Thursday, July 9, 2009

யதார்த்த தமிழ் சினிமா

திரையில் தமிழ்படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டிருந்தது.கடைசியாய் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது தொடர்ச்சியாய் சில தமிழ்படங்கள் பார்த்ததோடு சரி.இங்கு நாடோடிகள் திரைப்படம் வந்திருப்பதாக தெரிந்ததும் வார நாளிலேயே தியேட்டருக்குப் போனேன்.நல்ல திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது எப்போதுமே மகிழ்வானது.

தமிழ்சினிமா ‘நட்பு’ ‘காதல்’ என்கிற புளித்துப் போன அக்கப்போர்களிலிருந்து எப்போது வெளிவரப்போகிறதோ தெரியவில்லை.படத்தின் முதல் முக்கால் மணி நேரம் உட்காரவே முடியவில்லை.குண்டான பெண்ணை குடிக்க வைத்து குத்து போடவிடும் காட்சியில் எழுந்து ஓடிப்போய்விடத் தோன்றிற்று.சசி, பரணி மற்றும் அனன்யா மூவரும் மாய்ந்து மாய்ந்து நடிக்க மெனக் கெட்டிருக்கிறார்கள்.செயற்கையான நடிப்பென்பது எப்போதுமே கொட்டாவியை வரவழைக்குமொரு அபத்தம்.

இடைவேளைக்கு முன்பான பதினைந்து நிமிடம் ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் தூக்கி உட்கார வைக்கிறது.ஒரு பதட்டத்தை விறுவிறுப்பை மிக நேர்த்தியாய் பதிவுசெய்திருக்கிறார்கள்.இந்தப் பதினைந்து நிமிடம்தான் மொத்தப் படத்தின் ஆறுதலான விசயமாகவும் இருக்கிறது.

’ஹீரோயிசம்’ ‘அட்வைசிசம்’ எனப் பிற்பாதி இன்னும் இம்சையாக இருந்தது. மேலதிகமாய் 4 x 4 காரை குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டுவது, காதைப் பிளக்கும் இசையை பின்னனியில் சேர்த்துவிடுவது போன்றவற்றின் மூலமாகவே விறுவிறுப்பை கொண்டுவந்துவிட முடியும் என நம்பியிருப்பது பரிதாபத்தையே வரவழைக்கிறது.சிம்பு,விஜய்,அஜித் படங்களில் தலைவிரித்தாடும் ஹீரோயிச அபத்தங்களுக்கான மாற்றாய் குறைவான அபத்தங்களோடு அதே ஹீரோயிசத்தைத்தான் சசியும் செய்திருக்கிறார்.கல்யாணம் செய்து கொண்டு போகும் அனன்யாவைப் பார்த்துக் கண்கலங்குவது, க்ளைமாக்சில் ‘வாழ்க்கை’ டைலாக் பேசுவதெல்லாம் மினி டி.ராஜேந்தரையே நினைவுபடுத்தியது.படத்தின் ஆறுதலாய் அந்த அல்டாப்பு அரசியல்வாதி குறைவான காட்சிகளில் வந்தாலும் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார். அவரின் பாத்திரத்தையாவது இன்னும் நீட்டிக்கச் செய்திருக்கலாம்.

சித்திரம் பேசுதடிக்கு பின்பு அஞ்சாதே தந்த மிஷ்கினைப் போல சுப்பிரமணியபுரத்திற்கு பின்பு நாடோடிகளை தர மெனக்கெட்டு வீணாகி / வீணடித்திருக்கிறார்கள் சசி& கோ.மிஷ்கினின் திரைக்கதையில் லேசாய் ஒரு பய உணர்வு எல்லா காட்சிகளிலும் தங்கியிருக்கும்.அந்த ஈர்ப்பை அந்த பயத்தை பார்வையாளனிடம் தக்க வைத்திருப்பதே தேர்ந்த திரைக்கதாசிரியனின் வெற்றியாய் இருக்க முடியும்.

