Tuesday, December 30, 2014

ஸ்வீடிஷ் பிசாசும் தமிழ் பிசாசும்


எனக்கு திகில் படங்களைப் பிடிக்காது. இன்றளவும் ஏகத்திற்கும் வெளிவந்து கொண்டிருக்கும் ஹாலிவுட் பேய் படங்கள் இந்த ஒவ்வாமை ஏற்படக் காரணமாக இருக்கலாம். பதின்ம வயதில் இங்க்லீஷ் படங்கள் என்றாலே பேய்படங்கள் தான். எங்கள் நகராட்சிப் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஆங்கிலப் பேய் படங்களின் பெரும் ரசிகர். மாதத்திற்கு ஒரு பேய்படம் பார்த்துவிட்டு வந்து எங்களுக்குப் படு திகிலாய் கதை சொல்லிக் கொண்டிருப்பார். அழகி திரைப்படத்தில் எம்ஜிஆர் படக் கதை சொல்லும் ஆசிரியரை நினைவிருக்கிறதா? இவரும் கிட்டத்தட்ட அதே மிகை உணர்வோடுதான் கதையளப்பார். சில்வர் புல்லட், ஈவில் டெட் -ஒன், டூ ,த்ரீ போன்ற படங்கள் மீதெல்லாம் உயிரையே வைத்திருந்தோம். சிரமப்பட்டு காசு சேர்த்து டெக் மற்றும் கேசட்டுகளை தேடிப் பிடித்து கலர் டிவி இருக்கும் நண்பன் வீட்டில், எல்லோரும் தூங்கின நள்ளிரவில், பார்த்து பயந்து, தூங்கிக் கொண்டிருக்கும் அக்கம் பக்கத்தாரை, குறிப்பாக பதின்மப் பெண்களை விழிக்கச் செய்ய வேண்டுமென்றே அலறிய காலமும் உண்டு. பின்பு தொடர்ச்சியாய் பேய் படங்களாய் பார்த்து அலுத்து அந்த வகைமைப் படங்களின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வந்தது.

சமீபமாய் இரண்டு பேய் படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஸ்வீடிஷ் திரைப்படமான Let the Right one In (2008) ஐ ஒரு பிசாசின் கதை எனத் தெரியாமலேயேதான் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கி இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும். பனி விரவிய இருள் பாலத்திற்கு அடியில் ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் சிறுமி, அங்கு அசமஞ்சமாய் வரும் ஒரு வழிப்போக்கரை அருகில் அழைத்து, அவர் மீது தாவி கழுத்தை உறிஞ்சும் காட்சியில் கிட்டத்தட்ட உறைந்தே போனேன். பேய் கதைகளை விட ரத்த காட்டேரிகளின் கதைகள் கூடுதல் திகிலானவை.



ஹாலிவுட்டில் Vampire திரைப்படங்கள்தாம் மலிவானவை. பயமுறுத்துகிறோம் என்கிற போர்வையில் பெரும்பாலனவை அருவருப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. மாறாய் ஜெர்மன் மொழியில் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கின் இயக்கத்தில் வெளிவந்த Nosferatu the Vampyre திரைப்படம் நம்மிடையே ரத்தக் காட்டேரி தர வேண்டிய அசலான பயத்தை ஏற்படுத்தியது. ரத்தக் காட்டேரியாகவே வாழ்ந்திருந்த க்ளாஸ் கின்ஸ்கியை மறக்க முடியுமா? கிட்டத்தட்ட Let the Right one In - ஐயும் ஹெர்சாக்கின் திரைப்படத்திற்கு அருகாமையில் வைத்துப் பேசலாம். Vampire ஆக நடித்திருக்கும் பனிரெண்டு வயது சிறுமி தன் அசாதாரண நடிப்பால் நம் கண்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப் போடுகிறாள். காட்சிகளின் மேலடுக்கில் இத்திரைப்படம் திகில் படமாகவும் அடிநாதமாய் அற்புதமான இளம் காதல் கதையாகவும் பிணைந்திருப்பதால் நம்மிடயே ஆழமான தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்துகிறது.

