Tuesday, January 3, 2023

King Pele : அஞ்சலி



சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் விளையாடிய ஆட்டங்களைப் பார்த்ததில்லை எனச் சொன்னேன். அப்போதுதான் அகில், பெலே வின் ஆவணப்படம் ஒன்று நெட்ஃபிலிக்ஸில் இருப்பதாகச் சொன்னான். உடனே பார்க்க ஆரம்பித்தோம். முதல் அரை மணி நேரம் ஊன்றிப் பார்த்தவர்கள் மெல்ல நழுவிப் போனார்கள். நான் முழுமையாகப் பார்த்து முடித்தேன். அவர் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்ட அடுத்த நாள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததாலோ என்னவோ நெகிழ்ந்தும் போனேன்.
ஆவணப் படத்தை மிகச் சிரத்தையாக எடுத்திருக்கிறார்கள். கால்பந்துப் போட்டிகளை படத்தோடு இணைத்த விதமும் அபாரமாக இருந்தது. எனக்கு அந்தப் போட்டிகளைக் குறித்து ஒன்றும் தெரியாததால் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருந்தது. அறுபதுகளில் உலகப் புகழை பெலே அடைந்த விதம் ஆச்சரியமானது. இத்தனைக்கும் ப்ரஸீல் என்கிற நாடு உலக வரைபடத்தில் எங்கிருக்கிறதென ஒருவருக்கும் தெரியாது. பெலே ப்ரஸீலை உலகம் அறியச் செய்தார்.
1970 ஆம் வருடம் மூன்றாம் முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு உடை மாற்றும் அறையில் பெலே “I am not Dead “ என மூன்று முறை உரத்துக் கத்தியிருக்கிறார். அவர் அதற்கு முன்பு
விளையாடிய இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலும் காயமடைந்து விலக நேரிட்டது. உலகக் கோப்பை நமக்கு ஒத்து வரவில்லை என முடிவு செய்து இனி உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை எனவும் அறிவித்திருக்கிறார். ஆனால் அரசாங்கத்தின் அழுத்தங்களால் வேறு வழியின்றி கலந்து கொண்டார்.
அந்த முறை எல்லாமும் சரியாக அமைந்து வெற்றிக் கோப்பையையும் முத்தமிட்ட பிறகு இப்படிக் கத்தியிருக்கிறார்.
அப்போது உடனிருந்த சக விளையாட்டு வீரர் கிட்டத்தட்ட ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்தும் அந்தத் தருணத்தை நினைத்தால் உடல் சிலிர்க்கிறதென படத்தில் சொல்கிறார்.
“வெற்றிகள் பரிசளிப்பது கோப்பையை மட்டுமில்லை, மாபெரும் விடுவிப்பை, அதையே நான் அதிகம் விரும்புகிறேன்”. என்பதுதான் பெலே வின் கூற்று. பதினேழு வயதில் ப்ரஸீலுக்காக ஆடத் துவங்கி முப்பது வயதில் முதல் தர ஆட்டங்களிலிருந்து விலகிவிடும் பெலே வை கால்பந்தின் பிதாமகன் என ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர். அறுபதுகளில் உலகமே பெலே வின் மீது பைத்தியமாக இருந்தது. அதே சமயம் அரசியல் காரணங்களுக்காக பெலேவை விமர்சிப்பவர்களும் உண்டு.
ப்ரஸீல் சர்வாதிகாரத்தால் துன்பப்பட்டபோது அரசாங்கத்திற்கு எதிராக பெலே எதையும் சொல்லவில்லை. அன்று அவர் குரல் கொடுத்திருந்தால், நடந்து கொண்டிருந்த அக்கிரமங்களுக்கு எதிராக நின்றிருந்தால், ஒட்டுமொத்த ப்ரஸீலுமே அவர் பின் திரண்டிருக்கும் என ஒரு கால்பந்து ரசிகர் ஆதங்கப்பட்டதையும் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலாக பெலே எனக்கு கால்பந்து விளையாடுவதைத் தவிர்த்து வேறொன்றும் தெரியாது என்கிறார்.
இன்னும் சிலர் முகம்மது அலியையும் பெலே வையும் ஒப்பிட்டு முகம்மது அலி தன் புகழை எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும் பதிவு செய்கிறார்கள். ஆனால் முகம்மது அலி வாழ்ந்த சூழலில் பேச்சு சுதந்திரம் இருந்தது. ப்ரஸீலிலோ அதற்கும் கூட வழியில்லை. Medici போன்ற ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியிடம் எதுவும் எடுபட்டிருக்காது. பெலே அரசியலில் நுழையாமலிருந்ததே நல்லது எனவும் ஒரு தரப்பு பதில் கூறுகிறது.
கிங் பெலேவுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது அவருக்குத் தெரிந்ததெல்லாம் மைதானமும், பந்தை இலக்குக்கு விரட்டுவதும்தான். தன் வாழ்நாளில் அதை மட்டுமே செய்தார். ப்ரஸீல் மட்டுமல்ல உலகமே அவரை கிங் பெலே எனக் கொண்டாடுகிறது. அதற்கு அவர் முழுத் தகுதியானவர். ‘கிங்’ கிற்கு மனமார்ந்த அஞ்சலி.

மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள்




மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள் எனும் சிறிய நூலை வாசித்தேன். காந்தியின் கடைசி இரண்டு நிமிடங்களைப் பற்றிய ஒரு புனைவு (இரண்டரை விநாடி ஒரு நிமிடம்). வால்டெர் ஏரிஷ் ஷேபர் எனும் ஜெர்மன் எழுத்தாளரால் 1949 இல் ரேடியோ நாடகமாக எழுதப்பட்டது. தமிழில் ஜி.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். நான் வாசித்த பிரதியில் ந.முத்துசாமியின் முன்னுரையும் இருந்தது. நெஞ்சைத் துளைக்கும் தோட்டா எனும் தலைப்பில் எழுதியிருந்தார். இந்த நாடகத்தை தமிழில் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை குழுவினர் நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். அந்த அனுபவத்தையும் முன்னுரையில் பகிர்ந்திருந்தார்.
குரல்கள் மட்டும் பேசிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்ட ரேடியோ நாடகம் இது. காந்தியின் உடலைத் துளைத்த தோட்டா ஒரு குரலாகவும், பூமியும், காற்றும், நதியும் மற்ற குரல்களாகவும் வெளிப்படுகின்றன. காந்தியை நித்தியத்திற்கு அழைத்துச் செல்லும் காந்தியின் சாயல் கொண்ட குரலும் உண்டு. அதற்கும் காந்திக்குமான உரையாடல்கள் மிகுந்த உணர்ச்சிகரமாக எழுதப்பட்டுள்ளன. வாசிக்க வாசிக்க மனம் ததும்புகிறது. அந்தக் குரல், தோட்டா துளைத்த காந்தியின் உயிரை பேரொளிக்கு அழைத்துச் செல்கிறது. அது அழைத்துச் செல்லுமிடம் சொர்க்கம்.
காந்தியை விட சிறந்த தூதுவன் இக்காலத்தில் இல்லை என்பதால் அது அவரை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்கிறது. முதலில் அந்த இடத்தை காந்தி மறுக்கிறார். தான் அங்கு செல்ல தகுதியானவன் இல்லை என குரலிடம் மன்றாடுகிறார். ஆனால் அது சாத்தியமில்லை எனத் தெரிந்த பிறகு அதனிடம் பிரார்த்தனை வடிவில் ஒன்றைக் கோருகிறார். துன்பங்களில் உழலும் எண்ணற்ற மனிதர்களின் ஆன்மா, பிரச்சினைகளில் சிக்குண்டு தவிக்கும் இந்தியாவின் ஆன்மா மற்றும் தன்னைக் கொன்ற கொலையாளியின் ஆன்மா உட்பட சகலத்தையும் ஆசிர்வதித்து தடை ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள் என வேண்டுவதோடு நாடகம் முடிகிறது.
மிக ஆழமான கேள்விகளை நமக்குள் எழுப்பும் நூல் இது.