மாயாண்டி குடும்பத்தாரை டிவிடியில்தான் பார்க்கமுடிந்தது.Ballentine சகிதமாய் பார்த்ததாலோ என்னமோ நாடோடிகளை விட மா.கு எனக்குப் பிடித்திருந்தது.அண்ணன் தம்பி செண்டிமெண்ட் என்பது இன்னும் அரதப் பழசான கொடுமைதான் ஆனாலும் நிஜ வாழ்வில் நானும் என் அண்ணனும் பாசப் பிணைப்பில் தமிழ் சினிமா அண்ணன் தம்பிகளையெல்லாம் ஓரம்கட்டுவோம் என்பதால் பல காட்சிகளில் நெக்குருகிப் போக முடிந்தது.படத்தின் ஒட்டு மொத்த திருஷ்டிப் பொட்டும் கடைசித் தம்பியான தருண் கோபி.சில காட்சிகளையெல்லாம் பார்க்கவே முடியவில்லை.அவர் மட்டும் கையில் கிடைத்தால் மண்டையில் நறுக் நறுக் கென்று நாலு கொட்டு வைக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.மற்றபடி இந்த படத்தில் எந்த பெண்ணுமே சிவப்பில்லை.திருவிழா,சாவு,காதுகுத்து என அசலான கிராமத்து வாழ்வை மண்வாசத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள்.தருண்கோபி பாத்திரத்தை சற்று செதுக்கியிருந்தாலே நிறைவான படமாய் வந்திருக்கக் கூடும்.கடைசி அரை மணிநேரம் உலக மகா அவஸ்தையாய் இருந்தது

நமது தமிழ்மூளைகள் எல்லா வடிவத்திலும் எல்லா இடங்களிலும் ஒரு கதாநாயகத் தன்மையை வேண்டி நிற்கிறது அல்லது வலுக்கட்டாயமாக அத் தன்மையை நுழைத்து விடுகிறது.பின்பு அந்தக் கதாநாயகத் தன்மை நிகழ்த்தும் சாகசங்களை வியந்து, தன்னுடையதாய் மகிழ்ந்து சுய புணர்ச்சி செய்து கொள்கிறது.இந்த இறுக்கமான கட்டமைப்பிலிருந்து நமது மூளைகள் எப்போது இளகுமெனத் தெரியவில்லை.

சிறுவர்களை சிறுவர்களாகவே நடிக்க வைத்திருக்கிறார்கள் ரீதியிலான விமர்சனங்களை வலைப்பக்கங்களில் படித்திருந்ததால் சற்று எதிர்பார்ப்போடுதான் பசங்க திரைப்படத்தைப் பார்த்தேன்.ஆனால் இதிலும் ஹீரோயிச சிறுவர்களை உருவாக்க நாம் தவறவில்லை.
பசங்க திரைப்படத்தில் பசங்களை விட எனக்கு பெரியவர்களையே பிடித்திருந்தது.ஒரு லேசான காதல் கதையை நயமாய் சொல்லியிருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது. தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட் ஆன யதார்த்த சினிமாவிற்குள் பசங்க படத்தை தாராளமாய் பொருத்தி விடலாம்.இராமநாராயணன்,மணிரத்னம் பாக்கியராஜ் வகையறாக்கள் சிறுவர்களை வைத்து படமெடுப்பதாய் நம்மைத் துன்புறுத்தியதை விட இதில் துன்புறுத்தல்கள் சற்றுக் குறைவுதான். அந்தக் குட்டிப் பயல் ‘எப்பூடி’ எனச் சொல்லும்போது அள்ளிக் கொள்ளத் தோன்றுகிறதா இல்லையா!

