Tuesday, December 21, 2010

தகேஷி கிடானோவின் Outrage 2010

Outrage படத்தை திரைப்பட விழா பட்டியலில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சமீபமாய் கிடானோவின் படங்களைத் தொடர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிக்கிஜீரோவை சென்ற வருடமே பார்த்திருந்தும் ஏனோ இவரைப் பின் தொடரத் தோன்றவில்லை. மிஷ்கினின் அலாதியான சிலாகிப்புகள்தாம் கிடானோவை மறுபடியும் தேடிப் பிடிக்க வைத்தது. இதுவரைக்கும் பார்த்த கிடானோவின் படங்களில் இருக்கும் பொதுவான ஒரு அம்சமாக எள்ளல் தன்மையைச் சொல்லலாம். கிண்டலும் கேலியும் இவரது எல்லா படங்களிலும் மெல்லிதாய் இழையோடுகிறது. சின்னப் புன்முறுவல் இல்லாமல் கிடானோவின் படங்களை நம்மால் பார்க்கவே முடியாது. வெகு சாதாரண ஆட்களாகத்தான் இவரது கதாநாயக பிம்பங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் திடீரென வல்லமை கொண்டவர்களாகவும் சடுதியில் கோழைகளாகவும் மாறிவிடுகிறார்கள். இவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் தோல்வியைச் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதை வெகு எளிதில் கடந்து போகிறார்கள். Kids Return படத்தில் வரும் இரண்டு நண்பர்கள் காலத்தின் சுழற்சியில் முன்னும் பின்னுமாய் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்வார்கள். “நம்முடைய வாழ்க்கை அவ்வளவுதானா? முடிந்து போயிற்றா?” என ஒருவன் கேட்கிறான். இன்னொருவன் புன்னகைத்துக் கொண்டே சொல்கிறான். “நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை” படம் முடிந்துபோகிறது. ஒரு காட்சியை எங்கு துவங்க வேண்டும். எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு கிடானோவின் படங்கள் சம காலத்தின் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன. தேவையில்லாத ஒரு அசைவையோ படத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு சொல்லையோ கூட இவரது படங்களில் நம்மால் காண இயலாது. கச்சிதமும் நுட்பமும் பின்னிப் பிணைந்தவைதாம் கிடானோவின் திரைப்படங்கள்.

Outrage படத்தில் இரண்டு நொடிக்கும் குறைவான காட்சி ஒன்று வரும். இமையை லேசாக வேறு பக்கம் அசைத்திருந்தாலும் நாம் அந்தக் காட்சியை தவற விட்டுவிடக் கூடும். உயிர்பயம் காரணமாக இரயிலில் தப்பிச் செல்லும் ஒருவனை எதிராளி ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சி அது. இரயில் வேகமாகக் கடக்கும் போது ஒரு சிவப்புப் புள்ளி கண்ணிமைத்து மறையும். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் பலத்த ஹா க்கள் எழுந்தன. கிடானோவிற்கு உலகம் முழுக்க ஏராளமான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திரைப்பட விழாவில் காண முடிந்தது. வழக்கமாய் திரைக்கு வெகு சமீபமான முன் இரண்டு வரிசை இருக்கைகள் காலியாகத்தான் இருக்கும். ஆனால் வியாழக் கிழமை மதியம் 1 மணிக் காட்சிக்கு அரங்கம் நிறைந்திருந்தது. பத்து நிமிடம் முன்னதாகச் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டதால் வலது பக்கம் அரேபிய பெண்ணும் இடது பக்கம் பிரான்சு தேசத்துப் பெண்னும் அமர ஆசிர்வதிக்கப்பட்டேன். படத்தின் இரசனையான பல வன்முறைக் காட்சிகளில் இடது பக்கம் அமர்ந்திருந்த அரேபியப் பெண் விநோதமான உஸ் உஸ் களை எழுப்பிக் கொண்டிருந்தார். கிடானோ ஒருவனின் முகத்தில் கத்தியால் ஆழமாய் பெருக்கல் குறி போடும் காட்சியில் ஆரம்பித்து அவ்வப்போது வரும் விரல்களை வெட்டும் காட்சிகள் வரை இவர் எழுப்பிய சப்தம் அலாதியான இன்பத்தைத் தருவதாக இருந்தது. குழந்தைகள் ஜெய்ண்ட் வீலின் பரவசத்தில் கத்தும்போது தரையில் இருந்து பார்க்கும் பெரியவர்களின் புன்முறுவலைப் போல அடிக்கடி நான் புன்னகைத்துக் கொண்டேன். வலது பக்கம் அமர்ந்திருந்த ப்ரெஞ்சுப் பெண் கிடானோவின் ஒவ்வொரு அசைவிற்கும் வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். கிக்கிஜீரோ படத்தை விட இதில் அபாரமானதொரு தாதா கதாபாத்திரத்தை ஊதித் தள்ளியிருக்கிறார் கிடானோ. எழுத்தாளர், ஓவியர், திரைக்கதையாளர், எடிட்டர், இயக்குனர், நடிகர் என எல்லா வடிவங்களிலும் கிடானோ மிளிர்கிறார். சமகால சினிமாவின் ஜீனியஸ் என தாராளமாய் இவரைச் சொல்லலாம்.

