Saturday, March 31, 2007

அபி – அரூப வெளியின் கவிஞன்

அபி கவிதைகள் - அபி
வெகு ஜன ஊடகத்தில் பரவலாய் இயங்காத அபி தமிழின் ஒரு முக்கியமான அடையாளம். அபி யைப் புரிந்துகொள்ள பரந்த வாசிப்பனுபவமும் அக ரீதியிலான தேடல்களைக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது. வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையுள்ள வெளி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அகம் சார்ந்த தெளிவும் உள் விழிப்பும் இல்லாத வாசகனுக்கு அபி ஒரு புதிர்தான்.

‘அந்தர நடை’ ‘என்ற ஒன்று’ ‘மெளனத்தின் நாவுகள்’ தொகுப்பிலிருந்து சில கவிதைகள் அத்துடன் 3 கட்டுரைகளும் சேர்ந்து இந்த தொகுப்பு வெளிவந்திருக்கிறது. முன்னுரை பிரம்மராஜன் எழுதியிருக்கிறார்.அதுவே சிறப்பான ஒரு கட்டுரையாகவும் கவிதை பற்றிய தெளிவான அனுகுமுறையை முன் வைப்பதாகவும் அமைந்துள்ளது.

கோஷங்களாகவும் வார்த்தைப் பந்தல்களாகவும் துனுக்குகளாகவும் உருவானவை கவிதைகளாக ஆக மறுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் அடையாளத்தை இழந்து போகிறது.அபி மெளனத்தைப் பேசுகிறார். தனிமையின் தியானமாகவே அமைந்திருக்கிறது அவரின் பெரும்பாலான கவிதைகள்.இவரின் கவியுலகப் பார்வை அகம் சார்ந்தும் மிக நுட்பமானதாயும் நெகிழ்வு தன்மையையும் கொண்டிருக்கிறது. அதே சமயம் வெகுநுட்பமான அதிர்வை இவரது கவிதைகள் ஏற்படுத்தத் தவறவில்லை.

காட்சிப் படிமங்களை விரும்பாத அபி இங்கும் அங்குமாய் சில காட்சிப் படிமங்களை பயன்படுத்துகிறார்.

"வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய் திறந்து
குழந்தையை
சப்பி நின்றது..
கண்களை மூடிக் கொண்டேன்
மூடிய இமைகளுல்
முலைக்காம்பின் உறுத்தல்"
…..

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் அபி யின் கவிதைகள் அரூப வெளியில் பயணிக்கின்றன.முரணெதிகளின் உக்கிரம் அதிகமாக விரிந்து ஒரு எல்லையில் அவை முரணற்ற தன்மையை தானாகவே இழக்கிறது.அபியின் அகத் தேடலின் வசீகரம் கீழ்கானும் கவிதைகளில் உணர முடிகிறது. இவை ஞானத்தன்மைக்கு வெகு அருகிலிருப்பதும் புலனாகும்.


“எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு…”

“கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயென்றால்
நீ வாழ்கிறாய்”

அபியின் கவிதைகள் அதிகம் பேசுவதில்லை.”என் கவிதைகளுக்குப் பேச்சை யாரும் கற்பிக்கவில்லை.நான் உட்பட”எனும் அபி இவரது கவிதையை பின் வருமாறு முன்நிறுத்துகிறார்.”என் கவிதை உணர்வுகளின் ரூப நிலையிலிருந்து அரூப நிலைகளை நோக்கி விழைகிறது.அனுபவ நிலைகளிலிருந்து அனுபவங்களற்ற நிலையை நோக்கிப் போக முயலுகிறது” முப்பது ஆண்டுகளாக கவிதை தளத்தில் இயங்கும் அபியின் கவிதைகள் எண்ணிக்கை அளவில் குறைவுதான் எனினும் அவற்றின் தாக்கங்கள் பல மடங்காகி கணக்க வைக்கிறது.

மாலை என்ற தலைப்பில் 30 கவிதைகளை தொகுத்துள்ளார்.ஒளியும் இருளும் கலக்கும் அற்புதப் பொழுதை வெவ்வேறு மனோபாவங்களில் அனுகி இருப்பது பிரம்மிப்பைத் தருகிறது.

மாலை-தணிவு

“காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள்,முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்து கொண்டன
……………….