சமீபத்திய திரைப்படங்களில் வெண்ணிலா கபடிக் குழு மிகவும் முக்கியமானதொரு பிரச்சினையைத் தொட்டிருந்தது.சக மனிதர்களிடம் புரையோடிப் போயிருக்கும் சாதி அடையாளத்தை மிகச் சரியாய் வெளிப்படுத்தியிருந்த விதம் பாராட்டப்பட வேண்டியது.ஆனால் இறுதிக் காட்சியுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.அதிர்ச்சி மதிப்பீடுகள் மூலமாய் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிடலாம் என நினைத்துவிட்டார்களோ என்னமோ? ஆனால் அதுவே இந்தப் படத்தை நிராகரிக்க இன்னொரு காரணமாகவும் அமைந்து விட்டது.ஆதிக்க சாதியினருக்கு தலித் இளைஞன் சாதிப்பதை ஏற்றுக் கொள்ள மிகப் பெரும் தயக்கங்கள் இருந்துவருகிறது. ஒரு விளிம்பிற்கு மரணத்தின் மூலமாய் வெற்றியை அல்லது வெற்றியின் பரிசாய் மரணத்தை தரும் தாராள மனதே ஆதிக்க மனோபாவங்களுக்கிறது.அதையே இத்திரைப்படம் வலியுறுத்துவதால் என்னால் இதனுடன் ஒத்துப் போக முடியவில்லை.நமக்கேன் வம்பு என ஒதுங்கிப் போயிருந்தால் அவன் சந்தோசமாய் வாழ்ந்திருக்க முடியும் என்கிற தொணியும் இத் திரைப்படத்தில் துருத்திக் கொண்டிருந்தது.மற்றபடி தமிழ் சினிமாவின் யதார்த்த சினிமாக்களில் இத்திரைப்படமும் முக்கியமானதுதான்.

கல்லூரி திரைப்படத்தின் இறுதிக் காட்சி தந்த எரிச்சல் வேறெந்த படமும் தராதது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிக கோரமான துன்பியல் நிகழ்வொன்றை திரைப்படமாக்கும்போது அது நிகழும் களமாக ஆந்திராவைக் காட்டியது எத்தனை கோழைத்தனம்!.இந்த அளவிற்கு கூடவா நமது இயக்குநர்களுக்கு முதுகு நிமிர்வில்லை எனத்தான் வருந்த முடிந்தது.

காதல்,பருத்தி வீரன்,சுப்பிரமணியபுரம் போன்றவை நம் சூழலில் யதார்த்தத்தின் உச்சத்தைத் தொட்ட படங்கள்.தமிழ் சூழலிலும் தரமான படங்களை ஓட வைக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை இத்திரைப்படங்கள் தந்தன.ஆனால் அதற்கு பின்னால் வரும் திரைப்படங்கள் யதார்த்த சினிமா போர்வையில் அபத்தங்களைத்தான் முன் நிறுத்துகின்றன.மேலும் ‘ஓடும் குதிரையில் சவாரி’ என்கிற வியாபார மனமும் நம்மவரிடையே பிரதானமாய் இருப்பதால்
“ஓப்பனிங் பஞ்ச் டைலாக்” “நாலு சண்ட” “நாலு குத்து” “அம்மா தங்கச்சி செண்டிமெண்ட்” என மசாலாக்களை கூட்டாக தயாரித்தவர்கள் அதே மனநிலையோடு “ஒரு கிராமம் (பெரும்பாலும் மதுர)” “லவ்வு “ “பிரண்ட்ஸ்” “தாவணி பிகர்” எனக் கதை பண்ண கிளம்பி இருப்பதும் இன்னொரு வகையிலான அபத்தமே.

உலகமே தலைகீழானாலும் தமிழ் மூளைகளை கிஞ்சித்தும் வளர விடாத பணியை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் சன் டிவி குழுமங்கள் நம் சூழலின் மிகப் பெரிய சாபக்கேடுகள்.அரசியல்,கலை,இலக்கியம்,சினிமா என எல்லா வடிவத்திலும் நம்மை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த வல்லூறுகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?

22 comments:

நட்புடன் ஜமால் said...

பசங்களை விட எனக்கு பெரியவர்களையே பிடித்திருந்தது.ஒரு லேசான காதல் கதையை நயமாய் சொல்லியிருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது. \\



இது தான் எனக்கும் தோன்றியது.

