
செய்து முடிக்கப்பட வேண்டியதின் தரம் குறித்தான நிலைப்பாடுகளின் தீவிரத்தன்மை காரணமாக பொறுப்புகளை எப்போதும் தட்டிக் கழிக்கவே விரும்புவேன்.எதிர்பார்த்தலும்,நம்பிக்கை வைத்தலும்,காத்திருத்தலும் என்னை என் நிலையில் இயங்கவிடாதவை.தீவிரமான அன்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.எல்லா அன்பின் பின்னாலும் குளமெனத் தேங்கி நிற்கிறது தேவைகளின் எதிர்பார்ப்புகள்.
எதன் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பலரின் கேள்விகளாக இருக்கிறது.எந்த அடிப்படையில் இவனைத் தேர்வு செய்தார்கள் என்பதும் சிலரின் கேள்விகளாய் இருக்ககூடும்.அடிப்படைகளை நிரூபிக்கும் விதமாகவோ கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகவோ செயல்பட்டிருந்தால் அமைப்பியல் ரீதியாக கட்டமைவுகளின் ஒழுங்குகளை காப்பாற்றிய நிம்மதி என்னை வந்து சேரலாம்.
ஆசுவாசமான இந்த எழுத்தை எப்படி எழுதினால்தான் என்ன?ஏதோ ஒரு வடிவம்.அவரவர் அவரவருக்குப் பிடித்தமான பெயர்களை வைத்துக் கொள்ளட்டும்.குப்பை என்றோ கவிதை என்றோ ஆபாசம் என்றோ அசிங்கம் என்றோ வலியத் திணித்தல் என்றோ அவரவர் உள்ளங்கைக்கு ஏத்தாற்போல் அள்ளிக்கொள்ளட்டும் இல்லை முற்றிலுமாய் புறக்கணிக்கட்டும்.
ஒரு வாரத்தில் சில விதயங்களை பரிசோதித்துக்கொள்ள முடிந்தது(எழுதும் மொத்தமே பரிசோதனைதான்..சிலருக்கு சோதனையாகவும் இருக்ககூடும்).எழுத்து எல்லாரையும் சென்றடையும் வடிவம் எனக்கு சலிப்பைத் தந்தாலும் அசைக்கப் பட்ட சுயங்களின் கைத் தட்டல்களில் சற்றுக் குழம்பித்தான் போனேன்.வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்திலிருத்தலுக்கான விழைவுகள்தானோ?
நட்சத்திர வாரத்திற்க்கு தெரிவு செய்த தமிழ்மணத்திற்க்கும்,பின்னூட்டத்தைப் புறக்கணித்த நண்பர்களுக்கும் நெருங்கிய நண்பர்களின் பாசக்கார பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.
இதெல்லாம் ஒரு எழுத்தா?நீயெல்லாம் ஒரு ஆளா?என எவரும் இந்த வாரத்தில் திட்டவில்லை.வலையில் புதிதான நண்பர்களின் அறிமுகமும் இந்த வாரத்தில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மேலதிகமாய் நம்பகத்தன்மைக்கு வெகு அருகில் வாசகர்களை சில இடுகைகளின் மூலம் கொண்டு சென்றது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.
ஒரு வாரத்தில் வாசிக்காமல் விட்ட இடுகைகள் குவிந்திருக்கிறது.பல மடல்களுக்கு இன்னும் பதில் போடவில்லை.எல்லாம் முடிந்து கிளம்புகையில் நீ ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதி என சமீபத்தில் விழித்த சிவப்புக் குரல்காரன் பின் முதுகைத் தட்டுகிறான்.
ஏன் இவ்வளவு நாட்களாய் வெறும் புரியாத கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருந்தாய்?வேறு வடிவங்களை முயற்சித்திருக்கலாமே என எல்லாத் தரப்பிலிருந்தும் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு…
பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன?