Wednesday, July 25, 2007

விழிகளில் மழையைத் தேக்கி வைத்திருப்பவளின் நினைவுக்குறிப்புகள்



Memories of a Geisha (2005)

மிதந்து கொண்டிருக்கும் இவ்வுலகின் வெளியை நடனப்பெண் தனது பாவனைகளால் நிரப்புகிறாள். உங்களை மகிழ்விக்க இசைக்கருவிகள் மீட்டுகிறாள்.தனது நடனத்தின் மூலம் உங்களின் பொழுதுகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாள்.கருநிழல் படிந்த அவளின் பின்புலம் யாரும் அறியாதது மேலும் அது மிகவும் ரகசியமானதும் கூட.


கேளிக்கைக்காக பயன்படுத்தப்படும் பெண்களின் வாழ்வு சந்திக்கநேரிடும் துயரங்களை.உடலாக மட்டுமே பார்க்கப்படும் பெண்ணின் உணர்வுகளை.சட்டென மாறிப்பொகும் அழகின் நிரந்தரமில்லாத தன்மையை பதிவு செய்திருக்கும் இப்படம் ஜப்பானின் கலாச்சார பிரதிகள் என்றைழக்கப்படும் நடனப்பெண்களின் வாழ்வு பற்றிய சிறந்த பதிவு.1930 களின் இறுதிவாக்கில் சம்பவங்கள் நடைபெறுகின்றன.ஆர்தர் கோல்டன் நாவலின் திரைவடிவத்தை இயக்கி இருப்பது ராப் மார்ஷல் இவர் சிகாகோ படத்தை இயக்கியவர்.ஸ்பீல்பெர்க் தயாரித்த இப்படம் சிறந்த ஓளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு,மற்றும் சிறந்த கலை நுட்பத்திற்க்கான மூன்று அகாடமி விருதுகளை குவித்தது.சயூரியாக நடித்திருப்பது zhank ziyi இவர் The road home திரைப்படத்தில் நடித்தவர்.இத்திரைப்படம் 2005 ல் வெளிவந்து.


ஒரு கடற்கரையோர கிராமத்தின் சிறுகுடிலிலிருந்து இரண்டு சிறுமிகள் மழை வலுத்த இரவொன்றில் பலவந்தமாய் பெயர்த்தெடுக்கப்பட்டு ஜப்பானின் நடனப்பெண்கள் வசிக்கும் வீடுகளுக்கு அடிமைகளாய் விற்க்கப்படுகின்றனர்.கண்களில் நீர் மிகுந்த ஒன்பது வயதான சியோ தனது அக்கா சாட்சு வை பிரிய நேரிடுகிறது.சியோ வின் வீட்டில் அவள் வயதையொத்த பம்ப்கின் என்ற மற்றொரு சிறுமியும் ஏற்கனவே விற்கப்பட்டிருக்கிறாள்.வேலை ஓய்ந்த நேரம் போக இருவரும் நடனப்பெண்களை உருவாக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அங்கே நடனமும் இசையையும் பயிற்றுவிக்கப்படுகிறது.சியோ விற்க்கு நடனப்பெண்ணாகும் ஆசையை விட அந்த இடத்திலிருந்து தப்பித்து தனது அக்காவுடன் எங்காவது சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஹாட்சுமோமா எனும் தலைமை நடனப்பெண்ணுக்கு சியோ வை பிடிக்காமல் போகிறது மேலும் அவள் தன் காதலனுடன் தனித்திருக்கும்போது சியோ பார்த்துவிடுகிறாள். விதிமுறைகளின் படி நடனமாதுக்கள் யாருடனும் உறவு கொள்ளக்கூடாது.சியோவின் மீது வன்மமும் கோபமும் அவளுக்கு அதிகரிப்பதின் நீட்சியாய். அவ்வில்லத் தலைவி சியோ வை நிரந்தர அடிமைப்பெண்ணாக இருக்கும்படி பணித்து விடுகிறாள்.


