வேனிற் காலங்களின் இளவரசி
அடுக்குச் செம்பருத்திப் பூவை
வருடிப் போகிறாள்
வெண்மஞ்சளாய் கிளைப்பூத்து
செம்மஞ்சளாய் மண்பூத்து நிற்கும்
வேம்பூவைத் தழுவி
முத்தமிடுகிறாள்
நெருங்குவதற்கு முன்பே புங்கை
அடர்த்தியாய் பூச்சொறிந்ததை
புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறாள்
மழை நனைய
மலர்தலைத் தள்ளிப்போட்டிருக்கும்
பன்னீர் மரத்தை
செல்லமாய் கோபித்து நகர்கிறாள்
பூக்காலங்களின் இளவரசன்
வியர்த்து வந்து
வேனிற்கால இளவரசியின் முன் மண்டியிடுகிறான்.
தன் கருணைக் கரங்களால் அவனை வாரியெடுத்து
மார்புறத் தழுவுகிறாள்
பன்னீர் மரம் குலுங்கி பூப்பூவாய் பூக்கிறது.
0
வேனிற் காலங்களின் இளவரசி
மலரிலிருந்து கோபமாய் விழித்தெழுந்தாள்
உற்சாகமாய் மேலெழ ஆரம்பித்திருந்த
சூரியனை முறைத்து
மீண்டும் உள்ளே போகுமாறு
சமிக்ஞை செய்தாள்.
பெருகிப் பெருகி தகித்த
சுவாசப் பெருமூச்சில்
தாவர சங்கமங்கள்
வேரோடு அழிந்தன.
குழம்பிய காலநிலையொன்றின்
நடுவில்
அமர்ந்து கொண்டிருந்தவளின்
துக்கம் உடைய
தேம்பி அழ ஆரம்பித்தாள்
உலகம் வெள்ளக்காடானது
அதில்
வேனிற்காலங்களின் இளவரசியும்
மூழ்கிப் போனாள்.
புகைப்படம்: அமேலியா ரோட்ரிகஸ் போர்த்துகீசிய ஃபேதோ பாடகி
2 comments:
Nice!
இரசிக்கும்படியான அருமையான கவிதை சகோ. பாராட்டுக்கள் !
Post a Comment