Friday, July 3, 2009
சாமியார் செத்துப் போனார்
தணிகாசலம் என் மடியில்தான் உயிரை விட்டார்.இரத்தக் குழம்பலாய் சிதைந்து போன உடலொன்று என் மடியில் தன் கடைசி நொடியை சுவாசித்தது.என்னுடல் முழுக்க தணிகாசலத்தின் இரத்தம்.பச்சை இரத்தம்.அதன் வாடை மூச்சு முட்டுவதாக இருந்தது.எனக்குள் பொங்கி வரும் உணர்வுகளை அந்த நிமிடத்திலும் பார்க்க முயன்றேன்.எப்போதுமே உள்ளே ஒருவன் விழித்துக் கொண்டிருப்பதாலோ என்னமோ என்னால் கதறி அழவோ,கண்ணீர் சிந்தவோ முடிவதில்லை.லேசான அதிர்ச்சி அல்லது லேசான துக்கத்தை மட்டுமே இப்போதெல்லாம் உணர முடிகிறது.
அவர் உயிரைப் பறித்த மண்பாடி லாரியின் டயர்களில் இரத்தம் தோய்ந்திருந்தது.கருநிற தார்சாலையில் இரத்தமும் சதையும் சிதறிக் கிடந்தன.வாகனத்தை ஓட்டி வந்த இளைஞன் புளிய மரத்தடியில் அமர்ந்து உரத்தகுரலில் அழுது கொண்டிருந்தான்.நான் நடு சாலையில் அவர் உடலை மடியில் கிடத்தியபடி செய்வதறியாமல் திகைத்துப் போயிருந்தேன். உள்ளிருப்பவனின் நினைவில் மஜித் மஜித்தின் "Father" திரைப்படக்காட்சி வந்து போனது.
போன ஞாயிற்றுக் கிழமை காலை பதினோரு மணிக்கு நடந்த சம்பவம் இது.எப்போதும் போல் நான் தணிகாசலத்தை சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்தேன்.இந்த வாரம் அவர் சிங்க தீர்த்ததிற்கு எதிரிலிருக்கும் மண்டபத்தினுக்கு தன் ஜாகையை மாற்றியிருந்தார்.போன ஞாயிற்றுக்கிழமை அவரை இரமணர் ஆசிரமத்திற்கு பின்புறமிருக்கும் பலாக்குளத்தில் சந்தித்தேன்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை இங்கு சந்திக்கலாமென சொல்லிருந்தார்.ஒரு அய்ந்து நிமிடம் முன்பு வந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாமோ என்கிற குமைச்சல்களும் அவர் என்னை எதிர்பார்த்துதான் பிரதான சாலைக்கு வந்தாரோ? என்கிற சந்தேகங்களும் இன்னும் என்னை குற்ற உணர்வில் மூழ்கடித்தன.
போக்குவரத்துக் காவலர்களும் மருத்துவமனை வாகனமும் என்னை நெருங்கியபோதுதான் சமதளத்தினுக்கு வர முடிந்தது.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செந்திலுக்கு தொலைபேசினேன்.உடலை என்னிடம் ஒப்படைக்கச் சொன்னேன்.ராஜேஷை கூப்பிட்டு புதிய உடைகள் எடுத்து வரச் சொன்னேன்.சிவாவை அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லிவிட்டு சிங்க முக குளத்தினுள் விழுந்தேன்.
பாசி விலகிய குளத்தினுள் விலகாப் பாசியாய் என்னுடல் மிதந்தது.ஆடைகளிலிருந்து இரத்தம் கரைந்து பசிய நீரை லேசாய் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது.நினைவு அவரின் நினைவில் அமிழ்ந்தது.எனக்கும் அவருக்குமாய் ஏதோ ஒரு இழை நெருக்கமாய் பின்னியிருந்திருக்கக் கூடும்.அவரின் கண்கள் உறைந்த அந்த நொடி என் விழித்திரையின் முன் விடாது மோதிக்கொண்டிருந்தது.நிச்சலனமான அக்கண்களில் சுத்தமாய் பயம் இல்லை.வலி இல்லை.மாறாய் நிறைவு இருந்தது.நன்றியுணர்விருந்தது.நான் சில நிமிடங்கள் உறைந்த அக்கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் பின்பு மெல்ல அப்பெருமித விழிகளை மூடினேன்.