ஓர் உறைபனி மாலையில் பம்ப்கின் தவறவிட்ட இசைக்கருவியை கொடுக்க கேளிக்கை விடுதிக்கு செல்கிறாள் எதிர்பாராவிதமாய் அக்கணவானை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறாள்.அவளின் அழகில் கவரப்படும் அக்கணவான் மெம்ஹா என்ற மற்றொரு நடனப் பெண்ணை அனுப்பி சியோ வை ஒரு நடனப்பெண்ணாய் தயார்படுத்த பணிக்கிறார்.மெம்ஹா சியோ வை அவளின் அடிமை உலகிலிருந்து மீட்டெடுக்கிறாள்.ஓற்றைப் பார்வையில் ஓர் ஆணை சாய்க்கும் வித்தை கற்றுத்தருகிறாள் நடனம்,இசை,நேர்த்தி,பாவம் என எல்லாம் தேர்ந்த நடனப்பெண்ணாக மாறுகிறாள்.இப்போது சியோ வின் பெயர் சயூரி.

சயூரி புகழடைகிறாள்.எல்லா பணக்கார கிழவர்களும் சயூரி யின் மேல் காதல் கொள்கின்றனர்.இவள் அடிமையாய் இருந்த வீட்டின் தலைமை நடனப்பெண்ணான ஹாட்சுமோமா வின் அறை சயூரியின் வசமாகிறது.சரியான விலைக்கு சயூரி யை விற்க ஆள்தேடிக்கொண்டிருப்பாள் மெம்ஹா.இந்த நிலையில் சயூரியின் காதலரான அக்கணவான் தன் நண்பரை மகிழ்விக்க சயூரியைப் பணிக்கிறார்.பெண்கள் மேல் ஆர்வமில்லாத நெபு சோன் சயூரியின்பால் ஈர்க்கப்படுகிறான்.சயூரியின் காதல் சொல்லமுடியாமலே போய்விடுகிறது.திடீரென வரும் போர் எல்லாக் கதவுகளையும் அடைக்கிறது.அத்தனை கேளிக்கைகளும் வண்ணங்களும் நிறமிழக்கத் தொடங்குகின்றன.உயிர் பிரதமானமாய் திசைகளற்று இடம்பெயர்கின்றனர் மக்கள். சயூரி நெபு சோனின் பாதுகாப்பில் ஒரு மலைக்கிராமத்திற்க்கு கொண்டு செல்லப்படுகிறாள். சாதாரண தொழிலாளியாய் சயூரி விழிப்பதும் வேலை செய்வதுமாய் இரண்டு வருடங்கள் கழிகின்றன.ஒருநாள் நெபு சோன் அவளை சந்திக்க வருகிறான். தான் புதிதாக ஆரம்பிக்க இருக்க்கும் வியாபாரம் பற்றியும் அதன் கூட்டாளிகளை மகிழ்விக்க மீண்டும் சயூரியை நடனப்பெண்ணாக மாறும்படிம் கோருகிறான். பம்கின்னின் வனமத்தில் விரும்பத்தகாத சூழலில் அக்கணவான் சயூரியை பார்க்க நேரிடுகிறது.தன் நம்பிக்கைகளை மொத்தமாய் இழந்த சயூரி ஒரு வெளியில் தான் பத்திரமாய் வைத்திருக்கும் அக்கணவானின் கைக்குட்டையை காற்றில் எறிகிறாள்.மீண்டும் மெம்ஹா வுடன் நடனப்பெண்ணாக வாழ்வை தொடருகிறாள்.ஒருநாள் மெம்ஹா பணக்காரர் ஒருத்தரை சந்திக்க சயூரியை அனுப்புகிறாள். அங்கே இவளின் காதலை மொத்தமாய் சுமந்திருக்கும் அக்கணவான் இவளின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.அற்புதமான சூழலில் இருவரும் இணைகின்றனர்.

இதுவரை யராலும் சொல்லப்படாத கதை என்னுடையது என்றபடி சன்னமான பின்குரலோடு துவங்கும் இத்திரைப்படம் கீஷாக்கள் என்றழைக்கப்படும் நடன பெண்களின் வலிகளை பதிவிக்கிறது.உலகம் முழுக்க மதம்,கலாச்சாரம்,பண்பு,குடும்பம்,கட்டமைப்பு என்ற வெவ்வேறு பெயர்களில் பெண்ணின் உணர்வுகளை நசுக்கி சமூகம் தன் போலிக்கட்டமைப்புகளை பெருமையாய் வடிவமைத்துக்கொண்டுள்ளது. மேல்தட்டு மக்களை கேளிக்கைகளில் திளைக்க செய்ய தன் நேர்த்தியான, நளினமான பணிவிடைகள் மூலமாய் அவனை பெருமைப்படுத்த அழகான அடிமைகளான இந்த நடனப் பெண்களை கலாச்சார பிரதிநிதிகள் என பெருமையோடு அழைத்துக் கொள்ளும் ஜப்பானிய கலாச்சாரம் திரைமறைவில் இப்பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் அவலத்தையும் இத்திரைப்படம் பதிவு செய்ய தவறவில்லை.

