Monday, December 8, 2008

அனுஜன்யா ஓய்வு மற்றும் சித்தார்த்

நண்பர் அனுஜன்யாவிடமிருந்து இருநூறாவது பதிவினுக்கான வாழ்த்தாய் வந்திருந்த மடல் லேசான வெட்கத்தைத் தந்தது.மேலும் இந்த அன்பினுக்கு நான் தகுதியானவனில்லை என்கிற எண்ணமும் எழத் தவறவில்லை.சுயத் திருப்திகள் மட்டுமே என்னை இயங்கவைப்பதும் கூட இவ்வெண்ணத்தினுக்கு ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.ஒரு மாதத்தினுக்கு முன்பே இக்கீழ்கண்ட கவிதையை அவர் என் இருநூறாவது பதிவினுக்காய் எழுதிவிட்டிருக்கிறார்.
அய்ஸ் - இருநூறு

புரியவில்லை கவிதையெனவும்
தோள் குலுக்கிய அய்யனார்
கூட்டிசென்றது கூத்துப்பட்டறைக்கு;
சூரபத்மன் பின்னால் ஆடிய அலைகடல்
நடனக்காரியின் நீலச்சேலையென
இடைவேளையில் தெரிந்தது;
மீள் தோன்றிய அலைகடலில்
நீலப் புடவையும் நடனக்காரியின்
முகமும் மட்டும் தெரிந்தது.
திரும்பி வருகையில்
அய்யனார் சொன்னது
அலையும் கவிதையும் ஒண்ணுதான்.

எவ்வித முகாந்திரகளுமில்லாது அன்பினை மட்டுமே பிரதானமாய் கொண்ட நண்பர்களுக்கு பிரத்யேகமாய் சொல்லிக்கொள்ள நன்றியினைத் தவிர பெரிதாய் வேறெதுவும் என்னிடமில்லை.தொடர்ச்சியாய் வாசிக்கும், நேசிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.
.......................................

தொடர்ச்சியாய் பதிமூன்று நாட்கள் விடுப்பளித்து தம் அரசாங்க சலுகையை நிரூபித்த என் நிறுவனத்திற்கு நன்றி.இந்த ஓய்வு மிக லேசான மனநிலையைத் தந்துவிட்டிருக்கிறது.செய்ய எதுவுமே இல்லாத பனிக்குளிரடங்கிய ஒரு முழு நாள் அற்புதமானது.அ.மார்க்சின் ஓய்வு குறித்தான கட்டுரை ஒன்று ஓய்வின் உன்னதங்களை,அரசியல்களை முன் வைக்கிறது.ஓய்வும், ஓய்வைக் கொண்டாடி அனுபவித்தலும் கீழானதாக அறங்கள் வடிவமைக்கப்பட்டதை துல்லியமாக முன் வைக்கும் இக்கட்டுரை, மக்களின் விருப்பங்களை கீழிறக்கி அவர்களை சோம்பேறிகள், குடிகாரர்கள், வேட்கைப் பிரியர்கள் என சமூகத்திலிருந்து விலக்கி, இகழ்ந்து வருவதையும் சுட்டத் தவறவில்லை.கடமை அறியோம் தொழிலறியோம் என தலைப்பிடப்பட்ட இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது.மேலும் இதே தொகுப்பில் குடி பற்றியதான குடியும் குடித்தனமும் என்கிற கட்டுரையும் மிக முக்கியமானது.

