Sunday, November 25, 2007

சில வியாழக்கிழமை பிற்பகல்களும் ஒரு காதலும்



காதல் உணர்வு எதனால் வருகிறது?ஒரு பெண் ஆணின் மீதும் ஆண் பெண்ணின் மீதுமாய் எதனால் காதல் கொள்கிறார்கள்?உடலின் தேவை,பாலியல் ஈர்ப்பு என்பதோடு மட்டும் காதல் முடிவடைந்துவிடுகிறதா? அல்லது அதையும் தாண்டி புனிதமானது என்பது போன்று வேறேதேனும் காரணங்கள் இருக்கிறதா?சூழல், சமூகம், வாழ்வியல் முறை என்பதையெல்லாம் தாண்டி அல்லது ஒரு பொருட்டாய் மதிக்காமல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட எது தன்முனைப்பாய் இருக்கிறது? என்பது போன்ற சிந்தனைகளை The Brief Encounter திரைப்படம் கிளரச்செய்தது.1945ல் வெளிவந்த பிரிட்டிஷ் திரைப்படமிது.இதன் நாடக வடிவம் 1936 களின் இறுதியிலேயே நிகழ்த்தப்பட்டது எனினும் இரண்டாம் உலகப்போரினால் ஒன்பது வருடங்கள் தாமதமாக 1945 ல் இந்நாடகம் திரைப்படமாக்கப்பட்டது.டேவிட் லீனின் இயக்கத்தில்
வெளிவந்திருந்த இப்படத்தில் லாரா கதாபாத்திரமாக Celia Johnson நடித்திருக்கிறார்.

ஏற்கனவே திருமணமான ஆணும் பெண்ணும் காதல் வயப்படும் கதை.புறநகரில் அன்பான கணவன் மற்றும் குழந்தைகளோடு வசிக்கும் இல்லத்தரசி லாரா எல்லா வியாழக்கிழமைகளிலும் நகரத்திற்கு வருவாள்.கடைவீதிக்கு சென்றுமுடித்த பின் மதிய திரைப்படக்காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.ஒரு நாள் ரயில் நிலைய புத்துணர்வு அறையில் Alec Harvey (Howard) யை சந்திக்கிறாள்.அலெக் ஒரு டாக்டர் திருமணமான இரண்டு குழந்தைகளின் தகப்பன்.இருவரின் ரசனைகள், நாகரீக அனுகுமுறைகள், பேச்சுக்கள் எல்லாம் பிடித்துப்போகவே அடுத்த சந்திப்பிற்காக ஏங்க ஆரம்பிக்கிறார்கள்.அடுத்த சந்திப்பில் காதல் வயப்படுகிறார்கள்.வியாழக்கிழமைகளில் மதியம் 12.30 திலிருந்து இரவு 9.30 வரைக்குமாய் இணைந்திருக்கிறார்கள். திரைப்படம், படகு சவாரி, கார்ப்பயணம் என இவர்களின் காதல் மெல்ல இறுக்கமாகிறது.லாரா ஒவ்வொரு வாரமும் தன் கணவனிடம் தகுந்த பொய்களை மிகுந்த உறுத்தல்களோடு சொல்கிறாள்.தனிப்பட்ட காதலும் பொதுப்பட்ட வாழ்வும் லாராவை அலைக்கழிக்கிறது.போகவே கூடாதென்னும் அவளது உறுதிப்பாடுகள் வியாழக்கிழமைகளில் காணாமல் போகிறது.


