Monday, September 27, 2010

ஓஎன்வி இரசிகரின் மத்தி மீன் குழம்பு ரெசிபி

சமீபமாய் நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர் ஒரு மலையாளி. என்னுடன் வந்தவர்கள் என்னை ‘புள்ளி எழுத்துக்காரானானு’ என அவருக்கு அறிமுகப்படுத்த அவரிடம் ஒரு சிறிய பரபரப்புத் தொற்றிக் கொண்டது. என்னுடைய எழுத்துப் பின்புலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார், அவரையும் ஒரு கலாகாரன் என்றே நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். நண்பர், ஓஎன்வி குருப்பின் மிகப்பெரும் இரசிகர். ஓஎன்வியின் புகைப்படமும் சில புத்தகங்களும் அவர் வீட்டில் பார்க்க முடிந்தது. அவர் ஜீவிதத்தில் ஓஎன்வியைத் தவிர வேறு யாரையும் படித்ததில்லை, படிக்க விரும்பியதுமில்லையாம். "ஓஎன்வியின் பாடல்களுக்கு காங்கிரஸ் மலையாளிகளும் அடிமை, நான் ஒரு உதாரணம்!" என்கிற கூடுதல் தகவலையும் பகிர்ந்தார். பின்பு படுக்கையறைக்குச் சென்று திடீரென தரையில் படுத்தார். கட்டிலுக்கடியில் ஊர்ந்து, சிறிய அரை வட்டம் ஒன்றை அடித்து அப்ஸல்யூட் வோட்கா பாட்டிலோடு வெளியில் வந்தார். மிகச் சுறுசுறுப்பாக கண்ணாடிக் குவளைகளையும்,பனித்துண்டங்களையும் ஐந்தே நிமிடங்களில் தயாரித்த வெள்ளரிக்காய் சாலட்லையும் கொண்டு வந்து மேசையில் பரப்பினார். முதல் ரவுண்டிற்குப் பிறகு அதே அவசரத்துடன் உள்ளறைக்குச் சென்று சட்டையணிந்தார். "பத்து மினிட்டு" எனச் சொல்லியபடியே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டார். உடன் வந்த நண்பர்கள் புதிர் முக பாவனை ஏதும் இல்லாமல் சாதாரணமாய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் தம்மடிக்கப் போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். மிகச் சரியாய் ஒன்பதரை மினிட்டில் உள்ளே மீன்களோடு வந்தார்.

அவரின் வீடு ஸ்பானிய பாணியில் கட்டப்பட்டது. இண்டர்நேஷனல் சிட்டியில் ஸ்பானிஷ் ப்ளாக்கில் வசிக்கிறார். வீட்டின் கூடத்தோடு ஒட்டியபடி சமையலறை இருக்கும். கிட்டத்தட்ட நம் செட்டிநாட்டு வீடுகளின் உள் முற்றம் போன்ற ஒரு செவ்வக வடிவ திட்டுதான் சமையலறை. எங்களுடன் பேசியபடியே இருபது நிமிடத்தில் சுவையான காரமான மத்தி மீன் குழம்பையும் பத்தே நிமிடத்தில் கப்பாவையும் தயாரித்து மூன்றாவது இரவுண்டில் பரிமாறினார். அபரிதமான ருசியுடனிருந்தது அந்த உணவு. பொதுவாகவே மலையாளிகளின் உணவின் மீது எனக்கு பெரிதாய் விருப்பம் கிடையாது. ஒரு வித அசிரத்தையுடன் தான் சாப்பிடத் துவங்கினேன். நல்ல காரத்துடனான மீன் குழம்பின் சுவை அறைக் குளுமையையும் மீறி வியர்க்க வைத்தது. நண்பரின் மீன் குழம்பு ரெசிபி மிகவும் சுலபமானது. ஒரு சொட்டு எண்ணெய் கூட பயன்படுத்தாமல் இந்த ருசியான குழம்பைத் தயாரித்தார்.

இந்த மல்லு மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள் (பெயர் நானாய் வைத்ததுதான் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை)

மத்தி மீன் (நெய் மத்தி கிடைத்தால் மிக நன்று) : ஆறு அல்லது எட்டு முழுத் துண்டுகள்
சிறிய வெங்காயம் பொடியாய் நறுக்கியது : அரை கப்
பூண்டு பொடியாய் நறுக்கியது : கால் கப்
மிளகாய் தூள் – தனியா கலக்காதது : இரண்டு மேசைக் கரண்டி
தனியா தூள் – மிளகாய் கலக்காதது : ஒரு மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் – நடுவில் கீறித் துண்டாக்கவும் – ஆறு துண்டுகள்
இஞ்சி – பொடியாய் நறுக்கியது : கால் கப்
கொடும்புளி - எலுமிச்சையளவு
வெந்தய பொடி – சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகாய் மற்றும் தனியா தூளை இட்டு லேசாய் வாட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நீரூற்றி நன்கு கலக்கவும். இப்போது கறிவேப்பிலை,பூண்டு,வெங்காயம்,மிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சட்டியிலிருக்கும் கரைசலில் போடவும். லேசாய் கொதி வந்த பின்பு கொடும்புளியைத் தூவிவிடவும். பின்பு மீன் துண்டங்களை ஒவ்வொன்றாய் கரைசலில் அமிழ்த்தவும். ஒரு போதும் கரண்டியைப் பயன்படுத்திக் கலக்க கூடாது. சட்டியை ஜாக்கிரதையாய் தூக்கி கலக்கலாம். ஒரு மூடியைப் போட்டு மூடிவிட்டு தீயைக் குறைத்துவிடவும். பத்தே நிமிடத்தில் ருசியான குழம்பு தயார். ஒரு வித அனுபூதி நிலையில் அவர் இந்த ரெசிபியை என்னிடம் பகிர்ந்தார். நான் நான்கு ரவுண்ட் அனுபூதியோடு இதையும் சிரத்தையாய் கேட்டுத் தெரிந்து கொண்டபடி விடைபெற்றேன்.

சனிக்கிழமை ஓஎன்விக்கு ஞான பீட விருது கிடைத்ததை அறிந்ததும் நண்பரின் நினைவு வந்தது. தொலைபேசி வாழ்த்தினேன். ‘நிங்கள் என்னை விளிக்கும் அம்பதாவது ஆளாம்’ என்ற ஆச்சரிய தகவலையும் பகிர்ந்தார். ஓஎன்விக்கு கூட இத்தனை தொலைபேசி அழைப்புகள் போயிருக்காது என்றேன். மனிதர் ஐம்பதாவது முறையும் அதே நெகிழ்வோடு ஓஎன்வியை நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓஎன்வியை துபாயில் நேரில் சந்தித்தும் பரவசமடைந்திருக்கிறார். ஓஎன்வி எழுதிய சினிமா பாடல்கள் குறுந்தகடைக் கேட்டேன். வெள்ளியன்று வந்தால் அவரின் பாடல்களைக் கேட்டபடியே குடிக்கலாம் என அழைப்பு விடுத்தார். வருவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.

நேற்று ஜெமோவின் ஓஎன்வி வசை கட்டுரையைப் படித்தவுடன் நண்பருக்குத் தொலைபேச வேண்டும் போலிருந்தது. ஆனால் அபரிதமான அந்த மீன் குழம்பின் ருசிதான் என்னை அம் முட்டாள்தனமான எண்ணத்திலிருந்து காப்பாற்றியதோ என்னவோ. ஏனெனில் ஓஎன்வியை யாராவது அவர் முன் கிண்டலடித்தால் மனிதர் மிருகமாகிக் கிண்டலடித்தவரை கடுமையாய் தாக்கும் நிலைக்குச் சென்றுவிடுவாராம். ஒரு குடி நிகழ்வில் அவர் நண்பர்களில் யாரோ ஒருவர் அச்சுதானந்தனை முன் வைத்து எழுந்த கிண்டலை ஓஎன்வியில் முடித்துச் சிரிக்க ஆரம்பிக்ககூட இல்லையாம் பளார் என்ற சப்தத்தை அனைவருமே கேட்டிருக்கிறார்கள். சிவப்பான விழிகளோடு மூச்சு வாங்க "பட்டி மோனே" என புஸ்ஸிக் கொண்டிருந்தாராம் நண்பர். அவருடைய இன்னொரு நண்பர் இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்தார். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். ஜெமோ கட்டுரையை அப்படியே சொல்லி இருந்தால் என் நிலை என்ன ஆகி இருக்கும். நல்ல வேளை தப்பித்தேன்.

மாலை பேரங்காடியில் நெய் மத்தி மீன்களைப் பார்த்தேன். அப்போதுதான் வந்து இறங்கி இருக்க வேண்டும். அதன் மலர்ச்சியே என்னை வாங்கத் தூண்டுவதாய் இருந்தது. மீன்களை வாங்கிக் கொண்டு வந்தேன். நண்பரின் ரெசிபியை நினைவுபடுத்திப் பார்த்தேன். தமிழ் மரபில் ஊறிய சமையல் மனம் வெங்காயத்தையோ பூண்டையோ வதக்காமல் குழம்பு வைக்க அஞ்சியது. எனவே அதே பொருட்களைக் கொண்டு கீழ் வரும் முறையில் செய்து பார்த்தேன். இந்த முறையும் மிக ருசியாகவே இருந்தது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.

மல்லோ-டமில் மத்தி மீன் குழம்பு.

