Thursday, July 28, 2011

தமிழின் முதல் பிராந்திய சினிமா

என் பேர் அசோக். நாலு நாளைக்கு முன்னாடிதான் முப்பத்தோரு வயசு முடிஞ்சது. என்னோட கனவு,ஆசை,இலட்சியம் எல்லாமே சினிமாதான். தமிழ்ல ஒரு படம் பண்ணனும் அது இதுவரைக்கும் யாராலயும் பண்ணப்படாததா இருக்கனும். சினிமா உலகத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழ் சினிமா ஆளுமைகள நான் இதுவரைக்கும் நேர்ல கூட பாத்தது இல்ல. ஒரு துணைநடிகர் கூட பழக்கம் கிடையாது. ஆனா எனக்கு சினிமா தெரியும். இதுவரைக்குமான எல்லா தமிழ் சினிமாவையும் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு படைப்ப என்னால தர முடியும். படம் பாக்கிறதுதான் என்னோட பிரதான வேலை. மத்த, வேலைக்கு போறது, சாப்பிடுறது, தூங்குறது எல்லாமே அப்புறம்தான். என்னோட முழு நேரமும் சினிமா பாக்கிறதுக்கு மட்டும்தான். என்னோட அறை முழுக்க திரைப்படக் குறுவட்டுகளா சிதறி கிடக்கும். வாங்குற சம்பளத்துல குறு வட்டுகள் வாங்கின மிச்சம்தான் மத்த செலவுகளுக்கு. கிட்டத்தட்ட எல்லா மொழி படங்களையும் பாத்திருக்கேன். உலக வரைபடத்துல எந்த மூலைல ஒரு நல்ல படம் வந்தாலும் உடனே பாத்திருவேன். இணையம் டோரண்ட் இதெல்லாம் இன்னமும் என்னோட சினிமா பைத்தியம் நீடிக்க காரணமா இருக்கு. எல்லா புதுபடங்களையும் தியேட்டர் போய் பார்ப்பேன். தமிழ் சினிமா மட்டும் செலக்டிவா பார்ப்பேன். கிட்டத்தட்ட நோய் மாதிரி இந்த சினிமா பைத்தியம் என்ன பிடிச்சிருக்கு. அதனோட முத்தின நிலைதான் ஒரே ஒரு படமாவது பண்ணிடனுங்கிற இந்த ஆசை. இல்ல வெறி, வெறிதான் சரியான வார்த்தை.

