"If I'm killed, let that bullet destroy every closet door." - Harvey Milk
நிறம்,மொழி,சாதி,ஆரோக்கிய உடல் போன்ற வெளிப்புற சிறப்புத் தோற்றங்கள் மட்டுமே மனிதனை மனிதனாய் வாழ அனுமதிக்கின்றன. பெரும்பான்மைகளிலிருந்து ஏதோ ஒரு புள்ளியில் விலகும் சக மனிதர்களை விளிம்பிற்குத் துரத்தியடிப்பதே இப்பெரும்பான்மைக் கூடாரத்தின் உலகப் பொதுச் சமத்துவமாக இருந்து வருகிறது.சக மனிதனின் மேல் வன்முறையைத் திணிப்பதில் உலகின் எப்பாகத்தவரும் சளைத்தவர்கள் இல்லை.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாய் ஓரினச் சேர்க்கையாளர் ஹார்வி மில்க் 1977 ஆம் வருடம் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் “முதல் ஓரினச் சேர்க்கையாள” நகர மேற்பார்வையாளராக பொதுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்திய ஒபாமாவின் வெற்றிக்கு எந்த விதத்திலும் குறைந்திடாத வெற்றி அது.வெள்ளை மாளிகையில் முதல் கருப்பர் என்பதுபோல் சமூகத்தால் துரத்தியடிக்கப்படுபவர்களின் ஒட்டு மொத்த வெற்றியாக ஓரினச் சேர்க்கையாளர் மில்க்கின் வெற்றி கருதப் பட்டது.
தனி மனித சுதந்திரத்தைக் கொண்டாடுவதாய் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருக்கும் அமெரிக்காவில்தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் துன்புறுத்தப் பட்டார்கள். அவர்களுக்கான எந்த உரிமையையும் அரசும் அதிகாரிகளும் வழங்கியிருக்கவில்லை.மத வாதிகள் புனிதர்கள் என எல்லா தரப்பினராலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.எழுபதுகளின் ஆரம்பத்தில் ’சான் பிரான்சிஸ்கோ’ வரும் மில்க் அங்கு மக்கள் தொகையில் இருபது சதவிகிதத்தினருக்கு மேலிருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஒன்று திரட்டுகிறார்.
தன் பால் உணர்வு குறித்தான குற்ற உணர்வு கொண்டு இருண்ட அறைகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியில் வர உதவுகிறார்.கூட்டங்கள், பேரணிகளென சக நண்பர்களை குழுவாய்த் திரட்டி சமுகத்தில் தங்களின் அங்கீகாரத்திற்காக தொடர்ச்சியாய் போராடுகிறார். ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த வெகு சன மிகை வெறுப்புகளை,ஓரினச் சேர்க்கையாளர்கள் பிடோபில்கள் என்பது போன்ற தவறான புரிதல்களை அவர்களிடையே இருந்து நீக்க பெரிதும் மெனக்கெடுகிறார்.மெல்ல மக்களின் ஆதரவைத் திரட்டி நகர மேற்பார்வையாளர் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்.
விளிம்புகளின் வெற்றிகளுக்கு அதிகார வர்க்கங்கள் பரிசளிக்கும் மரணத்தை ஏற்று தனது நாற்பத்தி ஒன்பதாவது வயதில் மடிந்து போகிறார்.அவர் பதவியேற்று ஓராண்டு கழிந்து சக மேற்பார்வையாளன் ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு அலுவலகத்திலேயே இறந்து போகிறார் மில்க்.
இந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே Milk என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் Gus Van Sant.ஹார்வி மில்க் கதாபாத்திரத்தில் ஷான் பென் நடித்திருக்கிறார். ஷான்பென் திரை வாழ்வில் இது மறக்க முடியாத கதாபாத்திரமாய் இருந்திருக்க கூடும்.இந்த வருட ஆஸ்கரை இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிப்பினுக்காகத் தனதாக்கிக் கொண்டிருக்கும் ஷான் பென் இதில் ஹார்வி மில்க் ஆக வாழ்ந்திருக்கிறார்.ஓரினச் சேர்க்கையாளனின் உடல் மொழி, குரல், லாவகம், குழைவு,என எல்லா வெளிப்பாட்டிலும் மிகக் கச்சிதமான நடிப்பை சாத்தியப்படுத்தி இருக்கிறார். In to the wild திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்ட ஷான் பென் தன்னுடைய திரை வாழ்வின் உச்சத்தை இக்கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் எட்டியிருக்கிறார்.
