இங்குத் தொடர்ந்து எழுத முடியாமல் போவதற்கு கூகுல் பஸ்ஸும் ஒரு காரணம். அலுவலகத்தில் இணைய வசதி இல்லாதது இந்தச் சோம்பலுக்கு இன்னொரு கவசம். கூகுலை மட்டும் தில்லாலங்கடி வேலைகள் செய்து அலுவலகத்தில் வரவழைத்து விட்டதால் ரீடரில் படித்தும், பஸ்ஸில் மொக்கை போட்டுமாய் தற்காலிகத் தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறேன். வலைப் பக்கத்தை விட பஸ்ஸில் உரையாடுவது வசதியானது. உடனுக்குடன் பிறரிடம் பேசிக்கொள்ள முடியுமென்பதால் அந்த வெளியிலேயே சில வருடங்கள் தேங்கிப் போனது. அங்கு நேரம் மின்னலைப் போல மறைகிறதென்பதும், ஜெயமோகனைத் தவிர்த்துப் பேச்சு வேறெங்கும் நகர்வதில்லை என்பதும் என் சமீபத்திய சலிப்பிற்கு காரணங்களாக இருக்கின்றன. இனி, காலையில் எழுந்து கக்கூஸ் போவது நீங்கலாக எல்லாவற்றையும் இங்கு எழுதித் தொலைக்கலாம் என்றிருக்கிறேன். படைப்பிற்கு மட்டுமே தளம் என்பதின் மீது நம்பிக்கை சற்றுத் தேய்வடைந்திருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாய் ஓட்டுனர் பயிற்சி வகுப்பிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். இங்கு வந்து ஐந்தாண்டுகள் முடியப்போகிறதென்றாலும் வாகனம் ஓட்டுவதின் மீது பெரிதாய் விருப்பம் எதுவும் இல்லாமல்தான் இருந்தது. ஐந்தாண்டுகளில் மூட்டை முடிச்சைக் கட்டிவிடவேண்டும் என்கிற திட்டங்களோடுதான் இந்த வளைகுடா அலிபாபாக் குகைக்குள் நுழைந்தேன். பழகிவிட்ட சோம்பல் வாழ்வு, இந்திய வாழ்வைச் சற்று அச்சத்தோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இடையில் மிகுந்த பொறுப்புகள், அடுத்த ஐந்தாண்டுகளை நீட்டிக்கச் செய்திருப்பதால் வாகனத் தேவை நிர்பந்தமாகி இருக்கிறது. துபாயில் ஓட்டுனர் உரிமம் வாங்குவது குதிரைக் கொம்புதான். கேள்விப்பட்ட, நேரடியாய் பார்த்த நண்பர்களின் கண்ணீர் கதைகள் என்னை அந்த முடிவிற்குத் தள்ளாமல் காப்பாற்றிக் கொண்டு வந்தது. இனி பொறுப்பதில்லை என்கிற முடிவுகளோடு புத்தாண்டின் முதல் வாரத்திலிருந்து கஜினி முகமதுவாய் உருமாற்றம் கொண்டிருக்கிறேன். இந்த வாரத்தோடு வகுப்புகள் நிறைவடைகின்றன. அடுத்த வாரத்திலிருந்து படையெடுப்பு ஆரம்பம். சொல்ல வந்தது, வகுப்பின் நிமித்தமாக தினம் இரண்டு மணி நேரம் பயணிக்கிறேன். சற்றும் அலுங்காத, குலுங்காத, நெரிசலில்லாத பயணமாய் இருப்பதால் நிறைய வாசிக்கவும், பாடல்களைக் கேட்கவும் முடிகிறது. கூடவே நிறைய முகங்களைத் தொடர்ந்து ஒரே இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், தினம் பார்க்க முடிவது சின்னதொரு சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது. இரயில் பயணம் முடித்து, அடுத்த அரை மணி நேரம் பேருந்துப் பயணம். சொல்லி வைத்தாற்போல் ஒரே பேருந்தில், ஒரே இருக்கையில் தினம் அமர்கிறேன். இந்த ஒத்திசைவு சில நாட்களில் என்னை ஆச்சர்யப்படுத்தும். ஓரிரு நாட்கள் தவறுமென்றாலும் பெரும்பாலும் இந்த இசைவு பொருந்தித்தான் போகிறது. சரியாய் ஐந்து நாற்பதிலிருந்து, ஐந்து அம்பது வரை சூரியன் மறைவதைப் பார்ப்பதும் வழக்கமாகி இருக்கிறது. அலுவலகத்திற்குச் சமீபமான இரயில் நிலையத்திலிருந்து சூரியன் அமிழ்வதை அந்த நாளின் முதல் சிகரெட்டோடு பார்த்து விடுகிறேன்.