கழிவறையில் ஆத்மாநாம், வரவேற்பரையில் ஆழிசூழ் உலகு, படுக்கையறையில் நெடுங்குருதியென பாதி பாதி படித்த புத்தகங்களும், சமீபத்தில் கிடைத்த லூயி புனுவலின் Belle de Jour,Viridiana,An Andalusian Dog திரைப்படங்கள் தந்த பெரும் திகைப்புகளும் ஓய்வின் உன்னதங்கள்.லூயி புனுவலின் பாத்திரங்களின் விநோதங்களில் மூழ்கித் திளைத்தபடியே பிரஸ்ஸோனின் பிக்பாக்கெட்டை பார்த்துக்கொண்டிருக்கவும்,சாம்பார் என்கிற வஸ்துவை குறைந்த பட்ச ருசியுடன் சமைப்பதெப்படி என்கிற மிகக் கடினமான பயிற்சியினை என மனைவிக்கு தந்தபடியுமாய் கடந்துபோகின்றன இவ்விடுமுறை நாட்கள்.Pedro Almodóvar ன் Dark Habbits ம் ஆலிவர் ஸ்டோனின் தயாரிப்பில் வந்த salvator ம் பாதியில் நிற்கின்றன.இவ்விடுமுறைக்குள் Kieslowski யின் The Decalogue தொடர்களை பார்த்து முடிக்கவும் திட்டமிருக்கிறது.பழைய வலைப்பதிவுகளை தேடிப்பிடித்து படித்துக் கொண்டிருந்தேன்.சுரேஷ் கண்ணனின் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் மிகவும் பிடித்திருந்தது.வரம் தந்த சாமிக்கு பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் அழ ஆரம்பித்து விட்டாராம்.எத்தனை அற்புதமான கணமாய் இருந்திருக்க முடியுமென நினைத்துக்கொண்டேன். எனக்கு இந்தப் பாடலைக் கேட்கும்போதுத் தொண்டை அடைக்குமே தவிர வாய் விட்டு அழவெல்லாம் முடியாது. அது அவருக்கு வாய்த்திருக்கிறது. வெகுநாட்களாய் பேசிக்கொண்டிருக்கும் நண்பர் ரெளத்ரன் பக்கத்திலும் இதே போன்ற ஒரு குறிப்பை படிக்க நேர்ந்தது. கற்பூர பொம்மையொன்று பாடல் அவரால் கேட்கவே முடியாமல் போனதை குறிப்பிட்டிருந்தார்.கேளடி கண்மணியில் வரும் இப்பாடலும் என் தொண்டையை அடைக்கும்.
.......................................

இன்று சித்தார்த்தின் மணவிழா வரவேற்பு.சித்து எனக்கு வலையில் கிடைத்த முதல் நண்பன். ஒரு வகையில் இவ்வலைப்பதிவிற்கு காரணமானவன்.நாங்கள் அரட்டையில் பேசியவற்றைத் தொகுத்தால் அது ஜெயமோகனின் நாவலை விட மிக அதிக பக்கங்கள் கொண்டிருக்கலாம்.ஜோ வினுக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஆத்மார்த்த நண்பன்.பேசிப்பேசிப்பேசிப்பேசி சலிக்காமல் இருந்தோம். இருவருக்குமான பெரும்பான்மைப் புள்ளிகள் ஒன்றே.பேச்சுக்கள் அவனை என் இடத்தினுக்கு வர நெருக்கடி தந்தன.முதல் முறையாய் என்னை பார்க்கவென்று கடல் கடந்து வந்த ஒரே ஜீவன் சித்தார்த்தான்.நாங்கள் இரவு முழுக்கப் பேசினோம், ஊர் சுற்றினோம் ,படித்துச் சண்டையிட்டோம் ,படங்களாய் பார்த்துத் தள்ளினோம் அவனோடு இங்கு கழித்த நான்கு நாட்கள் அற்புதமானவை. அவனுடைய வாழ்வின் முக்கியமான தருணத்தில் மிகுந்த நெகிழ்வுகளோடு நினைத்துக் கொள்கிறேன்.மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் சித்தார்த்! செம்புலப்பெயல்போல் கலந்த அன்புடை நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே!!
.......................................

இப்பொழுதெல்லாம்

நன்றாகத்தான் இருக்கிறது
மெத்தென்ற புல்தரை
சில பறவைகள்
மீண்டும் மீண்டும்
எனைத் தேடி வருகின்றன
ஒரு மாற்றத்திற்காய்
நானோ
அவற்றின் வண்ணத்திலும்
சிறகிடுக்குகளின் அழகிலும்
அமிழ்ந்து போகிறேன்
கண் விழிக்கையில்
நான் மட்டுமே இருக்கிறேன்
இப்பொழுதெல்லாம்
பறவைகளைத் தேடுகிறேன்
ஒரு மாற்றத்திற்காய்...
- ஆத்மாநாம்

21 comments:

Anonymous said...

யப்பா எவ்வளாவு படிக்கிறீங்க அய்யனார். ஆழி சூழ் உலகு பற்றிய உங்கள் கருத்துக்குக் காத்திருக்கிறேன்.