எனக்கு இந்த சினிமா ஆசை நிச்சயம் தமிழ் சினிமா பாத்து வரல. சில படங்கள் நல்ல உணர்வை தந்தாலும் பெரும்பாலான சினிமாக்கள் மேல கோபம்தான் இருக்கு. ஆனா என்னோட முதல் படத்தை தமிழ்லதான் பண்ணனும்னு இருக்கேன். இதுவரைக்குமான தமிழ் சினிமா இயக்குனர்கள் மேல எனக்கு பெரிய மரியாதை ஒண்ணும் கிடையாது. ஒரே ஒரு இயக்குனர கூட என்னோட முன்னோடியா சொல்லிக்க முடியல. சில நேரங்களில ஒட்டு மொத்த தமிழ் இண்டஸ்ட்ரி ஆளுங்களையுமே நான் பயங்கரமா வெறுக்கிறனோன்னும் தோணும். ஆனா சில தனித்தனி ஆளுங்க மேல வாஞ்சையும் இருக்கு. இப்ப இந்த நொடி நடிகர் விக்ரம் மேல இருந்த அந்த வாஞ்சையும் காணாம போய்டுச்சி. தெய்வத்திருமகள் படம் பார்க்க போய் தியேட்டர்ல உட்கார்ந்தேன். அரை மணி நேரம் கூட பாக்க முடியல. எழுந்து வெளில வந்திட்டேன். ஆத்திரமா வருது. இந்த ஐ ஆம் சாம் படமே ஒரு மொக்க படம். அந்த மொக்க படத்தையே மொக்கத்தனமா உருவியிருக்கானுங்களே இந்த அளவுக்கா தமிழ் சினிமா கையாலாகம போய்டுச்சின்னு குமுறலா இருக்கு. இந்த விக்ரம் அய்யோ கொடும, ஷான் பென் ஹேர் கட்டைக் கூட விடாம காப்பி அடிச்சிருக்கான். என்ன எழவுய்யா இது அடிமனசுல இருந்து வெறுப்பு வந்தது. இந்த படத்தோட டைரக்டர் விஜய் மேலயும் எனக்கு சுத்தமா மரியாதை கிடையாது. எஸ்.ஏ.ராஜ்குமார் விக்ரமன் கூட்டணி அபத்தத்த விட இத ஜிவி ப்ரகாஷ் விஜய் கூட்டணி படு மோசமா இருக்கு. க்ளிஷே இசைத் துணுக்காலயும், படு க்ளிஷேவான காட்சி அமைப்புகள் மூலமும் பார்வையாளர்கள உருக வைச்சிடலாம்னு இவங்க ரெண்டு பேரும் நினைச்சிட்டாங்க போல. அப்படி ஒரு நினைப்பு வந்ததுக்கு மதராசபட்டினம் படத்தோட வெற்றிதான் காரணமா இருந்திருக்கும். தெய்வத்திருமகள விட மதராசபட்டினம் இன்னும் அதிக கோவத்த வரவழைச்சது. ஒரு பீரியட் படம் ங்கிறது எவ்ளோ முக்கியமான ஆவணம். அத எவ்ளோ அபத்தமா பன்றாங்க? இவங்களுக்கெல்லாம் மனசாட்சி, வெட்கம் இதெல்லாம் சுத்தமா கிடையாதா? லகான் ட்ரஸ்ஸ 40 களின் வண்ணார் உடைன்னு எப்படி விஜயால காட்சிப்படுத்த முடியுது? இதுல இன்னொரு உச்சக் கொடும என்னன்னா சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விஜய் டிவி விருதையும் இந்தப் படம் வாங்கியிருக்கு. யாரோ ஒரு வடக்கத்தி பொண்ணு சன்னல் துணில சேல கட்டிகிட்டு விருது வாங்கினத பாக்க ஆத்திரமா வந்தது. அட இதையெல்லாம் விடுங்க. 43 ல செத்துப் போன காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திய நம்ம விஜய் 47 ஆகஸ்ட் 15 நைட்ல உயிர் பொழைக்க வச்சிருப்பார். எவ்ளோ பெரிய ப்ளண்டர் மிஸ்டேக் இது. என்னிக்காவது இந்த விஜய பாத்தா மூஞ்சிலயே ஒரு குத்து விடனும். வரலாறும் தெரியாம சமூகமும் தெரியாம வெறும் டைட்டானிக் படத்த மட்டும் பாத்துட்டு ஒரு பீரியட் படம் எடுத்து அத வெற்றிகரமா ஓடவும் வைக்கிற சாமர்த்தியத்தைத்தான் என்னால பொறுத்துக்க முடியல.

சமீபத்துல ஆரண்ய காண்டம்னு ஒரு நல்ல படம் வந்தது. இதுவரைக்குமான தமிழ்சினிமா கதை சொல்லும் முறையையே ஆரண்ய காண்டம் திருப்பிப் போட்டுச்சி. அதுவும் அந்த நடிகர் சோமசுந்தரம், யப்பா என்ன ஒரு கதாபாத்திரம்யா! இன்னமும் எனக்கு தமிழ்படங்கள் வெறுத்து போகாம இருக்க இந்த மாதிரி சில முயற்சிகள்தான் காரணமா இருக்கு. அநியாயம் என்னன்னா ஒரு வாரம் கூட இந்தப் படம் ஓடல. இந்த கேடுகெட்ட சூழலில நான் படம் எடுத்து அசிங்கபடுறதுக்கு சும்மா இருக்கலாமேன்னும் சில டைம் தோணும். ஆனா எனக்கு ஒரு அடிப்படை விஷயம் தெரியும். இத ஆரண்ய காண்டம், நந்தலாலா படங்கள்லாம் பிராந்திய சினிமா கிடையாது. தமிழ் சூழலின் அசலான படைப்புகள் இவை கிடையாது. நம்மோட பிராந்தியத்துக்கான சினிமான்னு ஒண்ணு இருக்கு. அதைத்தான் நான் பண்ணபோறேன். காதல், பருத்திவீரன்லாம் பிராந்திய சினிமாவின் வெற்றிப் படைப்புகள்னு யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்தவரை தமிழின் அசலான சினிமா இன்னும் யாராலயும் எடுக்கப்படல. நான் தான் எடுக்கப் போறேன்.