Wednesday, June 29, 2022

கோவேறு கழுதைகள்



இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை நேற்றும் இன்றுமாக வாசித்து முடித்தேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புதினம் இப்போது வாசிக்கும்போதும் புதிதாக இருக்கிறது. இந்த நாவலை என்னுடைய இருபதுகளில் வாசித்தேன். நேற்றைய வாசிப்பில் முதல் வரியிலேயே அதாவது ஆரோக்கியத்தின் பெயரைப் பார்த்த உடனேயே மனம் ஆழ்மனதிலிருந்து கதையை நினைவுபடுத்திக் கொண்டது. நல்ல படைப்புகளின் தன்மை இதுவாகத்தான் இருக்க முடியும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாடத்தி வழியாக புதிரை வண்ணார்கள் என்கிற பிரிவினரைக் குறித்து அறிந்தேன். கூடவே நிழலாக இமையத்தின் நாவலும் நினைவில் வந்தது. கோவேறு கழுதைகள் நாவலும் தலித் மக்களின் துணிகளை வெளுக்கும் வண்ணார்களின் வாழ்வியலைத்தான் பேசுகிறது. ஆனால் புதிரை வண்ணார் என்கிற சொல் நாவல் உட்பட எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. தொழில் அடிப்படையில் மாடத்தியிலும் கோவேறு கழுதைகளிலும் ஒரே பிரிவினரின் வாழ்வைத்தான் சித்தரித்திருக்கிறார்கள். இரண்டு படைப்புகளிலும் இவர்களின் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள், தீண்டாமைக் கொடுமைகள் எல்லாமும் பதிவாகியிருக்கின்றன. ஒரே வித்தியாசம் மாடத்தியில் வரும் வண்ணார்கள் தலித்துகளைப் பார்க்கக் கூட தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கோவேறு கழுதைகளில் ”வண்ணாத்தி எதிரில் வந்தால் அதிர்ஷ்டம்!” என்பதாகப் பதிவாகியிருக்கும்.

நாவலை வாசித்து முடித்த உடன், மனிதன் எத்தனைக் கீழ்மையானவன் என்பதைத்தான் நினைத்துக் கொண்டேன். வாய்ப்பும் அதிகாரமும் கிடைத்தால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை நசுக்க ஒரு போதும் தயங்குவதில்லை. இவ்வளவு சாதியக் கொடுமைகளோடும், குரூரங்களோடும்தான் தமிழர் வாழ்விருந்தது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். தமிழர் அல்லது முன்னோர் குறித்தப் பெருமை பேசும் ஒவ்வொருவரையும் கட்டிப் போட்டு இந்த நாவலை சப்தமாக வாசிக்க வைக்க வேண்டும். சக மனிதனின் மீது இத்தனை வன்முறைகளை நிகழ்த்திவிட்டு எங்கனம் தமிழர் என்கிற ஒரே சொல்லில் திரள முடியும் என்பதையும் கேட்க வேண்டும்.

மதம், இனம், சாதி போன்ற எந்தப் பின்னொட்டுகளோடும் கும்பல் கூடாதே என்பதுதான் என் தரப்பு. வடிவேலு துண்டால் கூட்டத்தினரின் தலையில் தட்டி விரட்டியடிப்பது போல என் சாதி, என் இனம், என் மதம் என யாராவது சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்தால் அவர்களை கவனமாக விரட்டியடிக்க வேண்டும். இந்த அறிவை வாசிப்பின் வழியாக மட்டும்தான் அடையமுடியும் என்பதால்தான் அனைத்து நிற சங்கிகளையும், தம்பிகளையும் படிங்கடா என அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

புராணங்கள் முன் வைக்கும் காவியப் பெண் பாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலைக்கு நிகரான காவியத் தன்மை கோவேறு கழுதைகளின் நாயகியான ஆரோக்கியத்திற்கும் உண்டு. ”வண்ணாத்தி வந்திருக்கேன்”, ”வண்ணாத்தி மவ வந்திருக்கேன்” என அந்தக் காலனி முழுக்கச் சுற்றிச் சுற்றி அலையும் ஆரோக்கியத்தின் கால்களையும் குரலையும் இப்போதும் கேட்க முடிகிறது.

இமையம் இந்த நாவலில் வண்ணார்கள் வாழ்வியலை விரிவாகப் பேசியதால் மட்டும் இது செவ்வியல் தன்மையை அடையவில்லை. மிக அசலான மொழியும் ஏராளமான சொலவடைகளும், பிற சமூகத்தினரின் தனித்துவங்களும் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கும். இன்றைய மொழியில் சொல்வதென்றால் அற்புதமான ’டீடெய்ல்ட் வொர்க்’. எனவேதான் இன்றும் நிற்கிறது.