எல்லா இயக்குனர்களுக்கும் கேங்ஸ்டர் உலகத்தின் மீது பெரும் விருப்பம் இருக்கிறது. நிழல் உலகத்தின் வாழ்வு அதிக சவால்கள் நிறைந்திருக்குமென்பதால் கலைஞர்களுக்கு இயல்பாகவே அந்த உலகத்தின் மீது ஒரு பிடித்தம் இருக்கலாம். உலக அளவில் அதிகம் சிலாகிக்கப்பட்ட கேங்ஸ்டர் படமாக காட் ஃபாதரைச் சொல்கிறார்கள். மார்லன் ப்ராண்டோவின் நுணுக்கமான நடிப்பில் மூன்று பாகங்களாய் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க இரசிக்கப்பட்டது. என் தனிப்பட்ட இரசனை அடிப்படையில் மார்டின் ஸ்கார்சஸின் good fellas படத்தையே கேங் ஸ்டர் உலகத்தின் மிக முக்கியமான பதிவு எனச் சொல்வேன். உலகம் முழுக்க ஏராளமான கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் உலகத்தின் நுட்பங்களையும், கொண்டாட்டங்களையும், அபத்தங்களையும், நேர்த்தியாகப் பதிவித்தவர்களாக டராண்டின் குவாண்டினோவும் மார்டின் ஸ்கார்சஸும் சொல்லலாம். இந்த வரிசையில் இப்போது கிடானோ. ஜப்பானிய நிழல் உலகத்தின் சுவாரசியத்தை பார்வையாளர்களுக்குத் தன்னுடைய அபாரமான இயக்கத்தாலும், அசாதாரண நடிப்பினாலும் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறார் கிடானோ.

கதை வழக்கமானதுதான். சர்வ வல்லமை பொருந்திய நிழல் தாதா. நகரம் முழுக்க ஏராளமான நிழல் தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனம் தோற்றுப் போகும் அளவிற்கு கட்டுக்கோப்பான அமைப்பு, இப்படி எவராலும் அசைக்க முடியாத ஒரு அமைப்பை நிர்வகித்து வருகிறார். அவர் ஆளுமைக்குக் கீழ் இருக்கும் ஒரு குட்டி தாதாவின் ஆட்களுக்கும், அவருடைய ஆட்களுக்கும் சிறிய தகராறு ஒன்று வருகிறது. இந்தத் தகராறு சின்ன சின்னதாய் ஏகப்பட்ட குழப்பங்களை விளைவிக்கிறது. இரண்டு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். குட்டி தாதாவிற்கு கீழ் கிடானோ. கிடானோவிற்கு நம்பிக்கையாய் சிலர். இவர்களுக்குள் நடைபெறும் நிழல் உலக அரசியல் விளையாட்டும், பழிவாங்கலும், வியாபார போட்டிகளும்தான் படத்தின் பிரதான அம்சம். அதிகாரம், பதவி வெறி, வன்மம், இந்தப் பின்புலத்தில் நடக்கும் பாம்பு ஏணி விளையாட்டுதான் இந்த மொத்த திரைப்படமும்.

படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன என்றாலும் அவைகளை குரூர நகைச்சுவை வடிவத்தில்தான் படமாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு பிடிக்காத விஷயங்களை செய்துவிட்டால் ஒரு விரலை வெட்டிக் கொண்டு போய் தலைவருக்கு சமர்ப்பிப்பது நிழல் உலகத்தின் சம்பிரதாயங்களில் ஒன்று. படத்தில் ஏராளமான விரல்கள் பார்வையாளர்களின் பலத்த சிரிப்புப் பின்னணியில் வெட்டப்படுகின்றன. ஒரே ஒரு கொலை மட்டும் படு குரூரமாக இருந்தது. அதே நேரத்தில் அந்தக் கொலைக்குப் பின்னாலிருக்கும் கற்பனைத் திறன் குறித்தும் சிலாகிக்காது இருக்க முடியவில்லை. கிடோனோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனை காரில் கடத்திக் கொண்டு போய், முகத்தை கருப்புத் துணியினால் மூடி, பலமான சுருக்குக் கயிறை கழுத்தில் மாட்டி விடுகிறார்கள். ஏற்கனவே பின்புறமாய் கைகளை மடக்கிக் கட்டியாயிற்று. மிக நீளமான கயிறின் அடுத்த முனையை சாலையோரத்தில் இருக்கும் ஒரு பலமான இரும்புத் தூணில் கட்டிவிடுகிறார்கள். கார் கதவைத் திறந்து வைத்துவிட்டு சீறலாய் காரைக் கிளப்புகிறார்கள். இரும்புத்தூணில் கட்டப்பட்ட கயிறின் அடுத்த முனையில் பிணைக்கப்பட்டிருக்கும் இவனது கழுத்துடல் மிகக் கோணலாய் விசிறியடிக்கப்பட்டு, சடுதியில் உயிர் போய் துவண்டு கிடக்கிறது.கிட்டத் தட்ட என்னை உறைய வைத்த காட்சி இது. இம்மாதிரியான காட்சிகளும், நொடியில் மின்னிப் போகும் அபாரமான திரைக் கோணங்களும் கிடானோவின் படங்களில் மட்டுமே காணமுடிபவை.

இந்த படத்தை திரையில் காண்பது நல்லதொரு அனுபவமாக இருக்கக் கூடும். ஒரு மிட் ஷாட்டில் பல விஷயங்கள் நடக்கின்றன. கிடானோவின் படங்களை ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது முட்டாள்தனமான செயலாகத்தான் இருக்கக் கூடும். கிடானோவின் படங்கள் மிஷ்கினை உருவாக்கியதில் வியப்பேதுமில்லை.

4 comments:

பிச்சைப்பாத்திரம் said...

நல்ல பகிர்வு, அய்யனார். நன்றி. கிடானேவின் மொத்தப்படங்களையும் பற்றி ஒரு பதிவெழுதுங்கள்.

Anonymous said...

நான் மதிக்கின்ற பதிவர்களில் ஒருவர் நீங்கள். நாம் பேசியதில்லை. வாழ்த்துக்கள்.நீங்கள் பிரபல வாரப்பத்திரிகைக்கு எழுதலாம். ஏன் முயற்சிக்கவில்லை.

தமிழன்-கறுப்பி... said...

புதிய தெரிவுகளின் பகிர்வுக்கு நன்றி அய்யனார், படங்களை தேடி எடுக்க வேண்டும்.

Filmics said...

சூப்பர் பிலிம் நன்றி அய்யனார். தேங்க்ஸ் நல்ல படத்துக்கு !

Movie photo
Movie gallery
Movie photos

Featured Post

test

 test