தணிகாசலத்தை எனக்கு மூன்று வருடங்களாகத் தெரியும்.அவருக்கென்று நிரந்தர இடம் எதுவுமில்லை.திருவண்ணாமலையில் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்.நாற்பது வயதுக்கும் குறைவுதான்.அவரின் ஊர், விலாசம், குடும்பம்,இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? எதற்காக இப்படி அலைகிறார்? என்றெல்லாம் நான் அவரிடம் கேட்டதில்லை.
எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவரை சந்திப்பேன்.தொடர்ச்சியாய் புகைத்தபடி இரமணர், உண்மை, தேடல், இலக்கியம், பக்தி, ஞானம் எனப் பேசிக்கொண்டிருப்போம்.சுற்றி நிகழும் போலித்தனங்களை கேலி செய்வது அவருக்குப் பிடித்தமானது.அவரது எள்ளல்களை, சக மனிதன் மீதிருக்கும் பிடிப்பை, பிரபஞ்சத்தின் மீதிருக்கும் காதலை, வாழ்வின் மீதான பெரும் விருப்பை, நன்றியை, விருப்பங்களோடு கேட்டுக் கொண்டிருப்பேன்.பேச்சு இலக்கியம் பக்கம் திரும்பும்போது மட்டும் என் குரல் சற்று உரத்து ஒலிக்கும் மற்ற நேரங்களிலெல்லாம் அவர்தான் பேசிக் கொண்டிருப்பார்.
அவருக்குக் குடிப்பழக்கமில்லை.எது கிடைத்தாலும் புகைப்பார்.தியானம், வழிபாடு, ஒழுங்கு என எல்லாவற்றுக்கும் எதிராகவிருந்தார்.”சும்மா” இருப்பதை அவர் வலியுறுத்தினார். ”சும்மா” இருக்கவே அவர் சும்மாவாக பல வருடங்களாய் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் ”சும்மா” இருக்கமுடியவில்லையெனவும் சொல்லிக்கொண்டிருப்பார்.அதிகபட்சமாய் அவர் அவரைப் பற்றி சொன்னது இதுதான்.எனக்கு சும்மா இருப்பதன் மீது ஆர்வமிருக்கவே அவர் மீதும் அன்பிருந்தது.புகையைத் தவிர நான் எது கொடுத்தாலும் அவர் வாங்கி கொள்வதில்லை.ஒருமுறை உணவருந்த வீட்டிற்கு அழைத்ததையும் மறுத்துவிட்டார்.மற்றபடி இந்த மூன்று வருடத்தின் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளை அவரும் அவரின் பேச்சுமே என்னை நிறைத்திருந்தது.
வெகு நேரம் நீரில் கிடந்தேன்.ராஜேஷ் எனக்கான ஆடைகளை கொண்டு வந்தான்.செந்தில் அவரது உறுப்புகளை மருத்துவமனை எடுத்துக் கொள்ள தயங்கியபடி அனுமதி கேட்டான்.அவரின் அடக்க வேலைகளை கவனித்த சிவா அவரின் உறவினர்கள்,வீடு பற்றிய தகவல்களை சேகரிக்க முடியவில்லை எனத் திரும்பவந்தான்.எனக்கும் தெரிந்திருக்கவில்லை.அவரிடம் ஒரே ஒரு பை இருந்தது. ஜோல்னா பை. அந்த மண்டபத்தினுள் இருந்தது.பையினுள் இரண்டு வேட்டி சட்டையும் மூன்று கோடு போட்ட நோட்டு மட்டுமே இருந்தது.நோட்டு புத்தகத்தில் எந்த ஒரு எண்ணும் விலாசமும் இல்லை.ஏதோ கிறுக்கலாய் எழுதி வைத்திருந்தார்.எதையும் படிக்கும் மனநிலையில் இல்லை.
மாலையில் அவரது உடல் பொட்டலமாய் கைக்குக் கிடைத்தது.மலை சுற்றும் வழியிலிருக்கும் இடுகாட்டிலேயே அவரைப் புதைத்தோம்.மிகுந்த சோர்வுகளோடும் ஆயாசத்தோடும் ஒரு வார்த்தை கூட பேசாமல் நண்பர்களோடு குடித்த நாள் அதுவாகத்தான் இருந்தது.