மேலும் பண்பாட்டுத் தளத்திலும் இந்த நாவல் மிக முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. அறுவடைக் காலத்தின் சித்தரிப்பு மிக முக்கியமானது. தானியங்கள், உணவு, இன்று இல்லாத ஏராளமான இனக்குழுக்களின் வாழ்வியல் என மிக விரிவான சட்டகத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நாவலில் இருந்து சில வரிகளை கீழே தட்டச்சுகிறேன்.

”கோணி ஊசி, மணி, கொண்டை ஊசி, ரிப்பன், மை, பவுடர்களைக் கொடுத்து தானியங்களை வாங்கினார்கள் குறவர்கள். கூடை, முறம், புட்டி, தட்டு, சிப்புத் தட்டு, படல் செய்கிற குறவர்கள் ஊரை வளையமிட்டுக் கொண்டிருந்தனர். உரல் உலக்கை, கல்லுரல், ஆட்டுக்கல் ஆகியவற்றை கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர். கூத்தாடிகள் வீடுவீடாகப் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தனர். தொம்பன்கள் மாட்டுக் கொம்பு சீவினர். இரவுகளில் ஆட்டம் போட்டனர். தை ஆரம்பித்ததிலிருந்தே தாதன் தெருத்தெருவாக சங்கு ஊதினான். வளையல் விற்கும் நாயுடுப் பெண்கள், அம்மி கொத்தும் குறவப் பெண்கள், கூடை முறம் பின்னும் குறத்திகள், பச்சைகுத்தும் பெண்கள், கைரேகை, கிளிஜோசியம் பார்ப்பவர்கள், மைவைப்பவர்கள், பூம்பூம் மாட்டுக்காரன், உப்பு வண்டிகள், ஈயம் பூசுகிறவன், கருவாடு விற்பவர்கள் என அனைவரும் வந்தனர்.”


Thursday, June 16, 2022

திரையே நிகழாக- தொடர்கள்



நெஃபிலிக்ஸில் Ozark தொடரின் நான்காம் பாகத்தை ஆரம்பித்து நிறுத்தினேன்.  முதல் மூன்று பாகங்கள் சுவாரசியமாகப் போயின. பின்பு அந்த பேட்டர்ன் அலுக்க ஆரம்பித்ததால் நிறுத்தி விட்டேன். ஒரே ஒரு breaking bad தான் இருக்க முடியும். அதே தோசையை திரும்பவும் சுட்டு வைக்கும்போது அலுப்பு வந்து விடுகிறது. இருப்பினும் சுவாரசியமான கதைப் பின்னல்கள், கதாபாத்திரங்கள், மற்றும் எதிர்பாராத ட்விஸ்ட்களுக்காக ஒரு மாதத்தை இந்தத் தொடருக்குத் தந்தேன். அதுவே போதுமானது.

கொஞ்சம் நிதானமான தொடர்கள் எதையாவது பார்ப்போம் என்றெண்ணி அமேசான் ப்ரைமில் பஞ்சாயத்து சீசன் இரண்டை ஒரே அமர்வில் பார்த்து முடித்தேன். பஞ்சாயத்து முதல் சீசன் எனக்கு இன்னும் பிடித்திருந்தது. இதுபோன்ற ஆளரவம் குறைவான கிராம வாழ்க்கை மீதும்  வெள்ளந்தியான  மனிதர்கள் குறித்த கற்பனைகளும் மிருகங்கள் வாழும் நகரங்களில் உழலும் நம் அனைவருக்குமே உண்டு. நம்மிடம் இருக்கும் இந்த நாஸ்டால்ஜி வகை மென் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட இன்னொரு தொடர்தான் இது. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கிராமத்தில் உயர் சாதியினரை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா என்பது போன்ற சலிப்பும் உடன் எழுந்தது. குப்தாக்களும், பாண்டேக்களும் , திரிபாதிகளும் சேர்ந்து நடித்த மற்றும் எடுத்த அவர்களைப் பற்றிய தொடர் போல. மாற்று ஆட்களோ பார்வைகளோ எதுவும் கிடையாது. மிக செளகர்யமாக, மனதை அலட்டிக் கொள்ளாமல் இது போன்ற தொடர்களை எடுக்கலாம், பார்க்கலாம், மூடி வைக்கலாம். அவ்வளவுதான். 

Dark தொடருக்குப் பிறகு அறிவியலின் பக்கம் போகாததால் கொஞ்சம் அறிவியல் புனைவின் பக்கம் ஒதுங்கலாம் என்றெண்ணி Outer Range தொடரின் முதல் இரண்டு பகுதிகளைப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்பேன்.

