Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரமும் முதல் முத்தமும்


திரைப்படம் பார்த்து முடித்த பின்பு லேசாய் குடித்தால் நன்றாகவிருக்கும்போல் தோன்றியது. இரவு பதினோரு மணிவாக்கில் Grand ல் போய் அமர்ந்தேன்.மூன்று வாரங்களாய் தொட்டிராத பியர் வாசனை தந்த மகிழ்வை விட வெகு காலம் கழித்து நம் சூழலில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் நிறைந்திருந்தேன்.உறவுகள் தொடர்கதை யென கிதார் பின்னனியில் தொடங்கும்போதே மகிழ்வாய் இருந்தது.ரயில், மழை, கிதார், காதல் என பதின்மங்களை புரட்டிப்போடும் காட்சியமைப்புகள்.நெடிய திரைப்படத்தில் அங்கங்கு கவிதைத்தனம்.(அவளோடு வாழ்ந்த தொண்ணூ்று நாள் ஒரு இளையராஜா பாடல் மாதிரி).கல்லூரியில் படிக்கும்போது எல்லாருக்கும் ஒரு கனவிருக்கும். கையில் ஒரு கிதார், ஒரு அழகான பெண், என் இனிய பொன்நிலாவே, வென தன்னைப் பிரதானப்படுத்தி காட்சிகள் பகல்கனவில் விரியும்.அதை திரையில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்வு அளவில்லாதது.சூர்யா- சமீராரெட்டி காதல் ஒரு இளமை fantasy.

அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு நமது சூழலில் அழுகாச்சி காவியங்களாகவே சொல்லப்பட்டிருக்கிறது.முதன்முறையாய் இயல்பான, நட்புரீதியிலான, நெகிழவைக்கிற, அற்புதமான கதை சொல்லல் இத்திரைப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.கிருஷ்ணன் கதாபாத்திரம் தமிழ்சூழலுக்கு மிகவும் புதிது.நானா படேகர் இப்பாத்திரத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் என்றாலும் சூர்யாவின் உழைப்பு எவ்வகையிலும் உறுத்தவில்லை.உடல்மொழி, குரல், உடைத்தேர்வுகள் காட்சியமைப்புகளென கிருஷ்ணன் கதாபாத்திரம் மிகக் கச்சிதம்.பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா ..மூச்சுமுட்ட வைக்கும் சூர்யாக்கள்.ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.ஒரு திரைப்படத்திற்காக உழைக்கும் கலைஞனை பார்க்க மகிழ்வாய் இருக்கிறது.சுயசரிதைப் படங்கள் பிரதான பாத்திரத்தின் உழைப்பைக் கோருபவை Raging Bull ல் Robert di niro அபரிதமாய் உழைத்திருப்பார்.ஒரு குத்துச் சண்டை வீரனாய் ஆரம்பித்து குடிகார குப்பனாய் மாறும் வரையிலான உடலை அப்படியே நம் முன் கொண்டு வந்திருப்பார். சூர்யாவின் உழைப்பும் உலகத் தரம்தான்.

இந்த படத்தில் நொட்டை சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.நீளத்தை வெட்டியிருக்கலாம்,தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருக்கலாம், இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம், தமிழில் பேசியிருக்கலாம், இப்படி ஏகப்பட்ட லாம்கள்.ஆனால் சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது.நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.அப்படி நேர்கோட்டில் சொல்வதெல்லாம் சுயசரிதைப் படங்களாக முடியாது.கெளதம் தன் அப்பாவிற்கு செலுத்திய மிக உயர்ந்த பட்ச நன்றியாய் இப்படம் இருக்கலாம்.சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம்.
.............................................................