அந்த ஜோல்னாப் பையிலிருந்த நோட்டுக்களை நேற்றுதான் வெளியில் எடுத்தேன்.எங்களின் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டிய சிங்க தீர்த்த குளத்துப் படிக்கட்டுகளில் அமர்ந்து படிக்கத் துவங்கினேன்.
”எனக்கு எதிலயுமே திருப்தி இல்ல...எனக்கு எதுவும் தொடர்ச்சியா பிடிச்சும் தொலய மாட்டேங்குது...ஏதாவது ஒரு புள்ளில திடீர்னு சகலமும் வெளிறிப் போகுது...நிஜமாவே எனக்கு எது பிடிச்சிருக்குன்னு தெரில...நான் எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டிருக்கனுன்னும் தெரில...நான் யாருக்காக இந்த அந்நிய நிலங்களில அலையனும்..இப்பலாம் தல வலிக்குது பயங்கரமா!..”
“எனக்கு இப்ப எப்டி தெரியுமா இருக்கு?யாரயாச்சும் நாலு அறை விட்டா நல்லாருக்கும் போல இருக்கு...இல்லனா யார்கிட்டயாச்சும் நாலு அறை வாங்கனாலும் நல்லா இருக்கும் போலத்தான் இருக்கு...இந்த ஒலகத்திலயே ரொம்ப நல்லவன இல்ல நல்லவள தேடிப் பிடிச்சி நாலு மிதி மிதிக்கலாம் போல இருக்கு.”
"நேத்து நைட் பயங்கர போதைல இந்த ஒலகத்திலயே என்னயும் மனுசன்னு மதிக்கிற அவளுக்கு போன் பண்ணி "உன்ன சுத்தமா பிடிக்கலடி"ன்னு கத்தனேன்.அப்ரமா அவள பயங்கரமா வெறுக்குரேன்னும் சொன்னேன்.அவளும் பதிலுக்கு கத்தினா நான்லாம் ஒரு ஈனப் பிறவின்னா “சரிடி ஐ லவ் யூ” ன்னு சொன்னேன் அவ அழுதிட்டா."
"பாஸ்! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என்னோட இந்த பைத்திய மனநிலைக்கு இவதான் பாஸ் காரணம்...நேத்து தனியா உக்காந்து யோசிச்சப்பதான் எனக்கு வெளங்குச்சு...நானாதான் நெனச்சிகிட்டேன் இந்த ஒலகத்திலயே நாந்தான் சந்தோசமான பிராணி ன்னு ஆனா அது அப்படி இல்ல பாஸ்!நான் நல்லா ஏமாந்துட்டேன்.அவமானமா இருக்கு எங்காச்சும் ஒயரமான எடத்தில இருந்து குதிச்சி செத்துடனும் போல இருக்கு."
“யோசிக்க யோசிக்க பயம் வருது.. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் யாருக்காக வாழ்ந்திட்டு இருக்கேன்ன்னுலாம் யோசிக்கும்போது செம வெறுப்பு வருது...இத எல்லாத்தயும் நிறுத்திட்டு எங்காச்சிம் ஓடிப்போய்டலாம் போல இருக்கு.”
“எனக்கு கதறி அழனும் போல இருக்கு ஆனா என்னால அழ முடியல...வாழ்நாள் முழுக்க என்னால அழாமலே போய்டும் போல இருக்கு...நான் கல்லு மாதிரி ஆகிட்டேன்...சாதா கல்லு கூட இல்ல.. பாறாங்கல்.. இல்லனா மரக்கட்ட ன்னும் வச்சிக்கலாம்.”