Unknown said...

அய்யனார், நல்ல நண்பர்கள்...புத்தகங்கள்இரண்டும் பொக்கிஷம்..இவ்வாழ்வின் கொடைகள்...convey my best wishes to your friend Sidharth for a happy married life and many many years of togetherness..லீவை நல்லா பயன்படுத்திக்கோங்க..இருக்கவே இருக்கிறது வேலைகள்..routine mundane works as usual...நானும் ஆழி சூழ்் உலகு வாசித்துக் கொண்டிருக்கிறென்..கடவு (திலீப் குமார்)மற்றும் கோணங்கி கைவசம் உள்ளார்கள்...வாசிக்க வேண்டும்...

பிச்சைப்பாத்திரம் said...

//சுரேஷ் கண்ணனின் பக்கத்தில்//

அந்த உணர்வை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. :-))

//Pedro Almodóvar ன் bad Habbits ம் //

இதை dark habits-ன்னு மாத்திடுங்க.

பாக்கற படத்தையெல்லாம் பத்தி சின்ன குறிப்பாவது போடுங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமா இருக்கும்.

பிச்சைப்பாத்திரம் said...

//குடியும் குடித்தனமும் என்கிற கட்டுரையும் மிக முக்கியமானது//

முடிஞ்சா இந்த கட்டுரையை ஸ்கேன் பணணி போடுங்க. மடல்ல அனுப்பினங்கின்னா பியர் குடிக்கும் போது உங்களை நினைச்சுக்குவேன். :-)

கார்க்கிபவா said...

//.சுயத் திருப்திகள் மட்டுமே என்னை இயங்கவைப்பதும் கூட இவ்வெண்ணத்தினுக்கு ஒரு காரணமாய் இருக்கக்கூடும்//

முழுமையான கலைஞனுக்கு நிச்சயமாய் இருக்க வேண்டிய குணமென உங்கள் பதிவில்தான்(?) படித்ததாய் ஞாபகம்.

//எவ்வித முகாந்திரகளுமில்லாது அன்பினை மட்டுமே பிரதானமாய் கொண்ட நண்பர்களுக்கு பிரத்யேகமாய் சொல்லிக்கொள்ள நன்றியினைத் தவிர பெரிதாய் வேறெதுவும் என்னிடமில்லை.//

முரணாய் இருப்பதாக உண‌ர்கிறேன். :)))



வாழ்த்துகள்.உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும், அவரின் உறவுக்கும்...

அன்புடன் அருணா said...

ஆத்மானாமின் கவிதையை விட அழகாயிருந்தது உங்கள் நட்பு.
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

வால்பையன் said...

//சாம்பார் என்கிற வஸ்துவை குறைந்த பட்ச ருசியுடன் சமைப்பதெப்படி என்கிற மிகக் கடினமான பயிற்சியினை என மனைவிக்கு தந்தபடியுமாய் கடந்துபோகின்றன//

எதுக்கு இந்த விஷ பரிச்சை, வழக்கம் போல நீங்களே சமைச்சிரலாமே

வால்பையன் said...

//நாங்கள் அரட்டையில் பேசியவற்றைத் தொகுத்தால் அது ஜெயமோகனின் நாவலை விட மிக அதிக பக்கங்கள் கொண்டிருக்கலாம்.//

தோழியிடம் உரையாடியதை மட்டும் தான் எழுதுவிங்களா?
இதையும் எழுதுங்க

Ayyanar Viswanath said...

வேலன்
ஆழிசூழ் உலகு மிக நுட்பமாயும் விரிவாயும் எழுதப்பட்டிருக்கிறது..நமது பட்டியலாளர்களின் சிறந்த புத்தகங்கள் பட்டியலில் இப்புத்தகம் இடம்பெறாமலே போய்விட்டதேன் எனத் தெரியவில்லை.
படித்து முடித்ததும் விரிவாய் பகிர்கிறேன் நன்றி...

உமா சக்தி
கடவு நான் படித்திருக்கவில்லை..படித்து விட்டு சொல்லுங்கள்..

Ayyanar Viswanath said...