இயக்குனர் Gus Van Sant இதுவரை இயக்கிய எல்லா படங்களும் உண்மைச் சம்பவங்களை அடி நாதமாக கொண்டவைகள்தாம்.உண்மையும் புனைவும் ஒரே திசையில் பயணிக்கும் லாவகமான திரைப்படங்களாகவே இவரது முந்தைய திரைப்படங்கள் இருக்கின்றன.ராபின் வில்லியம்ஸ் நடித்திருந்த Good Will Hunting திரைப்படம் எனக்குப் பிடித்த சிறந்த ஆங்கில க்ளாசிக்குகளில் ஒன்று.இவரது death trilogy (Gerry, Elephant and Last Days) பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
எந்தக் காட்சியிலும் கதாபாத்திரங்களை தனித்துக் காட்டாததே இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது.காதல் காட்சிகள் முத்தக் காட்சிகளென பெரும்பான்மைப் படங்களையும் இத்திரைப்படத்தையும் எவ்வகையிலும் வித்தியாசப்படுத்தாது மிகுந்த மகிழ்வை உண்டாக்கியது.
மக்களிடையே இருந்த ஓரினச் சேர்க்கை குறித்த தவறான பிம்பத்தைக் களைய தன் உயிரைக் கொடுத்துப் போராடிய ஹார்வி மில்க்கின் வாழ்வை திரைப்படமாக்கியதன் மூலம் பார்வையாளனிடமும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.மிக அதிக உழைப்பும் ஈடுபாடும் கலைத் திறமையும் இது போன்ற ஒரு மாற்றக் கடத்திகளுக்கு அத்தியாவசியமானவை.அதை இத் திரைப்படம் மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.
வலைச்சூழலில் லிவிங் ஸ்மைல் வித்யா வின் பதிவுகளும் பகிர்வுகளும் வலைப்பதிவர்களிடைய இருந்த திருநங்கை பிம்பம் குறித்தான சரியான புரிதல்களை ஏற்படுத்தியதையும் இத் திரைப்படத்தினோடு தொடர்பு படுத்தலாம்.மேலும் வித்யாவின் வாழ்வை மிகச் சரியாக திரைப்படமாக்கினாலும் நம் பொதுச் சூழலில் சிறிது மாற்றங்கள் ஏற்படும் என நம்பலாம்.
*கருப்பு வெள்ளைப் படத்திலிருப்பதுதான் ஹார்வி மில்க்
28 comments:
முதலில் மில்க் என்பவரைப் பற்றிக் கூறிவிட்டு, பிறகு அதன் விமர்சனம் செய்த விதம், நீங்கள் எழுத எடுக்கும் விடயத்தின் மேலுள்ள ஆளுமையைக் காட்டுகிறது.
சுருங்கச் சொன்னால், "இது விமர்சனம்"
அருமை.
தம்பி ஹாலிவுட் பாலாவின் பதிவையும் பார்க்கவும்.
வாழ்த்துகள்.
சூர்யா
நல்லதொரு பகிர்வு.
நல்ல பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
நண்பர் அய்யனார்
ரொம்ப அருமையான விமர்சனம்
நான் இந்த படம் பார்த்துவிட்டு இதற்க்கு எப்படிடா ?விமர்சனம் எழுதுவது?
யாராவது எதாவது நினைப்பார்களே என்று இருந்தேன்.
இந்த படம் நீதி மறுக்கப்பட்டோருக்கான ஒரு விடிவெள்ளி.