“சிலரலாம் பாக்கும்போது பயங்கர பொறாமயா இருக்கு.எவ்ளோ மென்மையா பேசுராங்க.எவ்ளோ மென்மையா பழகுறாங்க.வாழ்க்க மேல அவங்களுக்குலாம் எவ்ளோ நம்பிக்க இருக்கு.அடிக்கடி நெகிழுறாங்க.எப்டி இவங்களாலலாம் நல்லத மட்டுமே பாக்க முடியுதுன்னு தெர்ல.நான் ரொம்ப மோசம்.என்னால யாரையுமே சந்தேகப்படாம ஏத்துக்க முடியுறதில்ல.எனக்கே என்ன நெனச்சா கேவலமா இருக்கு. “
“நான் அடிப்படைல மென்மையான ஆள்தான்.. எப்படி இப்படி மாறிட்டேன்னு தெரில..எனக்கு யாரையுமே பிடிக்கல பாஸ்! உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன் இல்ல உங்க மேலயும் எனக்கு பெரிசா ஒண்ணும் பிடிப்பு கெடயாது.இப்படி மொத்தமா ஒளறிக் கொட்டிட்டு நான் பாட்டுகினு எந்திரிச்சி போய்ட்டே இருப்பேன்.அவ்ளோதான்.”
“என்ன நான் ரொம்ப மோசமா சுமந்திட்டு அலையுறனனோன்னு தோணுது.என்னோட பாரம் தாங்க முடியாததா இருக்கு.என்ன சுத்தி எனக்கே தெரியாம பின்னப்பட்ட இந்த வலைகளலாம் அறுத்தெறிஞ்சிட்டு எங்காச்சிம் ஓடிப்போய்டனும் போல இருக்கு.ஆனா எங்கயோ முழிச்சிட்டு இருக்க சுயநலம் அப்புறம் இந்த ஸோ கால்டு பொறுப்பு என்ன இந்த வலைக்குள்ளயே இழுத்துப் பிடிச்சிட்டு இருக்கு.”
“என்னால ஏன் யாரையுமே நிஜமா,சந்தேகமில்லாம,உண்மையான, அன்போட,அடிமனசுல இருந்து, மிகுந்த விருப்பத்தோட, நெகிழ்வோட ,நேசிக்கமுடியல?”
“எனக்குள்ள இருந்த காதல் உணர்வுலாம் எப்ப காணாம போச்சுன்னு தெரில.எல்லாரையும் வெறுக்கிறேன் நான்.யாரையுமே பிடிக்கல எனக்கு.எங்காவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்னு நான் இதுவர தேடி சலிச்சி ஏமாந்துதான் போனேன்.அப்றம்தான் இங்க வந்தேன்”
“ஒரு மத்தியானத்துல தோணுச்சி.அன்பு,நேசம்,காதல்,பரிவு இதெல்லாம் மொதல்ல மத்தவங்க கிட்ட தேடுரதே எவ்ளோ பெரிய தப்புன்னு.நான் இன்னும் ஆழமா எனக்குள்ள பயணிக்கனும்.”
”இன்னிக்கு நல்லா சிரிச்சேன்… சத்தம் போட்டு,ஆழமா,பைத்தியம் மாதிரி.. நடுராத்திரில ஏன் இப்படி சிரிப்பு வந்ததுன்னு தெர்ல…அடக்க மாட்டாத சிரிப்பு..வயிறு வலிக்க வலிக்க.. இருமல் பயங்கரமா பொங்கனுதுக்கப்புறம்தான் சிரிப்பு அடங்கிச்சு.நான் கஞ்சா அடிச்சா கூட ரொம்ப இறுக்கமா இருக்கிற ஆளு.. நான் எப்படி இப்படி சிரிச்சேன்னு தெரில.. சொல்லப்போனா இன்னிக்கு பீடி கூட புடிக்கல...சிரிப்படங்கினதுக்கப்புறம் ரொம்ப லேசா இருந்துச்சி.. நான் எப்பவுமே உணராத லேசு.. இவ்ளோ லேசா என்ன உணர்ந்ததே இல்ல…அப்படியே காத்துல மெதக்குற மேகம் மாதிரி ஆகிடுச்சி ஒடம்பும் மனசும்…இவ்ளோ நாளா கண்ணாமூச்சி ஆடிட்டிருந்த ஒண்ணு பளிச் னு கையும் களவுமா மாட்னா மாதிரி இருந்தது… அப்புறம் இதுநாள் வரைக்குமான என் வாழ்க்கைய நெனச்சி பார்த்தேன்.செம சிரிப்பு வந்தது…அவ்ளோதான் பாஸ் முடிஞ்சி போச்சு.”
