Monday, July 2, 2012

Gangs of Wasseypur - 2

1940 களில் வாஸிபூர் வழியே போகும் பிரிட்டீஷாரின் சரக்கு இரயில்களை ஷாகித்கான் தன் சகாக்களுடன், அப்பகுதியின் பிரபல கொள்ளையனான சுல்தானாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறான். உள்ளூர் மார்க்கெட்டில் அவ்உணவுப் பண்டங்களை குறைந்த விலைக்கு விற்று லாபம் ஈட்டுகிறான். இவ்விஷயம் சுல்தானா காதிற்குப் போகிறது. தக்க நேரத்திற்காக காத்திருக்கும் சுல்தானா, இன்னொரு கொள்ளை சம்பவத்தில் ஷாகித்கான் ஆட்களைக் கொன்று குவிக்கிறான். ஷாகித்கானின் சகாக்களில் ஒருவரான ஃப்ர்ஹான் மட்டுமே எஞ்சுகிறார். கர்ப்பிணி மனைவியுடன் ஷாகித்கானும் ஃபர்ஹானும் வாஸிபூரை விட்டு வெளியேறி தன்பாத்திற்குப் போகிறார்கள். பழைய அடையாளத்தையெல்லாம் மறந்து விட்டு அங்குள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் அடிமை வேலை செய்கிறான். பிரவத்தில் மனைவி இறந்து விடுகிறாள். மனைவி ஆபத்தில் இருந்த செய்தியை சொல்ல அனுமதிக்காதவனை அடித்து
நொறுக்கி சுரங்க உரிமையாளரான ரமதீர்சிங் கிற்கு முதன்மை அடியாளாகிறான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இந்திய அரசாங்கம் சுரங்கத் தொழிலில் டாடா க்களுக்கும் பிர்லா க்களுக்கும் காண்ட்ராக்ட் உரிமை தருகிறது. அவர்களுக்கு அத்தொழில் குறித்து கிஞ்சித்தும் அறிவில்லாததால் அதே முதலாளிகள் நீடிக்கின்றனர். இன்னமும் அதிகமாகப் பொருளீட்டுகின்றனர். ரமதீர்சிங் இன்னமும் செழிக்கிறான். ஒரு கட்டத்தில் ரமதீர்சிங் ஷாகித்கானை சமயோசிதமாகக் கொல்கிறான். ஷாகித்கானின் மகனையும்,ஃபர்ஹானையும் கொல்ல ஆளனுப்புகிறான். ஆனால் இருவரும் தப்பி விடுகிறார்கள். கொல்லச் சென்றவன் கொன்றுவிட்டதாகப் பொய் சொல்கிறான். ரமதீர் அரசியலில் பிசி யாகிறான். தொழிலாளி மந்திரியாகிறான். தொழிலாளர் யூனியன்களையும் கையகப் படுத்துகிறான். அவனின் ஆட்கள் கூலியாட்களுக்கு சொற்பமான முன் பணத்தைக் கொடுத்துவிட்டு வட்டியாக அவர்களின் மாத வருமானத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அவ்வப்போது தோன்றும் நேர்மை அரசாங்க அதிகாரிகளையும் கொன்று குவிக்கிறார்கள். ஆக ரமதீரின் சாம்ராஜ்யம் செழிப்படைகிறது.

 ஃபர்ஹான், ஷாகித்கான் மகனான சர்தார்கானை வளர்த்து ஆளாக்குகிறான். சர்தான் கானின் பதின்ம வயதிலேயே அவன் தந்தையின் மரணம் குறித்தும் ரமதீர்சிங் குறித்துமான கதைகளை சொல்கிறான். சர்தார்கான் இளம் வயதிலேயே அவனை அழிக்க வெஞ்சினம் கொள்கிறான். நக்மாவைத் திருமணம் செய்துகொள்கிறான். வரிசையாய் குழந்தைகளைப் பெற்றும் அடங்காத காமம் கொண்டு வேசிகளைப் புணர்ந்து திரிகிறான். அவனுக்கென்று ஓரிருவர் சேர்ந்ததும். ரமதீர் சிங்கிற்கு எதிராக மெல்ல வளருகிறான். ஸ்க்ராப் வியாபாரக் காண்ட்ராக்ட் பெறுவது, ரமதீர் சிங்கின் பெட்ரோம் பம்பைக் கொள்ளையடிப்பது, ரமதீருடன் நேரடியாக மோதி ஜெயிலுக்குப் போவது, ஜெயிலிலேயே பாம் தயாரித்து, சுவரை வெடிக்க வைத்து தப்பிப்பது, வாஸிபூரில் குரேஷிகளுக்கு சிம்ம சொப்பனமாவது என தொடர் நடவடிக்கைகள் மூலம் சர்தார் முக்கியப் புள்ளியாகிறான். கூடவே சர்தாரின் குடும்ப வாழ்க்கையும் விலாவரியாக பேசப்படுகிறது.