தியேட்டரை விட்டு வெளியில் வந்ததும் வெயில் மண்டையைப் பிளந்தது. படம் தந்த எரிச்சல் மனநிலை, பியர் குடித்தால்தான் போகும் போல. அடுத்த தெருவிலிருந்த வழக்கமாய் செல்லும் டாஸ்மாக் பாரில் புகுந்தேன். அரைக் கூலிங்கிற்கு பத்து ரூபாய் அதிகம் கேட்கிறான். வெயில், ஒன்றும் பேசவிடாமல் செய்து விடுகிறது. வாங்கி மடக் மடக் கென குடித்ததும்தான் ஒரு நிதானத்திற்கு வர முடிந்தது. சமீபமாய் என் நண்பன் ஒருவன் எழுதிய நாவலைப் படித்திருந்தேன். நாவல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் நூத்தி அம்பது பக்க நாவலில் முக்கா வாசியை வெட்டிவிட்டு, ஒரே ஒரு தின் லைனை மட்டும் எடுத்து டெவலப் செய்யப் போகிறேன். என்னுடைய முதல் படம் இதுதான் என முந்தா நாள்தான் முடிவு செய்தேன். நண்பனின் பெயர் அய்யனார் விஸ்வநாத். பழி என்றொரு வெளிவராத நாவலை எழுதி இருக்கிறான். அய்யனாரும் நானும் பள்ளித் தோழர்கள். சொல்லப்போனால் எனக்கிருக்கும் ஒரே நண்பன் அவன் தான். ஆனால் அவன் மீதும் எனக்குப் பெரிதாய் மரியாதை ஒன்றும் கிடையாது. அவன் ஒரு டுபாகூர். அவனுக்கு சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தது நான் தான். ஏராளமான பட டிவிடிக்களைத் தந்ததோடு நிற்காமல் அதை எப்படிப் பார்ப்பது என்றும் சொல்லித் தந்திருக்கிறேன். பயல் சுமாராய் எழுதுவான். நான் சொல்வதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு அப்படியே சினிமாக் கட்டுரையாய் எழுதி வைப்பான். இதுவரைக்கும் என்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட மூச்சு விட்டதில்லை. அவன் எழுதும் சினிமாக் கட்டுரைகள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். ஒன்றில் கூட நன்றி அசோக் என சொன்னதில்லை. ஒவ்வொரு கட்டுரை படித்து முடித்தும் அடுத்த முறை இவனுக்கு எதுவும் படம் தருவதோ அல்லது விமர்சனத்தை சொல்வதோ கூடாது என நினனத்துக் கொள்வேன். ஆனால் துரதிர்ஷடவசமாக எனக்கு நண்பர்களே கிடையாது. எக்கச்செக்கமாய் படம் பார்த்து பைத்தியமாகி யாரிடமாவது கொட்டத் தோன்றினால நேராய் அய்யனாரிடம்தான் போவேன். அவனும் என்னைப் பேசவிட்டுவிட்டு பொறுமையாய் கேட்பான். என்ன, என் ஒவ்வொரு சந்திப்பிலிருந்தும் நாலு கட்டுரைக்கான விஷயத்தை தேற்றிவிடுவான். ஒழியட்டும். அது ஏன் எல்லா எழுத்தாளன்களும் சல்லிப் பயல்களாகவே இருந்து தொலைகிறான்கள் என்பதுதான் புரியவில்லை. கையிலிருந்த காசிற்கு ஒரு பியர்தான் குடிக்க முடிந்தது. அய்யனாரை வரவழைக்கலாம். அவன் நாவலை படமாக எடுக்கப் போகிறேன் என்றால் தலை கால் புரியாமல் குதிப்பான். தொலைபேசினேன்.