வியர்வைக் கசகசப்புகள் மிகுந்த ஒரு வன்கோடையின் பின் மதியத்தில்தான் நிகழ்ந்தது அது.அழுக்கேறிய தலையணைகள், எப்போதுமே மடித்திராத போர்வைகள், சுருட்டியிராத பாய்கள் எங்களைச் சூழ்ந்திருந்தன.அடுத்தவரின் படுக்கையறையை ஆவென வாய்பிளந்து சன்னலின் வழி உள்நுழைந்து பார்க்கும் சூரியனை ஒரு கனமான போர்வையினைக் கொண்டு தடுத்திருந்தேன்.முருங்கை மரமொன்றும்,மாமரமொன்றும் மிகச் சோம்பலான நிழலை,மென் காற்றை, இணைப்பாய் தேன் சிட்டுகளின் ட்விட் ட்விட்டை தந்துகொண்டிருந்தன.எவ்வித முன் தீர்மாணங்களும் அந்நிகழ்விற்கு இல்லை.வெளிர் நீலமும் வெளிர் பச்சையும் எனக்குப் பிடித்தமான நிறங்கள்.அன்றைய நாளில் பச்சை நிறம் உடுத்தியிருந்த அப்பச்சை நிற தேவதையின் நெற்றி வியர்வை நீர்,அவளின் மென் சங்கு கழுத்திலிறங்கும் காட்சி மழைக்காலத்தில் வெள்ளைக் கோட்டின் சாய்ல்களில்,பாறையின் மீது வழுக்கும் தற்காலிக அருவியினை நினைவூட்டியது. நீர் அருந்தும் மனநிலைதான் இருந்ததெனக்கு.மிகுந்த தாகத்துடன் அந்நீரைக்குடித்துவிட முனைகையில் அஃதொரு முத்தமாய் வடிவமெடுத்தது.முத்தங்கள் வடிவமிலிகள், உருவமிலிகள், எண்ணற்றத் தன் பெருக்கிகள், உடையக் காத்திருக்கும் நீர்க்குமிழிகள், உடைவதற்காய் ஏங்கும் உயிருள்ள கூடு முட்டைகள்.மேலும் முத்தங்கள் உடைந்த நொடியில் பறக்கத் துவங்கும் அசுர வளர்ச்சி கொண்டவை யாகவுமிருக்கின்றன.சமதளத்திற்கு வெகு சீக்கிரத்தில் வந்து விட விரும்பாத முத்தங்கள் இலக்கற்ற வெளியில் தன் எழுச்சியைத் தொலைத்து மீண்டும் திரும்புகின்றன.நாங்கள் மீண்டு திரும்பியபோது சூரியனை மறைக்க ஆரம்பித்திருந்தன அடர் கரு மேகங்கள்.

(கென்னிற்கு....)

28 comments:

Ken said...

"சமதளத்திற்கு வெகு சீக்கிரத்தில் வந்து விட விரும்பாத முத்தங்கள் இலக்கற்ற வெளியில் தன் எழுச்சியைத் தொலைத்து மீண்டும் திரும்புகின்றன"

போதுமா என்னமோ போ

Ken said...

முத்தத்தைப்பற்றி சொல்லி இருக்கிற உன் மொழி

கவித்துவமா இருக்கு , வாசிக்கிறப்போ அந்த முத்தம் தேடி அலையற , நனைக்கிற மழைச்சாரலோட குளிர் வருது :)

Mohandoss said...

சூர்யா - சமீரா ரெட்டி காதல், இந்தப் படத்திலேயே அதிகம் பிடித்திருந்த விஷயம் எனக்கு.

மாலை நேரத்து அமைதியான மழையில் நனைந்த திருப்தியை ஏற்படுத்தியது இந்தப் படம்.

லக்கிலுக் said...

//சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம்.//

படம் இருபது நாளை கூண்ட தாண்டாது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர்!

Athisha said...

அய்யனார் குடித்துவிட்டு இந்த படத்தை பார்த்தீர்களா...அல்லது விமர்சனம் எழுதினீர்களா...

கௌதம் மேனனின் மிக மோசமான படமாகவே இது இருக்கிறது .

இந்த டாகுமெண்டரி படத்திற்கு இப்படி ஒரு விமரிசனமா...