நிகழும்போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு”

இத் தொகுப்பில் என்னை நிலைகுலைய வைத்த சில பார்வைகள்

“இந்த தருணங்களின் விளிம்பிலிருந்து
எட்டிப்பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு”

“இப்படித்தான் என்று
நிதானமாகப்
பிறந்து கொண்டிருப்பேன்
எனது மலைவேரின்
ஒரு சிறு நுனியிலிருந்து”

'அபி ' என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி மே மாதம் 2000- இல் ஓய்வு பெற்றார். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, 'டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.தமிழில் பிரமிளுக்கு அடுத்தபடியாக படிமக் கவிதைகளை கையாண்டதில் அபி மற்றும் தேவதேவனின் பங்கு மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி உள்ளது.கவிதைகளின் அடுத்தகட்ட இடம்பெயர்தலின் சாத்தியக்கூறுகள் தன் நம்பகத்தன்மையை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட நிலையில் காதல் வயப்படல் மட்டுமே கவிதை எழுதுவதற்கான ஒரே தகுதி என்ற மனோபாவத்திலிருந்து நாம் வெளிவர வேண்டியதின் அவசியத்தையும் இங்கே பதிவிக்கிறேன்.

கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளிட்டுள்ளது முதல் பதிப்பு வெளிவந்த வருடம் 2003.

ஒப்பீடு
சமரசம் இதழ் ஜனவரி 2000 ல் வெளிவந்த அபியின் நேர்காணல்
மெளனமும் ஓசையின் உபாசனையும் – பிரம்மராஜன் கட்டுரை

Thursday, March 29, 2007

உட்குளம்




ஒரு குளமெனத்
தேங்கிவிட்ட இதில்
சிறிதும் பெரிதுமாய் கற்கள்
குறிப்பிட்ட இடைவெளியில்
விழுந்த வண்ணமாய்..

பெரும்
ப்ரயத்தனங்களுக்குப்பின்
நிசப்தம்
சாத்தியப்பட்ட
சிறுபொழுதில்
கற்கள் தீர்ந்த
பெருவெளியில்
காற்று வந்து
அசைத்துப்பார்க்கிறது

மெ

ல்

Saturday, March 24, 2007

மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை




சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவல் இப்படித் தொடங்கும்,”மேதாவித்தனத்திற்கும் அற்ப ஆயுளுக்கும் வெகு நெருங்கிய தொடர்பு போல”என்று.அற்ப ஆயுள் மட்டுமல்ல அதீத கலை ஆளுமை உள்ள அபூர்வ படைப்பாளிகளின் மொத்த வாழ்வின் மீதும் பெரும் கரு நிழல் ஒன்று தனது இரக்கமற்ற கிளைகளை விரித்துப் படர்ந்துருப்பது என்னமோ நிஜம்.

பாரதியிலிருந்து ப.சிங்காரம் வரை பெரும்பாலான மேதைகள் வாழ்வின் துயரத்தின் பிடிகளுக்கு இரையானவர்கள்தாம்.அதீத தேடுதல்களும் தியானத்தன்மைக்கு நிகரான படைப்புகளையும் படைக்க முடிந்த இவர்களின் வாழ்வு அற்ப ஆயுள்,நோய்,வறுமை,அரசியல் பழிவாங்கல்கள்,பெருந்தனிமை என இருத்தலின் அத்தனை இருண்மைகளயும் உள்வாங்கிய ஒன்றாகவே இருக்கிறது.

பாரதியை தொடர்ந்து வந்த ஜி.என்.நாகராஜன்,பிரமிள்,ஆத்மாநாம்,ப.சிங்காரம் என தமிழ் ஆளுமைகள் மட்டுமின்றி,தஸ்தாயெவ்ஸ்கி,ஆல்பெர் காம்யு,சில்வியா ப்ளாத் என உலகின் பெரும்பாலான கலை ஆளுமைகளின் வாழ்வு முழுவதும் ஒரு சாபமென சொல்லிவத்தார்போல் துயரத்தின் வலிகளையே சுமந்து அலைந்திருக்கிறது.ஆனால் இவர்களின் படைப்புகளை
எந்த விதத்திலும் சொந்த வாழ்வின் அவலங்கள் தீண்டியிருக்கவில்லை சொல்லப்போனால் இன்னும் மெருகும் அழகும் கூடியிருந்தது.

வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஒரு பதிவில் "வாழ்வின் எந்த ஒரு கதவிடுக்கிலும் என் வேட்டியின் நுனி கூட சிக்கிக்கொள்ளவில்லை" என சொல்லியிருப்பார் இது போல வாழ்வு அமைவது வெகு அபூர்வம்.பாப்லோ நெருடா போல வாழ்வை ஒரு கொண்டாட்டமென கழித்த படைப்பாளிகள் வெகு சிலரே.

கலைத்தன்மையின் உச்சத்தை எட்டிவிடவேண்டும் என்கிற இவர்களின் விழைவு சாதாரண வாழ்வின் இன்பங்களை புறந்தள்ளியிருக்கலாம். அல்லது படைத்தலின் உலகத்தில் அற்ப வாழ்விற்க்கு இடம் இல்லையோ?

வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போயிருக்கும் இவர்களின் அரிய படைப்புகளை வெளிக்கொணருவதும்,வரவேற்பு மேசைக்குள் சுருங்கி விட்ட உலகத்தின் பார்வைக்கு இப்படைப்புகளை கொண்டு செல்வதும் 'தேடல்' சனியனை சுமந்து திரியும் நம் போன்றவர்களின் கடமை யாகிறது.

அறிவியல் கொடுத்துள்ள அற்புதங்களை மிகச்சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது மட்டுமே இம்மேதமைகளுக்கு நாம் செய்யும் மிகச் சரியான அஞ்சலி.

அத்துடன் சம கால மேதமைகளை முன்நிறுத்துவதும் அவர்களின் படைப்புகளை உலகறியச் செய்வதும் மட்டுமே பின் வரும் நாட்களில் நமக்கு ஏற்பட நேரிடும் குற்ற உணர்ச்சிகளின் விடுதலையாக அமையக்கூடும்.

Tuesday, March 13, 2007

கலையின் பன்முக தரிசனம் – மூன்று திரைப்படங்கள்

கவிதை,இசை,ஓவியம் என கலையின் முப்பரிமாண தரிசனம் ஒரு தூய சினிமாவின் மூலம் சாத்தியம்.உருகி,கதறி,வியந்து,பதறியுமாய் ஒரு உடம்பிலிருந்து எத்தனை உணர்ச்சிகளை வெளிக்கொணர முடியுமோ அத்தனையும் சாத்தியம் ஒரு நல்ல சினிமாவினூடாய்.சீனத் திரைப்படங்கள் உலக சினிமாவின் வேர்கள் எனலாம்.

1.The King Of Masks (1996)


நகரீயமாக்களின் தொடர்ச்சியாய் மெல்ல அழிந்துபோன சீனாவின் பழமையான கலைகளில் ஒன்று இந்த முகமூடி வித்தை. Bian lian என சொல்லப்படும் 300 வருட பாரம்பரியம் மிக்க இந்த முகமூடி வித்தை அறிந்தவர்கள் வெகு சிலரே. Wang who என்ற மிகத்திறமையான வித்தைக்காரர் தனது மனைவியையும் 10 வயது மகனையும் இழந்து
ஒரு படகு வீடு மற்றும் ஒரு குரங்குடன் வீதிகளில் வித்தை காட்டி மக்களை மகிழ்வித்தும்,கலையை உயிர்பித்துமாய் வாழ்ந்து வருகிறார். தனக்குப்பின் இந்த கலைக்கான ஒரு ஆண் வாரிசை தேடி அலைந்து அடிமை குழ்ந்தைகளை விற்கும் சந்தையில் ஒரு குழந்தையை வாங்குகிறார்.இவரது நம்பிக்கைகள் எவ்வாறு பொய்க்கின்றன?அரசியலும் பொறாமையும் ஒரு உன்னத கலஞன் வாழ்வில் ஏற்படுத்தும் வலிகளோடும் ஒரு குழந்தையின் எல்லைகளற்ற அன்பை சுமந்தபடியுமாய் இப்படம் பயணிக்கிறது.
பல் வேறு திரைப்பட விழாக்களில் 14 விருதுகளை பெற்றிருக்கிறது இப்படம்.

2.The Road Home ( 1999)



புகழ் பெற்ற இயக்குனர் zhank yimou இயக்கத்தில் வெளிவந்து பரவலாய் எல்லோரின் கவனத்தையும் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த திரைப்படம்.