துர்கா என்றொரு பெங்காலிப் பெண்ணையும் இரண்டாவதாக மணந்து கொள்கிறான். முதல் மனைவியான நக்மா – வையும் குழந்தைகளையும் கைகழுவி விடுகிறான். பிள்ளைகள் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு ரயிலை சுத்தம் செய்து பணம் ஈட்டும் நிலைக்குப் போகிறார்கள். குடும்பத்தோடே இருக்கும் ஃபர்ஹானுக்கும் நக்மாவிற்கும் உறவு மலர்கிறது. அம்மாவையும் அப்பாவை வளர்த்தவரையும் ஒன்றாகப் பார்க்கும் முதல் மகன் மனம் வெறுக்கிறான். புகை- பொறுக்கித் தனம் என மாறிப் போகிறான். சர்தார் துர்காவுடன் திகட்டத் திகட்ட காமம் துய்க்கிறான். ரமதீர் சிங்கிற்கு தொடர் தொல்லைகள் தருகிறான். தன் இரண்டாம் மகனால் ஒருமுறை எதிரிகளின் குண்டிலிருந்து சர்தார் தப்பிக்கிறான். நக்மாவோடும் பிள்ளைகளோடும் மீண்டும் சேர்கிறான். துர்க்காவோடு சண்டை வருகிறது. மீன்பிடி தொழிலை ஆரம்பிக்கிறார்கள். நக்மா பெரிய வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, வாக்குவம் க்ளீனர் சகிதமாய் செட்டில் ஆகிறாள். பிள்ளைகளின் காலம் ஆரம்பிக்கிறது. ஃபைசல் கான் துப்பாக்கி வாங்க வாரணாசி போகிறான். துப்பாக்கி விற்பனையாளன் ஃபைசல் கானின் தாத்தாவான ஷாகித் கானைக் கொன்றவன். அவனின் சதியில் மாட்டி சிறைக்குப் போகிறான். சிறையிலிருந்து திரும்பி வருபவன். மீண்டும் துப்பாக்கி விற்பனையாளனை சந்திக்கப் போகிறான். முன்பு கொடுத்த அதே துப்பாக்கி என்பதை உணர்கிறான். விற்பனையாளனை கொல்கிறான். சமயோசிதமாய் துப்பாக்கிகளை ரயிலில் ஒளித்து வைத்துவிட்டு ஊருக்கு வருகிறான். இன்னொரு மகன் சர்தார் கானைப் போட்டுத் தள்ள துடிக்கும் சுல்தானா தங்கையின் மீது காதல் வயப்படுகிறான். சுல்தானாவின் எதிர்ப்பை மீறி திருமணம் நடக்கிறது. ஃபைசலும் காதல் வயப்படுகிறான். ஒரு அதிகாலையில் பெட்ரோல் பம்பில் வைத்து சர்தார் கானைப் போட்டுத் தள்ளுகிறார்கள். சர்தார் கான் இரத்த சக்தியாய் வண்டியிலிருந்து இறங்கி நடந்து போய் இன்னொரு மாட்டு வண்டியில் படுக்கிறான். முதல் பாகம் நிறைவடைகிறது.

 படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள்- சம்பவங்கள்- நிகழ்வுகள்- போன்றவற்றை எழுத எழுத வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வளவு விவரணைகளை ஒரே படத்தில் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார்கள். ஆனால் அலுப்போ சலிப்போ படம் பார்க்கும்போது ஏற்படுவதில்லை என்பதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். ஒண்ணரை மணி நேரத்திற்கு மேல் ஒரு திரைப்படத்தில் சொல்ல எதுவுமே இல்லை என்பது என் கற்பிதம். ஆனால் ஐந்தரை மணி நேரங்கள் அலுக்காத சலிக்காத ஒரு திரைப்படத்தை தர முடியும் என அனுராக் காஷ்யப் நிரூபித்திருக்கிறார். இதன் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சர்தார் கான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மனோஜ் பாஜ்பாய். ராம்கோபால்வர்மாவின் சத்யா படம் நினைவிருக்கிறதா? அதில் டான் ஆக நடித்தவர். இந்தப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு முழு பட்டானாக வாழ்ந்திருக்கிறார். துபாயில் தமிழக- ஆந்திர அடிமட்டத் தொழிலாளிகளுக்கு அடுத்து பாகிஸ்தானிலிருந்து வரும் பட்டான்களின் எண்ணிக்கைதாம் அதிகம். நான் பார்த்த வரைக்குமான பட்டான்கள் முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் நிரம்பியவர்கள். எளிதில் உணர்ச்சிவயப் படுபவர்கள். எந்த பந்தா வும் இல்லாதவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். இந்த குணாதிசயங்கள் பெரும்பான்மையான பட்டான்களுக்கு ஒத்துப் போகும் போல.