“மச்சி அசோக்டா”
……
“இல்ல போவல. உன் நாவல இப்பதான் படிச்சி முடிச்சேன். உடனே பாக்கனும். எங்க இருக்க?”
…….
“சரி நம்ம பார் க்கு வா வெயிட் பன்றேன்”

அடுத்த அரை மணியில் வந்தான். இவன் ஒவ்வொரு நாளும் ஊதிக் கொண்டே போகிறானோ? எனச் சந்தேகம் வந்தது. வாயெல்லாம் பல்லாக வந்தான்

“ங்கோத்தா காலைலயே ஆரம்பிச்சிட்டியா”

பெயர்தான் எழுத்தாளன். பேசுவது எல்லாம் இப்படித்தான். “இந்த திருட்டு மகள் படம் பாக்க போய்ட்டேன் மச்சி, பத்து நிமிசத்துல எழுந்து வெளில ஓடி வந்திட்டேன்”

“கேட்டுட்டு போவகூடாதா. ரொம்ப மட்டமா காப்பி அடிச்சிருக்கானுங்க”

“அய்யோ எனக்கு ஆத்திரமா வந்தது அதான் குடிக்க வந்துட்டன். சரி பீர் சொல்லு மச்சி”

“தெரியுமே. உனக்கு இந்த மாதிரி டைம்லதான என் ஞாபகம் வரும்”

“அசிங்கப்படுத்தாத ஒய். இருந்த காசுக்கெல்லாம் டென்சன்ல குடிச்சிட்டேன்”

அய்யனார் பீருக்குசொன்னான். நான் அவன் நாவலைப் பிடித்திருப்பதாய் சொன்னேன்.

“சந்தோசம்டா. தமிழ்ல இன்னும் யாரும் இந்த ஸ்டைல்ல எழுதல மச்சான். எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது”

“அதான் என்னோட ஆசையும். தமிழ்ல யாருமே பண்ணாத ஒரு படத்த பண்ணனும்”

“ஆனா, பழில வன்முறையும் காமமும் ரொம்பி கெடக்கும்டா, தமிழ்ல பண்ண முடியும்னு நினைக்கிறியா? சும்மா மேலோட்டமா பண்ணா படம் தாங்காது மச்சான். நாவலோட டப்பாவே வன்முறைதான். அத நீ சினிமால மேலோட்டமா சொன்னினா டான்ஸ் ஆடிடும். வேலைக்காவாது”

“இல்லடா. இந்த கதய முழுசா பண்ணப் போறதில்ல. நிழல் உலக கதையாவும் சொல்லப் போறதில்ல. சீராளன் குணா தாமஸ்னு படத்துல யாரும் கிடையாது”

“அப்புறம்?”