Let the Right one In உலகம் முழுக்க தரப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மலைப்பூட்டும் அளவிற்கு இத்திரைப்படம் குவித்திருக்கும் விருதுகளின் மூலம்தான் இப்படத்தைக் கண்டடைந்தேன். இது தந்த திகைப்பும் பரவசமும் விநோதமாக இருந்தது. சென்ற மாதமே பார்த்திருந்தாலும் இன்று வரை அதன் தாக்கம் நீங்கவில்லை. உடல் சோர்ந்திருந்த நேற்றிரவும் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்து இடையில் நிறுத்தமுடியாமல் முழுப் படத்தையும் பார்த்து விட்டே தூங்கினேன்.

இத்திரைப்படம்  Tomas Alfredson என்கிற எழுத்தாளரின் இதே பெயரில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த நாவலை ஒட்டி எடுக்கப்பட்டது. எழுத்தாளரே திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரத்தின் புற நகர் பகுதியான ப்ளாக்பெர்க்கில் இத்திரைப்படத்தின் சம்பவங்கள் நிகழ்கின்றன. உறைபனியும் இரவும் மெளனமான கட்டிடங்களும் இந்த திகில் படத்திற்கு அசாதரணமான பின்புலத்தைத் தந்திருக்கின்றன.

ஆஸ்கர் என்கிற பனிரெண்டு வயது சிறுவனுக்கும் அவன் பக்கத்து அடுக்ககத்திற்கு புதிதாய் குடிவரும் Eli என்கிற அவன் வயதை ஒட்டிய சிறுமிக்கும் ஏற்படும் நட்பு மெல்ல ஆழமான உறவிற்கு நகர்கிறது. அவள் மனித ரத்தத்தின் மூலம் உயிர் வாழும் ரத்தக் காட்டேரி என ஆஸ்கர் அறிந்துகொண்ட பின்பும் அவர்களிடையே ஏற்பட்ட பிணைப்பு விலகுவதில்லை. இதற்கு மேல் இத்திரைப்படத்தின் கதையை சொல்வது உசிதமல்ல. பரபரப்பும் திகிலும் இணைந்த பரவசமான அனுபவத்தை நிச்சயம் இத்திரைப்படம் தரும். ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, எடிட்டிங், காஸ்டிங் என எல்லா பிரிவுகளிலும் இத்திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ரத்தக் காட்டேரியினால் கடிபட்டு உயிர்பிழைத்தோர் தன்னளவில் ரத்தக் காட்டேரியாய் மாறிவிடும் வழமைகள் இத்திரைப்படத்திலும் தொடர்கிறதுதான் என்றாலும் அதை எவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள். ரத்தக் காட்டேரியை அடையாளம் கண்டுகொள்ளும் ஏழெட்டுப் பூனைகள் சிலிர்த்துக் கொண்டு ரத்தக் காட்டேரியால் கடிபட்டுப் பிழைத்து வரும் தம் எஜமானியின் மீது பாயும் காட்சி சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.



இரத்த வாடை அடிக்கும் Eli யின் அறை, அவள் பகலில் வெளியே வராதது, பாத்டப்பில் இருள் மூடிக்குள் சுருண்டு தூங்குவது, மரத்தின் மீதும் கட்டிடங்களின் மீதும் பரபரவென ஏறுவது, காற்றில் பறப்பது, ஆட்களின் கழுத்தைக் குறிபார்த்துக் கடிப்பது போன்ற காட்டேரியின் புனைவியல்புகளை முடிந்தவரை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கண்களில் ஆழமான அமைதியும் பேரழகும் கொண்ட ELI என்கிற பதின்மப் பெண் ஒரு பேயைப் பார்க்கிறோம் என்ற எண்ணமே எழாதவாறு நம்மைக் கடைசிவரைப் பார்த்துக் கொள்கிறாள்.