சர்தார் கான் கதாபாத்திரம் இந்த குணாதிசயங்களை வேறு தளத்தில் பிரதிபலித்தது. காமுகனாக, முரடனாக, சுயநலமியாக, வஞ்சம் மிகுந்தவனாக, மூடனாக மனோஜ் பாஜ்பாயீ கிட்டத்தட்ட வாழ்ந்தே இருக்கிறார். தந்தையைக் கொன்ற ரமதீரைப் பழிவாங்கும் வரை தலையில் முடிவளர்ப்பதில்லை எனும் பதின்ம வயதில் எடுத்த சபதத்தோடு மொட்டைத் தலையில் லேசாக வளர்ந்த முடியோடே படம் முழுக்க வருகிறார். மனைவியுடனான ஊடல், கூடல், முரண்டு பிடிப்பது,  குரேஷிகளின் குடியிருப்புப் பகுதிகளுக்குப் போய் வெடிகுண்டு வீசுவது,  ரீமா சென்னின் மீது காம வயப்படல், தடதட வென முடிவுகளை உணர்ச்சி மேலீட்டில் எடுப்பது என மனோஜ் திரையில் வரும் ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பு. இவ்வளவு உயிர்ப்பும் ஆக்ரோஷமுமான ஒரு கதாபாத்திரத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்கிற ஆவல் தான் அதிகமானதே தவிர ஒரே ஒரு அசைவு கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

படத்தின் இன்னொரு பிரமாதமான காஸ்டிங் ரிச்சா சட்டா. சர்தார் கான் மனைவியாக வரும் நக்மா கதாபாத்திரம். ஏற்கனவே கொச்சையான பிஹாரி ஹிந்தியை இன்னும் கொச்சையாகப் பேசியிருப்பார். வாயைத் திறந்தால் வசை. படத்தை உயிர்ப்பாக வைத்திருப்பதில் இவரின் வசைகளுக்கும் பங்கு உண்டு. ஒரு சிறிய கட்டில் நன்கு வளர்ந்த இரண்டு மகன்கள் அருகே படுத்திருக்கிறார்கள். மூன்றாவது குழந்தை வயிற்றில் இருக்கிறது. சர்தார் கான் வேட்கையுடன் வயிற்றைத் தடவிக் கொண்டே கலவிக்கு அழைக்கிறான். டாக்டர்கள் கூடாதென்கிறார்கள் என்று மறுக்கிறாள். ”நீ கால மட்டும் விரி மத்ததுலாம் நான் பாத்துக்குறேன்” என்கிறான். ”இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை” என்றபடி தீர்மானமாய் மறுக்கிறாள். ”நீ ஏன் அடிக்கடி வயிற்றைத் தள்ளிக் கொள்கிறாய்?” என்கிறான். கடுப்பான அவள் ”இதுக்கு காரணம் நீதான. இல்ல நீ ஊருக்குப் போறப்பலாம் அல்லா வந்தா ஓத்துட்டுப் போறாரு?” என்கிறாள். கோபம் கொண்டு எழுந்து போய்விடுகிறான்.

 நிறை மாத கர்ப்பத்தோடும் கையில் கத்தியோடும் சர்தார் கானை வேசிகள் குடியிருப்பில் விரட்டும் காட்சி ஒன்று போதும் ரிச்சா சட்டாவின் அற்புதமான நடிப்பைச் சொல்வதற்கு. இரண்டாம் மனைவியாக வரும் பெங்காலிப் புலி ரீமா சென் படத்தின் கவர்ச்சிக்கும் காமத்திற்கும் கொஞ்சமே கொஞ்சம் பங்களிக்கிறார். இரண்டாம் பகுதியில் ரீமாவின் பாத்திரம் வேறொரு பரிமாணத்தைக் காட்டக் கூடும். இது தவிர ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பியூஷ் மிஸ்ரா, ரமதீர் - திக்மன்ஷூ போன்றார் படம் தொய்வில்லாமல் நகர முக்கிய காரணங்களாக இருக்கிறார்கள்.