தேவையான பொருட்கள்: மேலுள்ளதுதான். தாளிக்க எண்ணைய் மட்டும் இம்முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை :

வாயகன்ற மண் சட்டியை (மண் சட்டி இல்லையென்றால் இம்முறையிலேயும் மீன் குழம்பு வைக்கும் திட்டத்தைக் கைவிடவும்) அடுப்பில் வைத்துச் சூடாக்கித் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். வெந்தயம் (வெந்தயப் பொடிக்குப் பதிலாய் வெந்தயமே நாம் பயன்படுத்தலாம்) கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றை வரிசைக் கிரமமாய் போட்டு வதக்கவும். மேற் குறிப்பிட்ட மிளகாய் மற்றும் தனியா தூளைக் கொட்டிக் கிளறி நீரூற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் புளிக் கரைசலை ஊற்ற வேண்டும் ( புளியை அப்படியே இட வேண்டாம்) மீன்களை ஒவ்வொன்றாய் மெதுவாய் குழம்பில் இறக்கவும். மென் தீயில் வைத்துக் கொதிக்க விடவும். இதன் சுவையும் அபரிதமாய்த்தான் இருந்தது. ஆனால் லேசான ருசி வேறுபாட்டை உணர முடிந்ததுதாம் என்றாலும் குழப்பம் ஒன்றும் இல்லை.

இப்போது மல்லு மீன் குழம்பிற்கும் மல்லோ-டமில் மீன் குழம்பிற்குமான செய்முறை வித்தியாசங்கள் மற்றும் ருசி அளவின் விகித உயர்ச்சிகள், தாழ்வுகள் குறித்துப் பதிவு செய்ய வேண்டும். அதை இன்னொரு முறை செய்கிறேன். நீங்கள் இரண்டு முறைகளையும் முயற்சித்துப் பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். பூமியிலிருந்துதான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Wednesday, September 15, 2010

மன்றாடல்


எனக்கான எதுவொன்றின் ஆசுவாசக் கரங்கள் எப்போதும் அணைத்துக் கொள்ளும் தவிப்புகளோடு விரிந்திருக்கின்றனவோ அவற்றின் தாள் பணியும் அல்லது அவற்றைக் கண்டுணர்ந்து முழுமையாய் அடைக்கலமாகும் பெருமுயற்சிகளே இந்தச் சிறு(மை) வாழ்வுப் பிரயத்தனங்களின் பின்புலமாகவிருக்கிறது என்பதுதான் என் இத்தனை தலை கீழ் பாடுகளின் ஒற்றை வரி விளக்கமாகவிருக்கிறது.

என் ப்ரியத்திற்குரிய ப்ரியமே உன் வடிவம் யாது? உன் பருண்மை என்ன? உன்னொளி என் இருண்மைகளை விரட்டுமா? நீ இப்பிரபஞ்சத்தில்தான் உலவுகிறாயா? உடல் முழுக்க காயங்களைக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே எதைக் கொண்டும் நிரப்பிடாத இடைவெளியை நானாகவே தருவித்துக் கொண்டிருக்கிறேன். நீ என் மீட்பராய் இருப்பாய். என்னை இரட்சிப்பாய். திசையறியா ஆட்டுக் குட்டிகளின் தாய்மை நீயாமே? என்னைக் காத்தருள். என்னை மீட்டெடு. என் பாவங்களை நீக்கு. தூய வெண்ணிறப் போர்வை கொண்டு என்னை மூடு. உன் சுகந்தத்தில் கண் மூடி நெடு நாள் உறங்க வேண்டும். என்னருகே உறங்கும் என் மகனின் பாதுகாப்புணர்வு எனக்கும் கிட்டட்டும். என் அறிவுக் குப்பைகளென்று நானாய் நம்பிக் கொண்டிருப்பவற்றை நீக்கு. என் போலித்தன்ங்களை களை. என்னை நிர்மூலமாக்கு. என்னை அழி. என்னை ஒரு பள்ளத்தாக்கிலிருந்து தலைக் குப்புறத் தள்ளிவிடு. என்னை இல்லாமலாக்கு என் இறையே. என் காதலே. என் மதுவே.

தூயச் செந்நிற மது நானாவேன். தூய வெண்ணிற மதுவும் நானாவேன். அதிதூய போதையாய் இரு. இருள் கிழிக்கும் ஒளி நானாவேன். ஒளி மூடும் இருள் போர்வையும் நானாவேன். நீ என் ஆதவனாய் சந்திர பிம்பமாய் எப்போதுமிரு. விருட்சம் நான். கிளை நான். இலை நான். சருகு நான். நீ என் வேராய் இரு. நீ என் நீராய் இரு. நீ என் விழுதாய் இரு. என் இறையே, என் காதலே, என் மதுவே, எனக்கான எல்லாமாய் நீ இரு.

இந்தப் பாலையில் அலைகழிகிறேன். தங்க மணல் வசீகரிக்கிறது. ஒளியில் ஜ்வலிக்கும் மணலில் நடக்க நடக்க கால்கள் புதைகின்றன. மூச்சு முட்டுகின்றது. மீள நீண்ட கைப் பிடிகள் யாவும் வழுக்கல்கள். யோசனைகளோடு நீண்ட விரல்கள் யாவிலும் விந்தின் கொடு நாற்றம். இல்லை இல்லை இல்லை என்னை மீட்கும் கரங்கள் இவைகளில்லை. என்னை வெளியேற்றும் விரல்களும் இவைகள் இல்லை. அஃதொரு தூய்மையின் முடிவிலா தாய்மைக் கரங்கள். விரிந்த இரு கரங்கள். நீண்ட விரல்களில்லை. ஒருபோதுமில்லை.

அஃதொரு நதியின் கரங்களை ஒத்திருக்கும். எல்லையிலா விரிவைக் கொண்ட நதியின் கரங்களவை. என் கனவில் வந்ததே. பதறி விழித்தும் விழாமலும் அழுதேனே. அக்கரங்களை நானறிந்தில்லையெனினும் கண்டு கொள்வேன். முன்பொரு பொழுதில் அக்கரங்களின் விரிவு தொடைகளின் மடியாய் விரிந்திருந்தது. என்னை முழுவதுமாய் பொதிந்து கொண்டது. அப்போதுதான் நானழுதேன். முதன்முறையாய். கடைசி முறையாயும். அத்தொடை மடிகளின் கதகதப்பை நானறிவேன். அதன் சாயல்களை நீ கொண்டிருந்தால் கூட போதும். என் இறையே என் மதுவே. நீ இப்பூமியிலா உலவுகிறாய்?

மேகக் கூட்டங்களின் பொதி நீயாமே. வானின் நீலமும் நீயாகவே இருக்க முடியும். கடலும் வானும் சங்கமிக்கும் நீலப் பின் புற ஒளியும் நீதானே? இந்தப் பனிக்கட்டி கரையும் செந்நிறத் திரவம் தரும் கரைசலும், வான் கடல் நீலமும் ஒன்றா? அப்படியெனில் நான் வானைக் குடிக்கிறேன். அப்படி அப்படியெனில் நான் கடலைக் குடிக்கிறேன். நீரில் ஒளிரும் கத்தி மீனாய் பாய்கிறேன். ஆழம் பயம் தருகின்றது. நீல ஆழம் போகப்போக இருளின் ஆழம். நீ ஆழமாய் இரு. ஆனால் நீலமாய் இரு. கருப்பு இருளின் ஆழம் அச்சமூட்டுகின்றது. ஆழம் இருள்தான் எனினும் நீ நீலமாயிரு. எனக்கே எனக்காய் நீல ஆழ இருளாயிரு. என் ப்ரிய ப்ரிய ஆழமே, இருளே, நீலமே.

அறியாதவனாய் கேட்கிறேன் எங்கிருக்கிறாய் நீ? சாவின் வடிவத்திலா இயங்குகிறாய்? மரணம்தான் எப்போதைக்குமான ஆசுவாசமா? எல்லாவற்றையும் குடித்துத் தின்றுச் செரித்துக் கொண்டாடும் வாழ்வல்லவா உனது! உன்னிடம் வந்தவர்களை என்ன செய்வாய்? எப்போதைக்குமான அன்பை அறியத் தருவாயா? ஏய் சாவே, நீ என்னை என்ன செய்வாய்? ஒருவேளை நீ தான் என் இறையா? என் மதுவா? என் காதலா? நீதான் சகலமுமா? என்னை அணைத்துக் கொள்ளேன். உன்னில் பொதிந்து கொள்ளேன். என்னை மூழ்கடியேன், என்னில் திளையேன் அல்லது உன்னில் திளைக்கவிடேன். என் இறையே மதுவே காதலே சாவே.

Monday, August 16, 2010

வ.வெ.தொ.அ.வெ.கு - 9 : அந்தி



வணக்கம் பாஸ். உங்கள இதே இடத்துல பாத்திருக்கேன். நீங்க என்ன கவனிச்சிருக்கீங்களான்னு தெரியல. இங்க எப்பவாச்சிம்தான் வருவேன். என் மூஞ்ச பார்த்த உடனே தெரிஞ்சிருக்கும். இந்தியன். உங்கள கண்டுபுடிக்க கொஞ்சம் சிரமப் பட வேண்டியிருக்கு. துருக்கி தான நீங்க? கணிப்பு தவறாவும் இருக்கலாம். எகிப்தியர்களையும் பாலஸ்தீனியர்களையும் சுலபமா கண்டுபிடிச்சிட முடியுது. இஸ்ரேலியர்களுக்கும் துருக்கியர்களுக்கும்தான் பார்த்த உடனே வித்தியாசம் தெரியல. எதா இருந்தா என்ன பாஸ்?. நீங்க ஒரு சக மனிதர். அவ்ளோதான். எல்லாராலயும் எல்லார் கூடவும் பேசமுடியும்தானே?. எல்லா மனுச பயலுங்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் நிறைய இருக்குதானே?.

இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த கார்னீஷை துண்டிக்கப்பட்ட குட்டிக் கடல்னு சொல்லலாமா? இந்த கரையோர சிமெண்ட் திட்டுல உட்கார்ந்தபடி தொலைவில தெரியும் முழுக் கடலுக்குள்ள மெல்ல இறங்கும் சூரியனைப் பாக்க நல்லாருக்கு இல்லயா? சாயந்திர நேரத்துல வெள்ளை நிறக் கடற் பறவைகள் குறுக்கும் நெடுக்குமா பறக்குறது இன்னும் நல்லாருக்கு இல்லயா?. மேல நீங்க உக்கார்ந்திருக்க பெஞ்சில இருந்து இந்த சூரிய அஸ்தமனத்த நல்லா பாக்க முடியும். நீங்க ஒரு நல்ல ரசனையாளரா இருக்கனும். சரியான இடத்த தேர்வு பண்ணியிருக்கிங்க. ஒரு நாள் நான் இங்க வந்திருந்தப்ப இன்னிக்கு மாதிரியே உங்க இடம் காலியா இருந்தது. உட்கார நினைச்சி அப்புறம் வேணாம்னு என் வழக்கமான இடத்துக்கே வந்துட்டேன். எல்லாருக்குமான இடம்னு ஒண்ணு இருக்கிறத நான் நம்புரேன் பாஸ். எனக்கு என் இடம் போதுமானதா இருக்கு. உங்க இடம் கொஞ்சம் வசதிதான்னாலும் அடுத்த முறை எனக்கு முன்னாடி வந்து நீங்க உட்கார்ந்திட்டீங்கன்னா இப்ப இருக்க இந்த சிமெண்ட் திட்டு என்ன ஏளனமா பாக்கும். இடத்த விடுங்க பாஸ். நான் உங்க கிட்ட என்ன பத்தி கொஞ்சம் பேசனுமே. பேசவா?

இப்பலாம் நான் சரியில்லைன்னு நெனைக்கிறேன். கொஞ்ச வருசம் முன்னால மத்தவங்க யாரும் சரியில்லைன்னு நெனைச்சிட்டிருந்தேன். இப்ப அந்த எண்ணம் மறைஞ்சி போய் நான்தான் சரியில்லைங்கிற நிலைக்கு தாவிடுச்சி. இதுதான் உண்மைன்னும் இப்ப நம்புறேன். புரியும்படி சொல்லனும்னா கொஞ்ச வருஷம் முன்னாடி என்கிட்ட பழகுற மனிதர்கள் எல்லாருமே பயன்படுத்துதல் நிமித்தமாதான் பேசுறாங்களான்னு எப்பவும் துப்பறிஞ்சிட்டே இருப்பேன். யார் மேலயுமே நம்பிக்க வந்ததில்ல. எல்லாருமே திருட்டுப் பசங்க. சுயநலவாதிங்க. எவனுமே ஒரிஜினலா வாழல. எல்லாருமே போலிங்க. டுபாக்கூருங்க. சந்தர்ப்பவாதிங்க. அப்படிங்கிற எண்ணங்கள் இருந்தது. இப்ப அப்படியே தலைகீழா மாறிப்போச்சு. நான்தான் யார்கிட்டயுமே உண்மையா பழகுறதில்லையோன்னு சந்தேகம் வருது. ஏதாவது தேவை இருந்தா பேசுரேன். அதே போல மத்தவங்களுக்கும் ஏதாவது தேவைன்னா என்கிட்ட பேசுறாங்க. யார்கிட்டயாச்சிம் ரொம்ப அன்பா பழகுற மாதிரி தோற்றம் வந்தா கூட உள்ள சிரிச்சிக்கிறேன். ’டேய் என்னமா நடிக்கிறடா!’ன்னு கிண்டல் பண்ணிக்கிறேன். இந்த உணர்வு சில டைம் பயமா, சில டைம் எரிச்சலா, சில டைம் வசதியா இருக்கு. இந்த மன நிலைல இப்பலாம் என்னால யார் மேலயும் பழிபோடமுடியல. அவநம்பிக்கை,துரோகம்ங்கிற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியே ரொம்ப நாளாச்சி. இதுவும் ஒரு வகைல நல்லாதான் இருக்கு. இந்த பேச்சு எரிச்சலா இருக்கு இல்ல. வேற பேசுவோமா?

நீங்க எவ்ளோ வருஷமா இந்த சூரிய அஸ்தமனம் பார்க்கிற வழக்கத்த வச்சிருக்கீங்க?. நான் இங்க வந்து நாலு வருஷம் ஆச்சின்னாலும் ரொம்ப சமீபமாதான் சாயந்திர நேரத்துல இங்க வரேன். பத்து வருஷம் முன்னால தினம் சூரிய அஸ்தமனத்தை பார்க்கிறத வழக்கமா வச்சிருந்தேன். அப்போ எனக்கு எந்த வேலையும் கிடையாது. கடசி வருஷ தேர்வுகள் எழுதியிருந்தேன். உடனே வேலக்கு போகனும்னு நமைச்சல் எதுவும் இல்ல. ஓசூர்னு ஒரு சின்ன டவுன்ல வசிச்சேன். செலவுக்கு தேவையான பணத்தை அண்ணன் கொடுப்பார். ஒரு நீல நிற சைக்கிள் வச்சிருந்தேன். நிறைய புத்தகங்கள் இருக்கிற நூலகம் ஒண்ணு ஏரிக்கரைய ஒட்டி இருக்கும். மதிய தூக்கம் முடிஞ்சதும் சைக்கிள எடுத்திட்டு நூலகத்துக்கு வருவேன். வழில ஒரு தம் அடிப்பேன். அப்பலாம் ஒரு சிகரெட்டையே பிடிக்க முடியாது லேசா மயக்கம் வரும். ஓசூர் கொஞ்சம் குளிரா இருக்கும். எப்பவும் நல்ல காத்து அடிக்கும்.

இருக்கிறதுலயே பக்கம் அதிகமான புக்கதான் எடுப்பேன். அப்பதான் நிறைய நேரம் போகும். எடுத்திட்டு கொஞ்ச தூரம் போனா ஏரி ஒண்ணு வரும். குண்டும் குழியுமான உயரமான சிறிய தார்ச்சாலை அது. ஒரு பக்கம் ஏரி. இன்னொரு பக்கம் ஒரு குளமும் அதை ஒட்டி ஒரு அம்மன் கோயிலும் இருக்கும். சைக்கிள படுத்த வாக்கில சரிவுல வச்சிட்டு, ஏரி மண் சரிவுல இறங்கி உட்கார்ந்துப்பேன். இந்த ஊர் மாதிரியில்லாம அங்க சாயந்திர வானம் ஏகப்பட்ட வண்ணங்களோட பாக்க ரம்மியமா இருக்கும். சட் சட் னு வண்ணம் மாறிட்டே இருக்கும். இந்த நிறம்தான் அந்தி நிறம் னு சொல்லிடவே முடியாது. சாயந்திர சூரியன் செந்நிறமா? பொன் நிறமா? தெரியல பாஸ். ஆனா பார்த்துட்டிருக்க நான் ரொம்ப தணிவடைஞ்சதா நெனச்சிப்பேன்.

இந்த தணிவுங்கிற வார்த்தை எவ்ளோ நல்லாருக்கு இல்ல. தணிவு. தகித்திருந்த நிலம் தணிவு கொள்கிறது. தணிந்த மாலையில் திரும்பிய சிறுவன். இதெல்லாம் என்னோட பொயட்டிக் இமேஜஸ். இப்படிச் சொல்ல எனக்கே சிரிப்பாதான் இருக்கு. உங்களுக்கு எங்க சூழல் பரிச்சயம் இல்லங்கிற தைரியத்துல அடிச்சி விடலாம்தான். ஆனா எனக்கு இப்ப உங்ககிட்ட உண்மை மட்டுமே பேச தோணுது. நீங்க பருப்பொருளா இங்க இல்லாம இருக்கிறதும் கூட அதுக்கான ஒரு காரணமா இருக்கலாம்.

நண்பன் பினுவோட புகைப்பட கண்காட்சி துவக்க விழாவுல துருக்கிய சேர்ந்த ஒரு பெண்ணை சந்திச்சேன். அவங்க ஒரு ஓவியர். அவங்க கிட்ட நான் தமிழின் பிரபல எழுத்தாளர்னு பினு அறிமுகப் படுத்தி வச்சான். சமீபமா மூணு புக்க ஒரே டைம்ல ரிலீஸ் பண்ணி இருக்கார்னு அவன் சொன்னதும் எனக்கு சிரிப்பு பொங்கிடுச்சி. கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன். ஏன்னா அந்த பொண்ணு அவ்ளோ அழகு. சும்மாவிட முடியுமா? அவன் கொடுத்த பில்ட் அப்பை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிக்க வேண்டியதா போய்டுச்சி. அந்த விழா நல்லாருந்தது. ஷாம்பெய்ன் அவ்ளோ போதையா இருக்கும்னு அன்னிக்குதான் தெரிஞ்சது. கண்ணாடிக் குவளை காலியாக காலியாக பணியாளர்கள் நிரப்பிட்டே இருந்தாங்க. பேசுறதுக்கு நிறைய நண்பர்கள் வந்துட்டே இருந்தாங்க. அந்த துருக்கி ஓவியர் கிட்ட ஓரான் பாமுக்க வச்சி ஓட்டிடலாம்னு நினைச்சா அவங்க காறி துப்பாத குறை. நம்ம ஊர் ஜெமோ போல துருக்கிக்கு பாமுக்காம். யாருக்கு தெரியும்?. நான் மை நேம் ஈஸ் ரெட் மட்டும்தான் படிச்சிருக்கேன். இஸ்தான்புல் வாங்கி போட்டதோட சரி. மை நேம் ஈஸ் ரெட்டும் பெரிசா என்ன ஈர்க்கல. இந்த அமெரிக்கா காரனுங்களுக்கு இஸ்லாமை நக்கலடிச்சா போதும் உடனே கையில வச்சிருக்க இலக்கிய அவார்டையெல்லாம் தூக்கி கொடுத்திருவானுங்க. மானங்கெட்டவனுங்க. சரி அவனுங்கள விடுங்க. நாம ஓவியர பத்தி பேசுவோம்.