உடல் என்ற ஒற்றை பரிமாணத்தில் இச்சமூகத்தால் உற்றுநோக்கப்படும் பெண்ணின் துயரங்களை,தனக்கான ஒரு சிறுஅசைவைக்கூட மறுக்கும் அவள் சார்ந்த சமூக கட்டுகளை, மேலும் தான் நசுக்கப்படுகிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்ளமுடியாத அப்பெண்களின் விளிம்புநிலை வாழ்வை,சகப் பெண்களின் போட்டிகளை சமாளிக்க கையாலும் தந்திரங்களை,அழகு மெல்ல நிறமிழக்கும்போது அல்லது போட்டி வலுக்கும்போது மீண்டும் சமூக விளிம்பிற்க்கு துரத்தப்படும் அவலத்தை இப்படம் பதிவு செய்கிறது.

ஹாலிவுட்டில் பெரும்புகழ் குவித்த இத்திரைப்படம் ஜப்பானியர்களின் விமர்சனத்திற்கும் உள்ளானது.கீஷாவின் வடிவம் முழுமையடையவில்லை என அவர்கள் குறைபட்டு கொண்டார்கள்.

9 comments:

கதிர் said...

இந்த படத்தை பார்த்து முடித்ததும் ரொம்ப பிரமிப்பா இருந்தது. மேலோட்டமாக பார்க்கும் நடனப்பெண்களின் பின்புலம் எவ்வளவு கடினமானது என்று.

அந்த பொண்ணு செம அழகுய்யா!!!

முதல்காட்சில அந்த பெண்ணை மழைல இழுத்துட்டு போகும் சீன் ரொம்ப அழகா எடுத்து இருக்காங்க. குறிப்பாக படத்தில் ஒளிப்பதிவு நல்லா இருந்தது.

ஆனாலும் அந்த பொண்ணு கண்ணுலயே நிக்குதுப்பா!

Sridhar Narayanan said...

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க்க வேண்டும். அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!

மங்கோலிய பெண்கள் (ஜப்பானிய / சீன / கொரிய) பெண்கள் எல்லாருமே அழகுதான். பார்பி பொம்மைகள் போல.

தம்பி - இனி உங்கள் பதிவுகளில் இன்னொரு ஸ்டான்டேர்ட் பின்னூட்டம் வரும் என்று தெரிகிறது 'சயூரி' என்ற பெயரில். அப்ப மஞ்சுளா / பாவனா எல்லாரும் என்னாறது??? :-))

Anonymous said...

கவிதை போன்ற திரைப்படத்திற்கு கவிதையாக ஒரு விமர்சனம். மிகவும் அருமை அய்யனார்.

Ayyanar Viswanath said...

ஆமாம் கதிர்
ஒளிப்பதிவை குறிப்பிடத் தவறிவிட்டேன்.கண்ல ஒத்திக்கிறாப்ல இருந்திச்சி இல்ல..அதுவும் அந்த குறுகலான வீதிகளில நெருக்கமான வீடுகளில் காமிரா சும்மா புகுந்து விளையாடி இருக்கும்...வாய்ப்பு கிடைத்தால் தியேட்டர்ல பாக்கனும்யா

Ayyanar Viswanath said...

வெங்கட் மிகவும் நன்றி..இடுகை சற்று பெரிதாகிவிட்டதோ :)

Ayyanar Viswanath said...

சிவா நன்றி

ALIF AHAMED said...

அந்த பொண்ணு செம அழகுய்யா!!!
//

தம்பியே சொல்லும் போது நானும்


ரிப்பீட்டேய்ய்ய்

Jazeela said...

நீங்கள் எழுதும் ஒவ்வொரு திரைப்பட விமர்சனத்தையும் படிக்கும் போது அந்த படத்தை பார்க்க தூண்டுகிறது. ஆனால் பார்த்தால் நீங்கள் எழுதிய அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் ;-)

கனவான் என்றால் கெளரவமானவன் என்று பொருள் என்பது தெரியும் ஆனா 'கணவான்' என்றால் ?

Ayyanar Viswanath said...

நன்றி மின்னல்

ஜெஸிலா படம் பாத்துட்டு சொல்லுங்க
ன கர பிரச்சின பெரும் பிரச்சினயா இருக்கே :(

Featured Post

test

 test