சுரேஷ் மாற்றிட்டேன் திருத்தியமைக்கு நன்றி..திரைப்பட குறிப்புகள் எழுத முயற்சிக்கிறேன்..ஸ்கேன் மன்னர் கதிர் இந்தியாவில் இருப்பதால் உடனடியாக செய்ய முடியாது எனினும் அக்கட்டுரையை ஸ்கேனித்து அனுப்ப முயற்சிக்கிறேன்..பியர் என்ற வார்த்தையை கேட்டே வெகுநாட்கள் ஆகிறது :D

Ayyanar Viswanath said...

கார்க்கி வெறும் நன்றி என்பது போதாததாய் இருக்கிறது என்பதைத்தான் சுத்தி சுத்தி சொல்லியிருக்கிறேன் எந்த முரணுமில்லை :) நன்றி..

வாழ்த்துக்களுக்கு நன்றி அருணா...

வால்பையன்
பரிந்துரைக்கு மிக்க நன்றி இங்கே அப்படித்தானிருக்கிறது :)
தோழர்களிடம் உரையாடியதையும் எழுதிவிடலாம்..வெள்ளோட்டமாகத்தான் ஜோ பதிவு

ச.பிரேம்குமார் said...

அய்யனார், நேற்று சித்தார்த்தின் திருமண வரவேற்புக்கு சென்று வந்தேன். அப்போது நீங்களும் சித்தார்த்தும் வேலூர் கோட்டையில் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. மறக்க முடியாத நினைவுகள் :)

உங்க வலைப்பூவுலயும் சித்தார்த்துக்கு வாழ்த்துக்களை பதிவு செய்துக்குறேன்

KARTHIK said...

// முதல் முறையாய் என்னை பார்க்கவென்று கடல் கடந்து வந்த ஒரே ஜீவன் சித்தார்த்தான்.//

அவர கல்யாணத்துல பாத்தப்போ பொடியன் சஞ்சய் இவர் அய்யனாருக்கும் உங்களுக்கும் வாசகர்னு சொல்லி அறிமுகப்படுத்தினார்.எனக்கு அப்போ உங்களுக்கு இவ்ளோ நெருங்கிய நண்பர்னு தெரியாம போச்சே

// பாக்கற படத்தையெல்லாம் பத்தி சின்ன குறிப்பாவது போடுங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமா இருக்கும்.//

இதை நானும் பலமுறை வேண்டியாச்சு

சென்ஷி said...

//சூரபத்மன் பின்னால் ஆடிய அலைகடல்
நடனக்காரியின் நீலச்சேலையென
இடைவேளையில் தெரிந்தது;
மீள் தோன்றிய அலைகடலில்
நீலப் புடவையும் நடனக்காரியின்
முகமும் மட்டும் தெரிந்தது.
திரும்பி வருகையில்
அய்யனார் சொன்னது
அலையும் கவிதையும் ஒண்ணுதான்.
//

அழகான கவிதை.. அனுஜன்யாவின் பாராட்டிற்கு நிரம்பவும் தகுதியானவர் நீங்கள்..

சித்தார்த் - காயத்ரி திருமண வாழ்த்தினை இங்கும் பதிவு செய்து கொள்கின்றேன்.

கோபிநாத் said...

அப்போ 200வது பதிவு இதுவா!!!

எதுக்கும் ஒரு வாழ்த்தை பிடிங்க ;))

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்பா விதம்விதமா புத்தகத்தை தினமும் ஒரு கிரமப்படி படிக்கறது பரம சுகம்... வாழ்த்துக்கள் அய்யனார்...லீவு முடிஞ்சுடுச்சா...

anujanya said...

அய்ஸ்,

நன்றி. சித்தார்த்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

படிங்க படிங்க. பதிவில் பிறிதொரு நாள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். Enjoy your holidays.

அனுஜன்யா

Ayyanar Viswanath said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரேம்

கார்த்திக் எழுதிடுறேன் :)

நன்றி சென்ஷி

கோபி போன பதிவுய்யா :)

Ayyanar Viswanath said...

நன்றி கிருத்திகா
லீவு இன்னிக்கோட முடியுது :(

நன்றி அனுஜன்யா

MSK / Saravana said...

Holidays முடிஞ்சதா..

படித்ததையும் பார்த்ததையும் பகிர்ந்து கொள்ளவும்.. :)

MSK / Saravana said...

சித்தார்த் - காயத்ரி திருமண வாழ்த்தினை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். :)

Featured Post

test

 test