Wednesday, November 26, 2008
ஜோ
எனக்கும் ஜோ என்கிற ஜோசப் மரிய செல்வத்திற்கும் நிறைய ஒற்றுமைகள்.98 ஆம் வருடம் அவன் கடலூரிலும் நான் கிருஷ்ணகிரியிலும் எங்கள் படிப்பை முடித்திருந்தோம்.அவன் காதலியின் பெயரும் என் காதலியின் பெயரும் ஒன்றாய் இருந்ததுதான் எங்களிருவருக்குமான ஆரம்பப் புள்ளி. எல்லைப்பிள்ளைச் சாவடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடத்தில் நான் வசித்து வந்தேன்.அவ்விடத்தை வீடு என மிகத் தாராளமாகச் சொல்லலாம் . மிகப்பழங்கால கதவுகளையும்,அதி பழங்கால சன்னல்களையும்,சுண்ணாம்பு பெயர்ந்து லேசாக வெளிறிய சுவர்களையும்,வீட்டின் கூடத்தில் இரும்புக் கதவு கொண்ட குளியலறை ஒன்றையும் கொண்டிருக்கும் வினோத வீடு அது.ஒழுங்கீனங்களின் மீது அபார விருப்பம் இருந்ததால் அவ்வொழுங்கற்ற வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாண்டிச்சேரியில் ஈஸ்வரன் கோவில் தெருவில் இருவரும் பணிபுரிந்தோம்.இரவில் பணி முடிந்து திரும்புகையில் தினமும் என்னோடு லேசாய் குடித்துவிட்டு கடலூருக்குப் பேருந்தில் புறப்படுவான்.பணம் அதிகமாயிருந்த ஒருநாள் மிக அதிகமாய் குடித்திருந்தோம்.அவனை அதே தள்ளாட்டத்தோடு அனுப்ப விருப்பமில்லாததால் என் இளஞ்சிவப்பு நிற லேடி பேர்டு மிதிவண்டியில் அமரவைத்து அழைத்து வந்தேன்.அவ்வீட்டை வெகுநேரம் சிலாகித்துக் கொண்டிருந்தான்.புழுக்கம் மிக அதிகமாக இருந்ததால் குறுகலான, ஒரே ஒரு உருவம் மட்டும் ஏறக்கூடிய மாடிப்படியில் ஏறி,கைப்பிடியில்லாத மொட்டை மாடியில் நின்றபடி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.ஜோவிற்கு ஓல்ட் மங்க் குடிக்க பிடிக்கும். எனக்கும்.எனக்கு கவிதைகள் பிடிக்கும்.ஜோவிற்கும். ஜோவிற்கு நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் அவனுக்காய் காத்திருக்கும் காதலியை உடனே திருமணம் செய்துகொள்வான்.நானும்.இன்னும் சின்ன சின்னதாய் நிறைய ஒற்றுமைகள்.
ஒரு ஞாயிறு மாலை பச்சை நிற சூட்கேசுடன் என் அறைக்குக் குடியேறினான். ஜாவா படிக்க போவதாய் சொன்னதை நான் நம்பவில்லை.நாங்கள் பார்த்து வந்த துக்கடா வேலை முடிய இரவு பத்து மணி ஆகும்.பத்து மணிக்கு மேல் ஓல்ட் மங்க் அரைப்புட்டியை கையில் பிடித்துக்கொண்டு கணக்கு வைத்திருந்த மெஸ்ஸில் இரவு உணவையும் வாங்கிக்கொண்டு மொட்டை மாடியில் அமருவோம்.மிக மெதுவாய் குடிப்பது இருவருக்குமே மிகவும் பிடிக்கும்.முதல் மிடறை மிகக்கசப்புகளோடு விழுங்கிவிட்டு சிகரெட்டை பற்ற வைப்பான்.அந்த வண்ணதாசன் கவிதை சொல்லு மச்சி என ஆரம்பிப்பான்.ஜோவிற்கு பிடித்த கவிதைகள் எனக்கு மனப்பாடம்.புழுக்கம் மிகுந்த கோடை இரவுகள் மிகத் தெளிவான வானத்தையும் ஒளிர்விடும் நட்சத்திரங்களையும் பரிசாகத் தருவதுதான் எத்தனை அற்புதம். சாதாரண குரலில்தான் ஆரம்பிப்பேன் அக்கவிதையை, மூன்றாம் வரிகளில் உயர்ந்து,பின் இறுகி,முடிவில் மிகக் கசப்பானதை உமிழ்வது போல என் குரல் மாற்றமடைவதை என்னால் ஒவ்வொருமுறையும் உணரமுடிந்தது.