வெளியில இருக்கவங்களுக்கு தெரியாத துருக்கியின் நிலக் காட்சிகள்,வாழ்வு முறை, கலாச்சாரம் இந்த அடிப்படைல பாமுக்கை ஏத்துக்கிடலாம்னு நான் சொன்னதையும் அவங்க நிராகரிச்சிட்டாங்க. ஒரு நகரத்தை முழுசா தெரிஞ்சிக்க ஆசைன்னா நகுப் மக்ஃபோசை படிங்க. கெய்ரோவோட முழு வரலாறும், கலாச்சாரமும், அழகியலும் மிகை இல்லாம மூணு நாவல்களில பதிவு பண்ணியிருக்கார்னு சொல்லி அவரோட கெய்ரோ ட்ரையாலஜி பரிந்துரைச்சாங்க. அதுல பேலஸ் ஆப் டிசையர அடுத்த நாளே தேடிப் பிடிச்சி வாங்கினேன். அத இன்னும் படிக்கல. அவங்க ரெண்டு நாளிலயே பிரான்ஸ் போயிட்டாங்க. துபாய்லாம் ஒரு நாடான்னு துப்பிட்டு வேற போனாங்க. இனிமே பேலஸ் ஆப் டிசையர படிச்சி ஒரு பிரயோசனமும் இல்லன்னு அத அப்படியே கிடப்பில போட்டாச்சி.

அன்னிக்கு ஜூலியாவோடதான் அதிகம் பேசினேன்னு நெனைக்கிறேன். ஜூலியாவும் ஓவியர்தான். ஸ்பானிஷ். மேட்ரிட்ல வீடு. ஸ்பானிஷ் மேட்ரிட்னுலாம் சொல்லவே நல்லாருக்கு இல்ல. ஜூலியா ஒரு சினிமா பைத்தியம். சினிமா பத்தி வாய் ஓயாம பேச முடியும்ங்கிறதால ஜூலியா கிட்ட இருந்து நிறைய வாவ் கள அன்னிக்கு பெற முடிஞ்சது. அல்மதேவாரோட டை ஹார்டு பேன் வேற. ஜூலியாகிட்ட திறமை காட்ட ரொம்ப சுலபமா இருந்தது. நல்ல போதைல இருக்கும்போது சீனாவை சேர்ந்த க்லே ஆர்டிஸ்ட் ஒருத்தங்க அறிமுகமானாங்க. அவங்க ஒரு பொயட்டும் கூட. லாவோத்சு, சுவாங்க்தஸு, தாவோன்னு அடிச்சி விட முடிஞ்சது. இவங்க மட்டும் அடுத்த நாள் போன் பண்ணி காட்டு நீர் பறவைகள் கவிதை சொன்னாங்க. எனக்கு எரிச்சலா வந்தது. மையமா ஒரு சிரிப்பு சிரிச்சி போன வச்சேன். விழா முடிஞ்சி திரும்பி வரும்போது, நல்ல போதைல பினு சிரிச்சபடியே சொன்னான் “யூ ஆர் அ காட் டேம் கன்னிங் ஃபக்கர்” யெஸ் ஐ ஆம்னு சிரிச்சேன்.

இதான் பாஸ் நான். பயங்கர கன்னிங். சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டுர ஆள். ஆனா பாக்க பூனை மாதிரி இருப்பேன். இதோட இல்லாம பொலிட்டிகலி பயங்கர கரெக்டான ஆள் வேற. எல்லாமே சரியா இருக்கனும்னு நெனைப்பேன். கலாச்சார காவல்களுக்கு எதிரான ஆளா காட்டிக்கிற நான் ஏன் சரி / தவறு பிம்பங்களில விழுறேன்னும் தெரியல. யாராவது விபச்சாரி, கற்பழிப்பு இந்த மாதிரி வார்த்தைகளலாம் பயன்படுத்தினா உடனே பொங்கி சண்டைக்குப் போயிடுவேன். வர்க்க அரசியல், விளிம்பின் அரசியல், அதிகாரப் பரவலாக்கம் இதுலாம் என்னோட பொலிட்டிக்கல் ஸ்டேண்டு. சைக்கிள் ஸ்டேண்டு ஆட்டோ ஸ்டேண்டு மாதிரி. சிரிப்பு சிரிப்பா வருது பாஸ்! தேவ்-டி படத்துல ஒரு காட்சி வரும்.சந்தா சொல்வா சில புரட்சி கேஸ்ங்க இருக்கு அவங்கலாம் பாலியல் தொழிலாளிங்கிற வார்த்தையதான் பயன்படுத்துவாங்க. எவ்ளோ பெரிய உபகாரம்!னு சொல்லி சிரிப்பா. அந்த மாதிரிதான் என்னோட ஒட்டு மொத்த அரசியல் நிலைப்பாடுகளையும் பார்த்து சில டைம் சிரிச்சிக்க வேண்டியதா இருக்கு.

பிரச்சினைகளை விடுங்க. எனக்கு இப்ப வேண்டியது தீர்வுதான். இப்படியிருந்த / இப்படியிருக்க நான் மாறனும். என்னோட இயல்பு, குணம் எதிலயும் முரண் இருக்க கூடாது. எப்படி சிந்திக்கிறனோ அப்படியே இயல்பும் இருக்கனும். சிந்தனை, பேச்சு, எழுத்து, வாழ்வு எல்லாமே ஒரே கோட்ல இருக்கனும். அதுக்கு என்ன பண்னனும் பாஸ்?

எனக்கு பிடித்தமான எல்லா குணங்களும் இருக்க ஒரு முழுமையான மனிதர நான் இதுவரை சந்திக்கவே இல்ல. ஏதோ ஒரு சின்ன நெருடல் அல்லது முழுக்கவே நெருடல் இருக்க மனிதர்களதான் கடந்து வந்திட்டிருக்கேன். என்னோட கனவு மனிதன் பத்தின சித்திரம் ரொம்ப நாளா எனக்குள்ள இருக்கு. உதாரணத்துக்கு சொல்லபோனா எழுத்தாளர் கோபி கிருஷ்ணன், அப்புறம் அகிரா வோட சில கதாபாத்திரங்கள் இந்த மாதிரி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. நான் இருக்க விரும்புற, மாற விரும்புற குணங்கள ஒவ்வொண்ணா உங்களுக்கு சொல்ரேன் ஆனா இப்ப இல்ல. வேற எப்பவாச்சிம். ரொம்ப பேசிட்டேன். எரிச்சலா இருக்கு. கிளம்புறேன் பாஸ்.

Monday, June 28, 2010

காட்சி கண்


நிறை மது தளும்பும்
வாயுத் தொந்தியின்
மேல்
ஸர்ப்ப சுழலிறுக்கம்
உள்
மூச்சடைத்த
செம்மண் குளம்

மரமில்லா ஊரில்
இலையில்லா மரம்
நள்ளிரவில் சருகுகளை
உதிர்க்கும்
ஸப்தம் கேட்ட கொடுநாவு
சொற்களைக் குழறும்

வெட்கைப் பாலை
சாலையோர மதியத்தில்
இலைத் தெரியாப் பூச்செடி
மென் சிறு வேருக்கு
மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்

சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்.

Saturday, June 5, 2010

துப்பறியும் சுகுணாவும் துரோகங்களின் பட்டியலும்

கடந்த ஒரு வார காலமாக உளைச்சலும் எரிச்சலுமாய் கலந்த மன நிலையில் தவிக்கிறேன். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கழுத்தில் கணினியைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுகிறேன். சதா மூளையில் இந் நிகழ்வுகளே அழுத்திக் கொண்டிருக்கின்றன. சரியாய் தூங்குவதுமில்லை. இது பற்றி எழுதவே கூடாது என்கிற தற்காலிக ‘நல்ல’ தனங்களை தூக்கிலிட்டுவிட்டு இதோ இன்னொரு கொள்ளி.

சுகுணா திவாகரின் மீது நான் உள்ளிட்ட பல வலைப்பதிவர்களுக்கும் நெடுநாள் பதிவுலக வாசகர்களுக்கும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன இடமிருக்கிறது. அதனால்தாம் வலையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அவரின் கருத்து என்ன? என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக பெரும்பாலும் அவர் தமிழ் சினிமாவில் பார்ப்பனியக் கூறுகளை துப்பறிவதோடு தம் எல்லைகளை சுருக்கிக் கொண்டாலும் அவரின் ‘கருத்து’ மீது ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த முறையும் சுகுணா, அவரின் இரசிகர்களான எங்களை டொக்டர் விஜயைப் போல் ஏமாற்றியிருக்கிறார்.