ஆஸ்கரை எப்போதும் வம்பிழுக்கும் சக மாணவர்களின் இறுதிக் காட்சி ரத்த சகதியைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் அவள் ஆஸ்கர் மீது வைத்திருக்கும் ஆழமான காதலை நியாயப்படுத்தவும் அந்தக் காட்சி தேவையானதாக இருந்தது. ஆட்களைக் கொன்று அவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு இரத்தம் உறிஞ்சும் காட்சிகள் எல்லை மீறாமல் அழகியலோடு படமாக்கப் பட்டிருந்தன. இவை போன்றவையே இத்திரைப்படத்தை மற்ற படங்களிலிருந்து தனித்து அடையாளப்படுத்துகிறது.

0

தமிழ்ப் பிசாசு துபாயில் வெளியாகவில்லை. இணையப் பக்கங்களில் பிசாசைப் பார்த்து மிரண்ட நண்பர்களின் நிலைத் தகவல்கள் மற்றும் உடனுக்குடன் எழுதப்பட்ட ஏராளமான சினிமாக் கட்டுரைகள் ஆகியவை நல்ல பிரின்டிற்காகக் கூட காத்திருக்க விடாமல் பிசாசைத் திருடிப் பார்க்க வைத்தன. மிஷ்கின் மீது எனக்கு சாய்வுகள் உண்டு என்பதால் இத்திரைப்படம் பார்த்து முடித்த உடன் எழுந்த உணர்வுகளை எழுதவில்லை. ஆனால் வெகுசன ரீதியிலான இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மிஷ்கின் நிச்சயம் இந்த வெற்றிக்குத் தகுதியான ஆள்தான்.

பிசாசு படம் துவங்குவதற்கு முன்பு திரைப்படத்திற்கான பின்புலத் தகவல்களுக்காக மிஷ்கின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் போய் அங்கிருக்கும் மனோதத்துவ பேராசியரோடு தங்கி கலந்து உரையாடியதாக அறிந்திருந்தேன். மேலும் பாலா வின் தயாரிப்பு என்பதால் மிஷ்கினுக்கு பொருளாதார ரீதியில் நிறைய சுதந்திரம் கிடைக்கும். எனவே வெகுசன / வெற்றி நிர்பந்தங்கள் இல்லாமல் குப்ரிக்கின் The Shining போன்ற சைக்காலஜிகல் த்ரில்லர் படமாக பிசாசு இருக்கும் என நானாகவே நினைத்துக் கொண்டு படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். பிசாசு என் எதிர்பார்ப்பின் அருகாமைக்குக் கூடப் போகவில்லை. ஜெயமாலினி காலத்து கவர்ச்சிப் பிசாசை மிஷ்கின் தன் அழகியல் சட்டகத்திற்குள் கொண்டு வந்து சமகால அழகுப் பிசாசாக மாற்றிவிட்டிருக்கிறார். இது எல்லாத் தரப்பையும் பூர்த்தி செய்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனெனில்  மிஷ்கின்
பிசாசு பற்றிய பழங் கதைகளை  பிசகாமல் அப்படியே தந்திருப்பதால் வழக்கமான பழக்கத்தையே இயல்பாகக் கொண்டிருக்கும் வெகுசன மன உணர்வுகள் இத்திரைப்படத்தோடு சுலபமாய் ஒன்றிப் போயின. 