தன் நண்பனின் அறைக்கு ஒரு நாள் லாரவை கூட்டி செல்கிறான் அலெக்.அப்போது எதிர்பாராத விதமய் அலெக்கின் நண்பன் அறைக்குத் திரும்புகிறான்.லாராவை பின்புறமாய் வெளியேற்றிவிட்டு நண்பனை வரவேற்கிறான்.அந்த நிகழ்வில் திடுக்கிட்டு அவமானமடைந்த லாரா அவர்களின் உறவின் அபத்தங்களை உணர்ந்துகொள்கிறாள்.இரவில் ஆளற்ற சலையில் மழையில் நனைந்தபடி ஓடுகிறாள்.யாருமற்ற ஓரிடத்தில் புகைத்தபடி வெகுநேரம் அமர்ந்திருக்கிறாள்.பின் பிரிந்துவிடுவது மட்டுமே இத்தகைய அலைகழிப்புகளுக்கு தீர்வாய் இருக்க முடியும் என முடிவெடுக்கிறாள்.இருவரும் பேசி பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள்.தொந்தரவுகளுடன் நேரிடும் பிரிவின் துயர் தாளமல் ஒரு கணம் தற்கொலைக்கு முயன்று பின் மீள்கிறாள் லாரா.அவளின் சமீபத்திய சலனங்களை புரிந்துகொள்ளும் கணவன் என்னிடம் திரும்ப வந்ததிற்கு நன்றி என கட்டிக்கொள்கிறான்.

திருமணமான ஆண் எவ்வித உறுத்தல்களும்,தயக்கங்களும்,அலைக்கழிப்புகளும் இல்லாமல் இன்னொரு பெண்ணை மிகுந்த சுதந்திரத்தோடு காதலிக்கிறான்.ஆனால் திருமணமான பெண்ணிற்கான காதலில் இந்த சுதந்திரம் இருப்பதில்லை.தாய் என்கிற இன்னொரு வடிவம் பெண்ணிற்கான தனிப்பட்ட வாழ்வினை கேள்விக்குட்படுத்துகிறது.கணவன் நல்லவனாய் இருப்பதையும் மீறி பெண்ணிற்கான தேவைகள் தன் எல்லைகளை நீட்டிக்கிறது.அந்த சுதந்திர தன்மை தன் அழகியலையும்,அபத்தங்களையும்,அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது.
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாய் இந்தத் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது.



பெரும்பாலான காட்சிகள் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.கடைசி ரயிலை பிடிக்க ஒரு பிளாட்பாரத்திலிருந்து இன்னொரு பிளாட்பாரத்திற்கு ஓடுவது, சப் வே யில் முத்தமிடுவது, தவிப்புகளோடு காத்திருப்பது, துயரங்களோடு பிரிவது, தற்கொலைக்கு முயன்று வீச்சமான வெளிச்சத்தில் பயந்து பின் வாங்குவதென இவர்களின் காதல் முழுக்க முழுக்க ரயில் நிலையம் சார்ந்தே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.திரைப்படம் லாராவின் தன் சார்ந்த மொழியாய் வெளிப்பட்டிருப்பது ஒரு நாவலை படிக்கும் மன உணர்வை தருகிறது.திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.என் நண்பனொருவனால் முழுமையாய் பார்க்கமுடியவில்லை.இத் திரைப்படத்தின் வீச்சம் அவனை அலைக்கழிப்புக்குள்ளாக்கியது.

17 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

The Brief Encounter படம் பற்றி சுபமங்களாவில் ஒரு குறிப்பு படித்த ஞாபகம் (பிரம்மராஜன்.?).

விரிவான அறிமுகத்திற்கு நன்றி.

இந்த மாதிரி படங்களெல்லாம் எங்கு கிடைக்கின்றன உங்களுக்கு.?

Anonymous said...

//இந்த மாதிரி படங்களெல்லாம் எங்கு கிடைக்கின்றன உங்களுக்கு.?//

யானும் இவ்வண்ணமே கோரும்.....

இந்தப் படத்தின் கருவுடன், தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் சமூகக் கட்டமைப்புகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பிருப்பதாய்த் தோன்றுகிறது.

இதைப் பற்றி நிறைய்ய யோசிக்க வேண்டும்.

Anonymous said...

//திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.//

இந்த ஒரு வரியை வைத்துக் கொண்டே நிறைய்ய விவாதிக்கலாம் போல் தோன்றுகிறது தோழரே?????

ஆனால் அது இந்த படத்திற்கான விவாதமாய் இருக்காது. உங்களது எழுத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீதான் உங்களாது பார்வையைப் பற்றிய விவாதமாய்த்தான் இருக்கும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Ayyanar Viswanath said...