இவர் பார்ப்பனியத்தையும் ஆண் திமிரையும் குழந்தையிலிருந்தே எதிர்த்து வருவதால் நர்சிம்மையும் அவர் எதிர்ப்பார் என்பதை நாமாகவே புரிந்துகொள்ள வேண்டும். நர்சிம் செய்தது ’பக்கா பார்ப்பனியம்’ மற்றும் ’ஆண்திமிர்’ தான் என்பதை சொல்லிவிட்டு அதிமுக்கியப் பிரச்சினையான அவரது சொந்தப் பிரச்சினைக்குத் தாவுகிறார். பொதுவில் வெளியிடப்படாத, பொதுவில் பகிராத, ஏதோ ஒரு பச்சை நம்பிக்கைத் துரோகியின் மூலம் வெளிக் கொணரப்பட்ட சிவராமனின் மடலை வெளியிடுகிறார். அதில் சுகுணாவைப் பற்றிய அவதூறுப் பகுதியை பார்த்ததும் கொதித்துப் போய் சிவராமனை பயங்கர பஞ்ச் டைலாக்குகளின் மூலம் (பார்ப்பனியம்,ஆண்திமிர்) திக்கு முக்காட வைக்கிறார். நர்சிம்மை தாக்கி சிவராமன்+ வினவு எழுதி இருந்த பதிவின் ஸ்டைலிலேயே (லாஜிக் அபத்த புரிந்துணர்வோடு) சிவராமனைத் தாக்குகிறார். டொக்டர் விஜய் பறந்து பறந்து சண்டை போடும் காட்சி கண் முன் வந்து போகிறது. கடைசியில் ரசிகர்கள் படபடவென கைத் தட்டுகிறார்கள். “சூப்பர் ஸ்டார் ரசினிகாந்த் வாழ்க!” என்கிற கோஷத்தைப் போல “வினவு நான் தான் தான் ஒரிஜினல்.. சிவராமன் டூப்ளிகேட்.. என்ன நம்பு..” என பம்முகிறார். பின்பு எரிந்து கொண்டிருந்த கொள்ளியின் மீது எச்சிலைத் துப்பி அணைத்து விட்ட புளகாங்கிதத்துடன் அறிமுகப் பாடல் ரிப்பீட்டோடு வெளியேறுகிறார். போகிற போக்கில் ’தளபதி’ ’தலை’யை நொட்டுவது போல ’அய்யனாரின் ஆண் திமிர்’ என்ற இன்னொரு ’பஞ்ச்’சையும் வைக்கிறார். இனிமேல் அடுத்த பதிவை இராவணன் வந்தவுடன் பல துப்புகளோடு விரிவாய் எழுதுவார். அதுவரை எல்லோரும் போய் வேலையைப் பாருங்கள். சுபம். மங்களம். டொண்டொண்டொய்ங். கருத்து வேண்டிக் காத்திருந்த நாம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதிவை விட்டு வெளியேறுகிறோம்.

நிகழ்த்தப்பட்ட துரோகங்களின் பட்டியல் நீளமானது. அதில் முதலாவதாய் நான் சுகுணாவைச் சேர்க்கிறேன். தன்னை ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என முன் நிறுத்திக் கொள்வதாலேயே அவருக்கு இந்த முதலிடம். எந்த அரசியல் செயற்பாட்டாளனும் எழுதப்படாத பகிரப்படாத அவதூறுக்கெல்லாம் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளியை எச்சில் துப்பி அணைப்பதில்லை. இவர் எவ்வித தார்மீக உணர்ச்சியுமில்லாமல் இதை செய்திருக்கிறார். அவருக்கு சமமான துரோகத்தை சிவராமனின் மின்னஞ்சலை வெளியிட்ட அவரது நம்பிக்கையாளரும் நிகழ்த்தியிருக்கிறார். எத்தனை மோசமான துரோகம் இது?

அடுத்த இடம் நர்சிம்மின் இந்த இடுகையை ஆதரித்து அவரது பதிவில் கும்மியடித்த அவரைத் தொடர்ச்சியாய் தாங்கிப் பிடித்த /பிடித்துக் கொண்டிருக்கும் அவரின் நண்பர்கள். நட்பு என்பதற்கான வியாக்கியானங்களை எழுத போரடிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நர்சிம்மை சொறிய ஒரு கூட்டம் இருந்தது. அம்மாதிரியான ஒரு கூட்டம் வளர்வதை அவர் விரும்பியிருக்கலாம். அதன் விளைவுதான் இது. எந்த ஒரு நல்ல நண்பனும் இந்த வக்கிரத்தை ஆதரித்து இருக்க மாட்டான். அதைச் செய்தவர்கள் உங்களுக்கு நண்பர்களும் அல்ல. பதிவர் நர்சிம்மை பிரபல பதிவர் ஆக்கிய அதே நண்பர்கள்தாம் இன்று ’பொறுக்கி’ நர்சிம் ஆகவும் மாற்றி இருக்கிறார்கள்.வலையில் நட்பு வளர்ப்பதை விட எழுத்தை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது.

மூன்றாவதாய் ”நர்சிம் செய்தது தவறுதான் முதலில் ஏன் அவர்கள் சீண்ட வேண்டும்” என்றபடி நசுங்கிய சொம்பைத் தூக்கிக் கொண்டு நாட்டாமை செய்ய முயன்ற பதிவர்கள். சக பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எவ்வித உணர்வுமில்லாமல் எல்லாப் பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்துக் கொண்டு ”அவர் பாவம் ஏன் இப்படி அடிஅடின்னு அடிக்கறாங்க” என பரிதாபப்படும் சக பதிவர்கள். எல்லாவற்றுக்கும் உச்சமாய் தமயந்தி என்றொரு எழுத்தாளினி. அவர் புத்தகம் வெளியிட்டிருக்காராம். அத விமர்சித்த கவிஞன் குடிகாரனாம். மேலாண்மை பொன்னுச்சாமிய பிடிக்காதாம். நர்சிம் செய்தது தப்புத்தானாம்.பஞ்சாயத்துலாம் ஒண்ணும் செய்ய தேவையில்ல ’ஹலோ மிஸ்டர் வலையுலக நாட்டாமைகளே’ன்னு எள்ளலோட ஒரு பதிவிட்டிருக்கார். அவரது எழுத்தில் தெறித்த அலட்சியத்தைப் படிக்கையில் திக்கென்கிறது. நல்லது தமயந்தி.காலம் உங்களின் புரிதல்களை விரிவுபடுத்தட்டும்.

நான்காவதாய் சிவராமன். பதிவர்கள் குறித்தான அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் மீதான நம்பகத் தன்மையை குழி தோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். கடன் வாங்கியிருந்தாலும் அநீதி கண்டு பொங்கிய உங்களின் நேர்மையை சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என புலம்ப வைத்துவிட்டது. மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது சிவராமன், எல்லா விடயங்களிலும். நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் முல்லையின் மீது மதிப்பு உயருகிறது. என்னுடைய முழு ஆதரவும் பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு முல்லை.

Monday, May 31, 2010

தில்லி 06 : 2

நேற்று: 29.05.2006 : ஜிபி ரோட் – தில்லி

எல்லா வேலையும் முடிந்தது. யுஏஇ எம்பசியில் பின்புறம் ஸ்டாம்ப் ஒட்டின என் பட்டத்தை வாங்கும்போது பெரிய விடுதலையை உணரமுடிந்தது. எத்தனை அலைச்சல்! எவ்வளவு நீண்ட காத்திருப்பு! வெயில், பசி என எல்லா கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. விஜியும் கொண்டு வந்திருந்த தலையணை புத்தகங்களும் இல்லையென்றால் இன்னும் அதிகமாக சிரமப்பட்டிருப்பேன். கையில் புத்தகம் இருந்தால் எவ்வளவு நீளமான வரிசையிலும் நின்றுவிடலாம். நின்றபடியே அந்த உலகத்தில் தொலைவதில் எனக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. விஜியால் ஒரே இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. இதற்கும் அதற்குமாய் நடந்து கொண்டிருப்பான். மழையில் எருமைக் கணக்காய் நிற்கும் என்னை சற்று எரிச்சலாகத்தான் அவ்வப்போது வந்து பார்த்துப் போவான். ஒரு வழியாய் எல்லாம் முடிந்தது. மிக உற்சாகமாய் புறா கூண்டு லாட்ஜிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். திடீரென நினைவு வந்தவனாய் ”ஆக்ரா பக்கம்தான தாஜ்மகாலை பார்த்துட்டுப் போய்டலாமே..” என்றேன். உடனே சம்மதித்தான். ரயில் நிலையத்திற்கு போய் பயணச் சீட்டுகளை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு அறைக்குத் திரும்பினோம். ஒரு இயல்பான மன நிலை திரும்பியிருந்தது. உணவிற்கு சொல்ல சிப்பந்தியை அழைத்தோம்.

விஜி மூன்று நாட்களில் கத்துக் கொண்டிருந்த இந்தி உதவியுடன் ”ரூமுக்கு பொண்ணு வருமா” என்றான். ”ஜிபி ரோட் சலோ பூரா லடுக்கி ஹெ” என்றார். எங்கள் இருவருக்குமே மெல்லிதான குறுகுறுப்பு ஒன்று தொற்றிக் கொண்டது. எப்படிப் போவது என்பதை அவரிடமே கேட்டுப் புரிந்து கொண்டோம். லேசாய் தூங்கிவிட்டு நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வெகுநேரம் குளித்துத் தயாரானோம். சிவப்பு விளக்குப் பகுதியெல்லாம் சினிமாவில் பார்த்திருந்ததுதான். லேசான பயமும் இருந்தது. ”பெண்ணுடன் இருக்கும்போது போலீசு வந்தால் எப்படி தப்பிப்பது?” என விஜியிடம் கேட்டேன். அவன் இந்த கோணத்தில் சிந்தித்திருக்க மாட்டான் போல. “அய்யோ மச்சான் உள்ள கிள்ள உக்கார வச்சுட்டானுங்கனா துபாய் எப்படிடா போவறது?.. வேணாம் வுடு.. சரக்கடிச்சிட்டு தூங்கிடலாம்.. ஏன் வம்பு” என்றான். எனக்கும் அதுதான் சரியெனப்பட்டது இருப்பினும். சும்மா கொஞ்ச தூரம் நடக்கலாமே என வெகு தூரம் நடந்து ஜிபி ரோடுக்கு வந்து விட்டோம்.

