Tuesday, February 26, 2008

காற்று நம்மை ஏந்திச் செல்லும் - "The wind will carry us"


Bād mā rā khāhad bord aka The Wind Will Carry Us (1999)
..........
You,
O green like the soul of the leaves,
Leave your lips to the stroke of mine,
And savor them like swell flavor of an old wine.

If we forget
The wind will carry us away,
The wind will carry us away.
- Forough Farokhza

சூழ்ந்த மலைவெளிகளுக்கு நடுவில் விரிந்த வயல்வெளி.. மிகப் பரந்த வயல்வெளி ... அங்கங்கே மிகப் பிரம்மாண்டமான ஒற்றை மரங்கள்.. சிலது தனித்து.. சிலது அருகருகே.. முன்பெப்போதும் கற்பனை செய்துபார்த்திராத ஒரு வினோதப் பிரதேசம். ஒரு வெள்ளைநிறக் கிராமம் அல்லது வெளுத்த மண்ணின் நிறம் கொண்ட வீடுகள் சூழ்ந்த ஒரு இடம். உயரமான இடத்தில் கட்டப்பட்ட மண்வீடுகள்.வளைந்து, குறுகி, நீண்டு, மிக வினோதமான வடிவு கொண்ட வீடுகள்.நாகரீகத்தின் வலிவான கைகள் நசுக்கியிராத மிக இயல்பான மனிதர்கள் வாழும் ஒரு இடம்.ஒரு அற்புத, வினோத, தொடர்பிலில்லாத, தூரப்பிரதேசம் ஒன்று கண்முன் விரிகிறது. கதாபாத்திரங்கள் மனிதர்களையெல்லாம் விடுவித்து இந்தப் பிரதேசத்தின் அமைதியை, இந்தக் காற்றின் சுகந்தத்தை, இந்த இயற்கையின் எழிலை மொத்தமாய் இந்தச் சிறிய ஒளிப்படக்கருவியினுள் பிடித்துவிட பேராவல் கொண்ட ஒரு அற்புத ஒளிப்பதிவாளனின் தாகத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

சலிப்பான, நீளமான, விறுவிறுப்பில்லாத, திருப்பங்களில்லாத, காதலோ, கதாநாயகியோ, அழுகையோ, சோகமோ, மென்மையோ, உட்கார்ந்து பார்க்க எதுவுமே இல்லாத, பார்வையாளனை குழம்பவோ, குழப்பவோ, நெகிழவோ, எரிச்சலடையவோ வைக்கத் துணியாத ஒரு திரைப்படம்.நூறு வயதிற்கு மேல வாழ்ந்துவரும் மூதாட்டி ஒருத்தியின் மரணத்தைப் பதிவிக்க மூவர் கொண்ட பத்திரிக்கையாளர் / மீடியா பொறியாளர் குழு ஒன்று நகரத்திலிருந்து (tehran) 450 மைல் தள்ளி இருக்கும் மேற்சொன்ன கிராமத்திற்கு வந்தடைகிறார்கள்.இந்த மூவரில் ஒருவர் மட்டுமே திரையில் வருகிறார் மற்ற இருவரும் குரல்களாகவும் தொலைவில் அசையும் / நகரும் உருவங்களாகவும் மட்டுமே படம் முழுக்க வருகிறார்கள் (திரைப்படம் இயங்கும் தளத்திற்கு பெரிதாய் தேவைப்படாத எந்த ஒரு காட்சியும் தேவையில்லாத ஒன்று என்பதின் நிமித்தமாய் இந்த முகங்கள் காண்பிக்கப்படவில்லையோ?)


குர்திஷ் இன மக்கள் வசிக்கும் கிராமத்தின் அத்தனை முகங்களையும் படம் பிடித்திருக்கிறார்கள். சிறுவர் மற்றும் வயதானோர் தவிர்த்து அனைவரும் கடுமையாய் உழைக்கிறார்கள்.நாள் முழுக்க ஏதாவது வேலை செய்தபடியிருக்கிறார்கள்.ஆண்,பெண் வேற்றுமைகள், மதம், கட்டுப்பாடுகள், அறியாமை, எல்லாரிடத்தும் பொதுவாய் இருக்கும் அன்பு என எல்லாவற்றையும் காட்சிகளோடு சேர்த்தபடி மெல்ல நகர்கிறது படம்.படத்தின் பிரதான Engineer கதாபாத்திரம் யாருடனாவது எப்போதும் உரையாடியபடி இருக்கிறான். நகரத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு விழுந்தடித்துக் கொண்டு உயரமான இடத்திற்கு செல்கிறான். இந்த வேலைக்கு அனுப்பியவருடன் உரையாடுகிறான்.இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இறந்துபோகாத மூதாட்டியினால் உடன் வந்தவரும் இவ்வேலையை பணித்தவரும் வெறுப்படைகிறார்கள்.

