Monday, November 19, 2007

கோபி கிருஷ்ணன் - இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வுமே 10,2003 ல் தன் இறுதி சடங்கிற்கான பணத்தைக்கூட சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் / தன் குடும்பத்தினருக்கு தந்திடாமல் இறந்துபோனான் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளன் கோபி கிருஷ்ணன்.ஒரு உண்மையான கலைஞனின் வாழ்வைப் போலவே மரணமும் பெரும் அலைக்கழிப்பாய் இருப்பது தமிழ்சூழலுக்கு ஒன்றும் புதிதில்லை.ஒருவேளை இவ்விதம் இறப்பது மட்டுமே உண்மைக்கான சரியான அடையாளமாய் இருக்கும் என்பதுபோன்ற தீர்மானங்களையும் நாம் நாளையடைவில் பெற்றுவிடக்கூடும்.

கோபி கிருஷ்ணன் தன்னுடைய உயிர்ப்பு - நாட்குறிப்பு பதிவுகள் எனும் ஒரு சிறுகதையில்(குறிப்புகளை சிறுகதையாக்கிய நவீன பாணி எழுத்தாளுமைகளை நிறைவேற்றிக் காட்டியவர்களில் இவர் முக்கியமானவர்)இவ்வாறு சொல்லியிருப்பார்,
12.89' இன்று நிறைய நண்பர்களைப் பார்த்ததில் மனம் சந்தோஷத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.இன்றைக்கு இந்த சந்தோஷத்திலேயே செத்துப்போனால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றிற்று.அந்த நைட்டிங்கேல் பறவையின் நாத இனிமையில் சாக விரும்பிய கீட்ஸ் நினைவில் நின்றார்.அந்த இளம் அழகி கொடுத்த அன்னியோன்ய சந்தோஷத்தின் பூரணத்துவத்தில் தன்னை மாய்த்துக்கொண்ட 'அப் அட் த வில்லா'வில் வரும் கார்ல் என்ற கதாபாத்திரம் மனதில் தங்கிற்று.இன்று கிடைத்த மனநிறைவு மீண்டும் கிடைக்குமா என்கிற ஏக்கம் மனதில் தோன்றி நிலைத்தது.


தோழமை மிக்க மனிதராக,விமர்சனங்களின் மீதும் காழ்ப்புணர்வுகளின் மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்டிராத,நண்பர்களை மிகவும் நேசித்த கோபிகிருஷ்ணனின் மரணத்திற்கு மிக சொற்பமானவர்களே குழுமி இருந்தனர்.வளர்மதி உள்ளிட்ட நண்பர்கள் அவரது இறுதி சடங்கிற்கான பணத்தை திரட்டித் தந்திருக்கிறார்கள்.வெளி ரங்கராஜன்,லதா ராமகிருஷ்ணன் போன்றோர் திண்ணை மூலமாக சிறுதொகை யொன்றை கோபி கிருஷ்ணனின் குடும்பத்திற்கு திரட்டித் தந்திருக்கின்றனர்.நிதியுதவி அளித்தோர் பட்டியலில் தமிழின் ஆகச்சிறந்த,வசதி படைத்த படைப்பாளிகளின் பெயர்களைத் தேடிப்பார்த்ததில் வெறுமையே எஞ்சியது.

விளிம்பு நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள் என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல் சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும் குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும் புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.

இவரது படைப்புகள் ஒவ்வாத உணர்வுகள்,முடியாத சமன்,உணர்வுகள் உறங்குவதில்லை,தூயோன்,மானிட வாழ்வு தரும் ஆனந்தம்,டேபிள் டென்னிஸ்,உள்ளிருந்து சில குரல்கள்,இடாகினிப் பேய்களும்-நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும் என்னும் பெயர்களில் புத்தகங்களாக வந்துள்ளது.இதில் உள்ளேயிருந்து சில குரல்கள் நாவல் வடிவத்திலும்,உணர்வுகள் உறங்குவதில்லை குறுநாவல் தொகுதியாகவும்,டேபிள் டென்னிஸ் குறுநாவலாகவும்,மற்றவைகள் சிறுகதைத் தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளது.இவரது உள்ளிருந்து சில குரல்கள் உளவியல் ரீதியிலான சிக்கல்களை பேசும் மிகச் சிறந்த நாவல்.கோபி கிருஷ்ணனின் மாஸ்டர் பீஸ் என பெரும்பாலானவர்களால் இவரது டேபிள் டென்னிஸ் கொண்டாடப்படுகிறது.இது தவிர்த்து பல உளவியல் கட்டுரைகளும்,மொழிபெயர்ப்பு கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.இவரது படைப்புகளை முழுத்தொகுதியாய் வெளிக்கொண்டு வந்தால் அத்தொகுப்பு தமிழின் சிறந்த அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது.இவரது மானிட வாழ்வு தரும் ஆனந்தம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இந்த மென்மையான மனதைப் பார்க்கலாம்.காசாப்புக் கடையில் ஆட்டின் கழுத்தை அறுக்கும் வன்முறையை பார்த்த காட்சி அவனை மதிய உணவை சாப்பிட விடாமல் செய்வதை ஒரு துண்டு சிறுகதையிலும் சாலையோர பிச்சைக்காரனுக்கு தினம் உணவளிக்கும் இன்னொருவனை நடைபாதை உறவு எனும் சிறுகதையிலும் காணலாம்.அதிகார மய்யங்களுக்கெதிரான குரலை எழுப்ப முடியாமல் போவதின் துயரங்களையும் எழுப்புகிறவன் மீதெழும் இயல்பான கவர்ச்சி மற்றும் இயலாமைகள் ஆசான் சிறுகதையில் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.

கோபி கிருஷ்ணனின் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை வாழ்வே எழுத்தாகவும் எழுத்தே வாழ்வாகவும் கொண்ட சொற்பமான மனிதர்களுள் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.அதிகமான மனவழுத்தம் காரணமாக பலமுறை தற்கொலைக்கு முயன்றவர்.தொடர்ந்து சாப்பிட்டு வந்த உளநல மருந்துகள் ஏற்படுத்திய பலகீனம் காரணமாக் நோய்மையுற்று இறந்தார்.ஆத்மாநாமினுடையது போன்ற வெளிப்படையான தற்கொலை இல்லையெனினும் இதுவும் ஒருவித மறைமுக தற்கொலையாகவே அவரது நெருக்கமானவர்களால் சொல்லப்படுகிறது.பிரதியூடான வாசிப்புகளை புதுமைப்பித்தன் வரை நிகழ்த்திக் காட்டிய மார்க்ஸ் உள்ளிட்ட அறிவுஜீவிகள் கோபி கிருஷ்ணனை எப்படி அனுகுகிறார்கள் எனத் தெரியவில்லை.எப்படியிருப்பினும் மிக நேர்மையான எழுத்து என்பதற்கு இவரை உதாரணமாக சொல்லலாம்.

தொடர்புடைய சுட்டிகள்
மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை-அய்யனார்
கோபி கிருஷ்ணனின் பீடி சிறுகதை
கோபி கிருஷ்ணன் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்
தமிழ் விக்கி பீடியாவில் கோபிகிருஷ்ணன்
உருபடாதது நாரயணனின் சிலாகிப்பு
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...