தமிழ் சினிமாக்களில் பார்த்திருந்தது போலதான் இருந்தது. மக்கள் நெரிசல் மிகுந்த, குறுகிய, நீளமான சாலை. நெடுகிலும் மிகப் பழைய வீடுகள். முதல் மாடியின் நீள வராண்டா முழுக்க பெண்கள். மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் முழுக்க பெண்கள். இத்தனை அடர்த்தியான முகப்பூச்சுகளையோ குறைவான ஆடையணிந்த பெண்களையோ இருவருமே பார்த்திருக்க வில்லை. சின்ன பதட்டத்தோடே அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். நான்கைந்து பெண்கள் “ஏ மதராஸி இதர் ஆவ்” எனக் கிண்டலடித்தனர். நானும் இவனும் வேகமாய் நடந்தோம். பின்னாலேயே இரண்டு சிறுவர்கள் தொடந்து கொண்டிருந்தனர். ஒருவன் என் கைப் பிடித்து நிறுத்தினான். உடைந்த தமிழில் “தமில் கேரளா ஆந்திரா எல்லா ஸ்டேட்டும் இருக்கு. மஸ்த் பிகர். நூறு ரூபாதான்” என்றான். பதின்மத்தை தொட்டிராத சிறுவன் அவன். “நை நை ஜஸ்ட் வாக்கிங்” என்றேன். அவன் சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றான் பின்பு கையை விட்டுவிட்டு போய்விட்டான். விஜி இன்னொரு சிறுவனுடன் தீவிரமாய் மூன்று நாள் இந்தியில் பேசிக் கொண்டிருந்தான். எனக்காய் திரும்பி “மச்சான் சும்மா போய் எடத்த பாக்கலாண்டா... புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம்.. . சும்மா ஒரு டிபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ்” என சிரித்தான். பயம், ஆசை, தயக்கம், சபலம் என எல்லாம் ஒருமித்த மன நிலை அது. போலாம் என தலையசைத்தேன்.

அந்தச் சிறுவன் முன்னால் நடக்க நாங்கள் பின் தொடந்தோம். பிரதான சாலையிலிருந்து குறுக்கு சந்தில் நடக்கத் துவங்கினான். மிக சிடுக்கான வீதி அது. முழுக்க கடைகளும் மனிதர்களும் அடைத்துக் கிடந்தனர். அவன் மிகச் சுலபமாய் கூட்டத்தில் நீந்திச் சென்றான். எங்களால் தொடர முடியவில்லை. அவ்வப்போது நின்று எங்கள் தலைகள் தெரிந்தவுடன் மீண்டும் நீந்திப் போய் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எனக்கு பயமாக இருந்தது. திரும்பிப் போய்விடலாம் என இவனை நிறுத்தினேன். திரும்ப யத்தனிக்கும்போது சிறுவன் அருகில் வந்து விஜியின் கையைப் பிடித்துக் கொண்டான். வந்துவிட்டோம் என சொல்லியபடியே அருகில் பிரிந்த இருள் சந்திற்குள் நுழைந்தான். வெளிச்சம் மிகக் குறைவான சந்து அது. மனித நடமாட்டம் இல்லை. பத்தடி நடந்ததும் ஒரு சிதைந்த வீட்டின் பின் கதவின் முன் நின்றான். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதைப் போலிருந்தது. “விஜி வாடா ஓடிடலாம்” என்றேன். சிறுவன் கதவுகளைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான். நாங்களும் தொடர்ந்தோம். வெளிச்சமற்ற நீள வழி அது. சுரங்கப் பாதை போல மண்ணால் கட்டப்பட்ட இரு சுவர்களுக்கு மத்தியில் நீண்டு கொண்டிருந்தது. நடந்து கொண்டிருந்தோம். திடீரென வெளிச்சம் பாய்ந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்தது பிரதான சாலையை ஒட்டியிருந்த பழைய கட்டிடம் ஒன்றினுள்தான். சிறுவனை முறைத்தோம் ஆனால் கடிந்து கொள்வதற்கு வாய் வரவில்லை.

அவன் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினான். வளைந்த குறுகிய அரை இருள் படிக்கட்டுகள். இடைவெளியே இல்லாது முழுக்க பெண்கள் நின்று கொண்டிருந்தனர். வியர்த்துப் போய் மேலே வந்தோம். இரண்டு தூண்கள் வைத்திருந்த ஒரு கூடம். படிக்கட்டு முடியுமிடத்தில் ப வடிவ சிமெண்ட் திட்டு. அதில் காலி குடங்கள் அழுக்குப் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. கூடத்தின் நடுவில் திரி ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குத்துக் காலிட்டு அமர்ந்தபடி சப்பாத்தியை தேய்த்து ஸ்டவ்வின் மேலிருந்த வாணலில் போட்டபடியிருந்தாள். அவளுக்கு சமீபமாய் ஒரு சிமெண்ட் திண்ணை. அதில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தொப்பியையும் லத்தியையும் அருகில் கிடத்தியிருந்தார். கூடத்தின் வலது புறத்தில் மூன்று அறைகள் வரிசையாய் கட்டப் பட்டிருந்தன. இரும்புக் கதவுகளைக் கொண்ட அவ்வறைகள் மூடியிருந்தன. கூடத்தின் இடது பக்கம் ஒரு நார் கட்டில் அதில் ஒரு கூன் விழுந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள்.

நாங்கள் தயங்கியபடி சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். போலீஸ்காரரும் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணும் எங்கள் இருவரையும் சட்டை செய்யவில்லை. சிறுவன் திடீரென மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். பாட்டி எங்களை அருகில் அழைத்தாள். நடுங்கும் குரலில் ”மதராஸி?” என்றாள் தலையசைத்தோம். ”ஆளுக்கு இருநூறு ரூபாய் எடுங்கள்” என்றாள். அதே நேரத்தில் ஒரு இரும்புக் கதவு பல் கூசும் சப்தத்துடன் திறந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண் உடைகளை சரிசெய்தபடி உள்ளிருந்து வெளியே வந்தாள். பேண்டை தோளில் போட்டபடி ஒரு நோஞ்சான் ஆள் பின்னாலயே வெளியில் வந்தான். நான் “போய்டலாம் விஜி” என அவன் கைகளை பிடித்து இழுத்தேன். வெளியில் வந்தப் பெண் “க்யா” என்றாள். “நை கமிங் ஆப்டர் ஆப்டர்” என்றேன். மீண்டும் நடுங்கும் குரல் “சாலா மதராஸி பணத்த எடு” என்றது. விஜி “நோ பைசா நோ பைசா ஆப்டர் கமிங்” என உளறினான். இன்னொரு இரும்புக் கதவும் திறந்தது. சற்று கனத்த உடம்போடு நடுத்தர வயதுப் பெண் உள்ளாடைகளோடு வெளியில் வந்தாள். ஓடப் பார்க்கிறோம் எனப் புரிந்து கொண்டாள். நெருங்கி வந்து என் சட்டையை கொத்தாக பிடித்து உலகத்தின் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்தாள். “பை மிஸ்டேக் கேம் சாரி சாரி” என்றேன். “திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” என உதறிவிட்டு சிரித்தாள்.

விடுவிடு வென வெளியில் வந்தோம். அவமானம் பிடுங்கித் தின்றது. எதுவும் பேசாமல் வேகமாய் நடந்து கொண்டிருந்தோம். எந்த வழியில் போகிறோம் என்று கூட தெரியவில்லை. திடீரென சூறைக் காற்று அடிக்கத் தொடங்கியது. பிரதான சாலையை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டிருக்கிறோம். தலை முகம் உடைகள் எல்லாமும் மண்ணால் நிரம்பியது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன். திடீரென மழை கொட்டத் துவங்கியது. அருகிலிருந்த பெஞ்சில் கண் மூடி வானம் பார்த்து படுத்துக் கொண்டேன் விஜி எதுவும் பேசாமல் அருகில் அமர்ந்தான். மழை எங்கள் இருவரையும் ஆக்ரோஷமாய் தழுவியது

30.05.2006 இன்று : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை பெயர் தெரியா நிறுத்தம்

நேற்றைய இரவை நினைக்க நினைக்க அவமானமாய் இருந்தது. நினைவை உதறிக் கொண்டேன். கடந்த அரை மணி நேரமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. அவ நம்பிக்கைகள் மெதுவாய் எங்களின் முகங்களில் படரத் துவங்கின. கல்லூரிக்குத் தொடர்பு கொண்டு மாற்று சான்றிதழ்களை வழங்குவார்களா என கேட்கலாமா என்றான் விஜி. கிடைச்சிடும்டா என்றேன். அந்த குரலில் எனக்கே சுத்தமாய் நம்பிக்கையில்லை. பஞ்சரான வண்டி தயாராகி விட்டது போலிருக்கிறது. நடத்துனர் சிதறிக் கிடந்த பிரயாணிகளை அழைக்கத் துவங்கினார். இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்றபடியே பேருந்தை நோக்கி நடக்கத் துவங்கினோம். படியில் நின்றிருந்த நடத்துனர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு முன்பு ஏறின விஜி ”டேய் மச்சான் ”என சந்தோஷமாய் கத்தினான். ”என்னடா” என்றபடியே உள்ளே வந்தேன். எங்களின் பைகள் இருக்கைகளில் பரிதாபமாய் அமர்ந்திருந்தன. இருவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனோம். நாங்கள் வந்த வண்டி இதுதான். வேறேதோ வண்டியை பார்த்து நான் தான் குழம்பி பதறியடித்திருக்கிறேன். விஜி என் கழுத்தை நெறிக்க வந்தான். நான் “ரண்டக ரண்டக ரண்டக” என உற்சாகமாய் கத்தினேன்.