அதிலும் அந்த மொபைல் கலாய்த்தலும் அவர்களின் முகபாவங்களும் அருமை.

ALIF AHAMED said...

:)


எப்பூடி..:)

நித்தி .. said...

cocktail cinema vimarsanam? :) nanraga irukuthu....

கோபிநாத் said...

\\இந்த வல்லூறுகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?
\\
அய்ஸ்

நாம ஏன் இதை ரூம் போட்டு யோசிக்க கூடாது ;)

தமிழன்-கறுப்பி... said...

பசங்க படம் நான் பார்த்ததும்

அந்த எப்புடிக்காகவும்..

அப்புறம் அந்நத காதல் கதை அழகா சொல்லியிருப்பாங்க இயல்பாய் இருந்தது...

அந்த காதல் காட்சிகளையும் வசனங்களையும் ரசித்தேன்..

தமிழன்-கறுப்பி... said...

//காதல்,பருத்தி வீரன்,சுப்பிரமணியபுரம்//

ம்ம்ம்...

மதுரையும் தவணி பிகர்களும் பிடிக்கத்தான் செய்யுது ஆனா நல்ல கதை சொன்னா சரிதான்..

எப்புடி.. :)

அகநாழிகை said...

அய்யனார்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
நாடோடிகள் படம் பற்றிய எனது பதிவை வாசித்தீர்களா ? நேரமிருப்பின் வாசியுங்கள்.

http://aganaazhigai.blogspot.com/2009/07/blog-post_04.html

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

குப்பன்.யாஹூ said...

கலக்கல் அய்யனார். நேர்மையான விமர்சனம்.,

ஒரு காலத்தில் விகடன் விமர்சனம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது, சில ஆண்டுகளுக்கு முன்னால் விகடனின் மதிப்பு குறைந்து விட்டது. உங்களை போன்றோரின் விமர்சனகள் கண்டிப்பாக தேவை. ஆனால் அதற்காக இந்த மாத்ரி படங்களை பார்க்க வேண்டிய சித்ரவதையை நீங்கள் அனுபவிக்க வேண்டுமே.

நான் பொதுவாக சினிமா விமர்சனப் பதிவுகளை தவிர்த்து வந்தேன், உங்களின் விமர்சனம் முழுவதுமாக படிக்க தூண்டியது.

நன்றிகளுடன்

பிச்சைப்பாத்திரம் said...

என்னது! நாடோடிகளை விட 'மாயாண்டி குடும்பத்தார்' சூப்பரா இருக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.

(பதிவுலகின் சமீபத்திய பின்னூட்ட பாணியில் ஒன்று போடலாம் என்று தோன்றியது. அதான்.) :-) நான் இரண்டு படங்களையுமே இன்னும் பார்க்கவில்லை. அதிலும் மாயாண்டி குடும்பத்தரர் எல்லாம் பார்க்கவே தோன்றவில்லை.

நான் எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பதுதான்.

சற்றே சற்று வி்த்தியாசமாக வந்தால் கூட அதை உலக சினிமா என்று நாம் கொண்டாட ஆரம்பித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. இது வரை வந்த தமிழ்ப்படங்களிலேயே மிக முதிர்ச்சியான படம் எது? என்று கறாராக யாராவது என்னைக் கேட்டால் நான் சொல்வது. "அவள் அப்படித்தான்'.

அதைத் தாண்டி நிற்கும் எந்தவொரு - நான் பார்த்தவரையில் - வந்ததாய் தெரியவில்லை.

Venkatesh Kumaravel said...

Chennai 28?
Thamiz M.A?

Anonymous said...

ஐம்பது கல் தொலைவிலே சொந்தமொழி பேசும் மக்கள் இறந்துகொண்டிருந்த போது ஈரானியசினிமாவும் இலத்தீன் அமெரிக்க இலக்கியமும் பேசி இறந்தபின்னால் அறத்தினைப் பேசும் பதிவுலக இலக்கியவாதிகள் பற்றி எவர் எடுப்பார் ஒரு யதார்த்த தமிழ் கினிமா?