மேக்கிங் குறித்து நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு புத்திசாலித்தனம். அவ்வளவு நுட்பம். படத்தின் முதல் காட்சி ஒரு சீரியல் விளம்பரம். உயர் நடுத்தர வர்க்கத்து பெண்ணொருவர் அதீத பாவனைகளோடு பாடி ஆடும் பாடல், மெல்ல சுருங்கி டிவிப் பெட்டிக்குள் போகிறது. டிவிப் பெட்டி மெல்ல சிறியதாகிறது. பெட்டிக் கடை மாதிரி தெரிகிறதே என நாம் யோசிக்கும் முன்பே ஹை டெசிபலில் ஒரு தோட்டா டிவிப் பெட்டியைத் தாக்குறது. கடைய மூடு மூடு ஓடு ஒட்டிப்போ என்கிற குரல்கள் கேட்கின்றன. துப்பாக்கிகளோடு ஒரு கும்பல் ஃபைசல் கான் வீட்டைத் தகர்கிறது. சல்லடையாய் வீட்டைத் துளைத்தபின், கும்பலின் தலைவன் ஃபைசல் கான் மொபைலிற்கு போன் போடுகிறான். ஏதோ ஒரு குறுகிய அறையில் பைசல் கான் மற்றும் அவன் குடும்பம் ஒடுங்கி அமர்ந்திருக்கிறது. செல்போனின் ரிங் டோன் ”நாயக் கு ஹே! கல் நாயக் கு ஹே!. பாடல் சத்தமாக அலருகிறது. எடுக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கும்பலின் தலைவன் இன்னொரு முறை முழு ரிங்கை விட்டு அனைவரும் செத்துப் போனார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு ”கல்நாயக் கதம்” என்கிறான்.

 இந்த ஒரு காட்சியின் நுட்பத்திற்காகவே அனுராக் காஷ்யப் – ஐ இறுகக் கட்டி முத்தமிடலாம். இன்னும் பேச வேண்டிய தளங்கள், பார்வைகள் படத்தில் ஏராளமாக உள்ளன. இரண்டாம் பாகம் வந்ததும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

6 comments:

Unknown said...

அய்யனார்,

படம் எனக்கு குழப்பமாக இருந்தது. உங்களின் விமர்சனம் படித்து தெளிவாகிற்று. எவ்வளவு விஷயங்களை கவனித்திருக்கிறீர்கள். நல்ல விமர்சனம் அய்யனார்

Unknown said...

எனக்கு படம் குழப்பமாக இருந்தது. உங்களின் விமர்சனம் படித்து தெளிந்தேன். நல்ல விமர்சனம்

பிச்சைப்பாத்திரம் said...

அய்யனார்: சுவாரசியம். ஆனால் நீங்களே குறிப்பிட்டது போல் படம் பார்த்தபின்புதான் உங்கள் பதிவை வாசிக்க வேண்டும் போல. நீங்கள் எழுதியதை முழுக்க உள்வாங்க முடியவில்லை. பார்த்தபின் வருகிறேன். :)

Nandhakumar BALA said...

Dear Ayyanar,
What about Background Music of G.V.Prakashkumar,which is vital for the film. I am sure you enjoyed or you missed to mention here...
Any how your review is perfect.
Thanks

anujanya said...

படம் நேற்று தான் பார்த்தேன் அய்ஸ். முன்னாடியே உன் விமர்சனம் படித்ததால் (தேர்வின் வினாத்தாள் முன்னமே சிக்கி தேர்வு எழுதுவது ஒரு கிக் தானே!௦) நல்லா புரிந்தது. ஆமா, உனக்கு இவ்வளவு நல்லா ஹிந்தி தெரியுமா? எனக்கு சுத்தமா ஹிந்தி நஹி மாலும் யார் :(

சரி, எனக்கு ஒரு சிறு குழப்பம். நீ சொல்ற :

//அம்மாவையும் அப்பாவை வளர்த்தவரையும் ஒன்றாகப் பார்க்கும் முதல் மகன் மனம் வெறுக்கிறான். புகை- பொறுக்கித் தனம் என மாறிப் போகிறான். சர்தார் துர்காவுடன் திகட்டத் திகட்ட காமம் துய்க்கிறான். ரமதீர் சிங்கிற்கு தொடர் தொல்லைகள் தருகிறான். தன் இரண்டாம் மகனால் ஒருமுறை எதிரிகளின் குண்டிலிருந்து சர்தார் தப்பிக்கிறான்.//

எனக்கு இரண்டாம் மகன் தான் அந்தக் கலவி உறவைப் பார்த்ததாகத் தோன்றியது. போலவே, சர்தாரைக் காப்பாற்றிய மகன் மூத்த மகன் என்று நினைத்தேன்.

இரண்டாம் மகன் தான் (வாரணாசி போகிறவன்) தான் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். நல்ல நடிகர் அவர். கஹானியில் கூட அசத்தியிருப்பார்.

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

Featured Post

test

 test