Thursday, January 1, 2015

BIRD MAN - துபாய் திரைப்பட விழா - 3

BIRD MAN or The Unexpected Virtue of Ignorance 



அலெஹாந்த்ரோ யொன்ஸேல்ஸ் இனாரித்து வின் முதல் ஹாலிவுட் படமிது மெக்சிகோ வைச் சேர்ந்த இனாரித்து நான்லீனியர் கதை சொல்லல் மூலம் உலகம் முழுக்கப் பிரபலமடைந்தவர். மன உணர்வுகளை மிக ஆழமாய் ஊடுருவும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர். அமரோஸ் பெர்ரோஸ். பாபேல், 21 கிராம்ஸ், பியூட்டிபுல் ஆகிய நான்கு அற்புதமான திரைப்படங்களைத் தந்தவர். அவரின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் எனக்கு நிறையவே எதிர்பார்ப்பிருந்தது. ஹாலிவுட் வழமைக்குள் சிக்கிக் கொள்வாரா? அல்லது தன் பாணி கதை சொல்லலை ஹாலிவுட்டில் நிகழ்த்திக் காண்பிப்பாரா? என்பது போன்ற பல கேள்விகள் எனக்குள் இருந்தன. திரைப்படம் பார்த்து முடிந்ததும் இந்தக் கேள்விகளுக்கு ஒரு குழப்பமான பதில்தாம் கிடைத்தது. ஒரு திரைப்படமாக BIRD MAN எனக்குப் பிடித்திருந்தது. மைக்கேல் கீடனின் அசாதரணமான நடிப்பு, புதிதான கதைக்களம், விநோதமான சம்பவங்கள் என திரைப்படம் புத்தம் புது அனுபவமாகத்தான் இருந்தது ஆனால் இனாரித்துவின் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து இத்திரைப்படம் முற்றாய் விலகியிருந்தது.
ஹாலிவுட் கருப்பு நகைச்சுவைத் திரைப்படங்களுக்குப் பெயர் போனது. Coen brothers இந்த வகைமையில் உச்சங்களைத் தொட்டவர்கள். இந்த வகைமையில் இனாரித்து பலப் புது விஷயங்களை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். இத்திரைப்படத்தை Black comedy என்பதை விட சர்ரியலிசக் காமெடி என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட எமீர் கஸ்தூரிகா வின் Arizona dream திரைப்படம் தந்த உணர்வையே இந்த படமும் தந்தது. அரிஸோனா ட்ரீமின் புதிரும் அபத்தமும் கிண்டலும் BIRD MAN திரைப்படத்திலும் இருந்தது.
BIRD MAN திரைப்படத்தின் கதையே மைக்கேல் கீடன் என்கிற நிஜமான நடிகனின் வாழ்வைப் பார்த்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த நிஜமான நடிகனின் பாதிப்பு இருக்கும் புனைவு நாயகனாக, நிஜமான நாயகனே நடித்திருப்பது இத்திரைப்படத்தின் மெட்டா தன்மையைக் கூட்டுகிறது. அசலில் மைக்கேல் கீடன் காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனின் திரைவடிவ நாயகன். கீடன் நடிப்பில் 1989 ஆம் வருடம் BATMAN திரைப்படமும் 1992 இல் BATMAN RETURNS திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. புனைவு நாயகனான ரிக்கன் தாம்ஸன் BIRDMAN சாகசக் கதாபாத்திரத்தில் நடித்து ஹாலிவுட்டில் பெரும் புகழ் பெற்ற நாயகன். தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஹாலிவுட்டில் ஓரம் கட்டப்பட்டு நாடகம் பக்கம் ஒதுங்குகிறான். தனிமையில் இருக்கும்போது ரிக்கன் தாம்ஸனுக்கு தொடர்ச்சியாக சாகஸக் கதாநாயகனான BIRDMAN னின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மீண்டும் பழைய புகழ் அடைய வேண்டுமென்கிற மனத் துரத்தல்கள் அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. பார்வையால் பொருட்களை உடைக்கச் செய்வது, விரல் அசைவில் பொருட்களை நகரச் செய்வது (telekinesis) அந்தரத்தில் உடலை மிதக்கச் செய்வது( Levitation) போன்ற சில வித்தைகளையும் ரிக்கன் தாம்ஸன் கற்று வைத்திருக்கிறான். இதனால் முழுமையாகவே தன்னை ஒரு சாகஸநாயகனாக கருதிக் கொள்கிறான். யதார்த்தம் அப்படி இல்லாததை அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
ரிக்கன் தாம்ஸனுடைய நாடகக் குழுவினர் ரேமண்ட் கார்வரின் “What We Talk About When We Talk About Love எனும் சிறுகதையை நாடகமாக நிகழ்த்துகிறார்கள். ரிக்கனுடைய நண்பனும் வக்கீலுமான ஜேக் இந்நாடகத்தின் தயாரிப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறான். ரிக்கனின் மகள் அவனுக்கு உதவியாளரகவும் ஜேக்கின் காதலி, முன்னாள் மனைவி, ப்ராட்வே நடிகன் மைக் மற்றும் அவன் காதலி ஆகியோர் நடிகர்களாகவும் பங்காற்றுகிறார்கள். இந்த நாடக ஒத்திகையில் நிகழும் அபத்தங்கள், முரண்கள், விநோதங்கள், தனிமனித நெருக்கடிகள் யாவும் மிகப் புதிதான உணர்வை நமக்குத் தருகின்றன. மொத்த திரைப்படமும் நாடக அரங்கிற்குள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. இருட்டான ஒப்பணை அறைகள், குறுகலான நடைபாதைகள், சதா அதிர்ந்து கொண்டே இருக்கும் ட்ரம்ஸ் ஒலி என மொத்த காட்சிப் பதிவும் நம்மை ஒரு பழைய தியேட்டருக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிகப் புதிதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை க்ளோஸ் அப் ஷாட்டில் படம்பிடித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் பேச்சுக்கேற்ப காமிரா சதா அசைந்து கொண்டே இருந்தது. ஏதோ நாமே திரைப்படத்திற்குள் விழுந்து கதாபாத்திரங்களுக்கு நடுவில் நடந்து போவது போன்ற தோற்ற மயக்கமெல்லாம் எனக்கு உருவானது.