இலக்கியமும் திரைப்படமும் கலையும் எமக்கு ஒரு தகுதியைச் சுற்றியிருப்பவர்களிடையே ஏற்படுத்த இல்லை, அய்யனார். கலை கலைக்காகவே என்றால் இலக்கியஈ யதார்த்தத்தை மொய்க்கவிடாமலே விசரர்களும் ஜ்கத்ஜோதி சுண்டல்களும் கடைபோட்டு வடைவிற்றுக் கலைத்துக்கொண்டேயிருக்கலாம். கேட்டு பின்னூடமகுடம் சூட்டக் கேனையர்களுக்கா எண்ணிக்கை குறைவு இங்கே? இலக்கியவாதிகளின் சச்சரவுப்பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதும் மகரந்தத்திலே மொய்க்கும் ஈயின் கால்களிலே சில துகட்கள் ஒட்டிக்கொள்வதும் ஒன்றேதான்.

ஐம்பது அறுபது ஆண்டுகளின் முன்னால், அவுஸ்ரேலியப்பழங்குடிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படத்தை எவ்வித சிறிய சலனமும் ஏற்படுத்தாத படமாக எடுப்பதை, முன்னோர் செய்ய குற்றத்தை வைத்துப் பிழைப்பதை, பெரிதுபடுத்துவதை சுற்றியிருந்து கூடிப்பார்த்து கலைநுகர்கின்றவர்களுக்கு வேண்டுமானால், அதே வரிசையிலே குறைந்தது நான்கு படங்கள் அமெரிக்க இந்தியர்களின் ஒத்த வாழ்க்கைகளிலிருந்து நுகர்ந்து புளகாங்கிதமும் கீதமும் அடையப் பரிந்துரைக்கலாம். ஆனால், இப்படியான நுகவர்கள் ஒரு போராளி இறந்து மடிந்தானா இல்லையா என்பதை அறியமுன்னால், அவன் பெயரிலே விற்பனை செய்வதும் இப்படியான எமக்கும் ஆட்டோவோ அழகிரியோ வருமோ என்ற தேசிய அரசியலைப் பேசமாட்டோம் என்று நிற்பதும் "கலைஞரையா குறைகண்டு பேசினாய்? இருக்குடா உங்களாளுங்களுக்கு ஆப்பு" என்பதும் வெறும் வெறுப்பினையே ஏற்படுத்துகிறது.

அடுத்தவன் துயரை நம்மவர் பெருக்குவது தெரிந்தும் நமக்கேன் வம்பென்றோ அல்லது துயரை வைத்து நாம் பிழைக்கமுடிந்தால் போதுமென்றோ இருந்துவிட்டு, இன்னொருநாட்டின் எனக்கு ரொமாண்டிசமாகத் தெரியும் துயரை சிலாகித்து நுகர்வதுதான் தமிழக கலை, இலக்கிய, திரைப்பட யதார்த்தம்.

இப்பின்னூட்டத்துக்கு மறுமொழி என்னவென்று எனக்குத் தெரியும். அதனாலேயே ஆளைத் தெரிந்தாலும் அநாமதேயப்பின்னூட்டம்.

Sridhar Narayanan said...

//அதே மனநிலையோடு “ஒரு கிராமம் (பெரும்பாலும் மதுர)” “லவ்வு “ “பிரண்ட்ஸ்” “தாவணி பிகர்” எனக் கதை பண்ண கிளம்பி இருப்பதும் இன்னொரு வகையிலான அபத்தமே.//

மிகச் சரியான வாதம். ஆனாலும் இந்தப் படங்களில் ஆங்காங்கே தெறிக்கும் சில கவித்து்வமான காட்சிகளு்க்காக ஒரு புன்னகை நிச்சயம் உண்டு.

Anonymous said...

பசங்க படத்தில மெல்லிய காதல் கதை கதையோட நல்லாவே இருந்துது.
மாயாண்டி குடும்பத்தார்ல , கடைசில ரொம்பக்கொடுமையா இழுவையா இருந்துது பாக்க. கொஞ்சம் விறுவிறுப்பா இருந்திருக்கலாம்.