Friday, May 28, 2010

தில்லி 06


இன்று : 30.05.2006 : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை ,பெயர் தெரியா நிறுத்தம்

செய்வதறியாது நின்றுவிட்டேன். திகைப்பும் பயமும் ஒருமித்து அடிவயிற்றிலிருந்து பந்து ஒன்று மேலெழும்பிக் கொண்டிருந்தது. இடம், மொழி, அடையாளம் எதுவும் தெரியாத ஒரு வினோத நகரத்தின் சாலை ஓரத்தில் கைவிடப்பட்டவர்களாய் நானும் விஜியும் நின்று கொண்டிருந்தோம். அவனுக்கு இளகின மனது. எந்த நொடியிலும் அழுதுவிடும் மனநிலையில் இருந்தான். எங்களைக் கடக்கும் வாகனங்களை கைகாட்டி நிறுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். விஜி நிறுத்தாத சில வாகனங்களின் பின்னால் சிறிது தூரம் ஓடி “பைசா தரேன் பைசா தரேன் ஏத்திட்டுப் போ” எனக் கத்திக் கொண்டிருந்தான். எவரும் சட்டை செய்யாது வாகனத்தை அதி விரைவாய் ஓட்டிக் கடந்தனர். தலைப்பாகை அணிந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட நிறுத்தாமல்தான் சென்றனர். காலை எட்டு மணிக்கே சூரியன் முன் நெற்றியை எரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் பதட்டத்திலும் வியர்வையிலும் நனைந்து கொண்டிருந்தோம். மரங்களின் நிழல்கள் ஒரு போதும் தீண்டியிராத தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் இந்த நெடுஞ்சாலை காலையிலே தகிக்கத் துவங்கிவிட்டது. எங்களைக் கை விட்டுச் சென்ற பேருந்தை இனிமேல் பிடிப்பது சற்றுக் கடினம்தான்.

பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிய உணவகத்திற்கே மீண்டும் திரும்பி வந்தோம். அங்கு வரும் பேருந்தில் ஏறி, ஆக்ரா போய் எங்கள் உடைமைகள் இருக்கும் பேருந்தைக் கண்டுபிடித்துவிடலாம் என விஜியிடம் ஆறுதலாய் சொல்லத் துவங்கினேன். “ட்ரைவர் இல்ல கண்டக்டர் முகம் நினைவில இருக்கா?” என்றான். இல்லை. சுத்தமாய் நினைவிலில்லை. காலை ஆறு மணிக்கு பேருந்தில் ஏறினோம். டிக்கெட் வாங்கியவுடன் இருவருமே தூங்கிவிட்டோம். இந்த பதட்டங்களுக்கு காரணம் பேருந்தில் வைத்திருந்த எங்களின் பைகளில் ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து வெளியுறவு அமைச்சகம், கல்வி அமைச்சகம், யுஏஇ எம்பசி போன்றவற்றிடமிருந்து உறுதி முத்திரைகளை வாங்கியிருந்தோம். ஒழுங்காய் ரயிலேறி சென்னைக்குத் திரும்பியிருக்கலாம். நான்தான் இவ்வளவு தூரம் வந்துவிட்டு தாஜ்மகாலைப் பார்க்காமல் போவதா? என இவனையும் கிளப்பிக் கொண்டு, தில்லி ரிசர்வேசனை ஆக்ராவிற்கு மாற்றிவிட்டு, இன்று அதிகாலையில் பேருந்தைப் பிடித்து வந்துகொண்டிருந்தோம். வழியில் தேநீருக்காக நிற்கையில் இறங்கினோம். இதோ சாலையில் நிற்கிறோம்.

உணவகத்தில் ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் பஞ்சரானதாம். பயணிகள் சலித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தனர். வேரெந்த வாகனமும் உள்ளே வரவில்லை. உணவக வாசலிலிருந்த டீக் கடையின் பாதி நிழலில், வாகனங்கள் நுழையும் வழியைப் பார்த்தபடி நின்று கொண்டோம். இந்த பயணமே சிக்கலாய்த்தான் ஆரம்பித்தது.

ஐந்து நாட்கள் முன்பு 25.05.2006: சென்னை செண்ட்ரல்

திட்டமிட்டதைப் போல மதியம் இரண்டு மணிக்கெல்லாம் செண்ட்ரல் வந்து விட்டேன். மே மாத வெயிலின் உக்கிரம் சிதறலாய் கிடந்த மனிதர்களின் முகங்களில் படிந்திருந்தது. இடது தோளில் ஒரு கனமான பையும் வலது கையில் ஒரு சிறிய பையும் வைத்திருந்தேன். வியர்வையில் சட்டை ஏற்கனவே நனைந்து விட்டிருந்தது. ப்ளாட்பாரத்தில் சுழலும் பெரிய மின் விசிறி வெப்பத்தை கக்கியது. அந்த காற்று படாத இடமாய் பார்த்து நின்று கொண்டேன். விஜி இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவதாய் சொல்லியிருந்தான். மாலை ஐந்து மணி க்ராண்ட்(GT) ரயிலில் தில்லிக்குப் போகிறோம். டிக்கெட்டையும் அவன் தான் பதிவு செய்திருந்தான். முதல் முதலாய் தொலைதூரப் பயணம் என்பதால் முந்தின நாள் இரவே எனக்கு தூக்கம் போய்விட்டது. கிட்டத்தட்ட ஐந்து நாள் ரயிலில் பயணிக்க வேண்டும் தில்லியில் இரண்டு நாட்கள் அலைந்து திரிய வேண்டும். எங்களுடைய கல்விச் சான்றிதழ்களை வெளியுறவு அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் உறுதிசெய்யவேண்டும். பின்பு யுஏஇ எம்பசியிடமிருந்து அச்சான்றுகளில் ஒரு ஸ்டாம்பையும் வாங்க வேண்டும் இம் மூன்று சான்றுகளை வாங்கி அனுப்பினால்தான் துபாயில் எங்களை தேர்வு செய்திருந்த நிறுவனம் விசா அனுப்பி வைக்கும். குறுகிய கால அவகாசமே இருந்ததால் வேலையை முடிக்க வேண்டிய லேசான பதட்டமும் இருந்தது.

வீட்டிலிருந்து புறப்படும்போது ஐந்து நாள் பிரயாணத்திற்கு தேவையான கனமான புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் தொடரும் நிழலின் குரல், பிதிரா, காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் மூன்றை நுழைத்ததுமே பை வீங்கி விட்டது. புளியோதரை, எலுமிச்சை சாதம் வகையறாக்களை பையில் நுழைக்க எடுத்து வந்த என் அம்மாவை ஒரு பார்வை பார்த்தேன். “பிரயாணத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காது எடுத்துட்டுப் போடா” என்றாள். “உன்னோடது நல்ல சாப்பாடுன்னு நான் சொல்லனும் நீயே சொல்லிக்க கூடாது” என்றேன் விரைப்பாக. “காய்ஞ்சி திரும்பி வா அருமை தெரியும் “ என சபித்தபடியே பொட்டலங்களை உள்ளே எடுத்துப் போனாள். விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து சமையலறையை உருட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட்டது. பேருக்காவது இரண்டு பொட்டலங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம்தான். வேண்டாம் அது வேறு எங்காவது கொட்டிக் கொண்டால் துணியும் புத்தகங்களும் வீணாகி விடும். காலை ஆறு மணிக்கு பேருந்தைப் பிடித்து விட்டேன்.

இரண்டு மணியிலிருந்து காத்திருந்து வெறுத்துப் போய் மூன்று மணிக்கு சமீபமாய் விஜியை அலைபேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. அரக்கோணத்திலிருந்து ரயிலில் நின்று கொண்டு வருகிறானோ என்னவோ. அவன் சொந்த ஊர் அரக்கோணம் பக்கத்தில் ஒரு சிறு கிராமம். அனல் காற்றும் மக்கள் கூட்டமும் செண்டரலை காந்தியது. நல்ல பசி வேறு. விஜியுடன் லேசாய் குடித்து விட்டு, சாப்பிட்டுவிட்டு, நாலரை மணிக்கெல்லாம் ப்ளாட்பாரம் வந்து விடுவதுதான் திட்டம். பாவி மூன்று மணியாகியும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டபோது சின்னதொரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாய் சொன்னான். ஐந்து மணிக்கு கண்டிப்பாய் வந்துவிடுவதாக உறுதியளித்தான். பைகளை சுமந்தபடி சாப்பிடச் சென்றேன்.

சென்னை மிக மோசமான நகரம். அதுவும் வெயில் காலங்களில் இந்த நகரத்திற்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது. இந்த சென்னை வாழ்வு பிடிக்காமல்தான் நல்ல வேலையை உதறிவிட்டு ஆறு மாதத்தினுக்கு முன்பு மதுரை ஓடிப்போனேன். விஜியும் நானும் சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம். அப்போதிருந்தே அவன் துபாய் போக முயற்சி செய்துகொண்டிருந்தான். எனக்கு வெளிநாடு போகும் ஆர்வம் இல்லை. மதுரையே போதுமானதாக இருந்தது. மதுரை நகரமும், மனிதர்களும், உணவகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒத்தக்கடையிலிருந்து சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு போகும் வழியில் நிலம் கூட பார்த்துவிட்டேன். லோன் கிடைப்பதும் எளிதுதான். விஸ்தாரமாய் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு மதுரையிலேயே செட்டில் ஆகும் எண்ணம்தான் இருந்தது. இவனை தேர்வு செய்த நிறுவனத்தில் இன்னொரு பணி காலியாக இருந்ததாம். வந்துவிடும்படி விஜி நச்சரித்துக் கொண்டிருந்தான். “இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருந்து விட்டு வந்துவிடலாம். …விசா டிக்கெட் எதுக்கும் பணமில்ல…. தங்குர இடமும் அவனே தர்ரான்…. சம்பளமும் ஓகே… என பல்வேறு தூண்டில்கள். கடைசியில் நான் மீனானேன்.

