Saturday, June 2, 2007

விகடனில் தமிழ்நதி

நம் சக வலைப்பதிவாளார் தமிழ் நதி ஆனந்த விகடனினால் அடையாளப்படுத்தபட்டிருக்கிறார்.வெகு ஜன ஊடகத்தில் இயங்குவது அவருக்குப் புதிதில்லை என்றாலும் தமிழ்நாட்டின் முக்கியப் பத்திரிக்கையொன்றில் அவர் கவிதைகள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிற்து.
விகடனில் வந்த அறிமுகமும் மற்றும் கவிதைகளை இங்கே தருகிறேன்.


தமிழ்நதி
தமிழ்நதி- தேர்ந்த ஈழத்துக் கவிஞர். ஈழ மக்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் வலிகள்... தீராத தனிமை.. கையறு நிலை பற்றி அவரது கவிதைகள் தனிப்பட்டுப் பேசுகின்றன. அவை புலம்பலாக அமையாதது பெரும் சிறப்பு. இவர் வலைப்பூக்கள் ( BLOGS) வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். 'கலைவாணி' என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.


இருப்பற்று அலையும் துயர்

நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது.
பச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்.
ஆளற்ற வீட்டில் எத்தனை நாள்
காத்திருக்கும் அந்த நாய்க்குட்டி
சோறு வைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டு
என்புதோல் போர்த்திக் கிடக்கிறது
திரும்பமாட்டாத எசமானர்கள்
நெடியதும் கொடியதுமான போர் பற்றி
எந்த மொழியில் அதற்கு எடுத்துரைக்க?
நேற்று முன்தினம் பக்கத்துவீடும்
விம்மியழுது விடைபெறப் பார்த்திருந்தோம்
மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுப்போன ஆச்சியின்
தளர்நடை இன்னும் ஒழுங்கையில்
ஒவ்வொரு வீடாய் இருள்கிறது
இந்தச் செங்கல்லுள் என் ரத்தம் ஓடுகிறது
இந்தக் கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது
மல்லிகையே! உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்
இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை...
வீட்டை... வேம்பை...
அது அள்ளியெறியும் காற்றை...
காலுரசும் என்
பட்டுப் பூனைக்குட்டிகளை.

அற்றைத் திங்கள்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப் புன்னகையுமற்று
கடந்துபோகிற மனிதர்கள் வாழும்
அந்நியத் தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக் குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்தபடி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே..!
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது.
தொப்புள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்...
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு.
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...