சினிமாவை நேசிக்கும் எவனும்/ளும்
இப்படத்தை பாரட்டமாட்டார்கள்... படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹாலிவுட் படங்களிலிருந்தும் ஆங்கில நாவல்களிலிருந்தும். திருடப்பட்டவை என்பது இன்னும் நெருடல்...

கதை சொல்லும் பாணி உட்பட...

ஒரு தமிழ்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலம் பேசுவது உங்களுக்கு நெருடலாக தெரியவில்லையா ....

தமிழ்ப்படம் தமிழருக்குத்தானே ...

நீங்கள் சொல்லும் சினிமாவை நேசிக்கும் சிலருக்காக ஏன் பல கோடிகள் செலவழித்து ( அடுத்தவன் காசு ) படமெடுக்கவேண்டும்...

குசும்பன் said...

நான் கூட படம் ஓடிவிடுமோ என்று நினைச்சேன், உங்களுக்கு பிடித்திருக்கு என்று எழுதியவுடன் எனக்கு இருந்த கொஞ்சம் டவுட்டும் மறைந்துவிட்டது!!!

யு.எஸ்.தமிழன் said...

>>>>வியர்வைக் கசகசப்புகள் ... அடர் கரு மேகங்கள்.<<<<

அழகாய் இருக்கிறது!

manjoorraja said...

உங்கள் ரசனை பாராட்டுக்குரியது. ஆனால் படம் அந்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை.

உண்மைத்தமிழன் said...

அய்யனார்ஜி..

பார்க்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்..

பார்க்க வேண்டும் என்பது போல் இருக்கிறது உங்களது எழுத்து..

பொய்யாக இருக்கட்டும்.. அல்லது உண்மையாக இருக்கட்டும். அதன் இயல்பு தன்மை மாறாமல் அளித்து படிப்போரை நம்ப வைப்பது ஒரு கலை.. அது அனைவருக்கும் வராது.. தங்களுக்குக் கிட்டியிருக்கிறது..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//குசும்பன் said...
நான் கூட படம் ஓடிவிடுமோ என்று நினைச்சேன், உங்களுக்கு பிடித்திருக்கு என்று எழுதியவுடன் எனக்கு இருந்த கொஞ்சம் டவுட்டும் மறைந்துவிட்டது!!!//

குசும்பனின் டிரேட் மார்க் நக்கல்.. தாங்க முடியலடா சாமி..

Ayyanar Viswanath said...

நன்றி கென் உன் புண்ணியத்துல சொ.செ.சூ :)

ஆமாம் மோகன் எனக்கும் அப்படித்தான் இருந்தது.நானும் ஆசிப்பும் திரையரங்கம் சென்று பார்க்கும் தமிழ் படங்கள் எல்லாமே மொக்கை படங்களாக அமைந்துவிடுவது மிகப்பெரிய சோகம்..முதல் முறையாய் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியுடன் திரும்பினோம்..

Ayyanar Viswanath said...

லக்கி, அதிஷா, குசும்பன், தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி :)
நமக்கான உலகங்கள், நமக்கான பிடித்தங்கள், நமக்கான விருப்பங்கள் தனித் தனி.. இது எனக்கான பிடித்தம் அவ்வளவே..

நன்றி யு.எஸ் தமிழன்

நன்றி மஞ்சூர்

Ayyanar Viswanath said...

நன்றி உண்மைத் தமிழன்..

Ganesan said...

சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம்.

appo enakku pitikum

kaveri ganesh

ச.பிரேம்குமார் said...

திரைப்படம் குறித்த உங்கள் பார்வை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. சீக்கிரமே பார்க்க வேண்டும் :)

//நீர் அருந்தும் மனநிலைதான் இருந்ததெனக்கு.மிகுந்த தாகத்துடன் அந்நீரைக்குடித்துவிட முனைகையில் அஃதொரு முத்தமாய் வடிவமெடுத்தது.//

இயல்பான ஒரு முத்தத்தை வெகு அழகாய், இயல்பாய் சொல்லியிருக்கிறீர்கள்.