இந்த நாட்டு நெட்ஃபிலிக்ஸ் Peaky Blinders தொடர் நம்பர் ஒன் இடத்தில் காண்பித்துக் கொண்டிருந்ததால் பார்க்கலாமே என்றெண்னி ஆரம்பித்தேன். அப்படியே இழுத்துக் கொண்டது. முதல் பாகத்தைப் பார்த்து முடித்தேன். சுவாரசியமான தொடர். காலகட்டத்தைக் கொண்டுவந்த மெனக்கெடலும் - வரலாறைப் புனைவோடு இணைத்த அபாரமான திரைக்கதையும் ஊன்றிப் பார்க்க வைத்திருக்கிறது. மொத்த பாகங்களையும் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

கூடவே Apple tv யில் Physical தொடரையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். கதாநாயகியை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவளின் மன ஓட்டங்களை அல்லது மைண்ட் வாய்ஸை இடை இடையே இணைத்திருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.  பல இடங்களில் என் குணாதிசயத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடிந்தது. நம்மால் சகித்துக் கொள்ளவே இயலாத பல இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கடமைக்காக அமர்ந்திருப்போம் இல்லையா – நாயகி அதைப் பல இடங்களில் பிரதிபலிக்கிறார்.

இவற்றுக்கிடையில் நல்ல விமர்சனங்கள் வருவதைப் பார்த்து பிபிசி தயாரிப்பில் வந்திருக்கும் This Is Going to Hurt தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் டெலிக்ராம் வழி பார்த்து - மிரண்டு இது நமக்கானதில்லை என மூடி வைத்தேன். மருத்துவமனைகள் குறிப்பாக பிரசவ விடுதிகளின் மீது எனக்கு ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கிறது. அது தொடர்பான எதையும் தவிர்க்கவே முயல்வேன். இது ஒரு ஃபோபியாதான் – இன்னொரு சமயம் இதைக் குறித்து எழுதுகிறேன்.

ஒரு மலையாள சினிமா கதை விவாதத்தில் பங்கு கொள்ள முடிந்தது. கேரளாவையே மிரட்டிய  இன்னும் முடியாத ஒரு கொலை வழக்கை திரைக்கதையாக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். இதையே நாவலாக்கினால் என்ன என்கிற எண்ணமும் எழுந்திருக்கிறது. மதுரை நாவலை எழுதும் கையோடு இந்தக் கொலைக் கதையையும் எழுதிவிடலாம்தான்.  அதற்கு இந்த ஒட்டு மொத்த சினிமா மற்றும் தொடர் அடிக்‌ஷனை நிறுத்த வேண்டும். புதிதாக எதையும் ஆரம்பிக்காமல் Peaky Blinders மற்றும் Physical தொடர்களை மட்டும் பார்த்து முடித்துவிட்டு நாவல்களுக்குத் திரும்ப வேண்டும்.



திரையே நிகழாக - சினிமா



லுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பரபரவென ஓடிக்கொண்டிருந்த வேலை கடந்த வாரத்தோடு முடிந்தது. கிடைத்த நேர மிகுதியில் ஜோ அண்ட் ஜோ , டான், இன்னலவரெ, சிபிஐ 5, ஐங்கரன், ஜனகனமண, நெஞ்சுக்கு நீதி, சேத்துமான், 12த் மேன் என தமிழிலும் மலையாளத்திலும் வரும் அனைத்து சுமார் படங்களையும் பார்த்து வைத்தேன். 

சிபிஐ 5 மரண மொக்கையாக இருக்கவே இது எப்படி ஐந்து படங்கள் வரை வந்திருக்க முடியும் என முதல் படமான சிபிஐ டைரிக் குறிப்பு (மலையாளம்) படத்தையும் பார்த்தேன். அதுவும் சுமார்தான். கே.மது என்பவர்தான் இந்த சிபிஐ வரிசையின் இயக்குநர். ஒரே மாதிரியான அலுப்பூட்டும் பேட்டர்ன், இது எப்படி 5 படங்கள் வரை வந்தது என்பதும் தெரியவில்லை.