மிஷ்கினின் திரை மொழி நாம் அறிந்ததுதான். தாழ் காமிராக் கோணங்கள், விலாவரியான மிட்ஷாட், அவர் படங்களில் மட்டுமே வரும் ஆட்டோக்காரர்கள், சாலையோர மனிதர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் அவர்களின் பிரத்யேகமான அவசர வசன உச்சரிப்பு, ஏற்கனவே நாம் அறிந்திருந்த நடிகர்களின் இன்னொரு பரிமாணம், அவர்களின் நாடகீய பாவணைகள், உருக வைக்கும் பின்னணி இசை, இரவு, சுரங்க நடை பாதை, சென்னை மத்யமர் குடியிருப்புப் பகுதியின் வீதிகள் போன்ற அச்சுப் பிசகாத மிஷ்கின் பாணிப் படத்தில் புதிதாய் பேய் வந்திருக்கிறது. இந்தப் பேய்தான் இதுநாள் வரை மிஷ்கினை கடுமையாக விமர்சித்தவர்களின் வாயை மூடவைத்திருக்கிறது என்பது சற்று அபத்தமான நிதர்சனம்தான்.

பேய் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது அடிப்படை. பிசாசே லாஜிக்கை மீறின வடிவம்தானே ஆக பிசாசு படத்திற்குள் லாஜிக்கையெல்லாம் கொண்டு வர மெனக்கெடவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தையும் சற்று புத்திசாலித்தனமான திருப்பத்தையும் கதையாக எடுத்துக் கொண்டு சமீபமாய் தமிழ் மனங்களை ஆக்ரமித்திருக்கும் பேய் பற்றையும் தனக்கு நன்றாகக் கைவரும் திரைமொழியில் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். சற்று யோசித்தால் ஒருவேளை மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் தந்த மன ரீதியிலான உளைச்சல்களால் கடுப்பாகி தமிழ் ரசிகர்களான உங்களுக்கு எல்லாம் இவ்வளவு போதும் என பிசாசை எடுத்திருக்கிறாரோ என்றெல்லாம் படம் பார்த்து முடிந்ததும் தோன்றியது.

மிஷ்கின் தன் தனித்துவமான திரை மொழிக்காக சித்திரம் பேசுதடியிலிருந்து பிசாசு வரை பேசப்படும் இயக்குனராக இருக்கிறார். இனி அவர் அழுத்தமான திரைக்கதைகளை நோக்கி நகர வேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். பிசாசை ஒரு உற்சாக டானிக்காக எடுத்துக் கொண்டு மிஷ்கின் பிராந்தியம் சார்ந்த, குறிப்பாய் தமிழ் சூழல் சார்ந்த கதைகளின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
0

இந்த ஃபேஸ்புக் காலத்தில் தமிழ் அறிவு சூழலையும் தமிழ் சினிமா எனும் பிசாசு பிடித்திருப்பதை  மிகுந்த எரிச்சலோடு அவதானித்து வருகிறேன். தமிழின் முக்கிய அறிவுஜீவிகள் என என்னால் கருதப்பட்ட பலரும் வெளிவரும் அத்தனை மொக்கை தமிழ் சினிமாக்களையும் பார்த்து ஃபேஸ்புக்கில் படுபயங்கரமான விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கவே திகிலாக இருக்கிறது. அதோடு நில்லாமல் சற்று சுமாரான படங்களையும் கண்டமேனிக்குப் புகழ்ந்து தள்ளுவதையும் பார்த்து -  திகில் படங்களைப் பார்த்தே திகிலடையாத நான்- கடும் பீதியடைகிறேன்.  தமிழின் அறிவு ஜீவிகளை பிடித்து உலுக்குவது ஃபேஸ்புக்கின் லைக் பேயா? அல்லது தமிழ்சினிமா எனும் பிசாசா? எனப் பிரித்தறியக் கடினமாக உள்ளது. இந்தப் பேயால் அந்தப் பிசாசு உயிர்தெழுகிறதா? அல்லது நிஜமாகவே இவர்களைத் தமிழ் சினிமா பிசாசுதான் பிடித்ததா? என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. மிஷ்கினுக்கு வைத்த வேண்டுகோளைப் போலவே தமிழ் அறிவு ஜீவிகளுக்கும் தமிழ் சினிமா எனும் பிசாசைக் கைவிட்டு வரும் புத்தாண்டிலாவது மனம் திரும்புங்கள் எனக் கேட்டுக் கொள்வோம்.

0


No comments:

Featured Post

test

 test