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

அநாமதேய நண்பருக்கு
உங்களின் பின்னூட்டத்தில் இருக்கும் உண்மை சுடாமல் இல்லை.

அருண். இரா said...

அய்ஸ்!! சிறப்பான விமர்சனம் !!..ஆனால் மாயாண்டி - விமர்சனம் ,எனக்கு உடன் பாடில்லை.."சிறப்பான படங்களும் கவிஞர் வாழ்க்கையும் ஒன்று தான் ..இரண்டுமே அதன் ஆயுள் முடிந்த பின் தான் சிறப்புறுகின்றன." அன்பே சிவம் ஒரு எடுத்துகாட்டு!

Ayyanar Viswanath said...

நன்றி மழைக்காதலரே..
உன் பின்னூட்டத் தமிழைப் பார்த்தால்அடுத்த இலக்கியவியாதி தயார் என்பது தெளிவாகிறது.
:)

நேசமித்ரன் said...

இந்த மாதிரி விமர்சனத்துக்குதான நாங்க இங்க வாறது
எப்பவும் போல அதே அடர்த்தி..! அதே அழுத்தம் ..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நேர்மையான விமர்சனங்கள். பட்டதை சொல்ல ஒரு தைரியம் வேண்டும்.

"கபடிக்குழு" பற்றிய உங்கள் பார்வையை மிகவும் வியந்தேன். நீங்கள் சொல்வது உண்மை

prabhuraj said...

Hey your reviews are great.

exp : Vennila kabadi kuzhu.

Your views are meticulous on the hero dies at last.

The Caste hindu mentality is silly that a dalit is dominating or heading to success cannot be acceptable.But miserable thing is director too think in the same way..It was made only for the artificial shock value.

Apart from this : I like most of the things in that film..

In One scenceOld lady says "Etho kachila sethukittu SAAMIYILLA SAATHIYILLA nu solraaan"..

Dialouges are great.I want to meet the director suseendharan personally to ask How he get the idea to portray the dalith "Pannai" since now a days its quite rare to see.

keep it up..

அருண்மொழிவர்மன் said...

//நமது தமிழ்மூளைகள் எல்லா வடிவத்திலும் எல்லா இடங்களிலும் ஒரு கதாநாயகத் தன்மையை வேண்டி நிற்கிறது அல்லது வலுக்கட்டாயமாக அத் தன்மையை நுழைத்து விடுகிறது.//

பசங்க படத்தில் நான் உணர்ந்ததும் அதான். சிறுவர்களிலேயே நாயகன், வில்லன் இருவரும் இருக்கிறார்கள். அதே போல வால் பிடிக்கும் ஒத்து ஊதிகளும் இருக்கிறார்கள். எனவே, கிட்ட தட்ட இந்ததிரைப்படம் எல்லாரின் வயதையும் ஒரு 10 அல்லது 15 ஆக குறைத்து எடுக்கப் பட்டிருக்கின்றாது போலதான் இருந்தது...
இந்த படத்தின் இயல்புத் தன்மை பிடித்திருந்தும், சிகரம் தொட்ட படம் என்று இதை சொல்ல முடியாமல் போனதுக்கு காரணம் “வில்லன்” சிறுவனை காட்டிய விதம் தான்...

Ayyanar Viswanath said...

நேசமித்ரன்,பிரபுராஜ் மற்றும் அருண்மொழிவர்மன் பகிர்வுகளுக்கு நன்றி..

Pot"tea" kadai said...

நாடோடிகள் & பசங்க இப்போ தான் பாத்து முடிச்சேன். இரண்டுமே மொன்னையான அபத்த சினிமாக்கள். கொடுமையோ கொடுமை. சசிக்கு ஏனிந்த அட்வைஸ் கொடுமையெல்லாம் பெரியதிரைல சொல்லி...

ஒத்துக்கிடறோம் நீர் சொல்ரத.

Featured Post

test

 test