Zhang ziyi என்ற இந்த பெண்ணின் முகம் வெகுநாட்களுக்கு மனதை விட்டு அகலவே இல்லை.ஒரு திரைப்படத்தை இவ்வளவு அழகாய் எடுக்கமுடியுமாஎன்ன?
ஒரு சின்னஞ்சிறு கிராமத்து
பெண்ணின்காதலை,அன்பை,பதட்டங்களை,இளமயின் அத்தனை உணர்வுகளையும் துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது இப்படம்.

ஒவ்வொரு காட்சியும் ஒரு கைதேர்ந்த சிற்பியின் லாவகத்தோடு செதுக்கியிருக்கிறார்கள். அழகியல்
ரீதியான மிக முக்கியமான படைப்பு என சொல்லலாம்.


பின்னனி இசை படத்தை இன்னமும் அழகான இசை ஒவியம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. பார்வைகளின் முலமாய் மட்டுமே அன்பு பகிரப்படுகிறது.அவன் வருகைக்காக காத்திருந்த ஓடியே பழகின அப்புற்கள் நிறைந்த நீளச்சாலையில் அவனின் இறுதி ஊர்வலமும் நடக்கவேண்டுமென்ற அவளின் ஆசை நிறைவேறுவதோடு நமது இதயத்தின் எடையும் இருமடங்காகிறது.

ஒரு படம் முழுக்க ஒரு ஆசிரியனை பற்றி பேசுகிறர்கள்.அவனின் எளிமை,அன்பு,உரிமைக்காக போராடும் குணம் என மிகச்சிறந்த மனிதன் ஒருவனின் தன்னலம் கருதா தொண்டை பாராட்டுகிறார்கள்.இதை எல்லாவற்றையும் விட இந்த பெண்ணின் கண்மூடித்தனமான காதல் அம்மனிதனை கண்முன் நிறுத்துகிறது.

ஓரு மிகச்சிறந்த மரணம் இப்படித்தான் இருக்கமுடியும்.

3.The Way Home (2002)


சமீப காலமாய் கொரிய மொழியில் மிகச்சிறந்தப் படங்கள் வெளிவரதுவங்கியுள்ளன. இப்படத்தின் கதைக்களமும் ஒரு மலை சார்ந்த கிராமம்தான்.

நகரத்தில் வளர்ந்த அக்கறை சார்ந்த உலகத்திற்க்கு அப்பாற்பட்ட பிடிவாதமும் வால்தனமும் நிரம்பிய 7 வயது சிறுவன் வலுக்கட்டாயமாய் தன் பாட்டி வீட்டிற்க்கு விடுமுறைக்காக அவனது அம்மாவினால் கொண்டு வந்து விடப்படுகிறான்.

கூன் விழுந்த,வாய் பேச முடியாத அந்த பாட்டி தனது பேரனுடன் கழிக்கும் நாட்களை கவிதையாய் பதிவித்திருக்கின்றனர். நகரம் நமக்கே தெரியாமல் ஏற்படுத்தும் ஒரு சுயநல திரையை இச்சிறுவன் மூலமாய் அடையாளம் காண முடிகிறது.பாட்டியின் அன்பை மெதுவாக புரிந்து கொள்ள துவங்கும் சிறுவனின் அறிதல்கள் மிக மெல்லிய துக்க உணர்வோடு வெளிப்படும் இறுதி காட்சியின் கவித்துவம் அற்புதம்.

தன் வாழ்வின் கடைசி காலத்தை தனிமையோடும் மலைசூழ்ந்த இயற்கையோடும் கழிக்கும் பாட்டி தன் பேரனுக்காக எடுக்கும் சிரமங்கள் மிக கவனத்தோடு அவன் உலகை அனுகும் பாங்கு என பாட்டியின் ஒவ்வொரு அசைவும் மிக அழகான பதிவு.

அத்தனை பாட்டிகளுக்கும் இப்படத்தை சமர்ப்பித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் lee jeong-hyang

Monday, March 12, 2007

அவள் அப்படித்தான்



அவள் அப்படித்தான் ( 1978 )

பல வருடங்களாய் தேடிக்கொண்டிருந்த இந்த படத்தையும் இரண்டு வருடங்களாய் தேடி கொண்டிருந்த நண்பணையும் பெங்களூரில் ஒரு சேர பிடிக்க முடிந்தது.1970 களின் இறுதிவாக்கில் feminist என்ற போர்வையில் கே.பி அடித்த கூத்துக்களை கண்டு சலித்து இந்த படத்தையும் ஒரு சிறிய பயத்தோடு தான் பார்க்க ஆரம்பித்தேன்.