நன்றி சுந்தர்...பார்சலில் அனுப்பவா :)

நந்தா

/உங்களது எழுத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீதான் உங்களாது பார்வையைப் பற்றிய விவாதமாய்த்தான் இருக்கும்./

எனக்கு புரியலியே நந்தா ..எதுவாயிருந்தாலும் தயங்காம முன் வைங்க..உரையாடலாம்..

அதுக்கு முன்னால இந்த விளக்கம்
/திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.//
இந்த வரியை நான் பயன்படுத்தியது
/என் நண்பனொருவனால் முழுமையாய் பார்க்கமுடியவில்லை.இத் திரைப்படத்தின் வீச்சம் அவனை அலைக்கழிப்புக்குள்ளாக்கியது./ இதற்காகத்தான்..இந்த திரைப்படம் முன் வைக்கும் சிக்கல்கள் சம்பந்தபட்ட மனிதர்களை நிச்சயம் அலைக்கழிப்புக்குள்ளாக்கும் என்பதினாலதான்..

Anonymous said...

சே!ஏமாத்திட்டியேய்யா. நானும் உனக்கு வியாழக்கிழமையானா தவறாமல் வரும் காதல் மாதிரி ஏதோ ஒரு சுயவிமர்சனம் போலிருக்குன்னு ஆனந்தமா வந்தா இப்படி சொதப்பிட்டியே நைனா :-)

சாத்தான்குளத்தான்

Anonymous said...

மிகவும் அழகான அறிமுகம் அய்யனார். நன்றி. இதே காட்சிகளை அப்படியே தழுவி "Life in a metro " திரைப்படத்தில் (in one episode of it)உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

1945 ல் வெளிவந்த திரைப்படங்கள் விசிடி வடிவில் கிடைக்கின்றதா ? உங்களைப்பார்க்கையில் சற்றே பொறாமையாகதான் இருக்கிறது.

தொடர்ந்து பதியுங்கள்

சிவா.
sivaramang.wordperss.com

Ayyanar Viswanath said...

அண்ணாச்சி ஏன் இந்த கொலவெறி :(
பேரரசு பதிவு பெண்டிங் இருக்கு அத போய் எழுதுங்க ..


நன்றி சிவா

இந்த படம் டிவிடி யாகவே கிடைக்கிறது.பழைய திரைப்படங்களை டிவிடி யாக மாற்றும் வசதிகள் இப்போது அதிகரித்து வருகிறது க்ரிட்டிரீயன் கலெக்சன் பெரும்பாலும் எல்லா பழைய க்ளாசிக்குகளையும் டிவிடி களாக மாற்றிவிட்டது.டிவிடி யாக பார்ப்பதில் ஒரு வசதி என்னவென்றால் திரைப்படம் சார்ந்த மேலதிக தகவல்களை சுலபமாய் பெறமுடிகிறது..:)

Anonymous said...

////திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது.//

இதே வரிகளை சமூக கட்டமைப்பை அல்லது ஒழுக்க நெறிக்ளை வலியுறுத்துபவர் எழுதி இருந்தால்,

"திருமணமாகியும் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால், அவர்களாது ஈர்ப்பின் பின் ஒளிந்து நிற்கும் அபத்தம் புரியும், அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். அவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்"

என்றுதான் எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது.

அதாவது வாழ்வியல் கட்டமைவுகளை எதிர்ப்பது எனும் காரணத்தினாலேயே இந்த வரிகளை எழுதினீர்களோ???

நான் கேட்க விரும்புவது, கட்டமைவுகளை கேள்விகளுக்குட்படுத்துவது என்பதூ வேறு. கட்டமைவுகளை எதிர்த்துச் செய்யும் எல்லா செய்லகளையும் ஆதரிப்பது என்பது வேறு.

இந்தப் ப்டம் அவர்களது குற்ற உணர்ச்சியை கண்டிப்பாய் தூண்டி விடத்தான் செய்யும். அந்த அலைக்கழிப்பு ஒரு நல்ல புரிதலை நோக்கித்தானே அய்யனார்.