“நாவலோட முதல் அத்தியாயத்துல எந்த மாற்றமும் கிடையாது. படத்தோட ஸ்டார்டிங்கும் அதான். பாண்டிச்சேரி பார்ட் முழுசா வருது. ஆனா ஹீரோவ சராசரி ஆளா காமிக்கிறோம். பாண்டில வேல பாக்கிறான். பக்கத்து வீட்டு கல்யாணமான பெண் மேல காதல் வருது. அந்த காலாப்பட்டு பார்ட்டையெல்லாம் அப்படியே படமாக்குறோம். ஆனா விஜி புருஷனுக்கு பணம் கொடுத்து செட்டில் பன்றதுலாம் படத்துல கிடையாது. இவங்க லவ் இப்படியே ஓடிட்டு இருக்கும்போது திடீர்னு விஜி புருஷன் வந்து அவள கூட்டிட்டு ஆந்திரா போய்டுறான். அங்க ஒரு விபசார விடுதில விஜிய வித்திட்டு எஸ்கேப் ஆகிடுறான். இங்க பயல் லவ் பீலிங்க்ல துடிக்கிறான். பாண்டில இருக்க முடியாம மெட்ராஸ் போறான். அங்கயும் இருக்க முடியாம ஹைதராபாத் போறான். அங்க ஒரு பார்ல குடிக்க போவும்போது ஒரு ஆள் அறிமுகமாகி அவன விபசார விடுதிக்கு கூட்டிப் போறான். அங்க போய் பாத்தா விஜி. ஆனா நாவல்ல வர்ர விஜி கிடையாது. படத்துல விஜி விக்டிம்தான். ரொம்ப நைஞ்சி போய் இருக்கா. ஹீரோ நைசா விஜிய கூட்டிட்டு எஸ்கேப் ஆகுறான். பெங்களூர்ல போய் புதுசா வாழ்க்கைய தொடங்குறாங்க. ஆனா விஜி மனரீதியா அந்த விபசார விடுதி தாக்கத்துல இருந்து வெளில வர முடியாம தவிக்கிறா. அவனோட உடல் ரீதியாவும் தொடர்பு வச்சிக்க மறுக்கிறா. ஒரு நாள் அவன் இல்லாத நேரம் பாத்து தற்கொல பண்ணிக்கிறா. பயல் பித்து பிடிச்சி திரும்பவும் கொஞ்சம் அலைஞ்சி மெட்ராஸ் வரான். வழில அரக்கோணம் ஸ்டேசன்ல விஜி புருஷன பாக்கிரான். படத்த முடிச்சிடுறோம். படத்தோட ஆரம்பம் அந்த குரூரமான ரயில் கொலை.”

நிறுத்தி விட்டு ஆழமாய் புகையை உள்ளிழுத்தேன். அய்யனார் முகம் மாறியிருந்தது


“நல்லாருக்கு மச்சி. ஆனா இது என் கத கிடையாதே”

“நோ நோ பாதி உன்னோடதுதான் மீதி என்னோடது”

“இதுல என்ன மச்சி புதுசு. ஒரு கள்ள காதல் –பிரிவு, சேர்வு –பிரிவு, பழி. சிம்பிள் பழி வாங்குற கததானடா”

“இல்ல மச்சி. இந்த லைன ரொம்ப ஆழமா டெவலப் பண்ண போறேன்.மொத்தம் மூணு விஷயங்கள் சொல்றோம்

ஒண்ணு, ரொம்ப கவித்துவமா பாண்டிச்சேரி பின்னணில ஒரு காதல் கதைய சொல்லப் போறோம். காதல்ல கள்ள காதல் நொள்ள காதல்னுலாம் எதுவும் கிடையாதுங்கிறதும் படத்துல ஆழமா பதிவாகனும். அப்புறம் படத்துல பாட்டுலாம் கிடையாது. கவிதைகள் மட்டும்தான். உன்னோட சில கவிதைகளும் வேணும்.

ரெண்டு இந்த விபசார விடுதி கதைகள இன்னும் டீட்டெய்லா சொல்லப் போறோம். பெண்களோட ஒட்டு மொத்த வலியும் பதிவாகனும். நம் சூழலோட பாலியல் வறட்சி எந்த அளவிற்கு ஆண்கள மிருகத்தனத்திற்கு கூட்டிப் போவுதுங்கிறதயும் அழுத்தமா பதிவு செய்யறோம்

மூணு, பழி உணர்வோட வன்முறைய அழகா சொல்றோம். விஜி புருஷனுக்கு விஜியோட காதல் தெரிஞ்சிடுது அதுக்கான பழியாதான் அவள விபசார விடுதில தள்ளுறான் இந்த மாதிரி நிறைய பழி உணர்வ படம் முழுக்க சொல்லப் போறோம்”

