Monday, August 24, 2009

சென்னை சில நினைவுகள்


எட்டாம் வகுப்பு அ பிரிவு நண்பர்களோடுதான் சென்னையை முதன்முறையாய் எதிர்கொண்டேன். ஒரு சிறுநகரப் பதின்மனின் ஆச்சர்யங்களும், வியப்பும் எனக்கு அப்போது சற்று அதிகமாகவே இருந்தது. மகாபலிபுரம்,விஜிபி கோல்டன் பீச், மெரினா என சென்னைக்கு உள்ளும் புறமும் சுற்றி வந்ததில் சென்னை மிக வசீகரமான பெரு நகரமாக எனக்கு முன் விரிந்திருந்தது. “இந்த ஊருக்கெல்லாம் நான் போயிருக்கனே!” என சக நண்பர்களிடம் பீற்றிக் கொள்ளும் வேளைகளில் ’மெட்ராஸ்’ தான் முதலில் வந்தது. உறவினர் வீடுகள்,திருமண விழாக்களென படிக்கும் காலகட்டத்தில் அவ்வப்போது சென்றதுண்டு என்றாலும் சென்னையை முழுமையாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு அப்போது கிட்டியிருக்கவில்லை.

படிப்பு முடிந்ததும் ஒரு நேர்முகத் தேர்வினுக்காக சென்னைக்குத் தனியாய் போன நாள் நினைவிலிருக்கிறது. ஓசூரிலிருந்து இரவுப் பயணம். எட்டு மணி நேரங்கள் பயணித்துப் போயிருந்தேன். இரவுப் பயணம் புதிதாகையால் சுத்தமாய் தூங்கியிருக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தினுக்கு முன்னதாகவே பேருந்து பாரீஸ் கார்னர் சென்றுவிட்டிருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கு தோளில் ஒரு பையுடன் அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். நடைபாதை முழுக்கத் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைப் பார்க்க புதிதாகவும் வருத்தமாகவும் இருந்தது. பாரீஸ் கார்னர் மற்றும் பூக்கடைப் பகுதிகள் பத்து வருடத்திற்கு முன்பு தங்களுடைய அதிகாலை மெல்லிய குளிருக்கு மிக அதிக வறுமையையும், அழுக்கையும், குவியலாய் மனிதர்களையும் போர்த்தியிருந்தன.

திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்து, பல்லவனைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தேன். உறவினர் வீட்டிற்குச் சென்று இளைப்பாறி, அங்கிருந்து நேர்முகத் தேர்வினுக்கு செல்லும் திட்டம். நடைபாதை முழுக்க மனிதர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் கீழிறங்கி சாலை ஓரமாகவே நடந்து கொண்டிருந்தேன். குப்பைத் தொட்டி ஒன்றின் பின்னால் ஒரு சிறு குடும்பம் படுத்திருந்தது. மிகவும் நைந்த அந்தப் பெண் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மேல் சட்டை முற்றாய் விலகிக் கிடந்து. கணவன் ஒரு புறமும் கைக்குழந்தை ஒரு புறமும் அவள் கையினை தலையணையாக்கி இருந்தனர். அதே போல் அப்பெண்ணின் ஒரு முலையை குழந்தையும் இன்னொன்றினைக் கணவனும் கைப்பற்றி இருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கண்ணில் விழுந்த அக்காட்சி எனக்குள் மிகப்பெரிய கசப்புகளை உண்டாக்கிவிட்டுப் போனது. சொல்லமுடியாதொரு துக்கமும் கசப்பும் அந்த அதிகாலையில் என்னுள் படர்ந்தது. நகரத்தின் குரூரமான கைகளுக்குள் சிக்குறும் இயலா மனிதர்களின் வாழ்வை யோசிக்க யோசிக்க பயமாய் இருந்தது. மேலதிகமாய் சென்னை என்கிற பெரு நகரத்தின் மீதிருந்த வசீகரம் சுத்தமாய் வடிந்து போனது.

அந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை அதற்கு பிறகு சென்னையில் பணிபுரிய வேண்டுமென்கிற முயற்சிகளையும் கை விட்டேன். வெவ்வேறு ஊர்களுக்குத் துரத்தியடித்த வாழ்வு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் இருந்ததும் மீண்டும் நான் சென்னை வர காரணமாக இருந்ததெனச் சொல்லலாம். காசி தியேட்டர் எதிர் சந்தில்தான் வாசம். அப்போது நான் வாழ்வைக் கொண்டாட,மனிதர்களைத் தவிர்க்கப் பழகி இருந்தேன்.

கோல்டன் பாரையும், படிக்கட்டு பாரையும் சனிக்கிழமை இரவுகளில் நிரப்பினோம். நவீன திரையரங்குகள்,பைக் பயணம்,புதிய தோழிகளென பெரு நகரத்தின் வசீகரங்களை முழுமையாய் துய்க்கத் துவங்கினேன். கன்னிமாரா இன்னொரு புகலிடமாக இருந்தது. இத்தனை பெரிய பழமையான நூலகத்தில் அமர்ந்திருப்பதே மிகவும் பெருமையாக இருந்தது. பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்களை அங்கேதான் கழித்தேன்.