ஜோமோன் ஜோமோள் படத்தின் ட்ரைலர் எனக்குப் பிடித்திருந்தது. மாத்யூவ் தாமஸ் பயலை கும்ப்ளாங்கி நைட்ஸிலிருந்தும் நஸ்லெனை தண்ணீர் மத்தான் தினங்களிலிருந்தும் பிடித்துப் போனதால் சற்று ஆவலாகத்த்தான் காத்திருந்தேன். ஆனால் படத்தில் ’காரியமாயிட்டு’ ஒன்றுமில்லை. நிகிலா விமலைப் பார்க்கப் பிடித்திருந்தது. 

ஜனகனமண படத்தின் கடைசி இருபது நிமிடங்களை வெட்டி வீசி இருந்தால் நல்லதொரு படமாக வந்திருக்கும். சங்கிகளின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பெங்களூரைக் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்தான் ஆனால், தமிழ், மலையாளம், கன்னட மொழிக் கலப்பு சரியாக வரவில்லை. மிகவும் செயற்கையாக இருந்தது. இருப்பினும்  படத்தில் பேசப்படும் அரசியல் முக்கியமானது. இந்திய அளவில் அரசியல் கூறுணர்வு கொண்டவர்களில் மல்லுகள் முதன்மையானவர்கள் என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு படம். 

இன்னலவரெ மற்றும் ஐங்கரன் படங்களை முழுமையாகப் பார்க்க முடிந்தது ஆனால் மனதில் நிற்கும்படி ஒரு காட்சியும் இல்லை. இந்த ஜீ.வி. பிரகாஷ் இருபது படங்கள் வரை நடித்திருப்பார் என நினைக்கிறேன். ஏன் ஒரு படம் கூட பேசும்படியாக இல்லை என்பது தெரியவில்லை. அவர் மீண்டும் இசைக்குத் திரும்பலாம். தானொரு சினிமா மெட்டீரியல் இல்லை என்பதை  அவரே விரைவில் உணரும் காலம் வரட்டும்.

நெஞ்சுக்கு நீதி மிக மோசமாக படமாக்கப்பட்டிருந்தது. ஆர்டிகள் 15 படத்தின் துவக்கக் காட்சியில் கொட்டும் மழையில் ஒரு நாட்டுப்புறப் பாடல் வருமில்லையா மொத்தப் படமும் அந்த ஒரு காட்சிக்கு இணை வைக்கக் காணாது. ஆனாலும் இந்தப் படம் பேசும் அரசியல் முக்கியமானது. சாதியின் பெயரால் இன்றும் நிகழும் குரூரக் கொலைகளுக்குப் பின்னிருக்கும் வன்மத்தை பேசும் கதைக்களம் என்பதால் குறைந்த பட்சம் கட்சிக்காரர்களாவது பார்த்து விழிப்படையட்டும் என்கிற நல் நோக்கத்தில் தனியாக விமர்சனம் என எதையும் எழுதவில்லை. ஜீ.வி. பிரகாஷூக்கு சொன்னதுதான் உதயநிதிக்கும். ஜீ.வி யாவது தன்னால் முடிந்த அளவுக்கு சட்டையைக் கிழித்துக் கொள்கிறார்.  உதயநிதியோ சவரம் செய்யக் கூட மெனக்கெடுவதில்லை. இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஒட்டு மொத்த தமிழ்சினிமாவும் அவர் கைகளில்தான் என்பதால் நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. 

டான் – நூறு கோடி வசூலித்ததாக செய்திகளைப் பார்த்தேன். உண்மையாகவா? ஒரே ஒரு காட்சியைக் கூட ஒருவரும் புதிதாக யோசித்து வைக்கவில்லை. க்ரிஞ் டு த கோர். இந்தப் படமெல்லாம் இந்த ஓட்டம் ஓடுவது வரவிருக்கும் புது இயக்குநர்களின் திறமைகளை மிக மோசமாகக் குறைக்கும். ஏற்கனவே தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி அரை வேக்காடுகளால் நிரம்பி வழிகிறது. டான் போன்ற படங்களின் வெற்றி அரையைக் காலுக்கும் கீழாக்கும்.