போதை மருந்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் ரிக்கனின் மகள் கதாபாத்திரமும் அவளுக்கும் மைக்கிற்கும் இடையே நிகழும் பால்கனி உரையாடல்களும் படத்தில் இன்னொரு சுவாரசியமான இழை. ரிக்கனின் மகளான சாம் (Emma Stone) தந்தையின் மன நிலையை உணர்ந்து கொள்கிறாள் அவருக்கு சம காலத்தின் நகர்வை, சமூக வலைத்தளங்களின் நிமிடப் புகழை, அவர் மிகப் பழைய ஆள் என்பவற்றையெல்லாம் புரிய வைக்க மெனக்கெடுகிறாள். அது ரிக்கனை மேலும் மன உளைச்சலுக்குக் தள்ளுகிறது. அக்குழுவில் புதிதாக உள்ளே வரும் ப்ராட்வே நடிகனான மைக் (Edward Norton) நாடகத்தின் மொத்த பெயரையும் தட்டிக் கொண்டு போகிறான். விமர்சகர்கள் மைக்கைப் புகழ்ந்து தள்ள ரிக் மிக மோசமான சுய பச்சதாப நிலைக்கு ஆளாகிறான். பின்பு அவனே எதிர்பார்க்காத சில விஷயங்கள் அசந்தர்ப்பமாக நடந்து மீண்டும் ரிக்கன் மீடியாவில் பேசப்படும் நபராகிறான். அதிகப் புகழடைகிறான். இறுதிக் காட்சியின் புதிரை சாம் மட்டுமே அறிந்தவளாகிறாள். அவளின் அப்புன்னகைக்கு பின்னால் என்ன இருக்கும் என்பதை நம்மிடமே விட்டுவிடுகிறார்கள்.
ஹாலிவுட் வணிகத் திரைப்படங்கள் மீதான நுட்பமான கிண்டல், சமூக வலைத்தளங்களின் ஹிப்போக்ரசி போன்றவை சமதளத்திற்கு கதையை இழுத்தாலும் கீடனின் பறவை மனிதன் கீடனின் முதுகிற்குப் பின்னாலேயே நடந்து கொண்டிருப்பது, கீடன் நகரத்தின் மீது பறந்தபடியே பாய்ந்து வரும் அசாதரண மிருகங்களை நொடிப்பொழுதில் அழிப்பது போன்ற காட்சிகள் மாயவெளிக்கு நம்மை நகர்த்துகின்றன. ரேமண்ட் கார்வரின் What We Talk About When We Talk About Love சிறுகதையை நாடகமாகவே நான்கு முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அதே கதையில் பலப் புது சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்த சம்பவங்கள் The Unexpected Virtue of Ignorance என்கிற உப தலைப்பிற்கு காரணமாக அமைகின்றன.
BIRD MAN திரைப்படம் திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டது. நான் ஒரு வாரநாளில் மாலை ஆறு மணிக் காட்சிக்குப் போயிருந்தேன். அரங்கின் முன்னிருக்கைகள் கூட முழுவதுமாய் நிரம்பி இனாரித்துவின் புகழைப் பறைசாற்றின. வழக்கமாய் பிரபல இயக்குனர்களின் திரைப்படங்கள் முடிந்த பின்பு உரையாடல் இருக்காது. இத்திரைப்படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. துபாய் திரைப்பட விழாவைக் கடந்த ஏழு வருடங்களாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஒழுங்கு நேர்த்தியும் விளம்பரமும் புகழும் கூடிக் கொண்டே போகின்றன என்றாலும் திரைப்படத் தேர்வுகளில் அவ்வப்போது சறுக்கிறார்கள். இது அம்மாதிரியான ஒரு வருடம்.

No comments:

Featured Post

test

 test