ச.பிரேம்குமார் said...

//படம் இருபது நாளை கூண்ட தாண்டாது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர்!//

ம்ம், படம் பார்த்து விட்டது நான் இதற்கு பதில் எழுதனும். இருந்தாலும் லக்கி சொல்வது உண்மையில் நடந்தாலும் நடக்கலாம்.

நம்ம ஊரில் மசாலா படங்களுக்கு தானே மரியாதை இருக்கிறது :(

MSK / Saravana said...

வாரணம் ஆயிரம் படைத்தை பார்த்துவிட்டு வந்து என் கருத்தை சொல்கிறேன்.. :)

MSK / Saravana said...

//நீர் அருந்தும் மனநிலைதான் இருந்ததெனக்கு.மிகுந்த தாகத்துடன் அந்நீரைக்குடித்துவிட முனைகையில் அஃதொரு முத்தமாய் வடிவமெடுத்தது.முத்தங்கள் வடிவமிலிகள், உருவமிலிகள், எண்ணற்றத் தன் பெருக்கிகள், உடையக் காத்திருக்கும் நீர்க்குமிழிகள், உடைவதற்காய் ஏங்கும் உயிருள்ள கூடு முட்டைகள்.மேலும் முத்தங்கள் உடைந்த நொடியில் பறக்கத் துவங்கும் அசுர வளர்ச்சி கொண்டவை யாகவுமிருக்கின்றன.//

யப்பா... சான்ஸே இல்லை.. அழகா எழுதி இருக்கீங்க..

anujanya said...

முதலில் இரண்டு பதிவுகளாகப் போடாத உங்களுக்குக் கண்டனங்கள்.

வாரணம் ஆயிரம். நான் இருக்கும் ஊரில் இன்னும் வரவில்லை. சூர்யா எனக்கும் பிடித்தவர் என்றாலும், மனைவிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கட்டாயம் பார்த்தே தீர வேண்டும். லக்கி பதிவு பார்த்து படம் 'so, so' என்று தோன்றியது. மோகன்தாஸ் சற்று தெம்பு கொடுத்தார். உங்கள் பதிவு நிறையவே எதிர்பார்க்க வைக்கிறது. குசும்பன் trade mark style இல் சொன்னாலும், லக்கி சொல்வது போல் படம் வணிகரீதி வெற்றி காணாதோ என்ற ஐயம் இருக்கிறது. நீங்கள் தனியாக வேறு பதிவில் எழுதியிருந்தாலும், மூன்று பதிவுகளுமே பாடல்கள் பற்றி (நெஞ்சுக்குள்ளே, முன்தினம்) குறிப்பிடாதது ஆச்சரியம். Fingers crossed ! (அதிஷா மன்னிப்பாராக :) )

இப்போது முத்தம். உங்க தளம். சரவணன் அடைப்புக்குறிக்குள் காட்டிய அனைத்தும் நானும் மிக ரசித்தவை. கூடுதலாக 'பாறையின் மீது வழுக்கும் தற்காலிக அருவியினை'. மொத்தத்தில் முன்தினம் யுவராஜ் அடித்த சதம் போல் அமர்க்களம். பாருங்களேன், சினிமாவுக்கு எட்டு வரி என்றால் கவிதைக்கு நாலு வரி. :))

அனுஜன்யா

கார்க்கிபவா said...

//நமக்கான உலகங்கள், நமக்கான பிடித்தங்கள், நமக்கான விருப்பங்கள் தனித் தனி.. இது எனக்கான பிடித்தம் அவ்வளவே.//

தவறாக நினைக்க வேண்டாம் சகா. ஒரு உரிமையில் கேட்கிறேன். இதேப் போல பேரரசுக்களை ரசிப்பவர்களும் சொல்லலாம் அல்லவா? அவர்களை பகடி செய்வது போல உங்கள் எழுத்துகள் இருந்ததை சில் இடங்களில் படித்த்தாய் ஞாபகம். (தர்ஷினியிம் பேரரசுக்களும்)

Ayyanar Viswanath said...