இளம் பிராயத்தில் தனது தாயின் நடத்தை மூலமாய் மனச்சிதைவடந்த, அதீத சுதந்திரமுள்ள,குழப்பமான, கசப்பான அனுபவங்கள் சுமந்து திரியும் மஞ்சு என்கிற பெண்ணை முன் வைக்கிறது இத்திரைப்படம்.

ஒரு அறிவு ஜீவித்தனம் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது.நிறைய விவாதங்களை வைத்தே திரைக்கதையை நகர்த்தி இருப்பது புதுமை சராசரி களின் மீதான சாடல்,தெளிவான சமூக பார்வை,சுவாராஸ்யமான உரையாடல்கள் என மிகத் தெளிவாக நகர்கிறது படம்.

சக துணைக்கான தேடலில் தொடர்ச்சியாய் மூன்று முறை ஏமார்ந்து போகும் மஞ்சு தனது கவிழிரக்கத்தை,ஏமற்றங்களை திமிர் பிடித்தவள் என்ற போர்வையில் மறைத்து கொள்கிறாள். பெண்களின் சுதந்திரம் பற்றிய தலைப்பில் டாக்குமெண்ட்ரி எடுக்க சென்னை வரும் அருண் மஞ்சுவை புரிந்துகொள்ள மற்றும் தன்னை புரிவிக்க எடுக்கும் முயற்சிகளில் சலித்துப் போகிறார்.பெண்களின் பேட்டிகளை பதிவு செய்திருக்கும் முறை அருமை.

விலகி,நெருங்கி,நேசித்தும் வெறுத்துமாய் ஒரு புதிய பரிணாமத்தை முன் வைக்கிறது இருவருக்குமான உறவு.சராசரி ஆணை முன் வைக்கும் தியாகு வழக்கம்போல் நிறைய கைதட்டல்கள். ருத்ரய்யா திரைப்பட கல்லூரியிலிருந்து வந்தவுடன் இந்த படத்தை இயக்கி இருக்க கூடும்.இவரின் இன்னொரு படத்தை பார்த்த்போது ஏமாற்றம்தான் மிஞ்சியது.

படம் முடிந்தவுடன் எழும் லேசான தலைவலிக்கு காரணம் வழக்கமான சினிமாவிற்க்கு பழகிய மூளையே தவிர நிச்சயம் படம் இல்லை.

இன்னும் பல வருடத்திற்கு தமிழின் தலைசிறந்த படமாக இதை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

Sunday, March 11, 2007

ப்ரவேசம்

பின்னிரவில்
சத்தம் இல்லாது
பெய்துவிட்டுப் போன
மழைக்கு
காலையில்
வெள்ளையாய் மென்மையாய்
பூத்திருக்கிறது
பச்சரிசிக் காளான்கள்..

யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..

இன்னுமொரு
சிதைவிற்கான
ஆயத்தங்களெனினும்
பூத்திருப்பதும்
உறைந்து போவதும்
இருத்தலியத்தின்ஆதார விதிகள்.

Friday, March 2, 2007

ORKUT பட்டாம் பூச்சிகள்

தனிமையின் இசை பெருகி வழிய ஆரம்பித்துவிட்டதால் எங்கே முங்கி விடுவோமோ என பயந்து சக சாகாக் களிடம் பேச்சு கொடுத்து பார்த்தேன் பற இல்லைனா போளோ என்று பதில் வர அட ஆள உடுங்கப்பா என்று orkut பக்கம் ஓரம் கட்டினேன் அட ..அட .அடேடே orkut தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் பரவி இருக்கிறது.பள்ளி மற்றும் கல்லூரி பட்டாம் பூச்சிகளும் சிங்க குட்டிகளும் மொய்த்து கிடக்கிறார்கள் ஒரு தனி உலகம் தனி மொழி இளமையின் வண்ணம் பூசிய ஓர் அற்புத உலகம்

gtg,tc,fyn,whasup,thof , இதெல்லாம் orkut ன் மந்திர சொற்கள் பெரும்பாலும் எல்லா உதடுகளும் முணுமுணுக்க கூடிய வார்த்தைகள் நமக்கு வயசாயிடுச்சோ அப்படின்னு சின்னதா ஒரு பயம் அடிமனசுல ..இருந்தாலும் தைரியமா களத்துல இறங்கினேன் என்ன ஆச்சரியம் எல்லா பட்டம் பூச்சிகளும் reading books அப்படின்னு passion ஆ சொல்லி இருக்காங்க அப்படியே உச்சி குளிர்ந்து போச்சு..ஆஹா இதோ வருது ஆரோக்கியமான அடுத்த தலைமுறை ன்னு பூரிப்பு அடங்கரத்துக்குள்ள மக்களே சின்னதா ஒரு விஷயம் நெருடுச்சு..என்னடா எல்லாம் சொல்லி வச்சாமாதிரி இந்த 4 புத்தகத்தையே சொல்லி இருக்காங்க அப்படின்னு மைல் டா ஒரு சந்தேகம்.

