Saturday, February 16, 2008

குற்றவுணர்விலிருந்து விடுபட(ல்)



ஒரு பெண்ணை முத்தமிடுமுன்
சற்று யோசியுங்கள்
பின்னெப்போதாவது அவை
மீளவே முடியாத
பின்னிரவுக் குற்றவுணர்வுகளின்
ஊற்றுக்கண்ணாகி விடலாம்...

அழுத்தம் கொண்டு மூடப்பட்டிருக்கும்
புட்டியினைத் திறக்கும் முன்பும் யோசியுங்கள்
அவை கருப்புநிற தேவதைகளை
வெளியேற்றும் சக்தி கொண்டவை..

ஒரு விழியுயர்த்தல்
ஒரு புன்னகை
அன்பின் நெகிழ்ந்த கைப்பற்றல்
இவைகளைக் கூடுமானவரைத் தவிர்க்கப்பாருங்கள்
உங்களின் அடையாளங்களை இல்லாமலாக்கிவிடும்
அபாயத் தன்மை கொண்டவை

நீங்கள் எதையாவது எழுதிக்கொண்டிருந்தால்
எதிலாவது தீவிரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்
உடனடியாக அவைகளை ஏறகட்டுங்கள்
பாதுகாப்பான உலகம் முகமூடிகளுக்குப் பின்னாலும்
மெளனங்களுக்குப் பின்னாலும் உயிர்த்திருக்கிறது

பயமற்ற
கழிவிரக்கமற்ற
வலிகளற்ற
வேதனைகளற்ற
குழப்பங்களற்ற
குற்றவுணர்வுகளற்ற இருப்பு
மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும்
வேப்பமரக் கிளைகளிடையேயும்
எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது..

13 comments:

குசும்பன் said...

அருமையாக இருக்கு அய்யனார்! எனக்கே புரிஞ்சதால் மிகவும் பிடித்து இருக்கு!!!

ஆமாம் கோவம் எல்லாம் சரி ஆயிட்டா?:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அய்யனார், தப்பா எடுத்துக்காதீங்க, சமீப காலமா உங்க எழுத்துல ஒரு தொய்வு தெரியுது.

எனக்குப் புரிந்தே இருக்கிறது; விளையாட்டில் சொல்வார்களே - form is temporary but class is permanent என்று.

சுகுணாதிவாகர் said...

இந்தக் கவிதை பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம்.

பாண்டித்துரை said...

குசும்பன் எல்லோருக்குமான புரிதலே இந்தக் கவிதை. அப்படியே எல்லாவற்றிற்கும்......

Anonymous said...

'காதல் நிமித்தமான கதைகளும் உரையாடல்களும்' னு ஒரு அருமையான அழுத்தமான காதல் பதிவு.. அடுத்து ஒரு 'பிறழ்ந்த குறிப்புகள் அல்லது சொய பொலம்பல்' னு பச்சையான முரட்டு பதிவு.. "குற்றவுணர்வுகளற்ற இருப்பு
மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும்
வேப்பமரக் கிளைகளிடையேயும்
எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது." னு சொல்லி இந்த அழகான ஆழமான பதிவு..
அய்யனார் நிறைய பேர் உன்கிட்ட சொல்லிருப்பாங்க.. உனக்கும் தெரிஞ்சதுதான் இருந்தாலும் நானும் சொல்லணும்..
நீயும் ஒரு பைத்தியக்காரன். :-)

KARTHIK said...

//அய்யனார் நிறைய பேர் உன்கிட்ட சொல்லிருப்பாங்க.. உனக்கும் தெரிஞ்சதுதான் இருந்தாலும் நானும் சொல்லணும்..
நீயும் ஒரு பைத்தியக்காரன். :-) //

வானவில்
பதிவில் உள்ள எழுத்துக்களை விமர்சியுங்கள்.
எழுத்தாளரை.வேண்டாமே.

Anonymous said...

கார்த்திக்
//வானவில்
பதிவில் உள்ள எழுத்துக்களை விமர்சியுங்கள்.
எழுத்தாளரை.வேண்டாமே.//
சே சே எழுத்தாளரை விமர்சிக்கலைங்க.. அவரது எழுத்துக்கள் ரோலர் கோஸ்ட்டர்ல போற எஃபக்ட் குடுத்து வேறு வேறு மனநிலைக்கு இழுத்துச் சென்று பைத்தியமாக்குவதால் சொன்னது.. அதுவும் ஒருவித பாராட்டுதான்..

Ayyanar Viswanath said...

குசும்பர்,சுந்தர்,சுகுணா,கோபி பாண்டித்துரை,கார்த்திக்

நன்றி :)

வானவில்
பைத்தியமாதல் மேல இருக்கும் வசீகரந்தான் வேறென்ன சொல்ல..மீண்டும் நிச்சயமா குழந்தையாக முடியாததினால பைத்தியமாகும் முயற்சிதான் இதெல்லாமே ..ர்ர்ர்ரொம்ப உரிமையா திட்டுறிங்களே யார்ங்க நீங்க?:)

ILA (a) இளா said...

//ஒரு விழியுயர்த்தல்
ஒரு புன்னகை
அன்பின் நெகிழ்ந்த கைப்பற்றல்
இவைகளைக் கூடுமானவரைத் தவிர்க்கப்பாருங்கள்//
என்னைப் பொருத்த வரை, இந்த வரிகளில் உடன்பாடு இல்லீங்க. நீங்க சொல்ற மாதிரி இருந்தா மரத்து போன ஜடம் மாதிரி ஆகிராதுங்களா?

வால்பையன் said...

அய்யானாரின் எழுத்துக்கள் மனித கற்பனையின் அடுத்த கட்ட (பரிணாம)வளர்ச்சி.
பைத்தியகாரத்தனம் என்பது என்ன? எண்ண பிறழ்கள். சரி இங்கே நம்முடைய எண்ணங்கள் சரியென்று எப்படி சொல்ல முடியும். ஒரே மாதிரியான எழுத்துகளையும் படித்துகொண்டு, ஒரே மாதிரியான படங்களை பார்த்து கொண்டு அரைத்த மாவே அரைப்பது சலிப்பு தரவில்லையா உங்களுக்கு, இது தான் சரியான எண்ணங்கள் என்றால் அய்யனார் பைத்தியமாகவே இருக்கட்டும். என்ன அய்யனார் நான் சொல்வது !!

வால்பையன்

Anonymous said...

Nalla kavithainga!

(Ithaip padithavudan ithu thaan gnayabagam vanthuthu - http://en.wikipedia.org/wiki/Stoicism)

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

//ஒரு பெண்ணை முத்தமிடுமுன்
சற்று யோசியுங்கள்
பின்னெப்போதாவது அவை
மீளவே முடியாத
பின்னிரவுக் குற்றவுணர்வுகளின்
ஊற்றுக்கண்ணாகி விடலாம்...//

நெசம்தான்ஜி. குற்ற உணர்வின் ஊற்றுக்கண்ணாயிடிச்சு.
ம்ம்ம்

கானகம் said...

//ஒரு விழியுயர்த்தல்
ஒரு புன்னகை
அன்பின் நெகிழ்ந்த கைப்பற்றல்
இவைகளைக் கூடுமானவரைத் தவிர்க்கப்பாருங்கள்
உங்களின் அடையாளங்களை இல்லாமலாக்கிவிடும்
அபாயத் தன்மை கொண்டவை//

உண்மை அய்யனார். எல்லா வரிகளுமே அருமை.. உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கிறேன் பின்னுட்டமிடாமல்..

Featured Post

test

 test