யாரும் நடிக்க தயங்கிய வேடத்தில் தோன்றி ஆஸ்கரும் வென்ற sean penn ஒரு அற்புத பேச்சாளரும் கூட என்பதை ஆஸ்கர் விழாவில் எல்லோருக்கும் உணர்த்தினார்.
நல்ல விமர்சனம்.
இனி நான் தைரியமாக என் விமர்சனத்தை வெளியிடலாம்.ஒட்டு போட்டாச்சு
ரைட்டு..;)
தங்கள் விமர்சனம் பற்றி விமர்சிக்க தெரியாது ...
[[வலைச்சூழலில் லிவிங் ஸ்மைல் வித்யா வின் பதிவுகளும் பகிர்வுகளும் வலைப்பதிவர்களிடைய இருந்த திருநங்கை பிம்பம் குறித்தான சரியான புரிதல்களை ஏற்படுத்திய]]
இது உண்மை.
நல்ல பகிர்வு. இருந்தாலும் கஸ் வான் சாண்ட் ஒன்றும் அவ்வளவு நல்ல இயக்குநர் அல்ல. ‘Psycho'வை ரீமேக் செய்து எல்லோரிடமும் வாங்கி கட்டி கொண்டார். அவரின் இரு சிறந்த படங்கள் ‘Good Will Hunting' மற்றும் ‘Finding Forrester'. இருந்தும் அவரின் இந்த இரண்டு திரைப்படங்களும் புளித்து போன ரொமாண்டிஸிசத்தையே முன்னிறுத்தும். இதனால் நல்ல கருவாக இருப்பினும் இவர் இயக்கினால் படம் ஜவ்வோ ஜவ்வு.
எனது வலைதளத்திற்கும் வருகை தாருங்கள்:
http://oliyudayon.blogspot.com
அருமையான பதிவு...!! " மில்க் " ஒரு மென்மையான திரைப் படம் . ஓரின சேர்க்கை என்ற ஒரு கரு படமாக இருந்தாலும்... அவர்கள் அகிம்சா வழியில் சென்று ஆட்சியை கைப்பற்றுவது அழகு...!! படம் முழுவதுமே மென்மை.....!! மில்க் கேரக்டர் மிகவும் அபார நடிப்பு.....!! கடைசியில் அவர் கொல்லப்படும்போதுதான் .... " வெற்றி களிப்பில் ஒரு வீர மரணமோ ...." என்று தோன்றுகிறது...!!
அழகான திரைகாவியத்திர்க்கு ஒரு அழகு விமர்சனம்....!! நன்றி.....
சீன் பென்னுக்காக பார்த்த படம்!
அருமை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கமுடியாத படம்...
ஆமா.. ஏன் பாஸ் அவரை சுட்டாங்க?
கேசட் ரெக்கமண்ட் பண்ணிங்களா!?
வந்துருக்கு!
பார்க்கலாம்
சரியான விமர்சனம் அய்யனார். கட்டாயம் இத்திரைப்படத்தை பார்க்கவேண்டும்.
நன்றி செந்தில்,
வண்ணத்துபூச்சியார்,ஹாலிவுட் பாலாவைப் படிப்பதுண்டு
நன்றி யாத்ரா
நன்றி தமிழன்
கார்த்திக்
உங்கள் கருத்துக்களை எழுத எப்போதும் தயங்க வேண்டாம்.
நன்றி..
கோபி,ஜமால் : நன்றி
பிரசன்னா
Gus Van Sant மிக மெதுவான கதை சொல்லிதான்.ஆனால் எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது.இது தவிர்த்து good will Hunting மட்டுமே பார்த்திருப்பதால் மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு சொல்கிறேன்..
லவ்டேல்
மிகவும் நன்றி
கலையரசன்,
நல்லவன்னு ஒருத்தன் இருந்தா கெட்டவன்னும் ஒருத்தன் இருப்பான் இல்ல :)
பாத்துட்டு சொல்லுங்க வால்
உமா நன்றி..
பகிர்வுக்கு நன்றி.