மூன்று கோடு போட்ட நோட்டுகளிலுமே இவ்வளவுதான் இருந்தது.தேதிவாரியாகவெல்லாம் இல்லை.பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் எழுதப்பட்டிருந்தது.படித்து முடித்ததும் என்னை பயம் தொற்றிக் கொண்டது.செத்துப் போனது தணிகாசலமா? நானா என குழம்பிப் போனேன்.அவர் மடியில் என்னுயிர் போனதா? இல்லை என் மடியில் அவர் உயிர் போனதா? என நினைவுகள் அடுக்குகளை மாற்றியமைக்கத் துவங்கின.நான் எழுந்து நின்று தலையை உதறிக் கொண்டேன்.இல்லை நான் இன்னும் சாகவில்லை.செத்துப்போனது தணிகாசலம் சாமியார்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
23 comments:
கலக்கல்.... :)
இது அய்யனார் எழுதின கதைதானா?? எல்லா வார்த்தைகளுமே புரியுதே... :)
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. பச்சை சாய்வு எழுத்துக்கள் அய்ஸ் மாதிரி இருக்கேன்னு :)
நல்லா வந்திருக்கு பாஸ். நல்ல வேளை, நீங்க எல்லாம் 'உரையாடல்' போட்டிக்கு வரவில்லை.
அனுஜன்யா
நல்லா இருக்கு.
வணக்கம் அய்யனார்
உங்களின் பெரும்பாலான கதைகளை படிக்கும்போது ஒரு கொந்தளித்த மனநிலையில் வெளிப்பாடாகவே உணரமுடிந்தது, (பெரும்பாளும் புரியாவிட்டாலும்)
இது.............
அப்படியே என்னை பிரதிபலிப்பதுபோல் உள்ளது..
இராஜராஜன்
//யோசிக்க யோசிக்க பயம் வருது.. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் யாருக்காக வாழ்ந்திட்டு இருக்கேன்ன்னுலாம் யோசிக்கும்போது செம வெறுப்பு வருது...இத எல்லாத்தயும் நிறுத்திட்டு எங்காச்சிம் ஓடிப்போய்டலாம் போல இருக்கு.”//
அவ்வப்போது வந்து செல்லும் எண்ணங்களில் இதுவும் உண்டு - தனிமையின் மீதான வெறுப்பின் காரணமாகவும் இருக்கலாமோ...?! :)
//“ஒரு மத்தியானத்துல தோணுச்சி.அன்பு,நேசம்,காதல்,பரிவு இதெல்லாம் மொதல்ல மத்தவங்க கிட்ட தேடுரதே எவ்ளோ பெரிய தப்புன்னு.நான் இன்னும் ஆழமா எனக்குள்ள பயணிக்கனும்.”///
எக்ஸலண்ட்!
வரிகளினை வலுவாக பற்றிக்கொள்கிறேன் :))
ithu kathai madhiri theriyala... unmai yaga nadadahadhu thanae..
manasu muluka barama iruku...
கலக்கல் அய்ஸ்..
தல, உங்க மேல பொறாமைதான் வருது. பச்சை எழுத்துக்களில் நீங்க எழுதி இருக்கிறததான் நான் ஒவ்வொரு தடவையும் எழுதணும்ன்னு நெனைக்கிறேன்.. ம்ஹும்.. எனக்கு வார்த்தையே சிக்கல.
மேலும் பச்சை எழுத்துக்களில் தான் உங்களை பார்க்கிறேன்.. நீங்கள் தான் அந்த தணிகாசலம்.. :)
//"நேத்து நைட் பயங்கர போதைல இந்த ஒலகத்திலயே என்னயும் மனுசன்னு மதிக்கிற அவளுக்கு போன் பண்ணி "உன்ன சுத்தமா பிடிக்கலடி"ன்னு கத்தனேன்.அப்ரமா அவள பயங்கரமா வெறுக்குரேன்னும் சொன்னேன்.அவளும் பதிலுக்கு கத்தினா நான்லாம் ஒரு ஈனப் பிறவின்னா “சரிடி ஐ லவ் யூ” ன்னு சொன்னேன் அவ அழுதிட்டா."//
தல.. இது அல்டிமேட்... :)
இந்த படைப்பு போட்டிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. எனவே தயவு செய்து போட்டிகளுக்கு அனுப்பி இந்த படைப்பின் தன்மையை தரத்தை குறைக்க வேண்டாம் என வேண்டுகிறேன்.