அய்யனார் மலைப்பாய் பார்த்து சொன்னான் “நல்லாருக்கு மச்சி. ஆனா இத யார்டா தயாரிப்பா எல்லாருமே யோசிப்பாங்கடா”
“ஸ்டார் வேல்யூ முக்கியம் மச்சி. யார் யார நடிக்க வைக்கிறோம்னு கூடலாம் யோசிச்சிட்டேன்”
“யார்லாம் நடிக்கிறாங்க?”
“விஜி கேரக்டர் ஸ்நேகா”
“ஸ்நேகாவா?”
“ஏன்னா விஜிக்கு 30 வயசு. கொஞ்சம் மெச்சூர்ட் முகம் வேணும்”
“ஸ்நேகான்னா பட்ஜெட் எகிறும் மச்சி. அப்புறம் இந்த மாதிரி கேரக்டர் ஒத்துப்பாங்களான்னு தெரில”
“ஏன் புதுப்பேட்டை பண்ணாங்களே. அதுல சில காட்சிகள் ரொம்ப பிரமாதமா வந்திருக்கும். குறிப்பா போட்ல ஸ்நேகாவோட தனுஷ் கலவும் காட்சி”
“யெஸ்.அப்ப ஹீரோ தனுஷா?”
“இல்ல. தனுஷ் 25 வயசு சராசரி ஆண்க்கு ஒத்து வருவார்தான். ஆனா எனக்கு இன்னும் சார்மிங் வேணும்”
“சிம்பு?”
“நோவே”
“வேற யார்ரா?”
“கார்த்தி”
“மச்சி பட்ஜெட்ட யோசிச்சிக்கோ. கார்த்தி ஸ்நேகா சம்பளமே கன்னா பின்னான்னு வரும்”
“ம்ம் பாத்துக்கலாம்”
“விஜி புருஷன் யாரு?”
“எழுதும்போதே யோசிச்சிட்டேன். சம்பத்”
“வாவ் சம்பத் நல்ல செலக்ஷன். ஆனா கார்த்தி ஒட்டல மச்சி”
“யெஸ். ஆனா வேற வழியும் இல்ல. 25 வயசு சார்மிங் ஹீரோ. மார்கெட் வேல்யூவும் இருக்கனும்”
“சரி ப்ரொடியூசர் யாரு”
“தேடனும் மச்சி. ஸ்க்ரிப்ட் முழுசா எழுதனும். அப்புறம் சென்னைக்கு போய் கல்பாத்தி அகோரம் மாதிரி ரெண்டு மூணு பேர பாக்கனும்”
“பட்ஜெட் எவ்ளோன்னு கேட்டா என்ன சொல்வ?”
“மேக்சிமம் ரெண்டு சி ம்பேன்”
“போடாங்கொய்யா. கார்த்தி சம்பளமே நாலு சி டா”
“என்னா மச்சி சொல்ற?”
“என்ன என்னா மச்சி சொல்ற. ஆனா அசோக், ஒரு மனுசனுக்கு தன்னம்பிக்கை இருக்கலாம்டா ஆனா உன் அளவுக்கு இருக்க கூடாது. ஏண்டா டேய் மெட்ராஸ் எந்தப் பக்கம் இருக்குன்னாவது தெரியுமா? எத்தன லட்சம் பேர் ஏகப்பட்ட ஸ்கிரிப்டோட நாய் படாத பாடு படுறாங்கன்னு தெரியுமா?”
“லிசன் அய்யனார் சும்மா வீட்ட விட்டு ஓடிப்போய் மெட்ராஸ்ல சுத்துறவன்லாம் படைப்பாளியோ, கலைஞனோ கிடையாது. இப்ப சினி பீல்ட்ல சோத்துக்கு சிங்கியடிக்கிற எல்லாருமே வெறும் சினிமா மேல இருக்க மோகத்துல, அது தரும் பெரும் பணத்துக்காக, புகழுக்காக ,பெண்களுக்காக ஓடிப்போனவனுங்கதான். அவங்கள வச்சி என்னை எட போடாதே. நான் ஒரு படைப்பாளி”

