Friday, July 24, 2009

முகமூடிக்காரர்களும் ஒப்பனைக்காரிகளும்


குற்ற உணர்வே இல்லாது நாட்களை நகர்த்த நான் இப்போது பழகிவிட்டிருக்கிறேன்.வெப்பம் மிகுந்த தனி மாலைகளில் எப்போதாவது என் சார்ந்த துக்கங்கள் பொங்கிப் பெருகும்.”வாழ்தல்” “இருத்தல்” குறித்தான கேள்விகளின் முன் நிகழ் கூசிச் சுருங்கும்.எதன் நிமித்தமான அலைவுகள் இவை?யாருக்காக இந்த வேடங்கள்?என குமைந்து போவேன். ஒரு முகமூடிக் கலைஞனின் சாமர்த்தியத்திற்கு எவ்விதத்திலும் குறைந்து விடாது கடந்து போகும் இந்நாட்கள்தாம் எத்தனை போலித்தனமானவை!.

சந்தடிகள் நிறைந்த வீதிகளிலிருந்து சப்தங்கள் பெருகிக் கொண்டிருக்கும் முன்னிரவில் எவருக்கும் கேட்டுவிடாதென உறுதி செய்தபடி அடித் தொண்டையிலிருந்து ஆங்காரமாய் என் நிகழின் மீது காறி உமிழ்கிறேன். போலித்தனமான, வெப்பம் மிகுந்த, தேவைகள் பெருத்த, சோம்பேறித்தனமான, ஒரே மாதிரியான, சூம்பிப்போன இந்த நாட்கள் எவ்வித உயிர்ப்புமில்லாமல் இவ்வெளியில் என்னைத் துருத்திக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை இவ்வலிந்து வாழ்தலின் துயரம் என்னை எழுத வைத்திருப்பின், இத்தளத்திற்கு என்னைக் கொண்டு வந்திருப்பின் அவைகளுக்கு என் நன்றிகள்.

ஒப்பனைகள் மிகுந்த லெபனான் தேசத்துப் பெண்ணொருத்தியை தினந்தோறும் பயணங்களில் பார்ப்பதுண்டு.முகத்திலறையும் காலை வெய்யிலில் முகம் முழுக்கச் சிவப்புச் சாயம் பூசி, கண்களை மையில் குளிவித்து, இதழ்களை சாயத்தில் முக்கியெடுத்து,இறுக்கமான உடையணிந்து, பெருகி வரும் வியர்வையினூடாய் பேருந்தினுக்காக காத்திருக்கும் அப்பெண்ணை என் வாகனம் கடக்கும்போது லேசான பரிதாப உணர்வொன்று மேலெழும்.அதே போல் விதம் விதமாய் புகைப்படமெடுத்துக் கொள்ளும் என் தோழிகளின் மீதும் வாஞ்சையொன்று பெருகும்.என் பிரியத்திற்குரிய ஒப்பனைக்காரிகளே!, தோழிகளே! ஏற்கனவே மிகுதியான ஒப்பனைகளால் நம் ஒவ்வொருவர் வாழ்வும் அழுகிக் கொண்டிருக்கும்போது இன்னுமெதற்கு இத்தனைப் பிரயத்தனங்கள்? தன்னை அழகென முன் நிறுத்திக் கொள்பவைகளின் பின்னிருப்பதெல்லாம் தோற்பதின் பயங்களாக மட்டுமே இருக்க முடியுமென்பது என் நம்பிக்கை.மேலும் அழகிற்கு ஒப்பணைகள் எதற்கு?

இந்த வகையில் உரையாடலினி தனித்தவள்.அவளுக்கு அலுவலகம் கிளம்ப பத்து நிமிடங்கள்தான் தேவைப்படும்.அந்த நேரத்தில் கையில் கிடைக்கும் ஆடைகளும் கண்ணாடியில் பதித்து வைக்கப்பட்ட ஒரு கருப்பு நிறப் பொட்டுமே அவளது ஒப்பனை வஸ்துக்கள். கண்ணாடி,லிப்ஸ்டிக்,சீப்பு,காண்டம்,நாப்கின்,இன்ன பிற எந்தக் குப்பைகளையும் அவளது கைப் பையில் காணமுடியாது.மன நிலைக்கு ஏற்றார் போல் வாசிக்கும் வழக்கம் அவளுக்கிருப்பதால் ஒரு தமிழ் புத்தகத்தையும் ஒரு ஆங்கில புத்தகத்தையும் எப்போதும் வைத்திருப்பாள்.

