பு அத்திட்டத்தின் சொதப்பல். இவ்வளவுதான் இத்திரைப்படம். ஆனால் பார்வையாளன் காட்சியமைப்பில் திகைத்துப் போகிறான். திரைப்படங்களில் ஊறிய பார்வையாளனும் மேலோட்டமான பார்வையாளனும் தத்தம் பார்வைகளில் திருப்தியடைகிறார்கள். இந்த யுக்தி டராண்டினோவிற்கு எளிதாக வருகிறது. மிஸ்டர் வொயிட்/ப்ளூ/ப்ரவுன்/பிங்க்/ஆரன்ஞ்/ப்ளாண்ட் எனப் பெயரிட்டுக் கொண்ட ஆறு திருடர்கள் வைரத்தைக் கொள்ளையடித்துவிட்டு திட்டமிட்ட இடத்தில் சந்திக்கும் திட்டம் போலிஸின் இடையூறால் சொதப்பலாகிறது. ஒருவர் சுடப்பட்டு இறந்து போகிறார்.இன்னொருவர் மோசமாக காயமடைகிறார். இதில் ஒருவர் போலிஸ் இன்பார்மர் அவர் யார் என்கிற சந்தேகத்தினுக்கு அனைவரும் பலியாகின்றனர்.
போலிஸ் திருடனையும், திருடன் போலிஸையும் ஒருவரையொருவர் மிகக் குரூரமாகத் தாக்கிக் கொள்ள பிரதானமாய் புறக் காரணங்கள் எதுவுமே தேவையில்லை.அவன் திருடனாக/போலிஸாக இருப்பதே போதுமானது. இத்திரைப்படத்தில் சிக்கிக் கொண்ட போலிஸ் ஒருவனைத் துன்புறுத்தும் காட்சிகள் உளவியல் ரீதியிலாக சமூக அடையாளத்தின் சிக்கலைப் பேசுகிறது. சக மனிதன் என்ற பொதுவையெல்லாம் அடையாளங்களுக்காக தூக்கி எறிந்து விட்ட வன்முறையை குரூரமாய் நம் முன் வைக்கிறார் டராண்டினோ.தான் இயக்கும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் டராண்டினோ இதில் மிஸ்டர் ப்ரவுன் ஆக வந்து சுடப்பட்டு இறந்து போவார்.மிஸ்டர் பிங்க் ஆக நடித்திருக்கும் Steve Buscemi மிக அட்டகாசமான நடிகர்.fargo வில் இவரது முக பாவணைகளை பார்த்து பெரிதும் சிலாகித்துக் கொண்டிருந்தேன்.
இவரது மற்றத் திரைப்படங்களான கில் பில் 1 & 2 சின்சிட்டி போன்றவைகளின் அடிநாதமும் வன்முறையும் பழிவாங்கலும்தான். தனது மாஸ்டர் பீஸ் இன்குளோரியஸ்தான் எனச் சொல்லிக் கொள்ளும் டராண்டினோ அந்தப் படத்தின் மீதான என் ஆர்வத்தினை இன்னும் அதிகரித்திருக்கிறார். பல்ப் பிக்சன் தந்த கிளர்ச்சியை இன்குளோரியஸ் தருகிறதா? என்பதைப் பார்த்துவிட்டுப் பகிர்கிறேன்.