“சர்தான் மூட்றா. வீட்டுக்குள்ள கதவ சாத்திட்டு நாலு டிவிடிய பாத்துட்டாவே உனக்குலாம் பெரிய புடுங்கின்னு நினைப்பு வந்திருது. ஆனா சினிமாவுல ஜெயிச்சவன்லாம் உன்ன மாதிரி டிவிடி பாத்து ஜெயிச்சவன் இல்ல. ரத்தம் சுண்ட நாயா உழைச்சவனுங்க. சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாத உன்ன மாதிரியான மூடனுங்க கிடையாது”

"எனஃப் அய்யனார். உன்ன மாதிரி அரவேக்காடுங்களோட சகவாசம் வச்சிகிட்டது என்னோட தப்புதான். கெட் லாஸ்ட்"

அய்யனார் எழுந்து என் முகத்தில் குத்தினான். என் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது. பாரில் இருந்து இரண்டு பேர் ஓடி வந்தார்கள். எங்கள் இருவரையும் எல்லாருக்கும் தெரியுமென்பதால் சாதாரணமாய் திட்டி விட்டு போய்விட்டார்கள் ஒன்றும் பெரிதுபடுத்தவில்லை. சப்ளை செய்த பையன் ஒரு ஐஸ்கட்டியை கொண்டு வந்து என் தலையை பின் பக்கமாய் இழுத்து சாய்த்து மூக்கில் வைத்தான். அய்யனார் தன் கைக்குட்டையால் “சாரி மச்சி சாரி மச்சி” என்றபடியே முகத்தில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தான். எனக்கு வலி தெரியவில்லை. போதையும் ஓரளவிற்கு இருந்தது. சற்று நேரத்தில் இரத்தம் நின்றதும் மீண்டும் பீர் சொன்னான்.

மீண்டும் குடித்தோம். நான் எதுவும் பேசவில்லை. இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முனைந்தேன். ஆனால் உள்ளுக்குள் கோபத்தால் பொங்கிக் கொண்டிருந்தேன். இவனைப் போன்ற அரைவேக்காட்டு எழுத்தாளன்கள் என் முன்னால் அமர்ந்து குடிக்கக் கூடத் தகுதியற்றவர்கள். காலம் மற்றும் இயலாமையின் மிகப் பெரிய பழிவாங்கல்தாம் இது போன்றவர்களை சகித்துக் கொள்ளும் நிலைக்கு என்னை தள்ளியிருக்கிறது. வேண்டா வெறுப்பாய் ஏதோ பேசிவிட்டு மீண்டும் ஒரு பியர் குடித்துவிட்டு தள்ளாட்டமாய் கிளம்பினேன். அய்யனார் அறைக்கு வந்து ட்ராப் செய்வதாய் சொன்னான். மறுத்து விட்டேன். வெளியே வந்து ஆட்டோ பிடித்து அறைக்கு வந்து படுத்துக் கொண்டேன். இந்த உலகம் வெற்றியாளர்களுக்கு மட்டுமானது. என்னைப் போன்றவர்களுக்கானதல்ல. ஏனோ திடீரென எனக்கு வாழ்க்கையில் ஜெயித்தே ஆகவேண்டுமென்கிற வெறி வந்தது. பணத்தையும் புகழையும் அடைவது மட்டுமே இந்த உலகில் வெற்றியாகக் கருதப்படுகிறது. அல்லது எங்காவது வெளிநாட்டிற்குப் போய் ஐந்தாறு வருடங்கள் பன்றி மேய்த்துப் பணம் சம்பாதித்துவிட்டு ஊருக்கு வந்து வட்டிக்கு விட்டு வயிறு வளர்த்துக் கொள்வதுதான் சாதனையாமாம். சில பன்றி மேய்ப்பர்கள் பன்றியோடு இலக்கியத்தையும் திரைப்படத்தையும் அயல் தேசங்களில் கனிணி வழியாய் சேர்த்து மேய்க்கிறார்களாம். ஆத்திரம் பொங்கிப் பெருகி என்னைத் தூங்க விடாமல் செய்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

படத்தின் பெயர் என்ன என யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். படத்தின் முதல் சீனை எழுத ஆரம்பித்தேன்.