வயதாகிவிட்டது என் தூக்கத்திற்கும்
வினோத சொப்பணங்களுக்கிடையில்
அரற்றி அரற்றிப் புரள
நசுங்கிக் கிடக்கின்றன தலையனைகள்
தரையில் தாள் நகர்கிற சப்தத்திற்கும்
புத்தகங்கள் சிறகடிக்கிற நுட்பத்திற்கும்
விழித்தும் பதைத்தும் எழுகையில்
கண்காணாமல் போய் விட்டிருக்கிறது
இருளில் கரைந்த இசை ரூபம்
இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சிகரெட்டை ஜோவிடம் வாங்கி ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்வேன்.
யார்யாரைக் கைவிட்டீர்கள் உங்களில்
என நகரும் முட்களால் கேள்வி கேட்டபடி
அப்பால் சென்றது காலம்
இதை சொல்லி முடிக்கையில் என் பதட்டம் மிக அதிகமாயிருக்கும்.ஜோ உறைந்து போயிருப்பான். போதை எங்களிருவரையும் தன் அதி உன்னத உலகத்தில் தொலைக்கச் செய்து விட்டிருக்கும்.
அபியையும் ஆத்மாநாமையும் கிறக்கங்களோடு வாசித்த காலம் அது.ஜோவிற்கு அபியை புரிவிக்க நான் அதிகம் மெனக்கெடுவேன்.இந்தக் கவிதையைத் திரும்பத் திரும்பச் சொன்ன ஒரு இரவில் அவன் பைத்தியமானான்.
இந்த விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி எதுவும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு....
ஜோ புரியல ஒய்.. புரியல ஒய்... என அரற்றத் துவங்கினான்.இரு மச்சி! இரு மச்சி!! இப்ப பார்
மொட்டை மாடியை ஒட்டிய தண்ணீர் தொட்டியின் மீது ஏறினேன்.இதாண்டா விளிம்பு..சிமெண்ட் சிலாபுகள் கொண்டு மூடப்பட்டிருந்த அத்தொட்டியின் நுனியில் என் பாதங்கள் ..இதாண்டா பிடிமானம் எதுவுமில்லாத விளிம்பு..பார்.பார்..இங்கிருந்து மெதுவா எட்டிப் பாக்கிறேன்..நீதான் பள்ளத்தாக்கு.. செய்தி எதுவும் தெரிவிக்காத அமைதிப்பள்ளத் தாக்கு.அ மை தி ப ள் ள த் தா க் கு அ வை உயர்ந்த குரலில் ஆரம்பித்து க் ல் அடங்கி கு வை காற்றாக வெளியிட்டேன்...
மச்சி நீ கீழ இறங்கு!.. விழுந்திடப்போற..எனக் குழறியபடி உறங்கிப்போனான்.நான் கவிதையை பிரசங்கித்த கிளர்வில் மேலிருந்தபடியே சிமெண்ட் சிலாபுகளில் உறங்கிப் போனேன்.