கணேஷ்:நன்றி

நிர்வாகி:நன்றிய்யா :)

சரவணக்குமார்
படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்

Ayyanar Viswanath said...

அனுஜன்யா:பாடல் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு போட்டாயிற்று என்பதனால் விட்டாயிற்று..முத்தம் குறித்து தனிப்பதிவா :) இச்சிறு பகிர்வே சூனியம் வைத்துக்கொண்டது போலத்தான் :))

கார்க்கி
எனக்கு பேரரசுவை பிடிக்காது அதனால் கிண்டலடிக்கிறேன் ஆனால் பேரரசுவை பிடித்தவர்களிடம் போய் உனக்கெப்படி பேரரசுவை பிடிக்கலாம் எனவெல்லாம் கேட்பதில்லை..அடுத்தவர்களுக்கான ரசனைகள் விருப்பங்கள் குறித்து விவாதிக்க/கிண்டலடிக்க எதுவுமில்லை..ஆனால் எனக்கு பிடித்தவற்றை சொல்லவும் பிடிக்காதவற்றை சொல்லவும் நான் எப்போதும் தயங்கியதில்லை...

MSK / Saravana said...

//இச்சிறு பகிர்வே சூனியம் வைத்துக்கொண்டது போலத்தான் :))//

சூனியம் என்றாகிவிட்டது.. கொஞ்சம் பெரிய சூனியமாக வைத்திருக்கலாம்.. படிக்கும் எங்களுக்கு கொஞ்சம் பெரிய சந்தோசத்தை தந்திருக்குமல்லவா..


அய்யனார் அண்ணா.. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது..
நகுலன் நாவல்கள், சீரோ டிகிரீ, உள்ளே இருந்து சில குரல்கள், சொல் என்றொரு சொல், ஆத்மாநாம் தொகுப்புகள் வாங்கி வந்தேன்.. படித்து விட்டு சொல்கிறேன்..

உண்மையில் கொஞ்சம் பயமாய் இருக்கிறது.. எதை முதலில் படிக்கலாம்.. எப்படி படிக்கலாம் என்பது முதற் கொண்டு.. எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாக இருக்குமோ என்பது வரை.. :)

வண்ணான் said...

இந்த படமெல்லாம் நல்லா இருக்கா???


முத்திடுச்சி...

Anonymous said...

//நமக்கான உலகங்கள், நமக்கான பிடித்தங்கள், நமக்கான விருப்பங்கள் தனித் தனி.. இது எனக்கான பிடித்தம் அவ்வளவே.//

மிகச்சரி அய்யனார்.

சென்ஷி said...

எழுத்தா எழுதி தள்ளாம ஒரே வார்த்தையில சொல்லணும்னா அசத்தலாயிருந்தது உங்க பதிவு...

வாரணம் ஆயிரம் பார்த்திடறோம் :))

ஆளவந்தான் said...

ayyanar,

I used to visit your blog to gather more idea about foreign movies.

by reading your blog, i got a chance to see Last tango in paris, House of sand and fog, the sea inside(will be seeing this week-end)

if you get a chance, can you visit this post.
http://amarkkalam.blogspot.com/2008/11/natalie-portman.html

உயிரோடை said...

முத்தங்கள் வடிவமிலிகள், உருவமிலிகள், எண்ணற்றத் தன் பெருக்கிகள், உடையக் காத்திருக்கும் நீர்க்குமிழிகள், உடைவதற்காய் ஏங்கும் உயிருள்ள கூடு முட்டைகள்.மேலும் முத்தங்கள் உடைந்த நொடியில் பறக்கத் துவங்கும் அசுர வளர்ச்சி கொண்டவை யாகவுமிருக்கின்றன.

arumaiya solli irukinga Ayyanar.

Varanam aayieram padam pathi nan solla nenaichathaiye solli irukinga.

Indha padathai poie nalla illai nu soltrangale...

Featured Post

test

 test