//வித்யாவின் வாழ்வை மிகச் சரியாக திரைப்படமாக்கினாலும் நம் பொதுச் சூழலில் சிறிது மாற்றங்கள் ஏற்படும் என நம்பலாம்.
//
வெகு சமீபத்தில் தான் "நான் வித்யா" வை படித்து முடித்தேன்.படித்து முடித்த மறுகணம் எனக்கும் இதே தான் தோன்றியது.
பதிவு அருமை, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.
விரைவில் பார்க்கிறேன்.
குப்பன்_யாஹூ
பகிர்வுக்கு நன்றி அய்யனார்...நேற்று காழ்ச்சா பார்த்தேன்...
பகிர்வுக்கு நன்றி அய்யனார்...நேற்று காழ்ச்சா பார்த்தேன்...
//குப்பன்_யாஹூ said...
பதிவு அருமை, உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.
விரைவில் பார்க்கிறேன்.
குப்பனை நானும் வழிமொழிகிறேன்.
ஒரு வேளை மிஸ் செய்திருப்பேன் அய்யனார். நல்ல வேளை.
விமர்சனத்தைப் பத்தி நான் வேற தனியா ஏதாவது சொல்லணுமா என்ன?
// கருப்பு வெள்ளைப் படத்திலிருப்பதுதான் ஹார்வி மில்க்.//
சீன் பென் மாதிரியே இருக்காரே.
கேசட் இருக்கு இன்னும் பாக்கலை.
பாக்குறேன்.
விமர்சனம் அருமை
இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சீன் பெனுக்கு தான் பாராட்டுகள் அனைத்தும்.
எக்கச்சக்க படமா பார்த்து தள்ளுறீங்க போல. இனி ஆங்கிலப்படம் பார்க்கும் முன்பு முன்னோட்டம் மாதிரி உங்க கிட்ட கேட்டுட்டு பார்க்கணும் போல இருக்கே!?
சின்ன திருத்தம். அவர் பெயர் சீன் பென் அல்ல, ஷான் பென். உச்சரிப்பில் அப்படி திரிக்கவேண்டும். கூடிய விரைவில் பார்க்க முயல்கிறேன் அய்யனார்'ண்ணே! கஸ் வான் சாண்ட் இயக்கிய படங்கள் பார்த்ததில்லை. பேரிஸ், ஐ லவ் யூ என்ற ஃபிரெஞ்சு படம் பார்த்திருக்கிறேன். சுமார் 20 குறும்படங்களின் தொகுப்பு அது. அதில் இவர் படம் ஒன்றும் இடம்பெற்றிருக்கும். அற்புதமான கலைப்படைப்பு.
நன்றி செல்வநாயகி
நன்றி செய்யது
நன்றி குப்பன் யாகூ
ரெளத்ரன்,துபாய் ராஜா,நந்தா பகிர்வுகளுக்கு நன்றி
ஆமாம் கார்த்திக் உருவமும் சரியாக
பொருந்தியது.
நன்றி ஜெஸிலா
திருத்ததிற்கு நன்றி வெங்கி ஏற்கனவே
பாபாவும் சத்யாவும் நினைவுறுத்தியிருந்தார்கள்
மாற்றிவிடுகிறேன்
இந்த படம் "ஷான் பென்" ஆஸ்கர் வாங்கிய நாள் முதல் கையில் வெகுநாட்களாக இருக்கிறது.. இன்னும் பார்க்கவில்லை.. பார்க்கணும்..
அப்பறம் தல, அவர "ஷான் பென்" என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.. "சீன் பென்" என்று அல்ல.
ஹாலிவுடில் எல்லாருக்கும் பிடித்தமான நபர் ஷான் பென். நல்ல மனிதர் என்பதனால்.
இவர் இயக்கமென்று பார்த்த "into the wild" மிகவும் பிடித்து போயிற்று.
ஒரு வேளை இவர் நடிப்பில் வந்த 21 Grams-ஐ பார்த்திராவிட்டால், பார்த்துவிடவும்.
21 grms இன்னும் பாக்கல சரவணா பார்த்துவிடுகிறேன்
Post a Comment