ரத்னா தியேட்டரில் அய்ரோப்பியத் திரைப்படங்களை எப்போதாவது திரையிடுவார்கள். ஒருநாள் அத்திரையரங்கைக் கடக்கையில் பை சைக்கிள் தீஃப் படம் திரையிடுவதை அறிந்து பார்க்கச் சென்றோம்.திரைப்படம் முடிந்து வெளியே வந்த பிறகு எங்களிருவ்ரையும் அழுத்தமான மெளனம் சூழ்ந்திருந்தது.என் நினைவு முழுக்க திருடமுயன்று பிடிபட்ட அச்சாமான்யனின் வெளிறிய முகமும்,கால்கள் வலிக்க அலைந்த சிறுவனின் பசியும் நிறைந்திருந்தது.ஜோ மெதுவாய் பணமிருக்கிறதாவெனக் கேட்டான்.இல்லையெனத் தலையசைத்தேன்.குடிச்சாதான் தூங்கமுடியும்னு தோணுதுடா! என்றான் எனக்கும் அப்படித்தான் இருந்தது.சாலையில் கடந்து போகும் முகங்களில்,தெரிந்த முகங்கள் எது தென்பட்டாலும் உடனடியாய் கடன் வாங்கிவிடும் தீர்வுடன் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தோம்.அலுவலக வாசலில் டீ கடை வைத்திருக்கும் ராமு மிதிவண்டியில் கடந்தான் புட்ரா மச்சான் அவன! என கத்தியபடி விரட்டிப் பிடித்தோம்.இன்னா மிசே ரோட்ல!! என்றவனை பேசவிடாது அவன் சட்டைப்பைக்குள் துழாவி அய்ம்பது ரூபாயைத் தேற்றினோம்.அப்போதிருந்த மனநிலைக்கு அது போதாதெனத் தோன்றிற்று. ராமு இன்னோரு அம்பது ரெடி பண்ணு! என்ற ஜோ வை மிகக் கடுமையாய் முறைத்தபடி கைகளை உதறினான்.இருந்தது அவ்ளோதான் என்றவனை அதிகம் பேசவிடாது நட கடைக்குப் போகலாமென அவனையும் தள்ளிக்கொண்டு கடைக்கு வந்தோம்.இன்னொரு அய்ம்பது ரூபாய் வியாபாரம் நடக்கும் வரையில் உட்கார்ந்திருந்து அதையும் பிடுங்கிக் கொண்டு அரைப்புட்டியோடு அறையை வந்தடைந்தோம்.இதை எழுதும்போது கூட சோர்வு மிகுந்த அச்சிறுவனின் முகம் என் நினைவில் வந்து போகிறது.அத்திரைப்படம் குறித்து மாற்றி மாற்றி அரற்றினோம்.ங்கோத்தா! அந்த ஓட்டல்ல ஒக்காந்து சாப்டுவானுங்க பாரு ப்ப்பா! என்னா சீன் டா தாயோலி சாகடிச்சிட்டாண்டா..
வெகு சீக்கிரத்தில் நெருக்கடிகள் எங்களிருவரையும் ஆக்ரமிக்கத் தொடங்கின.இடம் பெயர்வது குறித்து யோசிக்கத் துவங்கினோம்.அடுத்த வேலை எதுவுமில்லாத நிலையில் இருந்த வேலையும் தூக்கி எறிந்து விட்டு திசைக்கொருவராய் விலகினோம்.செட்டில் ஆனா சொல்றன் மச்சி இதுதான் நாங்கள் கடைசியாய் பேசிக்கொண்டது.நான் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுற்றி அலைந்தேன்.கைவசமிருந்த ஒரே பிடிமாணத்தையும் தொலைத்து விட்டு துபாய் கிளம்பி வந்துவிட்டேன்.ஜோவிற்கும் பிடிமாணம் தொலைந்ததை தெரிந்து கொள்ள முடிந்தது.அவன் எங்கிருக்கிறானெனத் தெரிந்து கொள்ள விருப்பமில்லை.நான் அவனையும் என்னை அவனும் பார்க்க நேரிடும் சூழலின் அபத்தங்கள் மிகக் குரூரமாய் இருக்கக்கூடுமென நம்பினேன்.சென்ற வருட இறுதியில் அவனிடமிருந்தது ஒற்றை வரியில் மின்னஞ்சல் வந்திருந்தது.செட்டில் ஆயிட்டண்டா..நானும் அதே வரிகளை எழுதி அனுப்பினேன்.
இந்த வருட துவக்கத்தில் சென்னை அசோக் நகர் தண்ணி டேங்க் பூங்காவில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.ஜோ கொஞ்சம் பூசியிருந்தான்.அவனை வெளிறிய வெள்ளை/ கோடு போட்ட சட்டைகளிலேயே பார்த்திருந்தது.இப்போதவன் அடிடாஸ் ஜோ வாக மாறியிருந்தான். ரே பானை உயர்த்தியபடி பல்ஸரிலிருந்து இறங்கினான். உள்ளுக்குள் நிறைவும் மகிழ்வும் ஒரே நேரத்தில் பொங்கியது. வா! ஒய் என கட்டிக்கொண்டேன்.அவனும் துபாய் தண்ணியா ஒய் செம கலராயிட்ட எனக் கிண்டலடித்தான்.