(அடப்பாவி இந்த ஒரு வரியப் பிடிச்சுக்கிட்டு இவ்ளோவ் பேச்சு தேவையா என்று தோன்றுகிறதோ?)

(ரெண்டாவது தடவையா டைப் பண்றேன். முத தடவை சரியா Send ஆகலைன்னு நினைக்கிறேன்.

Ayyanar Viswanath said...

/கட்டமைவுகளை கேள்விகளுக்குட்படுத்துவது என்பதூ வேறு. கட்டமைவுகளை எதிர்த்துச் செய்யும் எல்லா செய்லகளையும் ஆதரிப்பது என்பது வேறு./

முதலில் சரியான புரிதலுக்கு நன்றி நந்தா..சின்னதா ஒரு பயம் கூட வருது கி க்கும்/யும் க்குமான இடைவெளிய சரியாபிடிக்கிர மக்கள் இன்னும் எதை எதையெல்லாம் புரிஞ்சி வச்சிருக்காங்களோன்னு :)

இந்த குறிப்பிட்ட விசயத்தை (திருமணத்திற்கு பின் வேரொருவரை காதலிப்பது)வெகு கவனமாக அணுக வேண்டியுள்ளது நந்தா..தவறு சரி என்பதற்கு நாம் யார் என்ற கேள்வியும் உடன் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.. இது முழுக்க முழுக்க தனிநபர் சார்ந்தது என்றோ திருமணம் என்கிற சமூக ஒழுங்கிற்கான எதிர் என்றோ இருவேறு நிலைப்பாடுகளில் அலச முடியாதது.
(இரண்டும் பிணைந்திருப்பதால்)

தனி நபர் அடிப்படையில் தனி நபர் மனம் என்பது எந்த கட்டுக்குள்ளும் அடங்காதது அதை தவறு சரி என இருவேறு நிலைப்பாட்டுகுட்படுத்துவது அபத்தமானது.

சமூக அடிப்படை என்பதை முற்றாக எதிர்க்கவில்லையெனினும் தனிநபரை துயரத்திலாழ்த்தி ஒரு புனிதத்தை கட்டமைக்க வேண்டிய அவசியம் சமூகத்திற்கு இருப்பது அதன் இயல்புத் தன்மையாகிவிட்ட அவலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது..

என்னளவில் திருமணத்திற்கு பின் எழும் காதலில் எந்த தவறுமில்லை..காதல் உணர்வு மிக இயல்பானது அது எந்த நிலையில் அல்லது எந்த வயதில் வந்தால்தான் என்ன?உணர்வு மட்டும் உண்மையாய் இருந்தால் நல்லது...

/இந்தப் ப்டம் அவர்களது குற்ற உணர்ச்சியை கண்டிப்பாய் தூண்டி விடத்தான் செய்யும். அந்த அலைக்கழிப்பு ஒரு நல்ல புரிதலை நோக்கித்தானே அய்யனார். /

திருமணத்திற்கு பின் வரும் காதலில் உடன்பாடு என்பதால் இந்த அநாவசிய அலைக்கழிப்புக்கு சம்பந்தபட்டவர்களை உட்படுத்த நான் விரும்பவில்லை :)

ஆடுமாடு said...

அய்யனார் அழகான விவரிப்பு.

//திருமணமாகி காதலித்து கொண்டிருப்பவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது//
நெசமாத்தான் சொல்றியா?

Ayyanar Viswanath said...

ஆடுமாடு உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா? சம்பந்தபட்டவங்களுக்கு கடுதாசி போடனுமா :))

Anonymous said...

thanks for sharing

raja

seethag said...

