
The bow திரைப்படத்தின் களமும் மிகப் பரந்த நீர்வெளியாக இருக்கிறது. இதில் இசை இன்னொரு முக்கிய அங்கம். மயக்கம் தரக்கூடிய ஒரு இசை படம் முழுவதும் கசிந்து வேறொரு மனநிலைக்கு பார்வையாளனை நகர்த்துகிறது. நீரின் மீது ஊஞ்சலாடும் பெண், அவளின் களங்கமில்லா இளமை என திரைப்படம் நம்மை நிலத்திலிருந்து நீரினுக்கு அழைத்துப் போகிறது. இத்திரைப்படத்தில் கடைசிக் காட்சியை பார்வையாளன் தத்தம் கற்பனைக்கு ஏற்ப புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சிறு வயதிலிருந்து ஒரு பெண்ணை வளர்த்து அவளின் பதினேழாவது வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் அறுபது வயது ஆண், சிறு இடைஞ்சலுக்குப் பிறகு அவளைப் பாரம்பரிய முறையோடு தனிப்படகில் திருமணம் செய்து கொள்கிறார். சம்பிரதாய உணவு முடிந்ததும் நீரில் பாய்கிறார்.பின்பு அரூப வடிவில் அவளுடன் கலவி காணாமல் போகிறார். கால்களுக்கிடையில் இரத்தம் இழந்து மீளும் அப்பெண்ணை அவளின் காதலன் எதிர்கொள்வதோடு படம் முடிகிறது. இந்த அறுபது வயது நாயகன் உருவமற்ற தன்மையை அடையவே ஒரு பெண்ணை பதினேழு வயது வரை வளர்த்து மணந்து கொள்கிறான். பின் உருவமற்ற வடிவம் கொண்டு அவளைப் புணர்ந்து பிரபஞ்சத்தோடு கலப்பதாக நான் புரிந்து கொண்டேன். தேவதைக் கதைகளில் வரும் புனைவுச் சாத்தியமாகத்தான் இத்திரைப்படத்தை நான் புரிந்து கொண்டேன்.
The coast guard கரையோரக் காவல்படை வீரன் ஒருவன் வாழ்வில் நிகழும் சம்பவங்களை யதார்த்தமாகவும் லேசான புதிர்தன்மையினோடும் பதிவு செய்திருக்கிறது. காவல் அதிகாரிகள் தங்களைக் காத்துக் கொள்ள அப்பாவிகளின் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மிக குரூரத்தோடு முன் வைக்கிறது. கண்ணெதிரில் காதலன் உடல் சிதறிப் போனதைக் கண்டு மனம் பிறழும் நாயகி, அவசரப்பட்டுக் கொன்று விட்டோமே என மன உளைச்சலுக்கு உள்ளாகும் காவல் வீரன்,மனம் பிறழ்ந்த பெண்ணை பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள் என பல்வேறு பாத்திரங்கள் முன் வைப்பது சக மனிதன் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மட்டுமே.

Breath திரைப்படம் அடிக்கடி தற்கொலைக்கு முயலும் சிறைக் கைதி ஒருவனைப் பற்றிப் பேசுகிறது. அவனை வந்து சந்திக்கும் ஒரு பெண் (yeon), அவனை மகிழ்விக்க அவள் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே இதற்காக இது என்கிற காரணங்கள் இல்லாமலே நிகழ்கின்றன. பின்பு அப்பெண் தனக்கு துரோகமிழைக்கும் கணவனைப் பழிவாங்கும் பொருட்டே இவனைச் சந்திக்கிறாளென சொல்லப்படுகிறது. கிம் கி டுக் கின் மிக வித்தியாசமான படமாக இதைச் சொல்லலாம். சந்தேகம்,துரோகம்,ஈகோ என உலகின் எல்லா பாகத்து கணவன் மனைவி உறவுகளுக்கிருக்கும் பிரச்சினைகளையும் இப்படம் தொட்டிருக்கிறது.ஒரே விநோதம் அல்லது புதிர்தன்மை சிறைக் கைதியை மிக மகிழ்வாக வைத்திருக்கும் அப்பெண்ணின் நடவடிக்கைகள்தாம்.அவனை தன் பழைய காதலனாக நினைத்துக் கொள்வதும், அவன் வாழும் அச்சிறை சூழலுக்கு வசந்தகால, பனிக்கால உள்கட்ட அமைப்புகளை செய்து கொடுப்பதுமாய் அவளது நாட்கள் நகர்கின்றன. அவனும் மெல்ல அப்பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். மேலும் அக் கைதியின் உடனிருக்கும் சக சிறைவாசி ஒருவனுக்கு இவனின் காதல் பிடிக்காமல் போகிறது. சிறைக் காட்சிகளில் இவரது வழக்கமான குரூரம் தெறிக்கிறது.