இதோ கடந்த இரண்டு மாதங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். விசா வந்துவிடும் என அந்நிறுவனம் லட்டர் கொடுத்ததோடு சரி. ஒரு மாதம் எந்த தொடர்புமில்லை. நாங்கள் இருவருமே பார்த்துக் கொண்டிருந்த வேலையை கவுண்டமணியைப் போல விட்டிருந்தோம். ஒரு மாதம் கழித்து சான்றிதழ்களை அட்டஸ்டட் செய்து அனுப்புங்கள் அப்போதுதான் விசா எடுக்க முடியும் என புதிதாய் ஒரு கதை சொன்னார்கள். வெளிநாட்டு வேலை மிதப்பில் ஏகத்துக்கும் செலவு செய்து விட்டிருந்தோம். அங்கே இங்கே கடன் வாங்கி இன்று சென்னை செண்ட்ரல்.

அருகிலிருந்த சாப்பாட்டுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த வியர்வையில் கூட்டத்தில் நீந்தி, இடம் பிடித்து உட்கார்ந்து, கொதிக்கும் சாம்பாரோடு சாதத்தை தின்று தொலைக்க முடியாது. சென்னையையும் வெயிலையும் மனதார சபித்து விட்டு பக்கத்தில் மதுக் கடையைத் தேடி நகர்ந்தேன். அரசு மதுக்கடையில் பியர் கொதித்தது. ஆத்திரமாய் வந்தது. காண்ட்ராக்ட் முடிய சொற்ப மாதங்கள் மீதமிருக்கும் தனியார் கடை ஒன்று கண்ணில் பட்டது. நல்ல வேளையாய் அங்கே பியர் குளித்திருந்தது. அழுக்கு மேசை, காலுடைந்த மர ஸ்டூல், சுண்டல் சிதறல்களாய் மனிதர்களென கடை பின் பக்கத்தில் பியரை தாகத்துடன் வேகமாய் குடித்து முடித்தேன். தோள்பட்டை வலித்தது. இந்தத் தலயணை புத்தகங்களை எடுத்து வராமலிருந்திருக்கலாம். ஆனால் ஐந்து நாள் பயணத்தில் என்ன செய்வது? மீண்டும் ஒரு பியர் குடித்தேன். உலகம் சந்தோஷமானது. வெயிலைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் வரிகள் நினைவுக்கு வந்தன. சென்னையை, கூட்டத்தை, வியர்வையை நான் நேசிக்கத் துவங்கினேன். அடுத்த மாதம் வாங்கப் போகும் சம்பளத் தொகையை நினைத்துக் கொண்டேன். இன்னும் சந்தோஷமானது. அரைப்புட்டி ரம்மை வாங்கி பெப்சி பாட்டிலில் கலந்து பையில் வைத்துக் கொண்டேன். நான்கு மணி ஆகியிருந்தது. விஜி கால் டாக்சியில் வந்து கொண்டிருப்பதாகவும் சரியாய் ஐந்து மணிக்கு ஸ்டேசனில் இருப்பேனனவும் சொன்னான். நான் மீண்டும் பைகளை சுமந்தபடி லேசாய் மிதந்தபடி செண்ட்ரல் திரும்பினேன்.

இரண்டாவது ப்ளாட்பாரத்துக்கு சமீபமான பெஞ்சில் சுமைகளை இறக்கி வைத்து விட்டு அமர்ந்தேன். ஜிடி வந்துவிட்டது. நான் விஜிக்கு அலைபேசவில்லை. இடியே விழுந்தாலும் சமாளிக்கும் உற்சாக மன நிலை இருந்தது. ஜிடி கிளம்பிப் போய்விட்டது. விஜியிடமிருந்து அழைப்பு
“மச்சான் வண்டி வந்துட்சா”
“போய்டுச்சி ஒய்”
“சாரிடா இங்க செம ட்ராபிக்”
“சரி வந்து சேரு தமிழ்நாடுல இடம் இருக்கா பாப்பம்” என்றேன்.
ஐந்தரைக்கு மணிக்கு வந்து சேர்ந்தான். டிக்கெட்டுகளையும் அவனே வைத்திருந்தபடியால் என்னால் கேன்சல் செய்யவும் முடியவில்லை. இருவரும் போய் ஜிடியை பாதி விலைக்கு கேன்சலித்தோம். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் மூன்றாவது ஏசி டிக்கெட்டுகள்தாம் இருந்தன. “தேர்ட் ஏசிக்கு அவன் கேக்குர காசுக்கு கொஞ்சம் கூட போட்டு பிளைட்ல போய்டலாம் மச்சான்” என்றான். “அடுத்த மாச சம்பளத்த நென... இப்ப புக் பண்ணு” என சிரித்தேன். மேலும் “வட மாநிலங்களில் வெயில் பயங்கரமாக இருக்கும் ஏசி கிடைத்தது நம் அதிர்ஷ்டம்தான்” என்றேன். “இருந்தாலும் செம காசு மச்சான்” என்றான். “வுடு ஒய்” என்றதும் முறைத்தபடியே டிக்கெட் வாங்கினான்.

விஜி அளவில் சிறியதாய் ஒரு பை எடுத்து வந்திருந்தான். என் பெரிய பைகளைப் பார்த்து “பறவையப் போல வாழக் கத்துக்க மச்சான்” என்றான். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்த்து. இடம் தேடி அமர்ந்தோம். ”நீ மட்டும் நல்லா குடிச்சி சந்தோசமா இரு ஒய்” என்றான். முன் மற்றும் பக்கத்து இருக்கைகள் காலியாய் இருந்தன. பையிலிருந்த பெப்சி பாட்டிலை எடுத்தேன். ”மச்சான் நீ கில்லிடா” என்றான். விஜிக்கு பித்த உடம்பு (அப்படித்தான் சொல்வான்) அரை பியருக்கே படு பயங்கரமான உண்மைகளையெல்லாம் உலகினுக்கு உரத்து சொல்ல ஆரம்பித்துவிடுவான். ஹாட் என்றால் ஒரு கட்டிங்தான். மெதுவாய் ஆரம்பித்தான்.

“மச்சான் இன்னா மேட்டர் தெரியுமா நான் அரக்கோணத்துல இருந்து நேத்து சாயந்திரமே திருவள்ளூர் வந்துட்டேன். கார்த்தி ரூம்ல இருந்துட்டு காலைல கிளம்பி மேரியப் பாக்க போனேன். சாப்டுட்டுதான் போகனும்னு அடம்புடிச்சாங்க. அவங்க அன்பை தட்டிக் கழிக்க முடியாம நல்லா சாப்டுட்டு மனசே இல்லாமதான் கால் டாக்சி புடிச்சி வந்தேன் ஒய்” என இளித்தான். எனக்கு ஆத்திரமாய் வந்தது. “தாயோலி உன்னால எவ்ளோ லாஸ்” “கோச்சுக்காத ஒய் இன்னொரு ரவுண்ட் ஊத்து” என்றபடியே சரிந்தான் ஸ்லீப்பர்களை விரித்து மட்டையானோம்.

இன்று : 30.05.2006 : தில்லி ஆக்ரா நெடுஞ்சாலை, பெயர் தெரியா நிறுத்தம்

கடந்த பதினைந்து நிமிடமாக எந்த வாகனமும் உள்ளே வரவில்லை. காற்றில் இதற்கு முன்பு அனுபவித்திராத வினோத வாசமிருந்தது. வயிற்றில் பசி நிரந்தரமாக இருந்தது. நன்றாக சாப்பிட்டு ஐந்து நாட்கள் ஆகின்றன. எல்லா உணவிலும் நீக்கமற அடிக்கும் எழவெடுத்த எண்ணெய் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அவ்வப்போது வெறும் காற்றை வாந்தியாய் எடுத்துக் கொண்டிருந்தேன். இந்த தில்லி நகரம் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. குவியல் குவியலாய் மக்கள். எங்கு பார்த்தாலும் காவிக் கறை. எப்போதும் எதையாவது குதப்பும் சொத்தைப் பல் மனிதர்கள். வத்திப்பெட்டி வசிப்பிடங்கள். மிக மோசமான உணவகங்கள். என மத்திய வர்க்கம் புழங்கும் தில்லி நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது. இந்தியாவின் சொர்க்கம் தென்னிந்தியாதான் என தோன்றிற்று. போதாதென்று இம்மாதிரியான அனுபவங்கள் வேறு. எனக்கு பைத்தியம் பிடித்து விடுவது போலிருந்து.

விஜி சற்று நிதானமாகி இருந்தான்.” நம்ம பேக் பஸ்லதான் மச்சான் இருக்கும்.. எவன் எடுக்க போரான்..கவுருமெண்ட் பஸ் தான நாம வந்தது… பஸ் ஸ்டாண்ல இருக்க கவுண்டர்ல எடுத்து வச்சிருப்பானுங்க.. போய் எடுத்துக்கலாம்..” என பதில் எதிர்பாராது அவனுக்கு அவனே பேசிக் கொண்டிருந்தான்.
இங்கு எல்லா பேருந்துகளுமே ஒரே மாதிரி இருந்து தொலைகிறது. இந்தி எழுத்துக்களை இருவருமே வாழ்நாளில் முதல் முறையாய் பார்ப்பதால் என்ன எழுதி இருக்கிறதென்றும் தெரியவில்லை. நாங்கள் வந்த பேருந்தின் எண்ணும் தெரியாது. இறங்கும்போது பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் ஸ்டிக்கர் ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு இறங்கினேன். டீ குடித்து விட்டு திரும்பி பார்க்கையில் மஞ்சள் ஸ்டிக்கர் உணவகத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பதபதைத்துதான் இவனை அழைத்துக் கொண்டு வெளியில் ஓடினேன். அதற்குள் அந்த பேருந்து பிரதான சாலையில் மாயமாகி இருந்தது.

ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். நேற்றைய இரவு தந்த பயங்கர அனுபவத்தை விட இது மோசமில்லைதான். வினோதக் காற்றின் வாசத்தை சிகரெட் புகை இடம்பெயர்க்கத் துவங்கியது.

.........மேலும்

Featured Post

test

 test