எப்படிஎப்படியோ ப்ரவுஸ் பண்ணி உங்க பதிவில் வந்தேன்.
கண்களை அகலவிரிய வைத்தது உங்கள் பதிவு.
காதல் என்பது ஒரு உணர்வு.அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.அதை வைத்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் எனபது தான் ப்ரச்சினையாகுமே ஒழிய காதல் அல்ல ப்ரச்சினை..ஆவீயில் கடனதவருடம் ஒரு கட்டுரை வந்திருந்தது. மிகவும் ஏழையான பெண் தன் 50 களில் உள்ளவர் தன் சிறுவயது காதலனைப்பற்றி தெரிந்ததும் கணவனிடம் சொல்லிக்கொண்டே அவருடய காதலன் உடல் நலக்குறைவாக இருப்பதால் கவனிக்கப் போய்விட்டார் என்று. அந்தப் பெண்ணிடத்தில் உள்ள நாணயம் எனக்குக்கிடையாது என்று நினைக்கிறேன்.

innocence என்றொரு ஆஸ்திரேலிய படம் கிடைத்தால் பாருங்கள்.

நீங்கள் சொன்னது போல் இருக்கும் க்ளாசிக்ஸ் எங்கு கிடைக்கும் என்று சொல்ல இயலுமா?

ஹரன்பிரசன்னா said...

Thanks for the post. Nice intro about the movie. Good Prose. Regards.

கிருத்திகா ஸ்ரீதர் said...

பொதுவாக ஒரு சில பதிவுகளுக்கு. பின்னூட்டம் இடுவது அவ்வளவு பொருத்தமாக இராது. படித்து முடித்தபின் வருகின்ற கனத்த மெளனத்தை கலைக்க விருப்பமில்லாத கணங்கள் அதுவாயிருக்கும். அய்ய்யனாரின் பதிவுகள் பொதுவாக அந்த வகையை சேர்ந்தது. ஆனாலும் இந்த பதிவின் பின்னுட்டத்திற்கு(நந்தாவின்), பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுத முனைந்துள்ளேன்.
என் கருத்துப்படி அந்த படம் வெறும் உறவுகளின் மீதான விமர்சனங்களாக மட்டும் தோன்றாது… எல்லா உணர்வு சார்ந்த, சுய விழைவுகளைப்பற்றிய விமர்சனமாகத்தான் தோன்றும்.
அது கட்டமைப்புகளோடு கூடிய திருமண உறவாயும் இருக்கலாம், அல்லது அலுவல் சார்ந்த வரயறுக்கப்பட்ட விதி மீறல்களாயும் இருக்கலாம், ஆனால் இவை எல்லாமே தனி நபர் ஒழுக்கத்தையும், அதை, அவர்களை, சார்ந்தவர்களின் சாதக பாதகங்களையும் பொறுத்தே அமையும் என்பது என் ஏண்ணம்.
//இதே வரிகளை சமூக கட்டமைப்பை அல்லது ஒழுக்க நெறிக்ளை வலியுறுத்துபவர் எழுதி இருந்தால்,

"திருமணமாகியும் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால், அவர்களாது ஈர்ப்பின் பின் ஒளிந்து நிற்கும் அபத்தம் புரியும், அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். அவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்......//
இதில் உபதேசம் செய்வதற்கு ஒன்றும் இல்லை, உண்மையான தனி மனித நெறிகள் தன் சுய விழைவின்பார் பட்டதேயாயிருக்கும்.

Ayyanar Viswanath said...

நன்றி ராஜா

சீதா

இங்கு துபாயில் இரண்டு மூன்று கடைகளில் நல்ல கலெக்சன் இருக்கிறது.பாண்டியில் நிறைய தேடி பிடிக்கலாம்..சென்னை பெங்களூரிலும் கிடைக்கும்..பொறுமை மிக மிக அவசியம் எங்காவது ஒரு இடுக்கில் தூங்கிக்கொண்டிருக்கலாம் உங்களை தூங்கவிடாமல் செய்யும் திரைப்படமொன்று :)

Ayyanar Viswanath said...

நன்றி பிரசன்னா

கிருத்திகா
தனி நபர் விழைவு மட்டுமே ஒழுக்கம் விதிமுறை போன்றவைகளை நிர்ணயிக்கின்றன.அவரவர் உலகத்திற்கு அதது என பொதுப்படுத்தி மகிழ்ந்துவிட்டு போவதுதான் என் உலகத்தை சிக்கலில்லாமல் பார்த்துக்கொள்கிறது.

Featured Post

test

 test