இவன் ஒரு சிறுவனிடம் தொடர்ச்சியாய் உரையாடியபடி இருக்கிறான்.இவன் தொலைபேசும் மலைக்குன்றில் கிணறு தோண்டுபவர், அவரின் மனைவி, எதிர் வீட்டுப்பெண் ,தேநீர் கடை பெண், எதுவுமே பேசாத ஒரு முதியவர், ஒருமுறை கூட திரையில் வராத படத்தின் மையக்கருவான மூதாட்டி,அய்ந்து நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் சுவாரஸ்யமான மருத்துவர், அத்தோடு கிணறு தோண்டுபவரின் மகள் என இன்னும் ஏகப்பட்ட மனிதர்கள் உருவமாய் குரலாய் திரையில் வருகிறார்கள்.சலாமலேக்கும்! மற்றும் குதாஃபஸ்சும் எப்போதும் பரிமாரிய வண்ணம் நகரும் மிக மெதுவான திரைக்கதை.ஒருநாள் அந்த மூதாட்டி இறந்துபோகிறாள் கும்பலாக பெண்கள் கடந்து போவதை தன்னுடைய புகைப்படக்கருவியினால் மிக விரைவாக படமெடுப்பதோடு திரைப்படம் முடிகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்கி இருக்கும் Abbas Kiarostami ஈரானின் மிக முக்கியமான இயக்குனர். முப்பத்தி இரண்டு வயதில் சாலை விபத்தொன்றில் இறந்துபோன ஈரானிய பெண் கவிஞரான Forough Farrokhzad ன் கவிதைகளும் உமர்கய்யாமின் கவிதைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன இவை படத்தின் கவித்துவத் தன்மைக்கு பெரிதும் உதவுகின்றன.உலகமயமாக்கலின் குறியீடாக Engineer கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளலாம் எப்போதுமே இரண்டு உலகங்களும் சேரமுடியாது என்பதை வன்மையாய் சொல்லியிருக்கும் படமாகவும் இப்படத்தை அணுகலாம்.ஆரம்பத்தில் இக்குழுவினரை அன்போடு வரவேற்று வழிகாட்டியாய் செயல்படும் சிறுவனை உண்மை பேசினான் என்பதற்காக Engineer கடிந்துகொள்கிறான்.அதற்குப் பிறகு எத்தனை வருந்திக் கூப்பிட்டும் அந்தச் சிறுவன் அவனிடம் போக மறுத்துவிடுகிறான்.

வழக்கம்போல இந்தத் திரைப்படமும் ஏகப்பட்ட விருதுகளை குவித்திருக்கிறது.

4 comments:

Anonymous said...

beautifully narrated

good work

பாண்டித்துரை said...

சிங்கப்பூர் வந்தவுடன் சில உலகத்திரைப்படங்கள் பார்த்தேன். அப்பொழுது . இந்தப்படம் பார்த்திருந்தேன் அய்யனார். நீண்டதொரு படமானதொரு உணர்வு எனக்கு இருந்தது.

Ayyanar Viswanath said...

அனானி மற்றும் பாண்டித்துரை : நன்றி

KARTHIK said...

//(திரைப்படம் இயங்கும் தளத்திற்கு பெரிதாய் தேவைப்படாத எந்த ஒரு காட்சியும் தேவையில்லாத ஒன்று என்பதின் நிமித்தமாய் இந்த முகங்கள் காண்பிக்கப்படவில்லையோ?)//

இதை நம்ம ஊர் இயக்குனர்கள் (வாசு,K.S.ரவிக்குமார்.... ) நிச்சயம் பார்க்கவேண்டும்.
நன்றி

Featured Post

test

 test