அது என்ன புத்தகங்கள் னா THE ALCHEMIST, davincicode, sidney sheldon all books, dan brown all books நானும் எப்படி எப்படியோ தேடி பாக்கறேன் பெரும்பாலும் எல்லாம் இதைத்தான் எழுதி இருக்காங்க நான் கொஞ்சம் positive ஆண ஆளு சரி நாமாத்தான் ரொம்ப பின் தங்கித்தோம் போலன்னு the alchemist புத்தகம் படிச்சேன் எலே மக்கா நான் என்னாதத சொல்றது... ஏதாவது சொன்ன யாராவது அடிக்க வந்துருவங்காளோ ன்னு பயம் வேற இப்படித்தான் எசக்கு பிசகா ஒரு பட்டாம் பூச்சிக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன்.

அட ஒண்ணும் இல்லீங்க இவ்ளோ ENGLISH BOOKS படிக்கிறீங்களே ஒரே ஒரு தமிழ் புஸ்தகம் படிக்க கூடாதா அப்படின்னு ஒரு ஆதங்கதுல 10 ENGILSH புஸ்தகம் படிச்சா ஒரே ஒரு தமிழ் புத்தகம் படிக்க கூடாதா அப்படின்னு கேட்டு தொலைச்சேன் போறத வேளை நண்பர்களே ஒரு மிகப்பெரிய மடல் ..கடுமையா திட்டி அதுல சில வரிகளை இங்கே கொடுக்கிறேன்

"உலகத்தின் புனித எண்(Divine Number):- 1.618 என்பது தங்களுக்கு தெரியுமா, இவ்வெண்ணின் மகத்துவம்?ஏன் என்று தெரியுமா? அப்படி தெரியுமென்றால்.... எந்த தமிழ் நூலை படித்து தெரிந்து கொண்டீர்கள்"

DAN BROWN IS MARVELLOUS!!!! U KNOW HIS KNOWLEDGE OF WRITING BOOKS, HIDING THINGS, PUZZELS, WORD PLAYS, SECURITY SYSTEM, NETWORKS, CODING, DECODING(EVERYTHING THING IS POSSIBLE, IMPOSSIBLE JUST TAKES LONGER), CIPHER TEXT, TRANSLATORS, SCIENCE, ACTION AND REACTION, MATERIALS, SOMETHING FROM NOTHING FORMULA, HISTORY, BIBLE KNOWLEDGE(ITS NOT A BOOK FROM SKY, ITS WRITTEN BY HUMAN HANDS), RESEARCH, ILLUMINATIES, SECRET COMMUNITY, PRIORY OF SION, MARY MAGDALENE, AMBIGRAM TECHNIQUES ? STILL............ MORE..........

ஐயகோ என் தமிழ் தாய் ஈன்ற மக்களே dan brown என்ற எழுத்தாளர் எழுதுவது fiction அதுவும் thriller fiction படிக்க சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக இவர்கள் சேர்க்கும் பிட்டூகளை ஏதோ உலகின் வேதம் என்பது போல் நினைத்து கொள்ளாதீர்கள் நம் தமிழில் ராஜேஷ் குமார் சுபா மற் றும் மூன்றந்தார துப்பறியும் நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கும் dan brown க்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

இந்த விளம்பர மோகம் எங்கிட்டு செல்லுமோ எம் தமிழ் மக்களை...

"அது இருக்கட்டும் the alchemist பத்தி ஒண்ணுமே சொல்லலியே " ..
அட ஆள உடுங்கப்பா வாங்குன வரைக்கும் போதும்

ஆனால் ஒன்று நமது தமிழ் வலைப்பதிவில் மின்னும் அத்தனை பட்டம் பூச்சிகளுக்கும் தனியே ஒரு விழா எடுக்கலாம் அனைவருக்கும் ஒரு ஜே !!

Featured Post

test

 test