Saturday, July 5, 2008

ராமின் கேள்விகளும் சுந்தருக்கான கேள்விகளும்

ராமின் கேள்விகளுக்கான பதில்கள்:

1) பின்நவினத்தின் வரையறைகள் எதுவும் வகுக்கபபட்டு இருக்கிறதா? அப்பிடியெனில் அந்த வரையறைகளுக்குள் உங்களின் எழுத்து பயணிக்கிறதா?

நான் வாசித்த அளவில் பின்நவீனமென்பது வரையறைகளுக்குட்பட்டதில்லை.மேலும் வரையறைக்குட்படுத்தவும் முடியாது.வளர்மதி சொல்வதுபோல் பின்நவீனத்தை நான் சூழலாகத்தான் நம்புகிறேன்.மானுட வாழ்வில் முழுமைக்கான அல்லது அதைப்போன்ற ஒன்றினுக்கான தொடர்ச்சியான தேடுதல்களில் ஏற்பட்ட தோல்வியை உள்வாங்கிக் கொள்ளும் சூழலையே பின் நவீனம் என்கிறோம்.பின்நவீன கூறுகளை உள்ளடக்கிய படைப்புகளாக விமர்சகர்களால் அடையாளம் காணப்படும் பல்வேறு பிரதிகள் தமிழில் தற்போது கோலோச்சுகின்றன,மேலும் தற்போது என்கிற வார்த்தையின் மூலமாக சமகால எழுத்துக்கள் மட்டுமே பின்நவீன எழுத்துக்கள் எனவும் புரிந்து கொள்ள முடியாது.பின்நவீனம் காலத்தை மறுக்கிறது.பின்நவீன கூறுகளாக சிலவற்றைச் சொல்லலாம்.
1.ஆசிரியன் இறந்துவிட்டான்
2.விளிம்பு மய்யமற்ற படைப்புகள்
3.பன்முகத் தன்மை
4.அதிகாரப் பரவலாக்கம்
5.ஒற்றைத் தன்மையைக் களைதல்
6.சிறுகதையாடல்கள்
7.தொடர்ச்சியான உரையாடல்கள் (விவாதம் என்கிற புள்ளியை விட்டு நகர்ந்து செவிசாய்த்தல்)
8.எதையும் சந்தேகித்தல்
9.கட்டவிழ்ப்பு
10.வரலாற்றை அழித்தெழுதுதல்

இன்னும் தமிழில் பின்நவீன புரிதல்களுக்கான புத்தகங்கள் போதிய அளவில் இல்லாமலிருப்பதும் மற்ற சித்தாந்த அடியொற்றிகளால் திரிக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்ல முடியும்.ரமேஷ் ப்ரேம்களின் படி "மற்றவற்றை கீழாக மதிக்கும், மற்றவற்றை அழித்து தன்னை நிலைநிறுத்தும் பாசிசத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கும் ஒரு சூழல் தான் இந்திய பின்நவீனத்திற்கான அடிப்படை.” என்ற விளக்கமும் எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.நமது வலைச்சூழலைப் பொறுத்தவரை வளர்மதி, டிசே தமிழன், ஜமாலன், பைத்தியக்காரன் போன்றோர் பின்நவீனம் குறித்தான பகிர்வுகளை விரிவாய் பதிந்துள்ளனர். கீழ்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவலாம்
உரையாடலுக்கான துவக்கமாக சில குறிப்புகள் - வளர்மதி


மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் - டிசே வின் இந்த பதிவும் பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யமானது


உம்பர்த்தோ ஈகோவும் உம்மணாமூஞ்சியும் - பைத்தியக்காரன்

இச்சமயத்தில் அதிகாரமய்யமற்ற படைப்பு / அதிகார மய்யங்களுக்கெதிரான எழுத்து என்பது அரசியல் கட்டுரைகள் மட்டுமல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன்.ஒற்றைத் தன்மையைக் களைந்த பிரதிகளே அதிகாரமய்யத்தை களைந்தவையாக கருதப்படும்.மேலும் என் எழுத்து எதில் பயணிக்கிறது என்பதை சொல்ல வேண்டியவன் நானல்ல என்பதால் அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

2) வெகுஜன எழுத்துக்கள் மாதிரி உங்களின் படைப்புகள் இல்லை? அதுமாதிரியாக உன்னால் எழுதவே முடியாதா? என உங்களை நோக்கி எழுந்த நண்பர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில்?