ஷாட் ஒன் –
அரக்கோணம் ரயில்வே ஸ்டேசன் – ஆட்கள் வருகிறார்கள் – போகிறார்கள். (லைவ் ஆகவே எடுத்து விடலாம். நேரம் இரவு பத்து. அரக்கோணம் போயே எடுக்கலாம். கார்த்திமேல் திடீரென வெறுப்பு வந்தது. சூர்யாவை போடலாம். சூர்யாவை மாறச் சொல்ல வேண்டும். லேசாக தொப்பை இருந்தாலும் ஓகே. ஆனால் உடம்பில் முகத்தில் இருபத்தைந்து வயது தெரியவேண்டும். ரைட்) – சூர்யா லாரியிலிருந்து ஸ்டேசன் வாசலில் குதிக்கிறான் – ஸ்டேசன் உள்ளே கண்கள் தாழ்த்தி நடக்கிறான் – கால்கள் – இரவு நேர சோம்பலான காம இரவு- போதையாய் ஒரு லிப்ஸ்டிக் பெண் - குடித்த ஒரு ஆண்- வியர்வையாய் இரண்டு தொழிலாளிகள் - தூக்கம் நிறைந்த விழிகளோடு ஒரு குழந்தை- கேமரா அப்படியே அலைய வேண்டும். சம்பத் தள்ளாட்டமாய் சூர்யாவைக் கடந்து எதிரில் வரும் ஒரு ஆள் மீது இடித்து விழுகிறான். முன்னால் சென்ற சூர்யாவின் கால்கள் இரண்டு அடி பின்னால் வருகின்றன- விழுந்து கிடக்கும் சம்பத்தைக் கண்கள் பார்க்கின்றன. இப்போது எக்ஸ்டீரீம் குளோசப்பில் சூர்யாவின் முகம். படத்தில் மொத்தம் மூன்றே குளோசப் ஷாட்டுகள். முதல் குளோசப் இதுதான். சூர்யாவின் முகம். ஆத்திரம், வன்மம், வெறுப்பு, இயலாமை, பழி எல்லா உணர்வும் பொங்கிப் பிரவகிக்க சம்பத்தைப் பார்க்கும் சூர்யா.
ஷாட் பினிஷ்

வாவ்! எழுந்து நின்று டேன்ஸ் ஆட வேண்டும் போல இருந்தது. எழுந்து போய் கழிவறையில் ஒன்றுக்கடித்தேன். உலக வெற்றியாளர்கள் மீது, சாதுர்யமானவர்கள் மீது, அய்யனாரைப் போன்றவர்கள் மீது, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் மீது, ஒன்றுக்கடிப்பது போல் நினைத்துக் கொண்டேன். புளகாங்கிதமாக இருந்தது. நேரம் பார்த்தேன். மணி இரண்டு. எனக்குத் தெரிந்த ஒரே நண்பனான அய்யனாரை அலைபேசியில் அழைத்தேன். அவன் ஹலோவை எதிர்பார்க்காமல் இப்படிச் சொன்னேன்

“தமிழின் முதல் பிராந்திய சினிமாவின் முதல் ஷாட் எழுதப்பட்டுவிட்டது” பதிலையும் எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டேன்.

4 comments:

Katz said...

ஹா! ஹா! அருமை. வெய்ட்டிங் பார் யுவர் சினிமா

Anonymous said...

ஞானி யார்? ஜெயமோகன் யார்?

https://docs.google.com/document/d/1FS93Hq_KIdeqoKKDwqXfKrjqN9aLXKUSSAr9BTB5U38/edit?hl=en_GB&pli=1

..d..

தமிழ் வண்ணம் திரட்டி said...

படத்திற்காக நான் காத்திருக்கிறேன்

Anonymous said...

அய்யனார் சாமி.. கதை என்ன சாமி ஆச்சு??
-ஜெகன்

Featured Post

test

 test