இதுவரை நான் பார்த்திருந்த இவரது படங்களில் சிறைக் காட்சிகள் பொது அம்சமாக இருக்கின்றன. இவரின் பெரும்பாலான பிரதான பாத்திரங்கள் சிறையிலிருக்கிறார்கள். அல்லது சிறையிலிருந்து தப்பித்தவர்களாக இருக்கின்றனர். சிறை கிம்கிடுக்கை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கலாம். எட்டுத் திரைப்படங்களுக்குப் பிறகு கிம் கி டுக் எனக்கு அலுத்துப் போனார். அவரின் மிகச் சிறந்த படம் என எவராவது பரிந்துரைத்தால் மீதிப் படங்களைப் பார்த்துக் கொள்ளலாம் அதுவரை குட் பை கிம் கி டுக் என இரான் சினிமா பக்கம் ஒதுங்கியாயிற்று.

இரானிய திரைப்படங்கள் எளிமையானவை, மிகுந்த உணர்வுப் பூர்வமானவை. பார்வையாளனை மிகச் சுலபமாய் நெகிழ்வுத் தன்மைக்குத் தள்ளிவிடுபவை. மஜித் மஜிதி, அப்பாஸ் கிராஸ்தமி, மக்பல்ஃப் , ஜாபர் போன்றோர் தொடர்ச்சியாய் தமது சிறப்பான பங்களிப்பை இரானிய சினிமாக்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். Dariush_Mehrjui, யின் இயக்கத்தில் 1969 இல் வெளிவந்த The cow என்கிற கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இரானிய சினிமாவில் மிக முக்கியமானது. ஒரு பசுவின் மீது மனிதனுக்கிருக்கும் காதலை, பெருமையை, அப்பசுவே தன்னுடைய உலகமாக நினைத்து வாழும் எளிமையான கிராமத்து மனிதனின் வாழ்வை, இப்படம் பேசுகிறது. கிராமத்து மனிதர்களிடமிருக்கும் , ஒற்றுமை, அன்பு, அறியாமை, உதவும் குணம், கோபம் என எல்லா உணர்வுகளையும் இத் திரைப்படம் துல்லியமாய் பார்வையாளனிடத்தில் சேர்க்கிறது. இத் திரைப்படம் வந்த காலகட்டம் மிகவும் வியப்பிற்குறியதாய் இருந்தது. கறுப்பு வெள்ளையில் இத்தனை துல்லியமாய், ஒரு உணர்வு ரீதியிலான படத்தை எப்படி உருவாக்க முடிந்தது என வியந்து கொண்டிருந்தேன். இது தவிர்த்து அப்பாஸின் taste of cherry யையும் the white balloon ஐயும் பார்க்க முடிந்தது.
