கடந்த ஒரு வருடமாக மனம் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் ஒரு பெயர் டோனி காட்லிஃப்.ஒவ்வொரு முறையும் இவரை எப்படியாவது எழுத்தில் கடத்திவிட்டு, மீண்டு விட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறேன். தோற்கத் தோற்க இனிக்கும் வாழ்வைப் போல டோனியும் இனித்துக் கொண்டேதான் இருக்கிறார்.
எங்களின் ரோட் சாங் படத்திற்கான விதையை பினு என்னுள் ஊன்றிய போது அவன் உச்சரித்த பெயர்தான் டோனி காட்லிஃப். மதினாத் செளக்கின் திறந்த வெளி மதுவிடுதியொன்றில் நீருக்கு வெகு சமீபமாய் மூங்கில் இருக்கைகளில் அமர்ந்தபடி, ஒரு தியானத்தைப் போல அவன் டோனியின் பெயரை உச்சரித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. பினு பார்த்திருந்த டோனி காட்லிஃபின் ஒரேயொரு படம் காட்ஜோ டிலோ aka த க்ரேஸி ஸ்ட்ரேஞ்சர். அதற்கு மேல் அவரைப் பார்க்க தோன்றவில்லை அதுவே போதுமானது என்பது பினுவின் நிலைப்பாடு. ஆனால் எனக்கு காட்ஜோ டிலோ போதவில்லை. இதுவரைக்கும் டோனி இயக்கியிருக்கும் அத்தனை படங்களை யும் பார்த்து முடித்தேன். திரும்பத் திரும்ப காட்ஜோ டிலோவையும் சில்ரன் ஆஃப் ஸ்டோர்கையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். என்னால் துளியளவு கூட அவரிடமிருந்தோ அவர் படங்களிலிருந்தோ வெளிவர முடியவில்லை.
அவ்வப்போது சில இயக்குனர்களின் படங்கள் இப்படி அடித்துப் போடுவது வழக்கம்தான் என்றாலும் அவர்களிடமிருந்து நான் மீள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் மிகக் குறைவானது. அந்த ‘மேனியா’ கால கட்டங்களில் இவர்தான் சினிமாவின் உச்சம் என்பது போல மிகையாய் ஏதாவது உளறிக்கொண்டிருப்பேன். கண்ணில் படுபவர்களிடமெல்லாம் அவர்களின் படங்களைச் சொல்லி சொல்லி இப்படத்தைப் பார்க்காமல் நீ உயிர் வாழ்வது வேஸ்ட் எனவெல்லாம் துன்புறுத்திக் கொண்டிருப்பேன். டோனி பெயரையும் நிறைய நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன் என்றாலும் பரவலாய் சொல்லவில்லை. ஒருவேளை இப்படங்கள் பார்ப்பவர்களை ஈர்க்காமல் போய் “இது சினிமாவே கெடயாதுய்யா” என யாராவது தலையில் கொட்டிவிடுவார்களோ? என்ற பயம் காரணமாகவும் டோனி காட்லிஃப் படங்களை டமாரம் அடிக்காமல் இருக்கிறேன். சொன்னவரையில் என் சகோதரனுக்கு இவரின் படங்கள் மிகவும் பிடித்துப் போயின. காட்ஜோ டிலோ பின்னணி இசையை மொபைலில் சேமித்துக் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வழக்கமான சினிமா விமர்சனம் போல டோனியை எழுதவும் இவ்வளவு காலம் தயக்கமாக இருந்தது. சரியாகச் சொல்லப் போனால் சினிமா விமர்சனம் எழுதவே தயக்கமாய் இருக்கிறது. ‘ஒலக சினிமா’ விமர்சனங்களுக்கான தேவை இன்னமும் ப்லாக்கிற்கு இருக்கிறதா? எனத் தெரியவில்லை. ஏதாவது சினிமா விமர்சனம் கண்ணில் பட்டாலே அடித்துப் பிடித்து ஓடிவிடும் மனநிலை எனக்கே இருக்கும்போது நானும் அதே விமரிசனத்தை எழுதி இம்சிப்பதா? போன்ற தயக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும் டோனி காட்லிஃப் குறித்து தமிழில் கட்டுரை எதுவும் என் கண்ணில் படவில்லை. ஒருவேளை வேறு யாராவது எழுதியிருந்தால் சந்தோஷமாகப் படித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அந்த சோம்பல் மகிழ்வை யாரும் இன்னமும் தராதது உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் விடுத்து இதோ எழுதத் தொடங்கி விட்டேன். டோனி காட்லிஃபின் படங்களைப் பற்றி குறிப்புகளாக எழுத உத்தேசம்.
டோனியின் எல்லாப் படங்களும் நாடோடிகளின் வாழ்வைப் பேசுகிறது. இதுவரைக்கும் டோனி இயக்கிய அத்தனைப் படங்களும் ஜிப்சிக்களின் பாடல் மட்டுமேதான். தேசத்தின் எல்லைக்கோடுகளால் எதுவும் செய்துவிடமுடியாத ஜிப்சிக்களின் வாழ்வை மட்டுமேதான் இவர் திரும்பத் திரும்ப பதிவுசெய்திருக்கிறார். விடுதலை உணர்வின் உச்சம், அறியாமையின் உன்னதம், கொண்டாட்டங்களின் மையம், ஆக மொத்த ஒரே சொல்லாய் அப்பழுக்கற்ற களிப்பு மட்டுமேதான் இவர் படங்களின் சாராம்சம்.
டோனி, அல்ஜீரியாவில் ரோமானிய ஜிப்சிக் குடும்பத்தில் 1948 இல் பிறந்தவர். தன்னுடைய இளம் பிராயத்தை இன்ன பிற சிறார்களோடு வீதியில் கழித்தவர். பள்ளிகளால், நிறுவனங்களால்,குடும்பத்தாரால், அன்பால், கடமைகளால் சிறைபிடிக்கப்படாத இளம்பிராயம் என்பதால் இவரிடம் சுதந்திரத் தன்மையும், மீறலும், கொண்டாட்டமும் இயல்பாக இருந்தன. வீதியில் வாழும் சிறுவர்களைப் பற்றிய மோண்டோ, ஸ்விங் போன்ற படங்களின் மூலம் இவர் தன்னுடைய இளம்பிராயத்தை நினைவுப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவரது லாட்ச்சோ ட்ரம் படம் வெளியான புதிதில் இது படமா? டாக்குமெண்டரியா எனப் பார்வையாளர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர். அவற்றிற்கு டோனி சொன்ன பதில் "For me this film is a hymn. In the first sense of the word. A film that recreates a link, through music, for all the Gypsy people” இவ்வாக்கியத்தை அவரது எல்லாப் படைப்புகளுக்குமே பொருத்திப் பார்க்கலாம்.
மேலும்

No comments:
Post a Comment