0
சமீபத்தில் படித்த சுவாரசியமான தமிழ் நாவல் தமிழ்மகனின் வெட்டுப் புலி. இரண்டே நாளில் படித்து முடித்த வேகம், நாவலில் இருக்கிறது. திராவிடத்தின் மீதிருக்கும் என் விருப்பமும், பெரியார் சார்புத் தன்மையும் இந்த நாவலை விருப்பத்தோடு படிக்க உதவியிருக்கலாம். தீப்பெட்டி அட்டையிலிருக்கும் சித்திரத்தின் பின்புலம் தேடிப் பயணிப்பது என்பது எத்தனை சுவாரசியமான ஒன் லைனர்! ஒரு நாவல் இம்மாதிரிப் புள்ளியில் துவங்குவது பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கும். நாவல் உத்தியளவில் இது பிரமாதமான அனுகுமுறை. சரியானத் தகவல்களை, தமிழகத்தின் வரலாறை, புனைவோடு இணைத்துச் சொல்லியிருப்பது இந்த நாவலின் இன்னுமொரு சிறப்பு. புனைவும் வரலாறும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருப்பதாகத்தான் உணர்ந்தேன். எண்பதுகளில் நாவல் தடதடவென முடியும் எல்லையை நோக்கி நகர்ந்தாலும் இதற்கு மேல் விலாவரியாக எழுதத் தேவையில்லை என்பதே என் எண்ணமாகவும் இருக்கிறது.

இலட்சுமண ரெட்டி -குணவதி, தியாகராசன் - ஹேமலதா இவர்களின் பகுதி என்னை வெகுவாகத் தொந்தரவு செய்தது. குறிப்பாய் ஹேமலதா கதாபாத்திரத்தின் கடைசி கால மாற்றங்களும் அதை தியாகராசன் எதிர்கொள்வதும் மீண்டெழுதலின் யதார்த்தம். மேலதிகமாய் இந்த நாவல் முன் வைக்கும் கொள்கைகளின் தேய்வு என்னை அதிர்ச்சியடைவே வைத்தது. ஒரு மாற்று இயக்கமும் அதன் தலைவர்களும் நாளையடைவில் எவ்வாறு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளத் தேய்வடைகிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் சுயலாபம், குடும்ப நலன் என எல்லாப் புள்ளிகளையும் நேரடியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. அண்ணாவிலிருந்து அழகிரி வரைக்குமாய் ஒருவரையும் விடாமல் விமர்சித்திருக்கிறது. தலைவர்களின் வாழ்வைத் தவிர்த்து சாமான்யர்களின் நம்பிக்கைகள், கொள்கைப் பிடிப்புகள் நிறமிழந்து போவதையும் இந்த நாவல் சரியாகவே பதிவித்திருக்கிறது. தீவிரக் கடவுள் மறுப்பாளனான தியாகராசன் ஒரு கட்டத்தில் அன்னையைத் தஞ்சமடைவது எத்தனை பெரிய அவலம்! தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் இரண்டறக் கலந்தது. அதையும் நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. பாலச்சந்தரிலிருந்து ரஜினிகாந்த், மணிரத்னம் என எவரையும் விட்டுவிடாத சரித்தன்மையும் நாவலில் இருக்கிறது. திராவிடப் பின்புலத்திலிருந்து வந்த பத்திரிக்கையாளன் நடிகையின் பேட்டிக்கு பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்படும் காலத் தேய்வையும், இயக்கத்தை உருவாக்கியத் தலைவர்களின் சம காலத் தோற்றத்தையும் சரியாய் பதிவித்திருக்கிறார். புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு சமகால அரசியலைக் கடுமையாய் விமர்சிப்பதும் இந்த நாவல் முழுக்க நிகழ்ந்திருக்கிறது. இந்திரா,அண்ணா,எம்ஜிஆர், கருணாநிதி என எல்லோர் மீதும் கதையில் வரும் பாத்திரங்கள் கடுமையான விமர்சனங்களை உரையாடலாகச் சொல்லிவிட்டுப் போகின்றன.நெருக்கடிகால மிசாக் கடுமைகளுக்கு காரணமாக இருந்த இந்திராவுடன் அரசியல் கூட்டு வைப்பதை வேதனையாய் பகிர்ந்திருக்கும் ஒரு பத்தி, அரசியல் சதுரங்கத்தின் சாணக்ய புத்தியைச் சரியாய் துகிலுரித்திருந்தது. போகிற போக்கில் கதாபாத்திரங்களின் உரையாடலைத் துணைகொண்டு, ஸ்டாலினின் நடத்தைக் கிசுகிசுக்களைக் குறித்தும் இவர் சொல்லிச் சென்றிருப்பது துணிச்சலானதுதான்.
”அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது உண்மையா எந்று ஒரு முறைக் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை எவண்டீ சொன்னான் உனுக்கு கண்டவன் சொல்றதயெல்லாம் நம்பிக்கிட்டு? அழகான பொண்ணு ரோட்டுல போனா கார்ல தூக்கிப் போட்டுகினு போய்டுவாராமே? ( பக்கம் 326)
எண்பது வருட தமிழக வரலாறை, நேரடிப் பெயர்களோடு வெகு இயல்பாய், வரலாற்றுப் பிழையில்லாமல், எந்தச் சார்புமில்லாமல்(பெரியாரைத் தவிர்த்து) , சாதாரண மொழியில் தமிழ்மகனால் சொல்ல முடிந்திருக்கிறது. என் வாசிப்பளவில் தமிழில் இது ஒரு முக்கியமான படைப்பு. நன்றி தமிழ்மகன்.
0
வெகுநாட்களாகப் பாதிப் படித்துக் கிடப்பிலிருந்த J.M.Coetzee யின் Disgrace ஐப் படித்து முடித்தேன். அடிக்கசப்பு என்பார்களே அந்த மனநிலைதான் வெகுநேரம் இருந்தது. புதிதாய் படிக்க ஆரம்பித்திருக்கும் Haruki Murakami ஆச்சர்யப்படுத்துகிறார். Kafka on the Shore நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் இப்போது சொல்ல விரும்புவது ஒன்றுதான். விவரணை விவரணை என்கிறீர்களே இதுவல்லவா விவரணை? அபாரமான விவரணைகளாலும், ஆழமான அலைக்கழிப்புகளாலும், மனிதர், மிருகம் என எந்தப் பாராபட்சமுமில்லாமல் எல்லா உயிர்களுக்குள்ளும் ஆசிரியர் ஊடுபாய்ந்திருக்கிறார். பூனைகளின் உரையாடல் பகுதிகளைப் படிக்கும்போது வியப்பு மேலிட்டது. முழுவதுமாய் படித்துவிட்டு பகிர்கிறேன்.
6 comments:
விரைவில் ஓட்டுனர் உரிமம் கிடைக்க வாழ்த்துக்கள்.
வெட்டுப்புலி பரிந்துரைக்கு நன்றிகள்
congrats and welcome back ayyanaar.
happy to see you back in action....wish u to get the license in the first attempt..needs sheer hardwork & guts...really...& i missed the dubai with metro ...kanavu desam.....i got ur blog after came out of dubai only...k..keep going....Nawas
ஐந்தாம் ஆண்டிற்கு வாழ்த்துகள் நண்பரே.
வெட்டுப்புலி இன்னும் வாசிக்கவில்லை. ஊரிலிருந்து வருபவர்களிடம் வாங்கிவரச் சொல்லவேண்டும் என நினைத்துள்ளேன்.
கூட்ஸியின் டிஸ்கிரேஸ் அதே பெயரில் அட்டகாசமான திரைப்படமாக வந்துள்ளது.
வாழ்த்து. Buzz போன்றவற்றில் அதிகம் நுழையாத என்னைப் போன்றவர்களுக்காய் வலைப்பதிவுகளிலும் தொடர்ந்து எழுதுங்கள் :-)
வாழ்த்துக்கள் தோழா...
வெட்டுப்புலி படித்தே தீரவேண்டிய ஆவணம் போல இருக்கே.கைகள் பறபறக்கிறது.
Post a Comment