ஆரம்ப கால கரிபு கஃபே நாட்களில் இந்தப் பக்கத்தில் எழுதப்பட்டவைகளை அச்செடுத்து படித்துக் கொண்டிருப்பாள்.தினம் இருபத்தைந்து பக்கங்களென அச்செடுத்ததில் எழுநூறு பக்கங்கள் சேர்ந்து விட்டிருந்தன.ஒரு நாள் “தமிழ் சூழலுக்கு நீ எந்த அளவிற்கு குப்பைகள் சேர்த்தாயென்பது எனக்குத் தெரியாது ஆனால் உன்னால் என் வீடு குப்பையாகி விட்டது” என சிரித்தபடியே சொன்னாள். நல்லவேளையாய் அவள் இரு பேரெழுத்தாளப் பிதாமகர்களுக்கு வாசகியாய் இருக்கவில்லை.அவர்களின் வலைப் பக்கத்தையெல்லாம் அச்செடுத்தால் இந்த நகரத்தை அக்காகிதங்களைக் கொண்டே மூடி விடலாமெனத்தான் தோன்றுகிறது.

பின்பொரு நள்ளிரவில் எதையோ படித்துவிட்டு அவளிடம் கத்திக் கொண்டிருந்தேன்.”இவ் வெழுத்தாளர்கள் தத்தம் மனைவியரை கற்பில் சிறந்த, ஒழுக்கமான, ஆன்மீகமயமான, பக்திப் பழமாக ,உத்தம பத்தினிகளாக சித்தரிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. உலகத்தில் தன் மனைவியரைத் தவிர பிற பெண்களெல்லாம் அலைபவர்கள் எனச் சித்தரிப்பதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”

நல்ல தூக்கத்தில் இருந்த அவள் எழுந்துபோய் தன் மடிக் கனிணியை உயிர்பித்து என் கூகுல் ரீடரில் இருந்த அவர்களின் பக்கங்களை விலக்கிவிட்டுத் தூங்கி விட்டாள்.என்னிடம் என்னைப் பற்றிய எந்த ரகசியத் தகவல்களும் இல்லை என்பதை இந்த இடத்தில் சொல்லத் தேவையில்லைதானே.மறு நாள் விடிந்தும் விடியாததுமாய் என் அறை வந்தவள் என்னை எழுப்பாமல் என் மடிக்கணினியைத் திறந்து நெருப்பு நரியில் அவர்களின் பக்கங்களை தடை செய்துவிட்டுப் போய்விட்டாள்.அந்த நாளிலிருந்து இன்று வரை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்று காலை தொலைபேசினாள்.

“சாருவோட சமீபத்திய அந்தர் பல்டி ஒண்ணு”

“என்னவாம்?”

“மனுஷ்யபுத்திரன் சு.ரா ஸ்கூல சேர்ந்தவர்னு அவருக்கு இப்பதான் தெரியுமாம்”

“அடப் பாவமே”

“அனுப்பி வைக்கவா?”

“ம்ம்ம்”

சாரு ஒரு அப்பாவியா? அல்லது தன்னை உலகமறியாச் சிறுவன் என முன்னிறுத்திக் கொள்ள விழைகிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.அவ்வப்போது அவருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் கலகக்கார பிம்பம் விழிப்படைவது கண்டு மகிழ்வுதான் என்றாலும் பாபாக்கள் சித்து வேலை செய்து அவரை வடிகட்டின பூர்ஷ்வாவாக மாற்றிவிடுவதுதான் மிகப் பெரிய சோகம்.சுஜாதாவை நைசாக நகுலன் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார் சாரு.சம்பந்தப் பட்ட இரு ஆவிகளுக்கும் இவ்விசயம் தெரியாமலிருக்க பாபா உதவுவாராக.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...