முதலில் நான் எழுத்தைச் செய்வதில்லை என்பதை நண்பர்களுக்குப் புரிவிக்க விரும்புகிறேன்.வெகுசனத்தை குறிவைத்து எழுதும் திறமைகள் எனக்கில்லை. பரவலாய் படிக்கப்படவேண்டும் என்கிற ஆசைகளும், நிர்பந்தங்களும் எனக்கில்லை.மேலும் நானொரு பொழுதுபோக்கிற்கான உத்திரவாதங்களையோ சமூகத்தைப் புரட்டிப் போடும் சிந்தனைகளைகளுக்கான தூண்டுதல்களையோ தரமுடிபவன் அல்ல. எனக்கான ஏதோ ஒன்று இதில் நிறைவடைகிறது அதனால் இதனை தொடர்ச்சியாய் செய்துகொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். மேலும் என் நண்பர்களின் விமர்சனங்களுக்கு இப்போது என்னால் தர முடிந்ததெல்லாம் புன்னகையை மட்டுமே.

3) உங்களின் படைப்புகளை அச்சுப்புத்தகமாய் வெளியிடுவதற்கு ஏதேனும் உத்தேசம் உள்ளதா? ஆம் என்றால் எப்போ? இல்லையெனில் ஏன்??

முதலில் நான் எதுவும் பெரிதாய் எழுதிக் கிழித்து விட்டதாய் எனக்குத் தோன்றவில்லை.புத்தகங்களாய் கொண்டு வருவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதைத்தவிர வேறெந்த காரணங்களுமில்லை.எப்போது எனக்கு நிறைவு அல்லது அதைப் போன்ற ஒன்று ஏற்படுகிறதோ அப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் அதுவரை சில மரங்கள் பாவம் உயிர்த்துப் போகட்டுமே :)

4) இணையம் எழுத்தும், பின்ன இத்யாதியும் தாண்டி குடும்பஸ்தானாக ஆன பினனரும் உங்களின் ஆரம்பகாலத்து மாதிரி வீரியமாக எழுதமுடிகிறதா?

ஆரம்பகாலத்து வீர்யம் என எதைக்குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. அடர்வான வார்த்தைகளா? அல்லது மிகுந்த உடலெழுத்துக்களா? இக்கேள்வியை
திருமணத்திற்கு முன், பின் என எடுத்துக்கொண்டால் என்னால் சில வித்தியாசங்களை உணர முடிகிறது.சூழல்கள் மட்டுமே என்னையும் என் எழுத்தையும் தீர்மானிப்பதால் சூழலகளுக்கேற்ற வடிவத்தையே நான் ஏற்கிறேன்.இங்கே சூழல் எனக்குறிப்பிடுவது என் தனிப்பட்ட வாழ்வும் எண்ணங்களும் மாத்திரமே.பாலியல் வறட்சியும், நெடுந்தனிமையும் எனது எழுத்துக்களுக்கான இன்னொரு முகத்தை தந்திருக்கலாம். இப்போதைய சூழலில் மிக ஆசுவாசமான, நிதானமான, இலகுவான,மனநிலையில்தான் இருக்கிறேன். அதனால் என் எழுத்துக்களும் அப்படியிருக்கலாம்.மேலும் இம்மனநிலை விரிவாய் வாசிக்க ஏதுவாய் இருக்கிறது.நிதானமாய் எதையும் அணுகவும் தலைப்படுகிறேன்.அப்போதைய மனநிலையில் எழுதப்பட்டவைகளை இப்போது படிக்கையில் நான்தானா இது? என்கிற அசட்டுச் சிரிப்புகளை என்னால் தவிர்க்க முடியவில்லை.காலம் என்னை மீண்டும் மீண்டும் அழித்தெழுதிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடிவதில் எனக்கு மகிழ்ச்சியே.
அதிக சிக்கலில்லாத கேள்விகளை கேட்டதிற்கு நன்றி இராம்.இனி நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருக்கான கேள்விகள்..

1.வலையின் சமீபத்திய பரபரப்பு உங்களின் காமக்கதைகள்.இந்தத் தொடருக்கான அவசியம் என்ன? காமத்தை அதிகாரத்திலிருந்து மீட்க வேண்டும் என்கிற சமூக நோக்கா? அல்லது இதுவும் ஒரு மொழிவிளையாட்டா? மேலும் இக்காமக்கதைகள் மிகச்சரியான புரிதல்களோடு வாசகனைச் சென்றடைய எந்த அளவிற்கு மெனக்கெடுகிறீர்கள்?

2.தலித்திலக்கியம் பற்றிய உங்களின் பார்வை என்ன? தலித் படைப்பாளி என்கிற தனி அடையாளம் அவசியமா இல்லையா?

3.வலையில் மிக ஆபத்தான எழுத்துக்களாக நீங்கள் உணர்வது டோண்டு ராகவனுடையதா? அல்லது ஜெயமோகனுடையதா? மேலும் இருவரில் யார் மிக மோசமான பாசிஸ்ட்?

4.உங்களுக்கு பிடித்த ஐந்து தமிழ் நாவல்களைப் பரிந்துரைங்களேன்?Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...