ஈரான் ஈராக் கூட்டுத் தயாரிப்பில் வந்த Turtles can fly படத்தையும் சென்ற வார மதியத்தில் பார்த்தேன். ஈழநாதன் ஒருமுறை பின்னூட்டமொன்றில் இத்திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்டது நினைவில் வந்தது. அமரிக்க ஈராக் போர்தான் இத்திரைப்படத்தின் களம். போரில் அலைக்கழிக்கப்படும் சிறுவர்கள் / பதின்மர்களின் உலகத்தில் நிகழும் குரூரங்களை பதிவு செய்திருக்கும் படமிது. ஒரு சிறுமியின் தற்கொலையிலிருந்து துவங்கும் இப்படத்தைப் பார்த்து முடித்த பின்பு மிகுந்த அலைக்கழிப்பிற்குள்ளானேன். நிம்மதியின்மையும் கசப்புணர்வும் அந்த மாலையில் துவங்கி இரவு முழுவதும் தங்கியிருந்தது. இவளது மொழியில் சொல்லப் போனால் அன்று குடிப்பதற்கு அத்திரைப்படம் ஒரு காரணமாய் இருந்தது. ஆனால் இத்திரைபடம் ஒரு பக்க சார்பானது என்பதாய் விமர்கர்களால் விமர்சிக்கப் படுகிறது. சதாமின் வீழ்ச்சியைக் கொண்டாடுவதாகவும் அமெரிக்க அழித்தொழிப்பை ஆதரிப்பதாகவும் இருக்கிறது என்பதான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இத்திரைப்படம் பார்த்து முடித்ததும் புஷ்ஷின் முகத்தில் காறி உமிழத்தான் எனக்குத் தோன்றியது.
ஸ்டேன்லி குப்ரிக்கின் மொத்த படங்களில் Lolita மட்டும் பார்க்காமல் இருந்தது. விளாடிமிர் நபக்கோவ் எழுதி மிகவும் புகழ்பெற்ற லோலிட்டா நாவலை குப்ரிக் 1962 ல் திரைப்படமாக்கி இருப்பார். நாவலை ஏற்கனவே படித்திருந்ததால் திரையில் என்னால் ஏமாறவே முடிந்தது. நாவலாய் படிக்கும் போது இருந்த கிளர்ச்சியும், காமமும் படத்தில் முழுமையாய் என்னால் உணரமுடியவில்லை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் இயல்பாய் இருக்கும் அதீதத்தை இதில் பார்க்கமுடியவில்லை. படு யோக்கியமாய் படமாக்கி இருந்த குப்ரிக்கின் மீது லேசான கோபமும் எழுந்தது.ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த மாற்றுப் படமாக இருந்திருக்கலாம்.

சென்ற வார வெள்ளிக்கிழமைக் காலையை அமரோஸ் பெர்ரோஸ் படம் அழகாக்கியது. தூங்கி எழுந்தவுடன் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன் இரண்டரை மணி நேரங்கள் ஓடும் இத்திரைப்படம் இன்னும் சிறிது நேரம் நீடிக்காதா என்ற ஏக்கத்தை வரவழைத்துவிட்டுப் போனது. மணியின் ஆயுத எழுத்து படத்திற்கான ’இன்ஸ்பிரேசன்’ இத்திரைப்படம்தான். கோலிவுட்காரர்களின் ’இன்ஸ்பிரேசன்’ ஸ்பானிஷ் மொழி வரை விரவியிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிதான். பாபேல்,21 கிராம்ஸ் படங்களை இயக்கிய Alejandro González Iñárritu வின் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படமிது. மோட்டர் சைக்கிள் டைரீஸ் படத்தில் இளமைக் கால சேகுராவாக நடித்திருந்த Gael García Bernal இதில் ஆக்டோவியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை விட el chivo கதாபாத்திரமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாலை விபத்திலிருந்து மூன்று கதைகளாக விரியும் இத் திரைப்பட யுக்தி வெகுவான எடிட்டிங் உழைப்பைக் கொண்டிருக்கிறது. நாய்ச் சண்டை காட்சிகளை படமாக்கி இருந்த விதமும் அழுக்கு மண்டிய ஒரு பொந்தில் பல நாய்களோடு வசிக்கும் el chivo கதாபாத்திரம் தந்த உணர்வும் புதுவிதமானது.இத் திரைப்படத்தைப் பற்றி விரிவாக பகிரும் எண்ணமிருப்பதால் இக்குறிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.
ஆந்த்ரே தர்க்கோயெவ்ஸ்கியின் ஸ்டாக்கர், பாசோலினியின் அராபியன் நைட்ஸ், கீஸ்லோவெஸ்கியின் The Decalogue வரிசைகளில் கடைசி மூன்றையும் பார்த்து முடிக்க முடிந்தது அவை குறித்துப் பின்பு.