ஒரு தேர்ந்த கதை ஆசிரியர், திரைப்பட திரை கதை ஆசிரியர் போல வாசித்த என்னை திருவண்ணாமலை சாலைக்கும் , ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்று விட்டேர்கள்.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்
குப்பன்_யாஹூ
தன்னிலை விளக்கம் கொஞ்சம் நீளமாக இருந்ததுவோ என்று தோன்றினாலும்
அது கதையின் ஆழத்தை வலுப்படுத்த பயன்பட்டிருக்கிறது.
கொஞ்சம் எமோஷனலாகவே உணர்ந்தேன்.
)
குப்பன் யாகூவை
வழி மொழிகிறேன்
அற்புதம் !
வாசிக்கிற ஒவ்வொருவனும் தன்னை பார்க்க வைக்கிற எழுத்து
நன்றி இராம்
அனுஜன்யா தாமதமாகிடுச்சி இல்லனா நாங்களும் வந்திருப்போம் :)
நன்றி ரவிசங்கர்
இராஜராஜன் பகிர்வுக்கு நன்றி
ஆயில்யன் நான் புதிதாக எதையும் சொல்லவில்லை எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.நன்றி
நித்தி கதைகள் எல்லாமே நிகழ்பவைகள் அல்ல மேலும் நிகழாதவைகள் கதைகளாகவும் முடியாது :)
நன்றி ஆதவன்
நன்றி சரவணக்குமார்.புது வார்ப்புரு கொடுத்ததுக்கும்.இந்த வடிவம் எனக்கே பிடிச்சிருக்கு :)
நன்றி குப்பன்யாகூ
செய்யது,நேசமித்ரன் பகிர்வுகளுக்கு நன்றி
Nicely done.I like it.
டெம்ப்ளேட் சூப்பர் :)
/நிச்சலனமான அக்கண்களில் சுத்தமாய் பயம் இல்லை.வலி இல்லை.மாறாய் நிறைவு இருந்தது.நன்றியுணர்விருந்தது./
இது கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.அழும் ஓட்டுனர் இளைஞனும்.
மிக முக்கியமான பதிவு இது அய்யனார். நிறைய கிளறுகிறது.ஆனால், எதுவும் சொல்லத்தான் தெரியவில்லை.
மிரட்டுறிங்க அய்யனார்...!
உங்களை இன்னும் நெருக்கமாய் உணர்கிறேன்...
அந்த படம் ஜோ பதிவுல வந்த படம்தானே, டெம்ளேட் நல்லாருக்கு.
அய்யனார் ..
யதார்த்தவாதம் , உள்தேடல் ..சுயம் வெளிப்பாடு இன்னும் என்னென்னு சொல்றது..
எங்களுக்கு எப்போ கற்றுக் கொடுக்க ப்போறீங்க இப்படி எழுத?
செத்துப்போனது தணிகாசலம் இல்ல ..சுய விலாசம் இல்லாத வெகுஜன சிறுகதைகளும் தான் ...
நீங்க எப்போவோ அடுத்த கட்டத்துக்கு போயாச்சு...கலக்குங்க !!
நல்லாருக்கு அய்ஸ்!
"நேத்து நைட் பயங்கர போதைல இந்த ஒலகத்திலயே என்னயும் மனுசன்னு மதிக்கிற அவளுக்கு போன் பண்ணி "உன்ன சுத்தமா பிடிக்கலடி"ன்னு கத்தனேன்.அப்ரமா அவள பயங்கரமா வெறுக்குரேன்னும் சொன்னேன்.அவளும் பதிலுக்கு கத்தினா நான்லாம் ஒரு ஈனப் பிறவின்னா “சரிடி ஐ லவ் யூ” ன்னு சொன்னேன் அவ அழுதிட்டா."]]
மிகவும் இரசித்தேன் அல்லது உணர்ந்தேன் அல்லது இரண்டுமே ...
Post a Comment