சேத்துமான் படத்தின் கதைக்களம் முக்கியமானது. பெருமாள் முருகன் கதைகளை வாசித்திருப்பதால் படம் முதல் காட்சியிலிருந்தே உள்ளே இழுத்துக் கொண்டது. ஆனால் எதையோ சொல்ல வந்து எதையுமே சரியாக சொல்லாமல் விட்ட உணர்வே படம் பார்த்த பின்பு எழுந்தது. விக்ரம்களின் காலத்தில் இப்படி பிராந்திய உணர்வுடன் படமெடுக்க முன்வந்ததற்காக இயக்குநர் மற்றும் படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

12த் மேன் -  ”சும்மாதான இருக்கோம் ஒரு படம் எடுத்து வைப்போம்”  என்பது போல இருந்தது. ஐந்தாறு ஃபீல்ட் அவுட் நாயகிகளையும் நாயகர்களையும் உடன் மோகன்லாலையும் கூட்டிக் கொண்டு இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரு வீக் எண்டட் ட்ரிப் போய் இருப்பார்கள் போல அங்கு வைத்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இதைப் போன்ற ஒரே அறையில் / களத்தில் நிகழும் பல துப்பறியும் படங்களை பார்த்திருந்தாலும் முழுப் படத்தையும் பார்க்க வைத்த சுவாரசியம் திரைக்கதையில் இருந்தது. ஆனால் புதிதாக ஒன்றுமில்லை. 

Wednesday, June 15, 2022

புல்டோசர் ஜனநாயகம்



த்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்தபோது அக்கட்சியின் தொண்டர்கள் புல்டோசர்கள் சகிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது குழப்பமாக இருந்ததுஎதற்காக இந்தக் கூட்டம் புல்டோசரோடு சுற்றுகிறது என நினைத்துக்கொண்டேன்

சில நாட்களுக்கு முன்பு அஃப்ரீன் பாத்திமாவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டபோதுதான் இந்தக் கும்பலின் புல்டோசர் பின்னணி புரிய வந்தது.  மிக வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் இந்திய இறையாண்மைத் தத்துவத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கும் வேலையை ஆதித்யநாத் உள்ளிட்டோர் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த புல்டோசர் அபாயம் மிக வேகமாகப் பரவியும் வருகிறது.

இந்தியாவின் அடிப்படைக் கட்டுமாணம், நீதித்துறை, சட்டம், ஒழுங்கு என சகலத்தையும் இந்த மதவெறி பிடித்த கூட்டம் புல்டோசர் கொண்டு இடித்து நொறுக்குவதை ஒட்டு மொத்த இந்தியாவும் வேடிக்கை பார்க்கிறது. பத்திரிக்கைகள் வெளிப்படையாக எழுதத் தயங்குகின்றன. 

அஃப்ரீன் பாத்திமாவின் குடும்பத்துக்கு நிகழ்ந்த அநீதியைக் குறித்து யாராவது எழுதியிருக்கிறார்களா என்பதைத் தேடிப் பார்த்தேன். தமிழ் இந்து போலிஸ் தரப்பை எழுதி வைத்திருக்கிறது. பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் காத்ரி வீடுகள் இடிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து அறிவிப்பு வெளியிடுகிறது. இது அநீதி என்றோ, சிறுபான்மையினரின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் என்றோ தமிழ் இந்து கட்டுரையில் ஒரு வரியும் இல்லை.போலவேஎதிர்கட்சிகள் தரப்பிலிருந்து எந்த ஒரு அழுத்தமான கண்டனமும் வந்ததாகத் தெரியவில்லை

ராகுல் காந்தியும் சோனியாவும் நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் பிஸியாக இருக்கிறார்கள்காங்கிரஸ் என்றொரு கட்சி இனிமேலும் உயிர்த்தெழும் என்கிற நம்பிக்கையும் செத்தே போனது.

கஞ்சா வழக்குகள், குண்டர் சட்டங்கள், லாக் அப் மரணங்கள், என்கவுண்ட்டர்கள் என நாம் அறிந்த அரச வன்முறையின் புதிய முகமாக இந்த புல்டோசர் இடிப்பு வந்து சேர்ந்திருக்கின்றது. இன்னும் என்னவெல்லாம் வரும் என்பதும் தெரியவில்லை. கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் நிகழ்ந்தப்படும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு முடிவு இந்த நூற்றாண்டில் இல்லை போல. 

நீதி மன்றங்கள் தாமாக முன் வந்து புல்டோசர் பயங்கரங்களை விசாரிக்க வேண்டும். இந்தியக் குடிமக்களுக்கு நீதி மற்றும் ஜனநாயகத்தின் மீதுமிருக்கும் சொற்ப நம்பிக்கைகளை காக்க வேண்டியதும் நீதியரசர்களின் கடமைதான்.

Featured Post

test

 test