Monday, December 11, 2017

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு



தினசரிகளின் துல்லியம்
     
     புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள்



உள்ளே..

1.   தினசரிகளின் துல்லியம் - முரகாமி
2.   அன்னா கரேனினா
3.   பார்போஸோ வின் குரங்கு
4.   நிகழை முழுமையாய் வாழ்தல்
5.   இருளில் மறைந்திருக்கும் யானை
6.   ஆஸ்விட்ஸ் வதை முகாம்
7.   குளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்
8.   புதிர்களின் சுழல்
9.   பப்பாளிக்காயின் மணம் 
10.  அகி கரிஸ்மாகி – புகைக் கலைஞன்
11.  யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பவ – பிறப்பு
12.  லார்ஸ் வோன் ட்ரையர்
13.  மணிரத்னம்
14.  கேம் ஆஃப் த்ரோன்ஸ்
15.  எஸ்.எல். பைரப்பா
16.  இரு வேட்டைக் கதைகள்
17.  அசோகமித்திரன்
18.  பி. லங்கேஷ்
19.  நூரி பில்கே சிலான்
20.  தமிழக அகதிகள்
21.  வாசிப்பும் விமர்சனமும்
22.  ஹோ ஷியோ ஷீன் (hou hsiao-hsien)
23.  ஜீ.முருகன்
24.  ஜெயலலிதாவும் செய்தி வெறியும்
25.  நீட்ஷேவின் குதிரை
26.  ஆஸ்கர் 2017
27.  தந்தையர்களைக் கொல்லுதல்
28.  இலக்கியப் பட்டியலின் அரசியல்
29.  மைக்ரோ திரைப்படக் குறிப்புகள்
30.  காட்சிகளின்றி காணுதல்
31.  துபாய் சர்வதேசத் திரைப்பட விழா
32.  கங்கைப் பருந்தின் சிறகுகள்
33.  தீக்கிரை – இன்செண்டீஸ்
34.  சிக்கவீர ராஜேந்திரன்
35.  ஸ்வீடிஷ் பிசாசும் தமிழ் பிசாசும்
36.  இயற்கையின் சமீபம்


 

துல்லியங்களுக்கு முன் :

இவை 2014 ஆம் வருடத்திலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் மைக்ரோக் குறிப்புகள். ஃபேஸ்புக், ப்ளஸ், ப்லாக் என கண்ட இடத்தில் எல்லாம் கிறுக்கி வைத்தவை. இவற்றைத் தொகுப்பாக்க நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டி ஒட்டும் வேலைகளை இந்தத் தொகுப்பு கோரியது. நிதானமாக செய்தேன். இதனோடே பழைய நினைவுகளில் ஊறவும் பிடித்திருந்தது.

சம இணைய கால உலகில் திரைப்படங்கள் குறித்தோ இயக்குனர்கள் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ – குறித்து என்பது குறித்து நீட்டி முழக்கி எழுதுவது - அபத்தம் எனத்தான் தோன்றுகிறது. வணிகப் பத்திரிக்கைகள், இலக்கிய இடை நிலை இதழ்களில் இந்தக் குறித்துத் தொடர்பான நிறைய கட்டுரைகளைப் பார்க்க முடியும். டெம்ப்ளேட் எழுத்தாளர்கள் அதே கீறல் விழுந்த ரெக்கார்டாய் சினிமா குறித்தும் புத்தகங்கள் குறித்தும் எழுதுவதை ஒரு சின்னப் பரிதாபத்தோடு கடந்து போவேன். எனக்குத் தெரிந்து முழுக்கதையையும் எழுதப்பட்டுவிட்ட சினிமா விமர்சனங்களை யாரும் வாசிப்பதில்லை. பக்கங்களை நிரப்ப ஒளிப்பதிவு அபாரம், நடிகையின் அருமையான முக பாவம் என்றெல்லாம் பிதற்றலாய் எழுதி வைப்பார்கள். வாசிக்கப் பாவமாக இருக்கும்.

இந்தத் தொகுப்பிலுள்ள குறிப்புகள் பக்கம், வடிவம், வாசக கவனம் என்பன போன்ற இடையூறுகள் எதுவும் இல்லாதக் குறிப்புகள். என் மன உணர்வுகளை கண்டமேனிக்கு எழுதி வைத்திருக்கிறேன். மற்ற சிரத்தையாய் எழுதப்பட்ட கட்டுரைகள் உருவாக்கும் பரிதாப உணர்வை இக் குறிப்புகளில் நீங்கள் பெற முடியாது என நம்புகிறேன்.

கன்னட இலக்கியம் குறித்தான அதிகக் கட்டுரைகளும் குறிப்புகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. என்னை தொந்தரவு செய்த படங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். கவனமாக சுயதம்பட்டங்களைக் களைந்திருக்கிறேன். கடந்த மூன்று வருடங்களில் சுயபச்சாதாபத்தையும் கழிவிரக்கத்தையும் கடந்து வந்திருக்கிறேன். இணைய குழாயடி சண்டைகளிலிருந்து மீண்டிருக்கிறேன் என்பதை இக்குறிப்புகள் அறியத் தருகின்றன. நிஜமாகவே மகிழ்கிறேன்.
மற்றபடி இன்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வரும். அந்தத் தொகுப்பில் இதிலிருக்கும் நிதானம் இருக்காது என நினைக்கிறேன். பார்ப்போம்.

கிண்டில் அபாரமாக இருக்கிறது. ஏழு புத்தகங்களை இறக்கியிருக்கிறேன். இது எட்டாவது புத்தகம். இன்னும் நிகழ்திரையும், உரையாடலினியும், கட்டுரைத் தொகுப்பும் நிலுவையில் இருக்கின்றன. நானே அட்டைகளை வடிவமைக்கிறேன். நானே தொகுக்கிறேன். நானே திருத்தங்களை செய்கிறேன். நானே கிண்டிலில் பதிவேற்றுகிறேன். எல்லாம் நானேதான்.

நீங்கள் வாசியுங்கள்

மிக்க அன்புடன்

அய்யனார் விஸ்வநாத்
டிசம்பர் 11, 2017

துபாய்.

No comments:

Featured Post

test

 test