சீட்டுக் கட்டை கலைத்துப் போடுவதும் என் இருப்பிடங்கள் மாறுவதும் அத்தனைச் சுலபமானது. ஏதோ ஒன்று திடீரென சலிக்கவே என் இருப்பிடத்தை அலுவலகத்துக்குச் சமீபமாய் திருவள்ளூருக்கு மாற்றிக் கொண்டேன். எட்டு மணி நேர நிம்மதியான வேலை, வீட்டிற்கு வந்து அழைத்துப் போகும் சிற்றுந்து, பத்து நிமிடப் பயணம், என நகரத்தின் பரபரப்புகள் திடீரென முற்றிலுமாய் உதிர்ந்து போயின. ஆயிரம் ரூபாய் வாடகையில் பூங்கா நகரில் மிகத் தாராளமான வீடு கிடைத்தது. என் வசிப்பிடங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடு இன்று வரை அவ்வீடாகத்தான் இருக்கிறது. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்திருந்த வீட்டின் மாடியில் நான் குடியிருந்தேன். கிழக்குப் பக்கம் பார்த்த மிகப்பெரிய பால்கனி ஒன்று சரிவான சிமெண்ட் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் இருந்தது. என்னை முழுமையாய் புத்தகங்கள் ஆக்ரமித்திருந்த காலகட்டங்களாக அவையிருந்தன. வீட்டிற்குச் சமீபமாய் பூங்கா நகர் கிளைநூலகம் இருந்தது. பெரும்பாலான புத்தகங்களில் ஒட்டிக் கொண்டிருந்த பக்கங்களை நான்தான் பிரித்தேன். நிலைப்படிக்காய் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். அந்த வீட்டில் வெப்பத்தை நான் எதிர் கொண்டதே இல்லை. கோடைகாலத்தில் கூட குளுமையான செந்நிற சிமெண்ட் தரை தகிப்பை விரட்டி விட்டிருந்தது. செய்ய வேரெதுவுமே இல்லாத நாட்களாய் அவை இருந்தன. மேலும் என்னுள் மார்க்வெஸ்,கால்வினோ,போர்ஹேஸ், ரமேஷ் ப்ரேம், கோணங்கி என குழப்பமான சித்திரங்கள் உலவிக் கொண்டிருந்தன.

பூங்கா நகர் உள்ளடங்கிய பகுதியாதலால் சப்தங்கள் மிகக் குறைவு. அப்போது அந்நகரில் அத்தனை நெருக்கடியும் இல்லாமலிருந்தது. ஒவ்வொரு தெருவினுக்கும் மலர்களின் பெயரைச் சூட்டியிருப்பார்கள். முல்லைத் தெரு,மல்லித் தெரு,செம்பருத்தி தெரு என தெருக்களின் பெயரை உச்சரிக்கவே மகிழ்வாக இருக்கும். அந்தச் சூழலும் வேலையும் பிடித்துப் போனதால் அங்கேயே நிலம் வாங்கி நிரந்தரமாய் தங்கும் எண்ணமும் இருந்தது. மீண்டும் எங்கிருந்தோ வந்த சாத்தான் அவ்விடத்தினை விட்டும் துரத்தியடிக்க வைத்தது.

சுனாமி வந்த கறுப்பு ஞாயிறன்று என் நண்பி ஒருத்தியுடன் மின்சார ரயிலில் மெரினாவுக்குச் சென்று கொண்டிருந்தேன். காலைப் பதினோரு மணிக்கு சமீபமாய், அலையைப் பார்க்க நீங்கள் செல்ல வேண்டாம் உங்களைப் பார்க்க அலை வருகிறதென ரயிலில் இருந்தவர்கள் கிண்டலாய் சொல்லிக் கொண்டார்கள். நேரம் ஆக ஆக அதன் தீவிரம் மெல்ல எல்லாருக்கும் புரிய ஆரம்பித்த போது ரயிலை நிறுத்தி விட்டிருந்தார்கள். நாங்களும் உறைந்திருந்தோம். இரண்டு மணி நேரம் முன்னதாய் கிளம்பியிருந்தால் அலையோடு போயிருக்கலாமென நண்பி சொன்னாள்.

வட சென்னை நண்பர்களுடன் காசிமேடு பகுதியை சுற்றித் திரிந்த நாட்களும் சுவாரசியமானவை. சுண்ட கஞ்சி என்கிற வஸ்துவும் அது தந்த போதையும் இன்னமும் நினைவிலிருக்கிறது. ஒரு வாரம் வட சென்னையிலும், அடுத்த வாரம் சத்யம் திரையரங்கிலும், அதற்கடுத்த வாரம் ’ஈஸிஆர் லாங்க் ட்ரைவு’மாய் வாழ்வின் உச்சம், வீழ்ச்சி இரண்டையும் ஒரே மனதோடு எதிர் கொள்ளும் பக்குவம் அப்போது வாய்த்துவிட்டிருந்தது.

அயல் வாழ்வு சென்னையை ஒரு சிறு நகரமாக்கி விட்டிருக்கிறதென்றாலும் சென்னை எனக்கு பிடித்த ஊர்களின் பட்டியலில் இருக்கத்தான் செய்கிறது.பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை!

சந்தன முல்லையின் இவ்விடுகை இந்நினைவுகளை கிளறிப்போட்டது.அவருக்கு நன்றி.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...