டகீலாவா எறங்குது மச்சான் என சத்தமாய் சிரித்தேன்.அப்ப நம்ம பிராண்ட அடிக்கிறதில்லையா நீ! எனக் கோபித்தான்.இல்ல மச்சி என சிரித்துக்கொண்டேன்.
எவ்ளோடா வாங்குற? என்றான்
ஒண்ணர மச்சான்
அடி தூள் எங்கயோ போய்ட்ட
நீ என்றேன்
அறுவது தொட்டண்டா
இருவரும் மிகக் கவனமாய் அந்தக் கேள்விகளைத் தவிர்த்தோம்.குடிக்க அழைத்தேன்
இல்ல மச்சி.. என்னோட கொலீக்.. ஒரு பொண்ணு... இப்பதான் நாலு மாசம்.. அவளோட வெளில போற ப்ளான்..என வார்த்தைகளை மென்றான்.லேசாய் நெளிந்தான். சந்தோஷமாயிருந்தது.சரிடா கெளம்பு நீ நான் அடுத்த லீவ்ல வரும்போது வீட்ல தங்குறா மாதிரி வர்ரேன் என விடைபெற்றுக்கொண்டு பிரிந்தேன்.சொல்ல முடியாத உணர்வில் கண்மண் தெரியாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது..சிகரெட்டினைப் பற்றவைத்துப் புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன்.மறுபடியும் ஜோ..
இன்னாடா... போவல?
நாம ஜெயிச்சிட்டமா மச்சி? என்றான்.அவன் முகத்தில் படிந்திருந்த பரிதாபத்தை துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.விழிகளைத் தாழ்த்திக் கொண்டேன்.என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.அவன் பைக்கை திருப்பிக் கொண்டு விரைந்து கடந்தான்.
Photo from Dictionary of Khazars play
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
12 comments:
Me the first..
படிச்சிட்டு வரேன்..
இன்னும் ஜெயிக்கலையா..!!!!
:(
அன்புடன் அருணா
ஒன்னும் சொல்லறதுக்குல்ல...இங்கையும் இந்த கதை தான்....பதிவுல பாதியிலேயே இருக்கோம்..;(
இரு நண்பர்களின் வாழ்க்கைக்குறிப்பாய் அழகாய் விரிகிறது பதிவு.
//நாம ஜெயிச்சிட்டமா மச்சி? //
இல்லேங்குறீங்களா?
உண்மை :)
உண்மையாக யாரும் வெற்றி பெறுவது இல்லை. வெற்றி அடைந்த மாதிரி பாவனை செய்கிறோம்.
;) good memoirs..there is nothing to win, nothing to lose jo and ayy, thats the only lesson in this life
அய்ஸ்,
கொஞ்ச நாட்களாக வலைப் பக்கம் வர முடியா சிக்கல்.
இளம்பிராயத்து ஆசைகளும், கனவுகளும் ஒருபோதும் எதிர்பார்க்கும்படி நிறைவேறுவதில்லை. அதில்தான் வாழ்வின் சுவாரஸ்யமே. நீங்களும், ஜோவும் விதிவிலக்கல்ல. ஆனாலும், பெருமையாக அசைபோடும்படிதான் உங்கள் வாழ்வு அப்போதும் இருந்திருக்கிறது. நல்ல பதிவு.
அனுஜன்யா
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் சரவணக்குமார்,அருணா,கோபி,பிரேம்,
சிவா,உமா மற்றும் அனுஜன்யா நன்றியும் அன்பும்...
நீங்களும் ஜோவும் ஒருவரே!
இவ்வகை எழுத்தை ஏற்கனவே இருமுறை படித்துள்ளேன்!
// அத்திரையரங்கைக் கடக்கையில் பை சைக்கிள் தீஃப் படம் திரையிடுவதை அறிந்து பார்க்கச் சென்றோம்.//
இப்போ வரைக்கும் இந்தப்படம் பார்க்க கிடைகவில்லை.
// இளம்பிராயத்து ஆசைகளும், கனவுகளும் ஒருபோதும் எதிர்பார்க்கும்படி நிறைவேறுவதில்லை. அதில்தான் வாழ்வின் சுவாரஸ்யமே.//
ஆமாங்க.
Post a Comment